3) தலைமைப் பதவியின் வகைகள்

நூல்கள்: அமீருக்கு கட்டுப்படுதல்

தலைமைப் பதவியும் அதன் வகைகளும்.
அமீர் என்றால் தலைவர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். தலைவரைக் குறிப்பதற்கு அமீரைப் போலவே வேறு சொற்களும் அரபி மொழியில் காணப்படுகின்றன. அவை கலீஃபா, இமாம், அமீருல் முஃமினீன், அமீருல் ஆம்மா, மலிக், சுல்த்தான், ஆமில் ஆகியவையாகும்.

எனவே இந்தச் சொற்கள் அனைத்தையும் முழுமையாக நாம் ஆய்வு செய்வதின் மூலம் அமீர் என்பதற்கான சரியான இலக்கணத்தை நாம் அறிய முடியும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் இந்தச் சமுதாயத்தின் முதல் தலைவராக இருந்தார்கள். அமீருக்குக் கட்டுப்படுவதை வலியுறுத்திய அவர்கள் தம்மை அமீர் என்று சொல்லிக் கொள்ளவில்லை. நபித்தோழர்களாலும் அவர்கள் அமீர் என அழைக்கப்படவோ குறிப்பிடப்படவோ இல்லை.

அவர்களின் தலைமைத்துவம் அல்லாஹ்வின் தூதர் என்ற பெயராலேயே குறிப்பிடப்பட்டது.

ரிஸாலத் – இறைத்தூதர் எனும் தகுதி
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த போது அந்தச் சமுதாயத்தின் தலைவராக அவர்களே இருந்தார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவர்களின் தலைமை ஓர் வித்தியாசமான தலைமை எனலாம்.

அவர்கள் மக்காவில் இருந்த காலம் வரை ஒடுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும் மதீனா சென்று நல்லாட்சியை நிறுவிய பின் அந்தச் சமுதாயத்தின் ஆட்சித் தலைவராகவும் அவர்களே இருந்தார்கள். அதே சமயம் அல்லாஹ்வின் தூதர் என்ற முறையில் ஆன்மிகத் தலைவராகவும் அவர்கள் திகழ்ந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் என்ற ஆன்மிகத் தலைமை, ஆட்சித் தலைமை என இரண்டு தலைமைகள் அவர்களிடம் இருந்தாலும் அவர்கள் ஆட்சித் தலைவர் என்ற கருத்தைத் தரும் மேலே நாம் எடுத்துக் காட்டிய எந்த வார்த்தையையும் தமக்காகப் பயன்படுத்தியதில்லை. அவர்களிடம் பாடமும், பயிற்சியும் பெற்ற தோழர்களும் அவர்களை மன்னா! ஆட்சித் தலைவா! என்றெல்லாம் ஒரு போதும் கூறியதில்லை. மாறாக ஆன்மிகத் தலைமையைக் குறிக்கும் அல்லாஹ்வின் தூதர் என்பதைத் தான் நபித்தோழர்கள் பயன்படுத்தினார்கள்.

ஆட்சித் தலைவர் என்ற பொறுப்பைக் குறிக்கும் எந்த வார்த்தையும் நபியவர்களுக்குப் பயன்படுத்தப்படாமல் இருந்ததற்குக் காரணங்களும் இருந்தன.

முக்கியமான காரணம் என்னவெனில் நபியவர்கள் நடத்திய ஆட்சி தமது சுயவிருப்பத்தின் படி நடத்திய ஆட்சி அல்ல. மாறாக தொழுகை, நோன்பு போன்ற வணக்க, வழிபாடுகளை இறைவனிடமிருந்து அவர்கள் பெற்றது போல அரசு நடத்துவதற்கான சட்டங்களையும் அந்த இறைவனிடமிருந்தே பெற்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் என்ற வார்த்தைக்கு அல்லாஹ்வின் ஆணைப்படி வணக்க வழிபாடுகளைக் கற்றுத் தந்து நடைமுறைப்படுத்துபவர் என்பது மட்டும் பொருளன்று. அல்லாஹ்வின் கட்டளைப்படி ஆட்சி நடத்துபவர் என்ற பொருளும் அதனுள் அடங்கி இருந்தது.

எனவே தான் அமீர், கலீஃபா, சுல்த்தான், அமீருல் முஃமினீன் என்பன போன்ற வார்த்தைகளால் நபியவர்கள் குறிப்பிடப்படவில்லை. அதை விட விரிந்த, அதே சமயம் ஆட்சித் தலைமையையும் உள்ளடக்கிய ரஸூலுல்லாஹ் – அல்லாஹ்வின் தூதர் – என்ற வார்த்தையால் அவர்கள் குறிப்பிடப்பட்டனர்.

