66) ஆடைகளைக் களைதல்

நூல்கள்: ஜனாஸாவின் சட்டங்கள்

உடலைக் குளிப்பாட்டும் போது அவர் அணிந்திருந்த ஆடைகளைக் களைந்துவிட்டு குளிப்பாட்டினால் அதில் தவறில்லை. அணிந்திருந்த ஆடையுடனே குளிப்பாட்டினால் அதுவும் தவறல்ல.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்த பின் அவர்களைக் குளிப்பாட்ட முடிவு செய்தனர். ‘மற்றவர்களின் ஆடைகளைக் களைந்து விட்டு குளிப்பாட்டுவது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குளிப்பாட்டுவதா? அல்லது அவர்கள் அணிந்திருந்த ஆடையுடனே குளிப்பாட்டுவதா என்பது தெரியவில்லை’ என்று பேசிக் கொண்டனர். அவர்கள் இதில் கருத்து வேறுபாடு கொண்ட போது அல்லாஹ் அவர்களுக்குத் தூக்கத்தை ஏற்படுத்தினான். ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அணிந்துள்ள ஆடையுடனே குளிப்பாட்டுங்கள்’ என்று வீட்டின் மூலையிலிருந்து ஒருவர் கூறினார். அவர் யாரென்று நமக்குத் தெரியவில்லை. அதன்படி அவர்கள் அணிந்திருந்த ஆடையின் மேல் தண்ணீரை ஊற்றி அதன் மேல் தேய்த்துக் கழுவினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்கள்: அபூ தாவூத் 2733,(ஹாகிம்: 3)/59, பைஹகீ 3/387,(அஹ்மத்: 25102)

‘மற்றவர்களின் ஆடைகளைக் களைந்து குளிப்பாட்டுவது போன்று’ என்ற வாசகம் அணிந்திருந்த ஆடையைக் களைந்து விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் குளிப்பாட்டியுள்ளனர் என்பதை அறிவிக்கின்றது.

இது தவறு என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே அதை மாற்றியமைத்திருப்பார்கள்.

எனவே சட்டை, பேன்ட், பனியன் போன்ற ஆடைகளைக் களைந்து அவரது மறைவிடம் தெரியாத வகையில் மேலே ஒரு துணியைப் போட்டுக் கொண்டு கழுவலாம்.