59) அழுகையும் துக்கமும் மூன்று நாட்களே!
அழுவதற்கும், துக்கத்தில் ஆழ்ந்து போவதற்கும் துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் சரியாக உண்ணாமல் பருகாமல் தொழிலுக்குச் செல்லாமல் இருப்பதற்கும் அனுமதி உண்டு. அனுமதி இருந்தாலும் மூன்று நாட்களுக்குப் பின் அழுவதற்கு அனுமதி இல்லை.
நான்காவது நாளில் வழக்கமான நடவடிக்கைகளில் இறங்கிவிட வேண்டும். அதன் பின்னரும் அழுதால், துக்கத்தை வெளிப்படுத்தினால் அவர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்கவில்லை என்ற நிலையை அடைவார்கள்.
‘இறந்தவருக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்தக் கூடாது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் நாங்கள் தடுக்கப்பட்டிருந்தோம். கணவரைத் தவிர. கணவர் இறந்தால் நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கத்தை வெளிப்படுத்தலாம்.
அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி)
அபூ ஸுஃப்யான் மரணித்த செய்தி கிடைத்ததும் அவரது மகள் உம்மு ஹபீபா (நபிகள் நாயகத்தின் மனைவி) அவர்கள் மூன்றாம் நாள் அன்று மஞ்சள் நிற நறுமணத்தைக் கொண்டு வரச் சொல்லி தமது விலாவிலும், கையிலும் தடவிக் கொண்டார்கள். ‘அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பும் பெண்கள், கணவர் தவிர மற்றவருக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கத்தைக் காட்டக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றிருக்கா விட்டால் இந்த நறுமணம் எனக்குத் தேவையற்றது’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸைனப் (ரலி)
அபூ தாலிபின் மகன் ஜஃபர் (ரலி) மரணித்த பின் மூன்று நாட்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவகாசம் எடுத்துக் கொண்டார்கள். பின்னர் ஜஃபரின் குடும்பத்தாரிடம் வந்தார்கள். ‘இன்றைய தினத்துக்குப் பின் என் சகோதரருக்காக அழக் கூடாது’ எனக் கூறினார்கள். ‘என் சகோதரரின் புதல்வர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்’ என்றார்கள். நாங்கள் பறவைக் குஞ்சுகள் போல (தலைமுடி சீர் செய்யப்படாமல்) கொண்டு வரப்பட்டோம். உடனே நாவிதரை அழைத்து வரச் செய்து எங்கள் தலையை மழிக்குமாறு கட்டளையிட்டனர்.
அறிவிப்பவர்: ஜஃபரின் மகன் அப்துல்லாஹ்
நூல்கள்: நஸயீ 5132, அபூ தாவூத் 3660,(அஹ்மத்: 1659)
தந்தை இறந்து விட்டால் மகனுக்கு மொட்டை அடிக்க வேண்டும் என்று இந்த ஹதீஸைப் புரிந்து கொள்ளக் கூடாது. கவலையின் காரணமாக ஜஃபரின் குடும்பத்தினர் குழந்தைகளைப் பராமரிக்கவில்லை. முட்டையிலிருந்து வெளி வந்த குஞ்சுகள் எவ்வாறு மயிர்களைச் சிலிப்பிக் கொண்டிருக்குமோ அது போன்ற நிலையில் அக்குழந்தைகள் இருந்ததால் மொட்டை அடிக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸின் வாசகத்திலிருந்தே இதை அறியலாம்.