110) ஒருவர் இறந்தவுடன் மற்றவர்கள் கூற வேண்டியது

நூல்கள்: ஜனாஸாவின் சட்டங்கள்

ஒருவர் மரணித்தவுடன், அல்லது மரணச் செய்தியைக் கேள்விப்பட்டவுடன் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் எனக் கூற வேண்டும். நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பச் செல்பவர்கள்’ என்பது இதன் பொருள்.

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது ‘நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்’ என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர்.

திருக்குர்ஆன் 2.155, 156, 157

மேற்கண்ட சொற்களை மரணத்தின் போது மட்டுமின்றி நமக்கு ஏற்படும் எத்தகைய துன்பத்தின் போதும் கூறுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்.

நமக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவரின் இழப்பு நம்மைப் பாதிக்கும் என்றால் ‘இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்’ என்பதுடன் மற்றொரு பிரார்த்தனையையும் சேர்த்துக் கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளனர்.

‘ஒரு முஸ்லிமுக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது இறைவன் கட்டளையிட்டவாறு ‘இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்’ எனக் கூறிவிட்டு ‘அல்லாஹும்ம மஃஜுர்னீ ஃபீ முஸீபத்தி வஅக்லிஃப்லீ கைரன் மின்ஹா’ (இறைவா! எனது இத்துன்பத்துக்காக நீ கூலி தருவாயாக! இதை விடச் சிறந்ததை எனக்குப் பகரமாகத் தருவாயாக!) என்று கூறினால் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் அவருக்குப் பகரமாக்காமல் இருப்பதில்லை’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் என் கணவர் அபூ ஸலமா இறந்த போது ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கி முதன் முதலில் ஹிஜ்ரத் செய்த குடும்பத்தவரான அபூ ஸலமாவை விட சிறந்த முஸ்லிம் வேறு யார் இருப்பார்?’ என்று எனக்குள் கேட்டுக் கொண்டேன். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த இந்தப் பிரார்த்தனையைக் கூறினேன். என் கணவருக்குப் பகரமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் எனக்குத் தந்தான்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)

(முஸ்லிம்: 1525, 1526),

இறந்தவரின் வீட்டுக்கு அல்லது நோயாளியைச் சந்திக்கச் செல்பவர் நல்லதையே கூற வேண்டும். ஒரு நோயாளியை நாம் சந்திக்கச் சென்றால் அவர் பிழைப்பது அரிது என்ற நிலையில் இருந்தாலும், அவருக்கு நல்லதைத் தான் கூற வேண்டும். அல்லாஹ் உங்களுக்கு ஆரோக்கியத்தைத் தருவான் என்பன போன்ற சொற்களைத் தான் கூற வேண்டும்.

இது போல் தான் மரணித்தவர் வீட்டுக்குச் சென்றாலும் அவரது உறவினர்களிடம் நல்லதையே கூற வேண்டும்.

‘நீங்கள் நோயாளியையோ, மரணித்தவரையோ காணச் சென்றால் நல்லதையே கூறுங்கள். ஏனெனில் நீங்கள் கூறுவதற்கு வானவர்கள் ஆமீன் கூறுகின்றனர்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)

(முஸ்லிம்: 1527)