37) மூன்று வரிசைகளாக நிற்பது அவசியமா?
ஜனாஸா தொழுகையில் குறைவான நபர்களே வந்தாலும் அவர்களை மூன்று வரிசைகளாகப் பிரித்து நிற்க வைக்கும் வழக்கம் பரவலாகக் காணப்படுகிறது. பின்வரும் ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு இவ்வாறு செய்து வருகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவுக்குத் தொழுகை நடத்திய போது அவர்களுடன் ஏழு பேர் இருந்தனர். அவர்களை இருவர் இருவராக நிறுத்தி மூன்று வரிசைகளாக ஆக்கினார்கள்
என்று அபூ உமாமா அறிவிப்பதாக தப்ரானியில் (8/190) ஒரு ஹதீஸ் உள்ளது
இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்னு லஹ்யஆ இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமான அறிவிப்பாளர் என்பதால் இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
‘யாருக்கு மூன்று வரிசைகளில் மக்கள் தொழுகை நடத்துகிறார்களோ அவருக்கு (சொர்க்கம்) கடமையாகி விட்டது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் உள்ளது.
நூல்கள்: திர்மிதி 949, அபூ தாவூத் 2753,
(இப்னு மாஜா: 1479), தப்ரானி 19/299
இதே கருத்தில் மற்றொரு ஹதீஸ் முஸ்னத் அஹ்மத் (16125) நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்விரண்டு அறிவிப்புகளிலும் முஹம்மத் பின் இஸ்ஹாக் என்பவர் இடம் பெறுகிறார். இவர் தத்லீஸ் செய்பவர் என்பதால் இந்த ஹதீஸை ஆதாரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
(தான் நேரடியாக யாரிடம் செவியுற்றாரோ அவரை இருட்டடிப்புச் செய்து விட்டு, அவருக்கு மேலே உள்ள அறிவிப்பாளர் கூறியது போல் ஹதீஸை அறிவிப்பது தத்லீஸ் எனப்படும்.)
தொழுகையில் மக்களின் எண்ணிக்கைக்கேற்ப வரிசைகளை அமைத்துக் கொள்ளலாம்.