112) பா(த்)திஹா, பகரா அத்தியாயம் ஓதுதல்
இறந்தவரின் தலைமாட்டில் அல்ஹம்து சூராவையும், கால்மாட்டில் பகரா அத்தியாயத்தின் கடைசி வசனங்களையும் ஓதுங்கள்’
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் உள்ளது. (தப்ரானியின் அல்கபீர் 12/144)
இதை அறிவிக்கும் அய்யூப் பின் நஹீக் என்பவரும், யஹ்யா பின் அப்துல்லாஹ் என்பவரும் பலவீனமானவர்கள் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் உறுதி செய்துள்ளனர்.
மரணித்தவரின் மறுமை நன்மைக்காக நாம் செய்ய வேண்டிய அனைத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு நிறைவாக சொல்லித் தந்து விட்டார்கள். அவர்கள் ஒரு குறையும் வைக்கவில்லை என்பதை நாம் முழுமையாக நம்ப வேண்டும்.
இறந்தவருக்காக மூன்றாம் ஃபாத்திஹா, ஏழாம் ஃபாத்திஹா, நாற்பதாம் ஃபாத்திஹா, கத்தம், வருட ஃபாத்திஹாக்கள், இறந்தவருக்காக ஹல்கா, திக்ருகள், ராத்திபுகள் என்று பலவிதமான சடங்குகளையும் தமிழக முஸ்லிம்களில் பலர் செய்து வருகின்றனர்.
இவை அனைத்தும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.
மார்க்கம் என்ற பெயரில் நாம் எதைச் செய்வதாக இருந்தாலும் அதை அல்லாஹ் சொல்லியிருக்க வேண்டும். அல்லது அல்லாஹ்வின் தூதர் சொல்லியிருக்க வேண்டும்.
அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறாமல் நம்மைப் போன்ற மனிதர்கள் தங்களின் சுயநலனுக்காகவோ, அல்லது அறியாமை காரணமாகவோ உருவாக்கியவை இஸ்லாமாக ஆகாது.
‘நமது கட்டளையில்லாமல் யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
‘நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்:(புகாரி: 2697),(முஸ்லிம்: 3242)
‘(மார்க்கத்தில்) புதிதாக உருவாக்கப்பட்டவைகளை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். புதிதாக உருவாக்கப்பட்டவை அனைத்தும் பித்அத் (எனும் அனாச்சாரம்) ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் சேர்க்கும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: நஸயீ 1560
அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லித் தராததைச் செய்தால் அது நன்மையின் வடிவத்தில் இருந்தாலும் அதன் விளைவு நரகமாகும்.
இரண்டு ரக்அத் தொழுகையில் மற்றொரு ரக்அத்தை அதிகமாக்குவது நன்மையின் தோற்றத்தில் இருந்தாலும் அதை நாம் சரி காண மாட்டோம். இந்த விஷயத்திலும் இது போன்ற தெளிவு நமக்கும் அவசியம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே மூன்று மகள்களையும், ஒரு மகனையும் இழந்தார்கள். மனைவி கதீஜாவையும் இழந்தார்கள். இறந்தவர்களுக்காக மேற்கண்ட காரியங்களைச் செய்வது நன்மை என்றிருந்தால் தமது குடும்பத்தினருக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைச் செய்திருப்பார்கள். ஆனால் இது போன்ற ஃபாத்திஹாக்களை அவர்கள் செய்ததில்லை. அவர்களுக்குப் பின் பலநூறு ஆண்டுகளாக முஸ்லிம் சமுதாயம் இவற்றைச் செய்ததில்லை.
பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட போலிச் சடங்குகளை விட்டொழித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தவற்றை மட்டும் செய்து இறந்தவர்களுக்கு உதவுவோம்.