3) நேர்ச்சையை முறிப்பதன் பரிகாரம்
நேர்ச்சையை முறிப்பதன் பரிகாரம்
மார்க்கம் அனுமதிக்கின்ற வகையில் ஒருவர் நேர்ச்சை செய்து அவரால் அதை நிறைவேற்ற இயலாது போனால் அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.
‘சத்தியம் செய்து விட்டு அதை நிறைவேற்றத் தவறினால் என்ன பரிகாரம் செய்ய வேண்டுமோ அதுவே நேர்ச்சைக்கும் பரிகாரமாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)(முஸ்லிம்: 3103)
நேர்ச்சையை முறிப்பதற்கான பரிகாரம் சத்தியத்தை முறிப்பதற்கான பரிகாரமே என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். சத்தியத்தை முறிப்பதற்கு என்ன பரிகாரம் என்பதைப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் விளக்குகிறான்.
உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான். அதற்கான பரிகாரம், உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் உணவாக அளிக்கும் நடுத்தரமான உணவில் பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது, அல்லது அவர்களுக்கு உடையளிப்பது, அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்வது ஆகியவையே. (இவற்றில் எதையும்) பெறாதோர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் சத்தியம் செய்(து முறித்)தால், சத்தியத்திற்குரிய பரிகாரம் இவையே. உங்கள் சத்தியங்களைப் பேணிக் கொள்ளுங்கள்! நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ் இவ்வாறே தனது வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன்: 5:89) ➚
நேர்ச்சை செய்ததை விடச் சிறந்ததை நிறைவேற்றலாம்
நாம் ஒரு நல்லறம் செய்வதாக நேர்ச்சை செய்தால் அதையே நிறைவேற்ற வேண்டும் என்றாலும் நாம் விரும்பினால் அதை விடச் சிறந்ததை நிறைவேற்றலாம்.
‘மக்காவை வெற்றி கொள்ளும் வாய்ப்பை அல்லாஹ் உங்களுக்கு வழங்கினால் பைத்துல் முகத்தஸில் இரண்டு ரக்அத் தொழுவதாக நான் நேர்ச்சை செய்திருந்தேன்’ என்று ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘இங்கே தொழு’ என்றார்கள். அந்த மனிதர் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார். ‘இங்கேயே தொழு’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீண்டும் கூறினார்கள். அவர் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அப்படியானால் உன் விருப்பப்படி செய்து கொள்’ என்றார்கள்.(அபூதாவூத்: 2875),(அஹ்மத்: 14390)
ஒரு பெண் நோய்வாய்ப்பட்டார். ‘அல்லாஹ் எனது நோயை நீக்கினால் நான் பைத்துல் முகத்தஸ் சென்று தொழுவேன்’ என்று அவர் நேர்ச்சை செய்தார். நோய் குணமானதும் பயணத்திற்கான ஏற்பாடுகள் செய்து புறப்பட ஆயத்தமானார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி மைமூனா (ரலி) அவர்கள் அப்பெண்ணிடம் வந்தார்கள். அப்பெண் தனது நேர்ச்சை பற்றி அவர்களிடம் தெரிவித்தார். அதற்கு மைமூனா (ரலி) அவர்கள் ‘பயணத்திற்காகத் தயார் செய்த உணவைச் சாப்பிட்டு முடி! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலில் தொழு! ஏனெனில் அங்கே ஒரு தடவை தொழுவது கஃபாவைத் தவிர மற்ற பள்ளி வாசல்களில் ஆயிரம் தடவை தொழுவதை விடச் சிறந்தது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூற நான் செவியுற்றுள்ளேன்’ என்றார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)(முஸ்லிம்: 2474)
பைத்துல் முகத்தஸ் ஆலயத்தில் தொழுவதாக நேர்ச்சை செய்தவர் அதை விடச் சிறந்த பள்ளியான மஸ்ஜிதே நபவியில் அத்தொழுகையை நிறைவேற்றலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.
நாம் செய்த நேர்ச்சையை விடச் சிறந்ததை நிறைவேற்றினால் நேர்ச்சை நிறைவேறும் என்பதை இதிலிருந்து அறியலாம்.
ஒரு கோழியைத் தர்மம் செய்வதாக நேர்ச்சை செய்தவர் ஒரு ஆட்டைத் தர்மம் செய்யலாம். பத்து ஏழைகளுக்கு உணவளிப்பதாக நேர்ச்சை செய்தவர் இருபது ஏழைகளுக்கு உணவளிக்கலாம்.
சாதாரண சோறு வழங்குவதாக நேர்ச்சை செய்தவர் பிரியாணியை வழங்கலாம்.
சிறந்ததைக் கண்டால் நேர்ச்சையை முறிக்கலாம்
நாம் ஒரு காரியத்தைச் செய்வதாக நேர்ச்சை செய்த பின் ‘அந்த நேர்ச்சையைச் செய்யாமல் இருப்பது தான் நல்லது’ என்று நமக்குத் தெரிய வந்தால் நேர்ச்சையை முறித்து விடுவது நல்லது. நேர்ச்சையை நிறைவேற்றாததற்காகப் பரிகாரம் செய்து விட வேண்டும்.