ரிஸாலத் – நுபுவ்வத் என்பதில் ஆட்சியும் அடக்கம் என்பதைப் பின்வரும் ஹதீஸ்களில் இருந்தும் நாம் அறியலாம்.

18406 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الطَّيَالِسِيُّ، حَدَّثَنِي دَاوُدُ بْنُ إِبْرَاهِيمَ الْوَاسِطِيُّ، حَدَّثَنِي حَبِيبُ بْنُ سَالِمٍ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ:
كُنَّا قُعُودًا فِي الْمَسْجِدِ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ بَشِيرٌ رَجُلًا يَكُفُّ حَدِيثَهُ، فَجَاءَ أَبُو ثَعْلَبَةَ الْخُشَنِيُّ، فَقَالَ: يَا بَشِيرُ بْنَ سَعْدٍ أَتَحْفَظُ حَدِيثَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِي الْأُمَرَاءِ؟ فَقَالَ حُذَيْفَةُ: أَنَا أَحْفَظُ خُطْبَتَهُ، فَجَلَسَ أَبُو ثَعْلَبَةَ، فَقَالَ حُذَيْفَةُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَكُونُ النُّبُوَّةُ فِيكُمْ مَا شَاءَ اللَّهُ أَنْ تَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ خِلَافَةٌ عَلَى مِنْهَاجِ النُّبُوَّةِ، فَتَكُونُ مَا شَاءَ اللَّهُ أَنْ تَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ اللَّهُ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ مُلْكًا عَاضًّا، فَيَكُونُ مَا شَاءَ اللَّهُ أَنْ يَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ مُلْكًا جَبْرِيَّةً، فَتَكُونُ مَا شَاءَ اللَّهُ أَنْ تَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ خِلَافَةً عَلَى مِنْهَاجِ نُبُوَّةٍ» ثُمَّ سَكَتَ، قَالَ حَبِيبٌ: ” فَلَمَّا قَامَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، وَكَانَ يَزِيدُ بْنُ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ فِي صَحَابَتِهِ، فَكَتَبْتُ إِلَيْهِ بِهَذَا الْحَدِيثِ أُذَكِّرُهُ إِيَّاهُ، فَقُلْتُ لَهُ: إِنِّي أَرْجُو أَنْ يَكُونَ أَمِيرُ الْمُؤْمِنِينَ، يَعْنِي عُمَرَ، بَعْدَ الْمُلْكِ الْعَاضِّ وَالْجَبْرِيَّةِ، فَأُدْخِلَ كِتَابِي عَلَى عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ فَسُرَّ بِهِ وَأَعْجَبَهُ “

அமீர்கள் தொடர்பாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸை மனனம் செய்திருக்கின்றீரா? என்று அபூ ஸஃலபா கேட்டார். நான் நபியவர்களின் சொற்பொழிவை மனனம் செய்துள்ளேன் என்று கூறி ஹூதைபா (ரலி) அவர்கள் பின் வருமாறு கூறினார்கள்.

நபித்துவம் எவ்வளவு காலம் இருக்க வேண்டும் என அல்லாஹ் நாடியுள்ளானோ அந்த அளவு நபித்துவம் இருக்கும். பிறகு அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருனத்தில் அதை உயர்த்தி விடுவான். பிறகு நபித்துவத்தின் வழியில் கிலாஃபத் ஆட்சி அமையும். அல்லாஹ் எந்த அளவுக்கு நாடியுள்ளானோ அந்த அளவு அது நீடிக்கும். பிறகு அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருனத்தில் அதை உயர்த்தி விடுவான். பிறகு கடினமான மன்னராட்சி அமையும். அல்லாஹ் எந்த அளவுக்கு நாடியுள்ளானோ அந்த அளவுக்கு நீடிக்கும். பிறகு அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருனத்தில் அதை உயர்த்தி விடுவான். பின்னர் அடக்கு முறையைக் கொண்ட மன்னராட்சி அமையும். அல்லாஹ் எந்தளவுக்கு நாடியுள்ளானோ அந்த அளவுக்கு அது நீடிக்கும். பிறகு அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருனத்தில் அதை உயர்த்தி விடுவான். பிறகு நபித்துவ வழியில் கிலாஃபத் ஆட்சி அமையும் என்று நபியவர்கள் கூறி முடித்து அமைதியாகி விட்டார்கள்.
(அஹ்மத்: 18406)(17680) 

இந்த ஹதீஸில் ஆட்சி முறையைப் பற்றி நபியவர்கள் அடுக்கடுக்காகச் சொல்கிறார்கள் எனினும் தன்னுடைய ஆட்சி முறையைப் பற்றிக் குறிப்பிடும் போது, நபித்துவம் இருக்கும் என்றே குறிப்பிடுகின்றார்கள். எனவே அல்லாஹ்வின் திருத்தூதர் என்ற பெயரைத் தவிர வேறு ஆட்சி முறைகளைக் குறிப்பிடும் எந்த அடை மொழியிலும் நபியவர்களை அழைப்பது சரியல்ல என்பதை இதில் இருந்து உணரலாம்.

