62) மரணித்த உடலுக்குச் செய்ய வேண்டியவை
கண்களை மூடுதல்
ஒருவர் மரணித்தவுடன் அவரது கண்கள் நிலை குத்தியதாகக் காணப்படும். உடனடியாக இறந்தவரின் கண்களை மூட வேண்டும்.
அபூ ஸலமா மரணித்தவுடன் அவரருகே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்தனர். அவரது கண்கள் நிலைகுத்திக் காணப்பட்டது. உடனே அதை மூடினார்கள். ‘உயிர் கைப்பற்றப்படும் போது பார்வை அதைத் தொடர்கிறது’ என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
உடலுக்கு நறுமணம் பூசுதல்
இறந்தவரின் உடலிலிருந்து துர்நாற்றம் வந்தால் அதை மறைப்பதற்காக நறுமணம் பூச வேண்டும்.
இஹ்ராம் அணிந்த நிலையில் ஒருவர் மரணித்த போது ‘இவருக்கு நறுமணம் பூச வேண்டாம்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(புகாரி: 1265, 1266, 1267, 1268, 1839, 1849, 1850, 1851)
பொதுவாக இறந்தவர் உடலுக்கு நறுமணம் பூசுவது நடைமுறையில் இருந்ததால் தான் இஹ்ராம் அணிந்தவருக்கு நறுமணம் பூச வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
உடலை முழுமையாக மூடி வைத்தல்
ஒருவர் இறந்தவுடன் அவரது உடலை போர்வை போன்றவற்றால் முழுமையாக மூடி வைக்க வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது யமன் நாட்டில் தயாரான கோடு போடப்பட்ட போர்வையால் மூடப்பட்டனர்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
பார்வையாளர்களுக்கு முகத்தைத் திறந்து காட்டலாம்
போர்வையால் மூடப்பட்டாலும் பார்க்க வரும் பார்வையாளர்கள் விரும்பினால் அவர்களுக்காக முகத்தைத் திறந்து காட்டலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது அபூபக்ர் (ரலி) அவர்கள் (மதீனாவின் புறநகர் பகுதியான) ஸுன்ஹ் என்ற இடத்தில் தமது வீட்டில் இருந்தார்கள். கேள்விப்பட்டு குதிரையில் விரைந்து வந்தார்கள். குதிரையிலிருந்து இறங்கி யாரிடமும் பேசாமல் பள்ளிவாசலுக்குள் நுழைந்தார்கள். ஆயிஷா அவர்களின் அறைக்குச் சென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உடலை நாடிச் சென்றார்கள். கோடுகள் போடப்பட்ட யமன் நாட்டுப் போர்வையால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போர்த்தப்பட்டிருந்தார்கள். உடனே அவர்களின் முகத்தை விலக்கிப் பார்த்தனர். அவர்கள் மீது விழுந்து முத்தமிட்டு பின்னர் அழலானார்கள். பின்னர் ‘அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அல்லாஹ் உங்களுக்கு இரண்டு மரணத்தை ஏறப்படுத்தவில்லை. உங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட மரணத்தை அடைந்து விட்டீர்கள்’ என்று கூறினார்கள். வெளியே வந்த போது உமர் (ரலி) அவர்கள் மக்களிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். அவரைப் பார்த்து உட்காருங்கள் என்று அபூ பக்ர் (ரலி) கூறினார்கள். அவர் உட்கார மறுத்தார். மீண்டும் உட்காரச் சொன்னார்கள். அப்போதும் மறுத்தார். உடனே அபூ பக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார்கள். மக்களெல்லாம் உமரை விட்டு அபூ பக்ர் (ரலி) அருகில் திரண்டனர். ‘உங்களில் யாராவது முஹம்மது (ஸல்) அவர்களை வணங்குபவர்களாக இருந்தால் (அறிந்து கொள்ளுங்கள்) முஹம்மத் (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள். உங்கள் யாராவது அல்லாஹ்வை வணங்குபவர்களாக இருந்தால் (அறிந்து கொள்ளுங்கள்) அவன் தான் சாகாமல் என்றென்றும் உயிருடன் இருப்பவன்’ என்று கூறிவிட்டு ‘முஹம்மத் தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர்’ என்ற வசனத்தை ஓதிக் காட்டினார்கள். அபூ பக்ர் (ரலி) ஓதிக் காட்டும் வரை அப்படி ஒரு வசனம் இருப்பதை மக்கள் அறியாது இருந்தனர். அதைக் கேட்ட ஒவ்வொருவரும் அதை ஓதலனார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
மூடப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முகத்தை அபூ பக்ர் (ரலி) அவர்கள் திறந்து பார்த்துள்ளனர்.
இறந்தவரின் உடலை மூடி வைப்பதற்கும், பார்வையாளர்களுக்கு முகத்தைத் திறந்து காட்டுவதற்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அங்கீகாரம் இதற்கு உள்ளது என்பதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறியலாம்.
என் தந்தை கொல்லப்பட்ட போது நான் அழுது கொண்டே என் தந்தையின் முகத்தைத் திறந்து பார்க்கலானேன். மக்கள் என்னைத் தடுத்தனர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைத் தடுக்கவில்லை
அறிவிப்பவர் ஜாபிர் (ரலி)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னிலையில் ஜாபிர் அவர்கள் தமது தந்தையின் முகத்தைத் திறந்து பார்த்திருக்கிறார்கள். இது தவறு என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்திருப்பார்கள்.
இறந்தவர் உடலில் முத்தமிடுதல்
இறந்தவர் உடலில் முத்தமிடலாம் என்றோ, முத்தமிடக்கூடாது என்றோ நேரடியாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
மார்க்க சம்பந்தமில்லாத விஷயங்களைப் பொறுத்த வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்களா என்று பார்க்க வேண்டும். தடுத்திருக்காவிட்டால் அது அனுமதிக்கப்பட்டது என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
மார்க்கம் தொடர்பான வணக்க வழிபாடுகளைப் பொறுத்த வரை தடுத்துள்ளார்களா என்று பார்க்கக் கூடாது. அனுமதித்துள்ளார்களா என்று பார்க்க வேண்டும். அனுமதி இருந்தால் அதைச் செய்ய வேண்டும். அனுமதிக்கு ஆதாரம் இல்லாவிட்டால் அதைச் செய்யக் கூடாது.
இந்த அடிப்படையில் முத்தமிடுதல் என்பது வணக்கம் அல்ல. நமது அன்பை வெளிப்படுத்தும் செயலாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைத் தடுத்ததாக ஆதாரம் கிடைக்காவிட்டால் அனுமதி என்றே அதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தவுடன் அபூ பக்ர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகத்தின் முகத்தில் முத்தமிட்டுள்ளனர் (புகாரி: 1242, 3670, 4454, 5712, 4457) என்பது இதை வலுவூட்டும் வகையில் அமைந்துள்ளது.
எனவே மரணித்தவர் மீது அன்பு வைத்துள்ளவர்கள் முத்தமிட்டால் அதைத் தடுக்கக் கூடாது. அன்னிய ஆண்கள் அன்னியப் பெண்களுக்கு முத்தமிட பொதுவான தடை உள்ளதால் அவர்கள் தவிர மற்றவர்கள் இறந்தவர்கள் உடலை முத்தமிட்டால் அது குற்றமாகாது.