லுஹர் தொழாத நிலையில் அஸர் ஜமாஅத் நடந்தால் முதலில் எந்த தொழுகையை தொழவேண்டும்?

கேள்வி-பதில்: தொழுகை

லுஹர் தொழாத நிலையில் அஸர் ஜமாஅத் நடந்தால் முதலில் எந்த தொழுகையை தொழவேண்டும்?
? பயணத்தில் இருக்கும் போது லுஹர் தொழுகை தொழ முடியாமல் இருந்து பிறகு பள்ளியில் அஸர் தொழுகை ஜமாஅத் நடைபெறும் போது ஜமாஅத்துடன் சேர்ந்து அஸர் தொழ வேண்டுமா? அல்லது லுஹரைத் தொழுத பிறகு தான் அஸர் தொழ வேண்டுமா?

ஏ.ஆகிலா பானு, வடகால்

அகழ்ப் போரின் போது சூரியன் மறைந்த பின் உமர் (ரலி), குறைஷிக் காஃபிர்களை ஏசிக் கொண்டே வந்து, “அல்லாஹ்வின் தூதரே, சூரியன் மறையும் வரை நான் அஸர் தொழவில்லையே” என்று கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக நானும் அஸர் தொழவில்லை” என்று கூறினார்கள். நாங்கள் புத்ஹான் எனும் பள்ளத்தாக்கை நோக்கிச் சென்றோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அஸர் தொழுகைக்காக உளூச் செய்தார்கள். நாங்களும் அதற்காக உளூச் செய்தோம். சூரியன் மறைந்த பின் அஸர் தொழுதார்கள். அதன் பின் மக்ரிப் தொழுதார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

நூல்கள் :(புகாரி: 596),(முஸ்லிம்: 1000), திர்மிதி 164, நஸயீ 1349

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அஸர் தொழுகையை குறைஷிக் காஃபிர்களால் தாமதப் படுத்தப்பட்ட போது தவற விட்ட அஸர் தொழுகையை முதலில் நிறைவேற்றி விட்டுப் பின்னர் தான் மக்ரிப் தொழுகின்றார்கள். இந்த அடிப்படையில் லுஹரைத் தொழுத பிறகே அஸர் தொழவேண்டும்.

பள்ளியில் அஸர் தொழுகையின் ஜமாஅத் நடந்து கொண்டிருந்தால் அந்த ஜமாஅத்திலேயே சேர்ந்து லுஹர் தொழுகையை நிறைவேற்ற அனுமதி உள்ளது. ஜமாஅத் தொழுகையில் இமாமுடைய நிய்யத்தும் பின்பற்றித் தொழுபவருடைய நிய்யத்தும் வெவ்வேறாக இருப்பதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது விட்டு தமது சமுதாயத்தினரிடம் சென்று அவர்களுக்கு இமாமாக நின்று தொழுகை நடத்துபவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

(புகாரி: 700, 701)

முஆத் (ரலி) அவர்கள் கடமையான தொழுகையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நிறைவேற்றி விட்டு அதே தொழுகைக்கு தமது சமுதாயத்தினரிடம் சென்று இமாமத் செய்துள்ளார்கள். அப்படியானால் முஆத் (ரலி) இமாமத் செய்யும் போது மீண்டும் அந்தத் தொழுகையைத் தொழுதிருக்க முடியாது. நஃபிலான தொழுகையைத் தான் தொழுதிருக்க வேண்டும். அதே சமயம் பின்பற்றித் தொழுபவர்கள் கடமையான தொழுகையை நிறைவேற்றுகின்றார்கள்.

இது போல் மற்றொரு ஹதீஸில், கடமையான தொழுகையின் ஜமாஅத்தைப் பிற்படுத்தும் ஆட்சியாளர்கள் பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது, உரிய நேரம் வந்ததும் தொழுகையை நிறைவேற்றி விட்டு ஜமாஅத் நடக்கும் போது நஃபிலாகத் தொழ வேண்டும் என்று நபித் தோழருக்குக் கட்டளையிட்ட செய்தியையும் ஹதீஸ்களில் காண்கிறோம்.

எனவே இமாம் ஒரு தொழுகையைத் தொழுது கொண்டிருக்கும் போது, பின்பற்றித் தொழுபவர் வேறொரு தொழுகையைத் தொழுவதில் எந்தத் தவறும் இல்லை. எனவே லுஹர் தொழுத பின்னர் தனியாக அஸர் தொழுது கொள்ள வேண்டும். அஸர் தொழுதுவிட்டு லுஹர் தொழுவதற்கு அனுமதி இல்லை.

மேல் கூறப்பட்ட அக்ழ்ப் போர் சம்பந்தமான ஹதீஸில், அஸர் தொழுகையை சூரியன் மறைந்த பிறகு நிறைவேற்றியிருப்பதால் இதை வைத்துக் கொண்டு தொழுகைகளை களா செய்யலாம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் மேற்கண்ட இதே அறிவிப்பு நஸயீயில் 655ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில், போர்க் காலங்களில் தொழுவது சம்பந்தமான (4 – 102) வசனம் அருளப்படுவதற்கு முன்னர் இந்தச் சம்பவம் நடைபெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வசனம் அருளப்பட்ட பிறகு அவ்வாறு தொழுவதற்குத் தடை விதிக்கப்பட்டு விட்டது என்பதை இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.

(குறிப்பு: 2003 ஜுன் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)