இவ்வாறு ரிஸாலத்தை (அல்லாஹ்வின் தூதர் எனும் தகுதியை) அடிப்படையாகக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாத்திரம் ஆட்சி செலுத்தவில்லை. இஸ்ரவேல் மக்களையும் நபிமார்கள் இப்படித் தான் ஆட்சி செலுத்தியுள்ளனர்.

3455- حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ، حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ فُرَاتٍ الْقَزَّازِ قَالَ : سَمِعْتُ أَبَا حَازِمٍ قَالَ قَاعَدْتُ أَبَا هُرَيْرَةَ خَمْسَ سِنِينَ فَسَمِعْتُهُ يُحَدِّثُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ :
كَانَتْ بَنُو إِسْرَائِيلَ تَسُوسُهُمُ الأَنْبِيَاءُ كُلَّمَا هَلَكَ نَبِيٌّ خَلَفَهُ نَبِيٌّ وَإِنَّهُ لاَ نَبِيَّ بَعْدِي وَسَيَكُونُ خُلَفَاءُ فَيَكْثُرُونَ قَالُوا : فَمَا تَأْمُرُنَا قَالَ فُوا بِبَيْعَةِ الأَوَّلِ فَالأَوَّلِ أَعْطُوهُمْ حَقَّهُمْ فَإِنَّ اللَّهَ سَائِلُهُمْ عَمَّا اسْتَرْعَاهُمْ.

இஸ்ரவேலர்களை நபிமார்களே ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தனர். ஒரு நபி மறைந்ததும் இன்னொரு நபி அவருக்குப் பதிலாக பொறுப்பு வகிப்பார். எனக்குப் பிறகு எந்த நபியும் கிடையாது. கலீஃபாக்கள் உருவாவார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று நபியவர்கள் கூறியதும், அல்லாஹ்வின் தூதரே! (அது தொடர்பாக) எங்களுக்கு என்ன கட்டளையிடப் போகிறீர்கள் எனக் கேட்டனர். அதற்கு நபியவர்கள், அவர்களில் முதலில் யாரிடத்தில் உடன்படிக்கை செய்தீர்களோ அவரிடத்திலேயே அதை நிறைவேற்றுங்கள். அவர்களுடைய கடமையை அவர்களுக்குச் செலுத்தி விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் நிர்வகித்தவை பற்றி அவர்களிடம் விசாரனை செய்வான் என்று பதில் சொன்னார்கள்.  அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி).
(புகாரி: 3455)

இவ்விரு ஹதீஸ்களும் ரிஸாலத் (அல்லாஹ்வின் தூதர் எனும் தகுதி) என்பதில் ஸியாஸத் (அரசியல் தலைமை)யும் அடங்கும் என்பதற்குத் தெளிவான சான்றுகளாக உள்ளன.

கிலாஃபத்
அல்லாஹ்வின் தூதருக்குப் பிறகு அபூ பக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். ஆட்சித் தலைவரைக் குறிக்க பல்வேறு வார்த்தைகள் உள்ளன என்பதை முன்னர் நாம் குறிப்பிட்டுள்ளோம். அவற்றுள் எந்த ஒன்றையும் அபூபக்ர் (ரலி) அவர்கள் தமக்காகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. கலீஃபத்து ரஸூலில்லாஹ் – அல்லாஹ்வின் தூதருடைய பிரதிநிதி என்பதைத் தான் அவர்கள் பயன்படுத்தினார்கள். நபித்தோழர்களும் அவர்களை கலீஃபத்து ரஸூலில்லாஹ் என்று தான் அழைத்தனர்.

கலீஃபா என்ற சொல்லுக்கு அதிபர் என்ற பொருள் கிடையாது. பிரதிநிதி என்பதே அதன் நேரடிப் பொருளாகும். கலீஃபத்து ரஸூலில்லாஹ் என்றால் அல்லாஹ்வின் தூதருடைய பிரதிநிதி என்ற பொருள் வரும். பின்னர் கலீஃபத்து ரஸூலில்லாஹ் என்பது கலீஃபா என்று சுருங்கியது.

