5) தடுக்கப்பட்டவை
தவிர்க்கப்பட வேண்டியவை
திருமணத்தின் போது பல்வேறு சடங்குகள் முஸ்லிம் சமுதாயத்தில் பரவலாகக் காணப்படுகின்றன. இஸ்லாத்திற்கும் அந்த சடங்குகளுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. எனவே அது போன்ற சடங்குகளைத் தவிர்க்க வேண்டும்.
- தாலி கட்டுதல் – கருகமணி கட்டுதல்
- ஆரத்தி எடுத்தல்
- குலவையிடுதல்
- திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளையைக் கட்டியணைத்து வாழ்த்துதல்
- ஆண்களும் பெண்களுமாக மணமக்களைக் கேலி செய்தல்
- வாழை மரம் நடுதல்
- மாப்பிள்ளை ஊர்வலம்
- ஆடல், பாடல், கச்சேரிகள் நடத்துதல்
- பெண் வீட்டாரிடம் திருமணத்திற்குப் பின் பல சந்தர்ப்பங்களில் சீர் வரிசை என்ற பெயரில் கேட்டு வாங்குவது.
- முதல் குழந்தைக்கு நகை செய்து போடுமாறு பெண் வீட்டாரைக் கட்டாயப்படுத்துதல்.
- தலைப்பிரசவச் செலவை பெண் வீட்டார் தலையில் சுமத்துவது.
- பல்வேறு காரணங்களை காட்டி பல்வேறு சந்தர்ப்பங்களில் பெண் வீட்டாரிடம் விருந்துகளைக் கேட்பது.
- பிற மதத்தவர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்ட இந்தக் கொடுமைகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
- யார் பிற சமயக் கலாச்சாரத்தை பின்பற்றி நடக்கின்றாரோ அவரும் அவர்களைச் சேர்ந்தவர் என்பது நபிமொழி.(அபூதாவூத்: 3512)
அன்பளிப்பு மொய்
திருமணத்தின் போதும், மற்ற சமயங்களிலும் உற்றாரிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் அன்பளிப்புப் பெறுவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதாகும்.
ஒருவருக்கு அவரது சகோதரர்களிடமிருந்து நல்ல பொருள் ஏதேனும் அவர் கேட்காமலும், எதிர்பார்க்காமலும் கிடைக்குமேயானால் அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளவும். ஏனெனில் அது அல்லாஹ் அவருக்கு வழங்கிய பாக்கியமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: காலித் பின் அதீ (ரலி)
(புகாரி: 1380, 6630)
அன்பளிப்புகளை மறுக்கலாகாது என்பதை இந்த ஹதீஸ் கூறுகிறது.
மொய் என்றும் ஸலாமீ என்றும் கூறப்படும் போலித்தன மான அன்பளிப்புகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும். ஒரு பொருளைக் கொடுத்து விட்டு தங்களுக்கு அது திரும்பக் கிடைக்கும் என்ற எண்ணத்திலேயே மொய் என்பது அமைந்துள்ளது.
கொடுத்து விட்டு திரும்பிப் பெற எண்ணும் போது அது அன்பளிப்பாகாது.
அன்பளிப்புச் செய்து விட்டு அதைத் திரும்ப எதிர்பார்ப்பவன் வாந்தி எடுத்துவிட்டு அதையே திரும்ப சாப்பிடுபவனைப் போன்றவன் என்பது நபிமொழி.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(புகாரி: 1490, 2589, 2621, 2623, 3003, 6975)
இந்த வெறுக்கத் தக்க போலி அன்பளிப்புகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
தம்பதியரின் கடமைகள்
பெண்கள் வளைந்த எலும்பு போன்றவர்கள். அதனை நிமிர்த்த முயன்றால் அதனை உடைத்து விடுவாய். அந்த வளைவு இருக்கும் நிலையிலேயே அவளை விட்டு விட்டால் அவளிடம் இன்பம் பெறுவாய் என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(புகாரி: 3331, 5184, 5186)
இறை நம்பிக்கையுள்ள ஒரு ஆண் இறை நம்பிக்கையுள்ள தன் மனைவியை வெறுத்து விட வேண்டாம். அவளது ஒரு குணத்தை அவன் வெறுத்தால் அவன் விரும்பக் கூடிய வேறொரு குணத்தை அவளிடம் அவன் காணலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி). நூல்கள்:(முஸ்லிம்: 2672)
நல்ல குணம் கொண்டவர்களே இறை நம்பிக்கையில் முழுமை பெற்றவர்களாவர். உங்களில் சிறந்தவர்கள் தங்கள் மனைவியரிடம் நல்லபடி நடந்து கொள்பவர்களே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்:(அஹ்மத்: 7095),(திர்மிதீ: 1082)
பெண்களை நல்ல முறையில் நடத்துங்கள். அவர்கள் உங்களிடம் அடைக்கலமாக உள்ளவர்கள். அதைத் தவிர அவர்களிடம் உங்களுக்கு வேறு எந்த உரிமையும் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்ரு பின் அஹ்வஸ் (ரலி),(திர்மிதீ: 1083)
ஒரு முறை நான், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், எங்களின் மனைவிமார்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகள் யாவை? எனக் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீ எதை உண்கிறாயோ, அதையே அவளுக்கும் உண்ணக் கொடுப்பாயாக! நீ எதை அணிகிறாயோ அது போன்றதையோ அவளுக்கும் அணிவிக்கக் கொடுப்பாயாக! மேலும், அவளின் முகத்தில் அடிக்காதே! அவளை இழிவுபடுத்தாதே! வீட்டிலில்லாமல் வெளியிடங்களில் வைத்து அவளைக் கண்டிக்காதே! என்று கூறினார்கள். அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதா (ரலி),(அபூதாவூத்: 1830)
மணமுடிக்கத் தகாதவர்கள்
1. இணை கற்பிப்போரை மணக்கக் கூடாது.
இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண் கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண் களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக் கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறை வன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.
(அல்குர்ஆன்: 2:221) ➚
நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்த வன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏக இறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோரும் அல்லர். அவர்கள் (இப்பெண்களுக்காக) செலவிட்டதை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! அவர்களுக்குரிய (மணக்) கொடைகளை நீங்கள் வழங்கினால் அவர்களை நீங்கள் மணந்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை. ஏக இறைவனை மறுக்கும் பெண்களுடன் (முன்னர் செய்த) திருமண ஒப்பந்தங்களைத் தொடராதீர்கள். நீங்கள் செலவிட்டதை நீங்கள் கேளுங்கள்! அவர்கள் செலவிட்டதை அவர்கள் கேட்கட்டும். இதுவே அல்லாஹ்வின் கட்டளை. உங்களுக்கிடையே அவன் தீர்ப்பளிக்கிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
(அல்குர்ஆன்: 60:10) ➚
2. இத்தா முடியும் வரை திருமணம் கூடாது.
கணவனை இழந்த பெண்கள் தமக்குரிய இத்தா காலம் முடியும் வரை திருமணமோ திருமண ஒப்பந்தமோ செய்யக் கூடாது.
(காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசிய மாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!
(அல்குர்ஆன்: 2:235) ➚
3. தந்தையின் மனைவியை மணக்கக் கூடாது.
உங்கள் தந்தையர் மணமுடித்த பெண்களை மணக்காதீர்கள்! ஏற்கனவே நடந்து முடிந்ததைத் தவிர. இது வெட்கக்கேடானதும், வெறுப்புக்குரியதும், கெட்ட வழியுமாகும். (அல்குர்ஆன்: 4:22) ➚
மணக்கக் கூடாத உறவுகள்
ஆண்கள் கீழ்க்காணும் உறவினர்களை மணக்க அனுமதியில்லை.
தாய்
மகள்
சகோதரி
தாயின் சகோதரி
தந்தையின் சகோதரி
சகோதரனின் புதல்விகள்
சகோதரியின் புதல்விகள்
பாலூட்டிய அன்னையர்
பாலூட்டிய அன்னையின் புதல்விகள்
மனைவியின் தாய்
மனைவியின் புதல்வி
மகனின் மனைவி
இரு சகோதரிகளை ஒரே காலத்தில் மனைவியராக்குதல்
பெண்கள் மணமுடிக்கக் கூடாத உறவுகள்
தந்தை
மகன்
சகோதரன்
தாயின் சகோதரன்
தந்தையின் சகோதரன்
சகோதரனின் மகன்
சகோதரியின் மகன்
பாலூட்டிய அன்னையின் கணவன்
பாலூட்டிய அன்னையின் மகன்
கணவனின் தந்தை
கணவனின் புதல்வன்
புதல்வியின் கணவன்
சகோதரியின் கணவனை சகோதரியுடன் கணவன் வாழும் போது மணப்பது
ஆகியவை தடுக்கப்பட்டுள்ளன.(அல்குர்ஆன்: 4:23) ➚வசனத்திலிருந்து இதை அறியலாம்.
உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரி கள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்குப் பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள மனைவியின் புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) விலக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாக ரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (விலக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (விலக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன்: 4:23) ➚
இரத்த சம்பந்தத்தால் யாரைத் திருமணம் செய்யக் கூடாது என்று மேலே நாம் குறிப்பிட்டோம். அன்னியப் பெண்ணிடம் பால் குடித்ததால் மேற்கண்ட உறவு முறை ஏற்படுமானால் அவர்களையும் மணக்கக் கூடாது.
அதாவது ஒரு பெண்ணிடம் ஒருவன் பாலருந்தி விட்டால் அவள் தாயாகி விடுகிறாள். இதன் காரணமாக அவளது சகோதரி சின்னம்மா அல்லது பெரியம்மா ஆகி விடுவார்கள். எனவே அவரையும் மணக்கக் கூடாத.
