115) இறந்தவருக்காக நோன்பு நோற்றல்
இறந்தவர் மீது கடமையான அல்லது நேர்ச்சை செய்த நோன்பு ஏதும் நிறைவேற்றப்படாமல் இருந்தால் அதை அவரது வாரிசுகள் நோற்கலாம். அவ்வாறு நோற்றால் இறந்தவர் மீது இருந்த சுமை விலகி விடும்.
‘தன் மீது நோன்புகள் கடமையாகி இருந்த நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் அவர் சார்பில் அவரது பொறுப்பிலுள்ள வாரிசு நோன்பு நோற்க வேண்டும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! என் தாய் மீது ஒரு மாத நோன்பு கடமையாக இருந்த நிலையில் மரணித்து விட்டார். அவர் சார்பில் அதை நான் நிறைவேற்றட்டுமா?’ என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘ஆம்! அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்ததாகும்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)