லுஹர் அசர் தொழுகைகளில் பெண்கள் சப்தமாக ஓதி தொழுவது ஏன்

கேள்வி-பதில்: தொழுகை

 

லுஹர் அசர் தொழுகைகளில் பெண்கள் சப்தமாக ஓதி தொழுவது ஏன்
பெண்கள் ஜமாஅத்தாகத் தொழும் போது இகாமத் சொல்லாமலும், லுஹர் அஸர் நேர தொழுகைகளை சப்தத்துடன் ஓதியும் தொழுகிறார்கள். இது சரியா?

அலாவுதீன்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹர் அசர் ஆகிய இரு தொழுகைகளின் நான்கு ரக்அத்களிலும் சப்தமில்லாமல் தான் ஓதியுள்ளனர் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

பெண்கள் பள்ளிவாசலுக்கு வந்து தொழ மார்க்கம் கொடுத்துள்ள அனுமதியை நாம் கொடுத்து இருந்தால் பள்ளிவாசலில் எவ்வாறு தொழுகை நடக்கிறது என்பதை அவர்கள் பார்த்திருப்பார்கள். லுஹர் அசர் தொழுகைகளில் இமாம் வாய்க்குள் ஓதுவதைப் பார்த்து அந்தச் சட்டத்தை அறிந்து இருப்பார்கள்.

அதிக பட்சம் இரவுத் தொழுகை மற்றும் பெருநாள் தொழுகை மட்டுமே அவர்கள் ஜமாஅத்தாக தொழுகும் வழக்கமுடையவர்களாக உள்ளனர். அந்தத் தொழுகைகளில் இமாம் சப்தமாக தொழுவதைக் கண்டதால் எல்லாத் தொழுகைகளும் இப்படித்தான் என்று விளங்கிக் கொண்டனர்.

தவ்ஹீத் ஜமாஅத்தில் மட்டும் தான் பெண்கள் ஜும்மாவுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

நான் புதிய கிளையில் புதிதாக துவக்கிய ஜும்மாவில் உரையாற்றச் சென்றேன்.

தொழுகை முடிந்து வெளியே வந்ததும் ஒரு மூதாட்டி தம்பி உடம்பை நல்லபடி கவனித்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். உடம்புக்கு ஒன்றும் இல்லை. நான் நன்றாகத் தான் இருக்கிறேன் என்று நான் பதில் கூறினேன். அப்படியானால் பயான் செய்யும் போது நிற்க முடியாமல் இடையில் உட்கார்ந்து விட்டு எழுந்தீர்களே? எவ்வளவு நேரம் பேசினாலும் நீங்கள் இடையில் உட்கார மாட்டீர்களே என்றார்.

ஜும்மாவுக்கு இரு உரைகள் உள்ளன என்பதும் இடையில் உட்கார்வது நபிவழி என்பதும் அவருக்கு ஏன் தெரியவில்லை? அவர் தள்ளாத வயதில் முதன்முதலாக இப்போதுதான் ஜும்மாவுக்கு வந்துள்ளதால் அவருக்குத் தெரியவில்லை. இதுபோல் தான் லுஹர் அஸர் தொழுகைகளில் பெண்கள் சப்தமாக ஓதுவதும் வந்து விட்டது.

பாங்கும்ம் இகாமத்தும் கடமையான தொழுகைக்கு அவசியம் என்று நபி மொழிகள் வலியுறுத்துகின்றன.

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து திரும்பினேன். அப்போது “நீங்கள் இருவரும் பயணத்தில் தொழுகை நேரம் வந்தால் பாங்கும், இகாமத்தும் சொல்லுங்கள். உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்கு இமாமாக நின்று தொழுவிக்கட்டும்” என்று எனக்கும் என் நண்பர் ஒருவருக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி)

நூல் : புகாரி (2848)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

(மக்களே) மலைப் பாறைகளின் உச்சியில் தொழுகை அழைப்பு (பாங்கு) சொல்லி தொழும் ஆட்டு இடையன் ஒருவனைப் பார்த்து உங்கள் இரட்சகன் மகிழ்ச்சியடைகின்றான். ”பாருங்கள் என் அடியானை! பாங்கும் இகாமத்தும் கூறித் தொழுகின்றான். (காரணம்) என்னை அவன் அஞ்சுகிறான். (ஆகவே) என் அடியானை நான் மன்னித்து விட்டேன் என்று இறைவன் கூறுகின்றான்.

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)

(அபூதாவூத்: 1017)

இந்தச் சட்டம் ஆண்கள் பெண்கள் என அனைவருக்கும் பொதுவானதாகும். பெண்கள் கடமையான தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுதால் அவர்களும் பாங்கு இகாமத் கூறியே தொழ வேண்டும். இதில் பெண்களுக்கு விதிவிலக்கு கிடையாது.