7) முடிவுரை
முடிவுரை
இஸ்லாமிய சமூக அமைப்பில் உலகம் முழுவதும் ஒரே ஆட்சி தான் நடக்க வேண்டும். அந்த ஒரே ஆட்சித் தலைவரின் பிரதிநிதிகளாக பல பகுதிகளுக்கும் அமீர்கள் (ஆளுனர்கள்) நியமிக்கப்படுவார்கள்.
இந்தக் கட்டுக்கோப்பு குலைந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் அமீருக்குக் கட்டுப்படுதல் வலியுறுத்தப்பட்டுள்ளது.. அமீர்களும் மனிதர்கள் என்பதால் அவர்கள் தமது பணியில் தவறுகள் செய்யலாம். அதற்காக அவர்களுக்கு எதிராகப் புரட்சியிலும் கிளர்ச்சியிலும் மக்கள் இறங்கினால் இஸ்லாமிய அரசு பலவீனமடையும். முஸ்லிம்கள் சிதறி சின்னாபின்னமாகி விடுவார்கள். இதைத் தடுக்கவே அமீருக்குக் கட்டுப்படுதல் மார்க்கக் கடமையாக்கப்பட்டுள்ளது.
ஆனால் இன்று ஆளாளுக்கு அமீர் பட்டம் சூட்டிக் கொண்டு முஸ்லிம்களைச் சிதறடிப்பதற்கு அமீர் என்பதைப் பயன்படுத்துவது கொடுமையிலும் கொடுமையாகும்.
தனக்குக் கீழே உள்ள மக்களின் வறுமையைப் போக்குதல், அவர்களுக்கு ஆபத்து நேரும் போது களமிறங்கி போர் செய்தல் போன்ற உயரிய நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட இஸ்லாமியத் தலைமையாக இங்கே உள்ள எந்தத் தலைமையும் ஆக முடியாது.
தப்லீக், ஜமாத்தே இஸ்லாமி, ஜாக், ஜமாஅத்துல் முஸ்லிமீன், சிம், அஹ்லே ஹதிஸ், ஸலப், பைஅத் கூட்டம் போன்ற ஏராளமான அமைப்புக்கள் தங்கள் தலைமை இஸ்லாமியத் தலைமை எனக் கூறிக் கொள்கின்றன.
அமீருக்குக் கட்டுப்படுதல் பற்றிய ஆதாரங்களையெல்லாம் எடுத்துக் காட்டி தங்களுக்குக் கட்டுப்படுவது மார்க்கக் கடமை என்கின்றனர்..
இது முற்றிலும் தவறாகும். உன்மையான இஸ்லாமிய அமைப்பில் இத்தனை இயக்கங்களும், இத்தனை அமீர்களும் இருக்க முடியாது.
மக்களை ஒன்றுபடுத்துவதற்காகக் கூறப்பட்ட அமீருக்குக் கட்டுப்படுதல் என்பது மக்களைப் பிரிப்பதற்கும் தங்களுக்கெனத் தனிக் கூட்டத்தை உருவாக்குவதற்கும் இவர்களால் பயன்படுத்தப்படுவது விசித்திரமாக உள்ளது.
அமீருக்குரிய கடமைகள் பலவற்றில் ஒரு கடமையைக் கூட தங்களால் செய்ய முடியாது என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டே இவர்கள் இவ்வாறு வாதிட்டு வருகின்றனர்.
இவர்கள் இயக்கம் நடத்துவதே தவறு என நாம் கூறவில்லை இஸ்லாமிய ஆட்சி முறை இல்லாத நிலையில் நம்மால் இயன்ற அளவுக்குச் செயல்படுவதில் தவறு இல்லை.
எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி அல்லாஹ் சிரமப் படுத்தமாட்டான். இதைக் கவனத்தில் கொண்டு தனித்துச் செயல் படுவதை விட கூட்டாகச் செயல்படுவதால் பயன் அதிகமாகலாம் என்ற நோக்கத்தில் இத்தகைய இயக்கங்கள் செயல்படுவதை நாம் குறை கூறவில்லை.
நாம் கூறுவது என்னெவெனில் தங்களால் இயன்ற அளவுக்கு அவர்கள் செயல்படட்டும். ஆனால் இது தான் இஸ்லாமியத் தலைமை, இவர் தான் அமீர் எனக் கூறி மக்களை ஏமாற்ற வேண்டாம். அமீருக்குக் கட்டுப்படுதல் என்பது தம்மைப் போன்றவர்களுக்குக் கட்டுப்படுவது தான் என்றும் வாதிட வேண்டாம்.
இத்தகையோருக்கு கட்டளையிடும் அதிகாரம் ஏதும் கிடையாது. அவ்வாறு கட்டளையிடுவார்களானால் அதற்குக் கட்டுப்பட வேண்டிய அவசியம் யாருக்கும் கிடையாது. அதை மீறுவோர் அமீருக்குக் கட்டுப்பட மறுத்த குற்றத்தைச் செய்தவராக மாட்டார். ஏனெனில் இவர்களில் யாரும் அமீர் அல்ல.