58) கண்ணீர் விட்டு அழலாம்
ஒருவர் மரணித்து விட்டால் கண்ணீர் விட்டு அழுவது தவறல்ல. அழுவதால் பொறுமையை மேற்கொள்ளவில்லை என்று ஆகிவிடாது. ஏனெனில் பொறுமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு துன்பங்களின் போது கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் மரணத்தை நெருங்கிய போது நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் அவரைப் பார்க்கச் சென்றோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது. அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் ‘அல்லாஹ்வின் தூதரே! நீங்களுமா?’ என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அவ்ஃபின் மகனே! இது இரக்க உணர்வு’ என்று கூறி விட்டு வேறு வார்த்தையில் பின் வருமாறு விளக்கினார்கள். ‘கண்கள் கண்ணீர் வடிக்கின்றன; உள்ளம் கவலைப்படுகிறது; நமது இறைவன் பொருந்திக் கொள்ளாத எதையும் நாம் கூற மாட்டோம். இப்ராஹீமே! உமது பிரிவுக்காக நாம் கவலைப்படுகிறோம்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். அவரை நோய் விசாரிப்பதற்காக அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), ஸஅது பின் அபீ வக்காஸ் (ரலி), அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) ஆகியோருடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்றனர். அவரது குடும்பத்தினர் அவரைச் சுற்றி இருப்பதைக் கண்டனர். முடிந்து விட்டதா?’ என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! இல்லை’ என்று (வீட்டில் உள்ளவர்கள்) கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழலானார்கள். அவர்கள் அழுவதைக் கண்டவுடன் மக்களும் அழுதார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘கண்ணீர் வடித்ததற்காகவோ, உள்ளத்தால் கவலைப்பட்டதற்காகவோ அல்லாஹ் தண்டிக்க மாட்டான். என்றாலும் இதன் காரணமாகவே தண்டிப்பான் அல்லது அருள் புரிவான்’ என்று கூறி விட்டு தமது நாவைச் சுட்டிக் காட்டினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
தன் மகன் மரணத்தை நெருங்கி விட்டான் என்ற செய்தியை நபிகள் நாயகத்தின் மகள் (ஸைனப்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சொல்லி அனுப்பி ‘உடனே வர வேண்டும்’ என்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மகளுக்கு ஸலாம் கூறச் சொல்லிவிட்டு ‘அல்லாஹ் எடுத்துக் கொண்டது அவனுக்குரியது. அவன் கொடுத்ததும் அவனுக்குரியது. அவனிடத்தில் ஒவ்வொன்றும் நேரம் நிர்ணயிக்கப்பட்டதாக உள்ளது. எனவே அவர் பொறுமையைக் கடைப்பிடித்து நன்மையை எதிர்பார்க்கட்டும்’ என்று செய்தி சொல்லி அனுப்பினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகள் சத்தியம் செய்து கட்டாயம் வந்தே ஆக வேண்டும் என்று மறு செய்தி அனுப்பினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அவர்களுடன் ஸஅது பின் உபாதா (ரலி), முஆத் பின் ஜபல் (ரலி), உபை பின் கஅப் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி) மற்றும் பலர் புறப்பட்டனர். சிறுவர் (பேரன்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொடுக்கப்பட்டார். அவருக்கு மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. ‘அல்லாஹ்வின் தூதரே! இது என்ன?’ என்று ஸஅது பின் உபாதா (ரலி) கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘இந்த இரக்க உணர்வை அல்லாஹ் மனித உள்ளங்களில் அமைத்திருக்கிறான். தனது அடியார்களிடம் இரக்கம் காட்டுபவருக்கே அல்லாஹ்வும் இரக்கம் காட்டுவான்’ என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி)
(புகாரி: 1284, 5655, 6655, 7377)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழுததற்கும் மற்றவர்கள் அழுத போது அதைத் தடுக்காமல் இருந்ததற்கும் ஏராளமான சான்றுகள் உள்ளன.
(பார்க்க(புகாரி: 3063, 1288, 1244, 1293)