மன்னர், அதிபதி என்று பொருள் படும் மலிக், சுல்த்தான் போன்ற வார்த்தைகளைத் தவிர்த்து விட்டு நபியவர்களின் பிரதிநிதி எனப் பொருள்படும் கலீஃபா என்ற வார்த்தையையே அவர்கள் விரும்பினார்கள். அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களும் தன்னுடைய வழியில் நடக்கும் ஆட்சியை கிலாஃபத் எனவும், அத்தகைய ஆட்சியாளர்களைக் கலீஃபாக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னர் நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸில் நபியவர்கள் பயன்படுத்திய நபித்துவத்தின் வழியில் கிலாஃபத் ஆட்சி அமையும் என்ற வாசகத்தில் இருந்து இதை நாம் அறியலாம்.

பின்வரும் ஹதீஸிலும் நபிவழியில் நடத்தப்படும் நல்லாட்சி கிலாஃபத் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2676 – حدثنا علي بن حجر حدثنا بقية بن الوليد عن بجير بن سعد عن خالد بن معدان عن عبد الرحمن بن عمرو السلمي عن العرباض بن سارية قال :

وعظنا رسول الله صلى الله عليه و سلم يوما بعد صلاة الغداة موعظة بليغة ذرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل : إن هذه موعظة مودع فماذا تعهد إلينا يا رسول الله ؟ قال : أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن عبد حبشي فإنه من يعش منكم يرى اختلافا كثيرا وإياكم ومحدثات الأمور فإنها ضلالة فمن أدرك ذلك منكم فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ
قال أبو عيسى : هذا حديث صحيح
وقد ورى ثور بن يزيد عن خالد بن معدان عن عبد الرحمن بن عمرو السلمي عن العرياض بن سارية عن النبي صلى الله عليه و سلم نحو هذا حدثا بذلك الحسن بن علي الخلال وغير واحد قالوا : حدثنا أبو عاصم عن ثور بن يزيد عن خالد بم معدان عن عبد الرحمن بن عمرو السلمي عن العرباض بن سارية عن النبي صلى الله عليه و سلم نحوه و العرباض بن سارية يكني أبا نجيح
وقد روي هذا الحديث عن حجر بن حجر عن عرباض بن سارية عن النبي صلى الله عليه و سلم نحوه

அல்லாஹ்வுக்கு அஞ்சும்படியும், அமீர் கருத்த அடிமையாக இருந்தாலும் சரி அவருக்குச் செவிசாய்த்துக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும் நான் உங்களுக்கு அறிவுரை சொல்கிறேன். ஏனெனில் எனக்குப் பின் உங்களில் வாழ்பவர்கள் அதிகம் கருத்து வேறுபாடுகளைக் காண்பார்கள். அப்போது நீங்கள் என்னுடையை வழிமுறையையும், நேர்வழி பெற்ற நேர்மையான கலீஃபாக்களின் வழிமுறைகளையும் பின்பற்றுங்கள். அதைப் பற்றிப் பிடித்து கடைவாய்ப் பற்களால் கடித்துக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இர்ஃபாள் பின் ஸாரியா (ரலி).
நூல் : திர்மிதி 2600

தனக்குப் பின் வரக்கூடிய, தன்னுடைய வழியில் நடக்கக் கூடிய ஆட்சியாளர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலீஃபாக்கள் என்று இந்த ஹதீஸிலும் குறிப்பிடுகிறார்கள்.

59 – حدثنا موسى بن داود حدثنا نافع يعني ابن عمر عن ابن أبي مليكة قال: قيل لأبي بكر: يا خليفة الله، فقال: أنا خليفة رسول الله – صلى الله عليه وسلم –
، وأنا راض به، وأنا راض به، وأنا راض.

அல்லாஹ்வுடைய கலீஃபாவே என்று அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கிக் கூறப்பட்டது. அப்போது அவர்கள் நான் அல்லாஹ்வின் தூதருடைய கலீஃபா ஆவேன். (அல்லாஹ்வின் கலீஃபா அல்ல) இவ்வாறு அழைப்பதையே நான் விரும்புகிறேன், இவ்வாறு அழைப்பதையே நான் விரும்புகிறேன், இவ்வாறு அழைப்பதையே நான் விரும்புகிறேன் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ முலைக்கா.
(அஹ்மத்: 56)

மேற்கண்ட ஹதீஸ்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிறகு நபித்துவத்தின் அடிப்படையில் நடக்கும் ஆட்சிக்கு கிலாஃபத் என்றும், அந்த அடிப்படையில் ஆட்சி நடத்துபவர்கள் கலீஃபா என்றும் கூறப்பட்டிருப்பதைக் கானலாம்.

