5) சிறந்ததை கண்டால் முறிக்கலாம்

நூல்கள்: நேர்ச்சையும் சத்தியமும்

சிறந்ததைக் கண்டால் சத்தியத்தை முறிக்கலாம்

ஒரு காரியத்தைச் செய்வதாக நீ சத்தியம் செய்த பின் அது அல்லாத காரியத்தைச் சிறந்ததாக நீ கண்டால் உன் சத்தியத்தை முறித்து அதற்கான பரிகாரத்தைச் செய்து விட்டு அந்தச் சிறந்த காரியத்தைச் செய்து விடு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் சமூரா (ரலி)
(புகாரி: 6622)

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து எங்களுக்கு வாகனம் (ஒட்டகம்) வேண்டும் எனக் கேட்டோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுத்து விட்டனர். மீண்டும் கேட்டோம். ‘அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மறுத்து விட்டனர். பின்னர் சில ஒட்டகங்கள் (மூன்று அல்லது ஐந்து) வந்து சேர்ந்தன. அதை எங்களுக்குத் தருமாறு கட்டளை யிட்டனர். ‘அல்லாஹ்வின் தூதரே எங்களுக்கு வாகனம் தருவதில்லை என்று சத்தியம் செய்தீர்களே’ என்று கூறினோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘நான் ஏதாவது சத்தியம் செய்த பின் அது அல்லாததைச் சிறந்ததாக நான் கருதினால் அந்தச் சிறந்ததை செய்து விட்டு சத்தியத்திற்குப் பரிகாரமும் செய்து விடுவேன்’ எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)
(புகாரி: 6623)

 

சத்தியத்தை முறிப்பதன் பரிகாரம்

சத்தியத்தை முறிப்பதற்கு என்ன பரிகாரம் என்பதைப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் விளக்குகிறான்.

உங்கள் சத்தியங்களுக்குரிய பரிகாரத்தை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். அல்லாஹ்வே உங்கள் அதிபதி. அவன் அறிந்தவன்; ஞானமுடையோன். (அல்குர்ஆன்: 66:2)

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான். அதற்கான பரிகாரம், உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் உணவாக அளிக்கும் நடுத்தரமான உணவில் பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது, அல்லது அவர்களுக்கு உடையளிப்பது, அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்வது ஆகியவையே. (இவற்றில் எதையும்) பெறாதோர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் சத்தியம் செய்(து முறித்)தால், சத்தியத்திற்குரிய பரிகாரம் இவையே. உங்கள் சத்தியங்களைப் பேணிக் கொள்ளுங்கள்! நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ் இவ்வாறே தனது வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன்: 5:89)

நமது சத்தியங்களையும் நேர்ச்சைகளையும் சரியான முறையில் புரிந்து நடைமுறைப் படுத்தும் நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கியருள்வானாக!