அவளது சகோதரன் அல்லது சகோதரியின் மகளையும் மணக்கக் கூடாது. பாலூட்டிய அன்னையை பெற்ற தாய் இடத்தில் வைத்துப் பார்த்தால் அவளது உறவினர்கள் நமக்கு மேற்கண்ட உறவு முறையுடையவர்களாக ஆனால் அவர்களை மணக்கக் கூடாது.
இரத்த சம்பந்தத்தால் தடுக்கப்பட்ட உறவுமுறைகள், பால் அருந்திய உறவு முறையிலும் தடுக்கப்பட்டதாகும் என்பது நபிமொழி. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),(புகாரி: 2451, 4719)
இது தவிர ஒரு பெண்ணை மணந்து அவளுடன் வாழும் போது அவளது தாயின் சகோதரியையும் சேர்த்து மணக்கக் கூடாது. அது போல் மனைவியின் தந்தையின் சகோதரியையும் சேர்த்து மணக்கக் கூடாது. (புகாரி: 4719)
மனைவி மரணித்து விட்டாலோ விவாகரத்து ஆகிவிட்டாலோ மனைவியின் தாயுடைய சகோதரியை, மனைவியின் தந்தையுடைய சகோதரியை மணக்கத் தடையில்லை.
பால்குடிப் பருவமும் அளவும்
எந்த வயதில் பால் குடித்தாலும் ஒரு பெண் தாயாகி விடுவாள் என்று பாலரும் எண்ணுகின்றனர்.
இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைப் பருவத்தில் பால் கொடுத்தால் தான் தாய் பிள்ளைஎன்ற உறவு ஏற்படும்.
பாலூட்டும் பருவம் இரண்டு ஆண்டுகள் தான் என்று(அல்குர்ஆன்: 2:233) ➚கூறுகிறது.
மேலும் பசியை அடக்கும் அளவுக்கும், நான்கு தடவைகளுக்கு அதிகமாகவும் பாலூட்டினால் தான் தாய் – பிள்ளை என்ற உறவு ஏற்படும்.
பசியைப் போக்குவதே பாலூட்டலாகும் என்பது நபிமொழி. அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),(புகாரி: 2453, 4712)
ஒரு தடவை இரண்டு தடவைகள் பால் அருந்துவதால் திருமணத் தடை ஏதும் ஏற்படாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி),(முஸ்லிம்: 2628)
ஆயிஷா(ரலி) அவர்களின் மற்றொரு அறிவிப்பில் ஐந்து தடவை பாலருந்தினால் தான் திருமணத் தடை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தாம்பத்திய உறவு
தாம்பத்திய உறவு கொள்வதற்கு என்று ஏராளமான கட்டுக் கதைகளை முஸ்லிம்கள் உண்டாக்கி அதை நம்பி வருகின்றனர். ஆனால் இஸ்லாத்தில் இந்த விஷயத்தில் மிகவும் குறைந்த அளவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மாதவிடாயின் போது
மாதவிடாய்க் காலத்தில் தாம்பத்திய உறவு கொள்ளக் கூடாது.
மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளை யிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான் எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்: 2:222) ➚
மலப்பாதையில் உறவு கொள்வதும் கடுமையாகத் தடுக்கப்பட்டுள்ளது.
தனது மனைவியில் மலப்பாதையில் உறவு கொள்பவன் சபிக்கப்பட்டவன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அபூதாவூத்: 1847)
இதைத் தவிர தாம்பத்திய உறவில் எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. குறிப்பிட்ட நாட்களில் அல்லது குறிப்பிட்ட நேரத்தில் உறவு கொள்ளக் கூடாது என்று அலீ (ரலி) அவர்களின் பெயரால் கூறப்படும் அனைத்தும் கட்டுக் கதையாகும்.
குறிப்பிட்ட முறையில் தான் உறவு கொள்ள வேண்டும். ஒருவரது அந்தரங்கத்தை மற்றவர் பார்க்கக் கூடாது என்றெல்லாம் கூறப்படும் அனைத்தும் கற்பனை செய்யப்பட்ட பொய்களாகும்.
அல்லாஹ் எதையும் மறைப்பவன் இல்லை. மறப்பவனும் அல்ல. தாம்பத்தியத்தில் தடுக்கப்பட வேண்டியவை ஏதும் இருந்தால் அதை அவனே கூறியிருப்பான்.
மேற்கண்ட போதனைகளைத் தம்பதியர் கவனத்தில் கொள்ள வேண்டும். வல்ல இறைவன் இஸ்லாத்தின் இந்தப் போதனைகளைச் செயல்படுத்தி வெற்றியடையக் கூடியவர்களாக நம்மை ஆக்கியருள்வானாக.