19) தலையையும் மறைத்து கஃபனிட வேண்டும்

நூல்கள்: ஜனாஸாவின் சட்டங்கள்

கஃபன் என்பது தலை உள்ளிட்ட முழு உடலையும் மறைக்கும் வகையில் இருக்க வேண்டும். உடம்பை மறைத்துவிட்டு தலையை மட்டும் விட்டுவிடக் கூடாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் அல்லாஹ்வின் திருப்தியை நாடி ஹிஜ்ரத் செய்தோம். அதற்கான நன்மை அல்லாஹ்விடம் உறுதியாகி விட்டது. தமது நன்மையில் எதையும் (இவ்வுலகில்) அனுபவிக்காமல் மரணித்தவர்களும் எங்களில் இருந்தனர். அவர்களில் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களும் ஒருவாராவார். அவர் உஹதுப் போரில் கொல்லப்பட்டார். அவர் ஒரு போர்வையை மட்டுமே விட்டுச் சென்றார். அதன் மூலம் அவரது தலையை மறைத்தால் கால்கள் தெரிந்தன. கால்களை மறைத்தால் தலை தெரிந்தது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘இதன் மூலம் இவரது தலையை மூடுங்கள். இவரது கால் பகுதியில் இத்கர் என்ற புல்லைப் போடுங்கள்’ எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: கப்பாப் பின் அல் அரத் (ரலி)

(புகாரி: 4045, 4047, 1275, 1276, 3897, 3914, 4082, 6448)

கஃபனிடும் போது தலையை மூட வேண்டும் என்பது இந்த ஹதீஸிலிருந்து தெரிய வரும்.

இஹ்ராம் அணிந்தவர் பற்றிய ஹதீஸில் அவரது தலையை மறைக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஏனெனில் இஹ்ராம் அணிந்தவர் தலையை மறைக்கக் கூடாது என்று தடுக்கப்பட்டுள்ளார்.

அவருக்குத் தலையை மறைக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து மற்றவர்களின் தலை மறைக்கப்பட வேண்டும் என்பதை விளங்கலாம்.