93) ஸலாம் கூறுதல்
கடைசி தக்பீர் கூறி, துஆக்கள் ஓதிய பிறகு ஸலாம் கூறி தொழுகையை முடிக்க வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று காரியங்களைச் செய்து வந்தனர். அவற்றை மக்கள் விட்டு விட்டனர். (மற்ற) தொழுகையில் ஸலாம் கொடுப்பது போல் ஜனாஸா தொழுகையில் ஸலாம் கொடுப்பது அம்மூன்றில் ஒன்றாகும்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்கள்: பைஹகீ 4/43, தப்ரானி 10/82
மற்ற தொழுகைகளில் ஸலாம் கொடுப்பது போன்றே ஜனாஸா தொழுகையிலும் ஸலாம் கொடுக்க வேண்டும் என்பது இதிலிருந்து தெரிகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மற்ற தொழுகைகளில் வலது புறமும், இடது புறமும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்’ என்று கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: நஸயீ 1130, 1302, 1303, 1305, 1307, 1308
வலது புறம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்’ இடது புறம் அஸ்ஸலாமு அலைக்கும்’ என்று மட்டும் ஸலாம் கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: நஸயீ 1304
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸாவுக்கு ஒரு ஸலாம் கொடுத்ததாக
தாரகுத்னீ, ஹாகிம், பைஹகீ ஆகிய நூல்களில் ஒரு ஹதீஸ் உள்ளது.
கன்னாம் பின் ஹஃப்ஸ், அப்து:ல்லாஹ் பின் கன்னாம் ஆகிய இருவர் வழியாகவே இது அறிவிக்கப்படுகிறது. இவ்விருவரும் யார் என்று அறியப்படாதவர்கள்.
எனவே ஒரு பக்கம் மட்டும் ஸலாம் கொடுப்பது நபிவழி அல்ல.