126) மூன்றில் ஒரு பங்குக்கு மிகாமல் வஸிய்யத் செய்தல்
வாரிசுகளை அறவே அலட்சியம் செய்துவிட்டு அனைத்து சொத்துக்களையோ அல்லது பெரும் பகுதி சொத்துக்களையோ எந்த மனிதருக்காகவும், எந்த நற்பணிக்காகவும் எழுதி வைக்க மார்க்கத்தில் அனுமதியில்லை. அவ்வாறு எழுதினால் அது செல்லாது. ஒரு மனிதர் அதிகபட்சமாக தனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கு, அல்லது அதை விடக் குறைவாகவே வஸிய்யத் – மரண சாசனம் – செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒருவரது சொத்தின் மதிப்பு மூன்று லட்சம் என்றால் அவர் ஒரு லட்சம் அல்லது அதற்குக் குறைவான தொகைக்கு மட்டுமே வஸிய்யத் செய்ய உரிமை உண்டு. ஒருவர் அறியாமை காரணமாக அனைத்தையும் வஸிய்யத் செய்தால் மூன்றில் ஒரு பங்கு என்றே மார்க்கத்தில் அதற்குப் பொருள் கொள்ள வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கடைசி ஹஜ்ஜின் போது நான் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தேன். அப்போது என்னை நோய் விசாரிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது நான் எனக்குக் கடுமையான வேதனை ஏற்பட்டுள்ளது. நானோ செல்வம் உடையவனாக இருக்கிறேன். எனக்கு ஒரே ஒரு மகள் தான் இருக்கிறார். எனவே எனது சொத்துக்களில் மூன்றில் இரண்டு பங்குகளைத் தர்மம் செய்யட்டுமா? என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூடாது என்றார்கள். அப்படியானால் பாதி(யை தர்மம் செய்யட்டுமா?) என்று கேட்டேன். அதற்கும் கூடாது என்றனர். பின்னர் மூன்றில் ஒரு பங்கு தர்மம் செய். அது கூட அதிகம் தான். உனது வாரிசுகளைப் பிறரிடம் கையேந்தும் நிலையில் விட்டுச் செல்வதை விட அவர்களைத் தன்னிறைவு பெற்ற நிலையில் விட்டுச் செல்வது சிறந்தது என்று அறிவுரை கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி)