80) வாகனத்தில் பின் தொடர்தல்
ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்பவர் நடந்தும் செல்லலாம்; வாகனத்தில் ஏறியும் பின் தொடரலாம்.
‘வாகனத்தில் செல்பவர் ஜனாஸாவின் பின்னால் செல்ல வேண்டும்; நடந்து செல்பவர் விரும்பியவாறு செல்லலாம்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி)
நூல்கள்: திர்மிதி 952, நஸயீ 1917,(அஹ்மத்: 17459, 17468, 17475)
வாகனத்தில் பின் தொடரக் கூடாது என்ற கருத்துடையவர்கள் பின்வரும் ஹதீஸை எடுத்துக் காட்டுகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவில் இருந்த போது வாகனம் கொண்டு வரப்பட்டது.. அதில் ஏற மறுத்தார்கள். (அடக்கம் செய்து) திரும்பிய போது வாகனம் கொண்டு வரப்பட்டது. அதில் ஏறிக் கொண்டார்கள். அவர்களிடம் இது பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ‘வானவர்கள் நடந்து வந்தனர். அவர்கள் நடக்கும் போது நான் வாகனத்தில் ஏறவில்லை. அவர்கள் சென்றதும் நான் வாகனத்தில் ஏறிக் கொண்டேன்’ என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)
இந்த ஹதீஸ் இவர்களின் கருத்துக்கு ஆதாரமாக ஆகாது. வானவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நேரடியாகக் கண்டனர். அவர்கள் நடந்து வருவதையும் அறிந்தனர். இதனால் வாகனத்தைத் தவிர்த்தனர். இந்த நிலை மற்றவர்களுக்கு இல்லை. வானவர்கள் வருகிறார்கள் என்பதும் மற்றவர்களுக்குத் தெரியாது. அவர்கள் வாகனத்தில் வருகிறார்களா? நடந்து வருகிறார்களா என்பதும் மற்றவர்களுக்குத் தெரியாது. எனவே நமக்குத் தெரியாத விஷயத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாது.
வாகனத்தில் ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்ல நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதியளித்ததற்கு ஆதாரம் உள்ளதால் விரும்பினால் வாகனத்தில் ஏறி ஜனாஸாவைப் பின் தொடரலாம்; ஜனாஸாவை முந்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஜனாஸாவுடன் நடந்து செல்பவர் ஜனாஸாவுக்கு முன்னேயும் வலது இடது புறங்களிலும் செல்வதற்கு அனுமதி உண்டு.
நடந்து செல்பவர் விரும்பியவாறு செல்லலாம் என்று மேற்கூறிய ஹதீஸில் கூறப்பட்டுள்ளதே இதற்குப் போதுமான சான்றாகும்.