120) மரணத்திற்கு அஞ்சி ஓட்டம் பிடித்தல்

நூல்கள்: ஜனாஸாவின் சட்டங்கள்

நாம் வசிக்கும் ஊரில் வயிற்றுப் போக்கு, பேதி, காலரா, பிளேக் போன்ற கொடிய நோய் பரவி அங்குள்ள மக்கள் அதிக அளவில் மரணிக்க நேர்ந்தால் நமது ஊரை விட்டு ஓட்டம் பிடிக்கக் கூடாது.

மற்றொரு ஊரில் இது போன்ற நோய்களால் மக்கள் மரணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி கிடைத்தால் அவவூருக்குப் பயணம் செய்யக் கூடாது.

ஓர் ஊரில் பிளேக் நோய் இருப்பதைக் கேள்விப்பட்டால் அவ்வூரை நோக்கிச் செல்லாதீர்கள். நீங்கள் வாழும் ஊரில் பிளேக் நோய் ஏற்பட்டால் ஊரை விட்டு ஓட்டம் பிடிக்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி)

(புகாரி: 3473, 5728, 6974)

பிளேக் நோய் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் தான் நாடியவர்களைத் தண்டிப்பதற்காக அல்லாஹ் அனுப்பும் வேதனை தான் அது என்று கூறிவிட்டு மூமின்களுக்கு (இறை நம்பிக்கையாளருக்கு) அல்லாஹ் அதை அருளாக ஆக்கியுள்ளான். ஒருவர் வசிக்கும் ஊரில் பிளேக் நோய் ஏற்பட்டு, அல்லாஹ் நாடியதைத் தவிர வேறு எதுவும் நமக்கு ஏற்படாது என்று சகித்துக் கொண்டும் நன்மையை எதிர் பார்த்தும் தங்கி விட்டால் அவருக்கு ஷஹீத் – உயிர்த் தியாகி – உடைய கூலி கிடைக்காமல் இருக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தனர்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(புகாரி: 3474, 5734, 6619)