இமாம் – இமாமத்
நல்ல முறையில் ஆட்சி நடத்தினாலும் அது அல்லாத முறையில் ஆட்சி நடத்தினாலும் அவர்களைக் குறிப்பிட இமாம் என்ற வார்த்தையும் பயன்படுத்தப்படுவதுண்டு.

இமாம் என்பது தொழுகை நடத்தக் கூடியவரைக் குறிக்கும் என்பதை நாம் அறிவோம். முழுமையான அதிகாரம் பெற்ற மன்னரையும் இவ்வார்த்தை குறிக்கும்.

நபியவர்கள் இமாம் என்ற வார்த்தையை இவ்விரு அர்த்தங்களிலும் பயன்படுத்தியுள்ளனர். உதாரணத்துக்கு புகாரியில் இடம் பெற்ற கீழ்க்காணும் ஹதீஸ்களைக் குறிப்பிடலாம்.

378, 651, 691, 688, 689, 691, 722, 732, 733, 734, 780, 782, 796, 805, 881, 883, 910, 912, 915, 929, 934, 1113, 1114, 1170, 1236, 3211, 3228, 4475, 5658, ஆகிய ஹதீஸ்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இமாம் என்ற சொல்லை தொழுகை நடத்துபவர் என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளனர்.

இமாம் என்ற வார்த்தையை அதிபர் என்ற பொருள் தரும் வகையில் பின்வரும் ஹதீஸ்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

2957 – وَبِهَذَا الإِسْنَادِ

مَنْ أَطَاعَنِي فَقَدْ أَطَاعَ اللَّهَ ، وَمَنْ عَصَانِي فَقَدْ عَصَى اللَّهَ ، وَمَنْ يُطِعِ الأَمِيرَ فَقَدْ أَطَاعَنِي ، وَمَنْ يَعْصِ الأَمِيرَ فَقَدْ عَصَانِي وَإِنَّمَا الإِمَامُ جُنَّةٌ يُقَاتَلُ مِنْ وَرَائِهِ وَيُتَّقَى بِهِ فَإِنْ أَمَرَ بِتَقْوَى اللهِ وَعَدَلَ فَإِنَّ لَهُ بِذَلِكَ أَجْرًا وَإِنْ قَالَ بِغَيْرِهِ فَإِنَّ عَلَيْهِ مِنْهُ

இமாம் என்பவர் ஒரு கேடயமாவார்! அவருக்குப் பின்னால் நின்று மக்கள் போராடுவார்கள். அவரையே மக்கள் அரணாக ஆக்கிக் கொள்வார்கள். அவர் அல்லாஹ்வின் அச்சத்தை ஏவி, நீதமாக நடந்தால் அதற்குரிய கூலி அவருக்குக் கிடைத்து விடும். அதற்கு மாறானதை அவர் சொன்னால் அந்தப் பாவத்தில் அவருக்குப் பங்கு கிடைக்கும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி).
(புகாரி: 2957)

இமாம் என்பவர் கேடயமாக இருப்பார்; அவருக்குப் பின்னால் நின்று போர் புரிய வேண்டும் என்ற சொற்கள் ஆட்சியும் அதிகாரமும் உள்ளவர் தான் இமாம் என்பதைச் சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் கூறுகிறது.

660- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ : حَدَّثَنَا يَحْيَى ، عَنْ عُبَيْدِ اللهِ ، قَالَ : حَدَّثَنِي خُبَيْبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ :
سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِّهِ يَوْمَ لاَ ظِلَّ إِلاَّ ظِلُّهُ الإِمَامُ الْعَادِلُ وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسَاجِدِ وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ فَقَالَ إِنِّي أَخَافُ اللَّهَ وَرَجُلٌ تَصَدَّقَ أَخْفَى حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ.

அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தனது நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (நியாயத் தீர்ப்பு) நாளில் அல்லாஹ் தனது நிழலில் ஏழு பேருக்கு மட்டும் நிழல் கொடுப்பான். அவர்கள் நீதி மிக்க அரசன், அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்திருக்கும் இளைஞன், பள்ளிவாசல்களுடன் பினைக்கப்பட்ட இதயத்தை உடையவன், அல்லாஹ்வுக்காகவே நேசித்து அவனுக்காகவே பிரிந்த இருவர், அழகும் அந்தஸ்தும் உள்ள ஒரு பெண் அழைத்த போது நான் அல்லாஹ்வுக்குப் பயப்படுகிறேன் எனக் கூறியவன், தனது இடது கரத்துக்குத் தெரியாமல் வலது கரத்தால் தர்மம் செய்தவன், தனித்திருந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் வடித்தவன் ஆகியோர் ஆவர். அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி).
(புகாரி: 660, 1423, 6806)

இந்த ஹதீஸில் நீதி மிக்க அரசன் என்பதற்கு இமாம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

893, 2358, 2409, 2558, 2751, 3449, 3606, 5188, 7084, 7138, 7212, ஆகிய ஹதீஸ்களிலும் இமாம் என்ற சொல்லை ஆட்சி செலுத்தும் தலைவர் என்ற பொருளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

திருக்குர்ஆனை ஆய்வு செய்கையில் இமாம் என்ற வார்த்தை வழிகாட்டி, பிரமுகர் என்ற அர்த்தத்திலும் இடம் பெற்றுள்ளது.

وَإِنْ نَكَثُوا أَيْمَانَهُمْ مِنْ بَعْدِ عَهْدِهِمْ وَطَعَنُوا فِي دِينِكُمْ فَقَاتِلُوا أَئِمَّةَ الْكُفْرِ إِنَّهُمْ لَا أَيْمَانَ لَهُمْ لَعَلَّهُمْ يَنْتَهُونَ (12)

நிராகரிப்பவர்களின் இமாம்களுடன் போர் செய்யுங்கள். (அல்குர்ஆன்: 9:12)

وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ (124)

(இப்ராஹீமே!) நான் உம்மை மக்களுக்கு இமாமாக ஆக்குகின்றேன் என்று கூறினான். (அல்குர்ஆன்: 2:124)

وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءَ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ (73)

இன்னும் நம் கட்டளைகளைக் கொண்டு (மக்களுக்கு) நேர்வழி காட்டும் இமாம்களாக நாம் அவர்களை ஆக்கினோம். (அல்குர்ஆன்: 21:73)

وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا (74)

மேலும் அவர்கள் எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியினரிடமுமிருந்து எங்களுக்கு கண்குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள். (அல்குர்ஆன்: 25:74)

மேற்கண்ட வசனங்களிலும், இன்னும் இது போன்ற வசனங்களிலும் இமாம் என்ற வார்த்தை வழிகாட்டி, பிரமுகர் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.

சுல்த்தான்
மன்னருக்கு இமாம் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவது போல் சுல்த்தான் என்ற வார்த்தையும் மன்னரைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.

7054- حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ ، عَنِ الْجَعْدِ أَبِي عُثْمَانَ ، حَدَّثَنِي أَبُو رَجَاءٍ الْعُطَارِدِيُّ قَالَ : سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ :

مَنْ رَأَى مِنْ أَمِيرِهِ شَيْئًا يَكْرَهُهُ فَلْيَصْبِرْ عَلَيْهِ ، فَإِنَّهُ مَنْ فَارَقَ الْجَمَاعَةَ شِبْرًا فَمَاتَ إِلاَّ مَاتَ مِيتَةً جَاهِلِيَّةً.

ஒருவர் தனது ஆட்சியாளரிடம் எதையேனும் கண்டு வெறுப்படைவாரானால் அவர் சகித்துக் கொள்வாராக! ஏனெனில் ஒருவர் சுல்த்தானை ஆட்சியாளரை விட்டு ஒரு ஜான் அளவு வெளியேறினால் அவர் அறியாமைக் கால மரணத்தைத் தழுவுவார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி).
நூல் : புஹாரி 7053

இந்த ஹதீஸில் ஆட்சியாளர் என்பதற்கு சுல்த்தான் என்ற வாசகம் இடம் பெறுகின்றது.

மலிக்
மன்னரைக் குறிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மலிக் என்ற சொல்லையும் பயன்படுத்தியுள்ளனர்.

