இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா?
இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா?
முஹம்மத்
பதில்
இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர்வழி பெற்றோராக முடியும்.
(அல்குர்ஆன்: 9:17) ➚,18
பள்ளிவாசல்களை நிர்வாகம் செய்வதற்கு இணை வைப்பவர்களுக்குத் தகுதியில்லை என்பதை அல்லாஹ் சுட்டிக் காட்டுகின்றான். பள்ளிவாசலை நிர்வகித்தல் என்பது இமாமாக நின்று தொழுவிப்பதையும் உள்ளடக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. எனவே இணை வைப்பவர்கள் இமாமாக நின்று தொழுவிப்பதற்குத் தடையுள்ளது. இணை வைப்பவர்கள் இமாமத் செய்யக் கூடாது எனும் போது, அவர்களைப் பின்பற்றித் தொழுவதும் தடுக்கப்பட்டது தான் என்பதில் சந்தேகமில்லை.
இமாமாக இருப்பவர் இணை கற்பிக்கின்றார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஜமாஅத்தைப் பேண வேண்டும் என்பதற்காக தடுக்கப்பட்ட ஒரு காரியத்தைச் செய்தால் நமது தொழுகை ஏற்றுக் கொள்ளப்படுவதே கேள்விக்குறியாகி விடும். இது போன்ற கட்டங்களில் ஏகத்துவவாதிகள் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருந்தால் தனியாக ஜமாஅத் நடத்தி தொழுது கொள்ள வேண்டும். ஒருவர் மட்டுமே இருந்தால் அவர் தனியாகத் தொழுது கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.