‘ஒரு காரியத்தைச் செய்வதாக நீ சத்தியம் செய்த பின் அது அல்லாத காரியத்தைச் சிறந்ததாக நீ கண்டால் உன் சத்தியத்தை முறித்து, அதற்கான பரிகாரத்தைச் செய்து விட்டு, அந்தச் சிறந்த காரியத்தைச் செய்து விடு’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் சமூரா (ரலி)(புகாரி: 6622)
நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து எங்க ளுக்கு வாகனம் (ஒட்டகம்) வேண்டும் எனக் கேட்டோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுத்து விட்டனர். மீண்டும் கேட்டோம். ‘அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மறுத்து விட்டனர். பின்னர் சில ஒட்டகங்கள் (மூன்று அல்லது ஐந்து) வந்து சேர்ந்தன. அதை எங்களுக்குத் தருமாறு கட்டளையிட்டனர். ‘அல்லாஹ்வின் தூதரே எங்களுக்கு வாகனம் தருவதில்லை என்று சத்தியம் செய்தீர்களே’ என்று கூறினோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘நான் ஏதாவது சத்தியம் செய்து விட்டு அது அல்லாததைச் சிறந்ததாக நான் கருதினால் அந்தச் சிறந்ததை செய்து விட்டு, சத்தியத்திற்குப் பரிகாரமும் செய்து விடுவேன்’ எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)(புகாரி: 6623)
தீர்மானமில்லாத நேர்ச்சை
எனக்கு இது நிறைவேறினால் நான் இதைச் செய்வேன் என்று தீர்மானமாக முடிவு செய்வது தான் நேர்ச்சையாகும்.
தீர்மானம் இல்லாமலும், செய்வதா வேண்டாமா’ என்ற குழப்பத்திலும் இருந்தால் அது நேர்ச்சையாகாது. அதை நிறைவேற்ற வேண்டிய அவசியம் கிடையாது.
உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். உங்கள் உள்ளங்கள் உறுதி செய்தவற்றின் காரணமாகவே உங்களைத் தண்டிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத் தன்மை மிக்கவன். (அல்குர்ஆன்: 2:225) ➚
உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான். (அல்குர்ஆன்: 5:89) ➚
‘எனது சமுதாயத்தினரின் உள்ளங்களில் தோன்றும் ஊசலாட்டங்களுக்குச் செயல் வடிவம் கொடுக்காத வரை அல்லது வாயால் அதை மொழியாத வரை அல்லாஹ் மன்னித்து விட்டான்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)(புகாரி: 2528, 5269)
நேர்ச்சை செய்யும் போது இதைச் செய்வேன் என்று நிச்சயித்துக் கூறினால் தான் அதை நிறைவேற்றுவது அவசியமாகும். ‘எனது இந்தத் தேவை நிறைவேறினால் இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) நான் இதைச் செய்வேன்’ என்று ஒருவர் கூறினால் அவர் அதை நிறைவேற்ற வேண்டியது அவசியம் இல்லை. நிறைவேற்றத் தவறியதற்காகப் பரிகாரமும் செய்யத் தேவையில்லை.
‘ஒருவர் சத்தியம் செய்யும் போது இன்ஷா அல்லாஹ் என்பதையும் சேர்த்துக் கூறினால் அவர் மீது எந்தப் பரிகாரமும் அவசியம் இல்லை’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)(திர்மிதீ: 1451)
இதே கருத்துடைய ஹதீஸ்கள் நஸயீ 3768, 3769, 3770, 3795 வது இலக்கத்திலும்,(அபூதாவூத்: 2838),(அஹ்மத்: 7742)இலக்கத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மற்றொரு அறிவிப்பில்
‘உங்களில் ஒருவர் சத்தியம் செய்யும் போது இன்ஷா அல்லாஹ் எனக் கூறினால் அவர் விரும்பினால் அதை நிறைவேற்றலாம். அவர் விரும்பினால் நிறைவேற்றாது விட்டு விடலாம்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. (அஹ்மத்: 5108, 5814, 5830)
ஒருவரின் நேர்ச்சையை மற்றவர் நிறைவேற்றுதல்
ஒருவர் ஒரு நேர்ச்சை செய்து விட்டு அதை நிறைவேற்றாமல் மரணித்து விட்டால் அவரது நெருங்கிய இரத்த சம்மந்தமுள்ள வாரிசுகள் அவர் சார்பில் அதை நிறைவேற்றலாம். அவ்வாறு நிறைவேற்றினால் நேர்ச்சை செய்தவர் மீது இருந்த அந்தக் கடமை நீங்கி விடும்.
ஆனால் அவர் செய்த நேர்ச்சை மார்க்கத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டதாக இருப்பது அவசியம் என்பதை மறந்து விடக் கூடாது.
‘என் தாயார் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்து விட்டு அதைச் செய்யாமலேயே மரணித்து விட்டார். அவர் சார்பில் நான் ஹஜ் செய்யலாமா’ என்று ஜுஹைனா குலத்துப் பெண் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘ஆம். அவர் சார்பில் நீ ஹஜ் செய்யலாம். உன் தாய் மீது கடன் இருந்தால் நீ தானே அதை நிறைவேற்றுவாய். எனவே அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று. நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ்வின் கடனே அதிகத் தகுதியுடையது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)(புகாரி: 1852, 6699, 7315)
ஸஃது பின் உபாதா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ‘என் தாயார் ஒரு நேர்ச்சை செய்திருந்த நிலையில் மரணித்து விட்டார்’ என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அவர் சார்பில் அதை நிறைவேற்று’ என்றார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)(புகாரி: 2761, 6698)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்தார். ‘அல்லாஹ்வின் தூதரே! என் தாயார் மீது ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் மரணித்து விட்டார். அவர் சார்பில் அதை நான் நிறைவேற்றலாமா?’ எனக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘ஆம், அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்தது’ என்றார்கள். மற்றொரு அறிவிப்பில் பதினைந்து நோன்பு எனக் கூறப்பட்டுள்ளது. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)(புகாரி: 1953)