18406 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الطَّيَالِسِيُّ، حَدَّثَنِي دَاوُدُ بْنُ إِبْرَاهِيمَ الْوَاسِطِيُّ، حَدَّثَنِي حَبِيبُ بْنُ سَالِمٍ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ:
كُنَّا قُعُودًا فِي الْمَسْجِدِ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ بَشِيرٌ رَجُلًا يَكُفُّ حَدِيثَهُ، فَجَاءَ أَبُو ثَعْلَبَةَ الْخُشَنِيُّ، فَقَالَ: يَا بَشِيرُ بْنَ سَعْدٍ أَتَحْفَظُ حَدِيثَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِي الْأُمَرَاءِ؟ فَقَالَ حُذَيْفَةُ: أَنَا أَحْفَظُ خُطْبَتَهُ، فَجَلَسَ أَبُو ثَعْلَبَةَ، فَقَالَ حُذَيْفَةُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَكُونُ النُّبُوَّةُ فِيكُمْ مَا شَاءَ اللَّهُ أَنْ تَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ خِلَافَةٌ عَلَى مِنْهَاجِ النُّبُوَّةِ، فَتَكُونُ مَا شَاءَ اللَّهُ أَنْ تَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ اللَّهُ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ مُلْكًا عَاضًّا، فَيَكُونُ مَا شَاءَ اللَّهُ أَنْ يَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ مُلْكًا جَبْرِيَّةً، فَتَكُونُ مَا شَاءَ اللَّهُ أَنْ تَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ خِلَافَةً عَلَى مِنْهَاجِ نُبُوَّةٍ» ثُمَّ سَكَتَ [ص:356]، قَالَ حَبِيبٌ: ” فَلَمَّا قَامَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، وَكَانَ يَزِيدُ بْنُ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ فِي صَحَابَتِهِ، فَكَتَبْتُ إِلَيْهِ بِهَذَا الْحَدِيثِ أُذَكِّرُهُ إِيَّاهُ، فَقُلْتُ لَهُ: إِنِّي أَرْجُو أَنْ يَكُونَ أَمِيرُ الْمُؤْمِنِينَ، يَعْنِي عُمَرَ، بَعْدَ الْمُلْكِ الْعَاضِّ وَالْجَبْرِيَّةِ، فَأُدْخِلَ كِتَابِي عَلَى عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ فَسُرَّ بِهِ وَأَعْجَبَهُ “

 

அமீர்கள் தொடர்பாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸை மனனம் செய்திருக்கின்றீரா? என்று அபூ ஸஃலபா கேட்டார். நான் நபியவர்களின் சொற்பொழிவை மனனம் செய்துள்ளேன் என்று கூறி ஹூதைபா (ரலி) அவர்கள் பின் வருமாறு கூறினார்கள்.

நபித்துவம் எவ்வளவு காலம் இருக்க வேண்டும் என அல்லாஹ் நாடியுள்ளானோ அந்த அளவு நபித்துவம் இருக்கும். பிறகு அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருனத்தில் அதை உயர்த்தி விடுவான். பிறகு நபித்துவத்தின் வழியில் கிலாஃபத் ஆட்சி அமையும். அல்லாஹ் எந்த அளவுக்கு நாடியுள்ளானோ அந்த அளவு அது நீடிக்கும். பிறகு அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருனத்தில் அதை உயர்த்தி விடுவான். பிறகு கடினமான மன்னராட்சி அமையும். அல்லாஹ் எந்த அளவுக்கு நாடியுள்ளானோ அந்த அளவுக்கு நீடிக்கும். பிறகு அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருனத்தில் அதை உயர்த்தி விடுவான். பின்னர் அடக்கு முறையைக் கொண்ட மன்னராட்சி அமையும். அல்லாஹ் எந்தளவுக்கு நாடியுள்ளானோ அந்த அளவுக்கு அது நீடிக்கும். பிறகு அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருனத்தில் அதை உயர்த்தி விடுவான். பிறகு நபித்துவ வழியில் கிலாஃபத் ஆட்சி அமையும் என்று நபியவர்கள் கூறி முடித்து அமைதியாகி விட்டார்கள். (அஹ்மத்: 17680).

இந்த ஹதீஸில் மன்னராட்சி என்பதை மலிக் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அமீருல் ஆம்மா – பொது அமீர்
மன்னரைக் குறிப்பிட அமீர் என்ற வார்த்தையுடன் ஆம்மா என்பதைச் சேர்த்து அமீர் ஆம்மா (பொது அமீர்) எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

4636 – حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ حَدَّثَنَا الْمُسْتَمِرُّ بْنُ الرَّيَّانِ حَدَّثَنَا أَبُو نَضْرَةَ عَنْ أَبِى سَعِيدٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-
« لِكُلِّ غَادِرٍ لِوَاءٌ يَوْمَ الْقِيَامَةِ يُرْفَعُ لَهُ بِقَدْرِ غَدْرِهِ أَلاَ وَلاَ غَادِرَ أَعْظَمُ غَدْرًا مِنْ أَمِيرِ عَامَّةٍ ».

 

மறுமை நாளில் ஒவ்வொரு ஏமாற்றுக்காரனுக்கும் ஒரு கொடி உண்டு. அவன் ஏமாற்றிய அளவுக்கு அது அவனுக்கு உயர்த்திக் காட்டப்படும். அறிந்து கொள்ளுங்கள். (மோசடி செய்யும்) அமீருல் ஆம்மாவை (அரசனை) விட மிகப் பெரிய ஏமாற்றுக்காரன் வேறு யாரும் இருக்க முடியாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஸயீதுல் குத்ரி (ரலி). நூல் : முஸ்லிம்

இந்த ஹதீஸில் ஆட்சியாளருக்கு அமீருல் ஆம்மா எனக் கூறப்படுகிறது. அமீருல் ஆம்மா என்ற சொல்லுக்கு பொது அமீர் என்பது பொருள்.

சின்ன சின்ன அதிகாரம் படைத்தவர்கள் அமீர் என்றும் அனைத்து அமீர்களுக்கும் மேலே உள்ள அதிபர் – முழு அதிகாரம் படைத்தவர், அமீருல் ஆம்மா – பொது அமீர் என்றும் குறிப்பிடப்படுவர். இவருக்குக் கீழ் பல அமீர்கள் இருப்பார்கள்; ஆனால் இவருக்கு மேல் எந்த அமீரும் இருக்க மாட்டார் என்பதால் பொது அமீர் என்ற சொல்லால் இவர் குறிப்பிடப்படுகிறார்.

எனினும் இமாம், சுல்த்தான், அமீருல் ஆம்மா ஆகியவர்களுக்கும், கலீஃபாக்களுக்கும் இடையில் ஒரு முக்கியமான வித்தியாசம் உள்ளது.

அதாவது கலீஃபாக்கள் நபித்துவ வழியில் ஆட்சி நடத்தக் கூடியவர்கள் என்பதாகும். இமாம், சுல்த்தான், மலிக், அமீருல் ஆம்மா ஆகிய சொற்களின் பொருள் பொதுவாக ஆட்சி செலுத்துபவர்கள் – அரசர்கள் என்பதாகும். நபிவழியில் ஆட்சி செய்யாவிட்டாலும் இந்தச் சொற்களைப் பயன்படுத்தலாம். ஆனால் கலீஃபா என்ற சொல்லை நபிவழியில் ஆட்சி செலுத்துபவர்களுக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.

அமீருல் முஃமினீன்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரலி) அவர்களும் அமீர் என்று அழைக்கப்படவில்லை என்பதை முன்னர் பார்த்தோம். அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பின்னால் வந்த ஆட்சியாளர்களான உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலி (ரலி) ஆகியோரும் தம்மை அமீர் என்று கூறிக் கொள்ளவில்லை. மக்களும் அவர்களை அமீர் என்று அழைக்கவில்லை.

அவர்கள் அனைவரும் நபித்துவத்தின் அடிப்படையில் ஆட்சி நடத்தியதால் கலீஃபாக்கள் என்றே அழைக்கப்பட்டனர். உமர் (ரலி) அவர்களின் கால கட்டத்தில் தான் அமீருல் மூமினீன் (இறை நம்பிக்கையாளர்களின் தலைவர்) என்று அழைக்கும் மரபு ஆரம்பமாகியது.

உமர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக இருந்த போதும் அமீருல் மூமினீன் எனவும் அழைக்கப்பட்டனர். அவர்களைத் தொடர்ந்து ஆட்சி நடத்திய ஏனைய கலீஃபாக்களும் சில நேரங்களில் அமீருல் மூமினீன் என்று குறிப்பிடப்பட்டனர்.

அமீருல் மூமினீன் என்பதில் அமீர் என்ற ஒரு சொல்லும் மூமினீன் என்ற ஒரு சொல்லும் உள்ளன. எந்தக் கலீஃபாவும் அமீர் என்று மட்டும் குறிப்பிடப்படவில்லை. அனைத்து மூமின்களின் தலைவர் என்ற விரிந்த பொருளுடைய அமீருல் மூமினீன் என்ற சொற்றொடரால் தான் அவர்கள் அழைக்கப்பட்டனர் என்பது கவனிக்கத் தக்கது.

அனைத்து மூமின்களுக்குமான ஒரே தலைவர் என்ற கருத்துப்பட அமீருல் மூமினீன் என்ற சொற்றொடர் அமைந்துள்ளது. இதில் இருந்து இவருக்குக் கீழ் சிறு அதிகாரம் வழங்கப்பட்ட அமீர்கள் பலர் இருப்பார்கள் என்ற கருத்து அடங்கியுள்ளது. அதனால் தான் அமீர் என்று மட்டும் சொல்லப்படாமல் மூமின்கள் அனைவருக்குமான அதிபர் என்று அவர்கள் அழைக்கப்பட்டனர்.