127) வஸிய்யத்தைப் பதிவு செய்தல்
ஒரு மனிதர் மரணித்து விட்டால் அவரது சொத்துக்களை எவ்வாறு பிரித்துக் கொள்வது என்பதற்கு இஸ்லாத்தில் தெளிவான சட்டம் உள்ளது. எனவே தனது சொத்துக்களை வாரிசுகள் இவ்வாறு பிரித்துக் கொள்ள வேண்டும் என்று வஸிய்யத் – மரண சாசனம் – செய்யும் உரிமை யாருக்கும் இல்லை.
ஆயினும் ஒருவரது சொத்தில் அவரது சொந்த பந்தங்கள் அனைவருக்கும் பங்கு கிடைக்காது.
கணவன், மனைவி, தாய், தந்தை, மகன், மகள் ஆகிய உறவுகளுக்குத் தான் சொத்துரிமை கிடைக்கும். தந்தை மகன் போன்ற உறவுகள் இல்லாத போது தான் சகோதர சகோதரிகளுக்குக் கிடைக்கும். சகோதர சகோதரிகளும் இல்லாத போது தான் தந்தையின் சகோதரரர்களுக்குக் கிடைக்கும்.
எனவே தனது உறவினர்களில் சொத்துரிமை கிடைக்காத உறவினர்களுக்குத் தனது சொத்தில் ஏதாவது கிடைக்க வேண்டும் என்று ஒருவர் ஆசைப்படலாம்.
அது போல் பள்ளிவாசல் போன்ற அறப்பணிகளுக்காக தனது சொத்தில் ஏதாவது அளிக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்பலாம்.
அவ்வாறு விரும்புவோர் என் மரணத்திற்குப் பின் இந்த நபருக்கு இவ்வளவு கொடுங்கள்! அந்த நற்பணிக்கு இவ்வளவு கொடுத்து விடுங்கள் என்று எழுதி வைப்பது அவசியமாகும்.
எந்த ஒரு முஸ்லிமாக இருந்தாலும் வஸிய்யத் செய்யத்தக்க பொருள் அவரிடம் இருந்தால் அதை எழுதிக் கொள்ளாமல் இரண்டு இரவுகள் கழியலாகாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்கள்:(புகாரி: 2738),(முஸ்லிம்: 3074, 3075)
வழங்க வேண்டும் என்று எப்போது நாம் தீர்மானம் செய்கிறோமோ அதை உடன் எழுதிப் பதிவு செய்து விட வேண்டும். ஏனெனில் எந்த நேரத்தில் நமக்கு மரணம் வரும் என்பதை நம்மால் கணிக்க இயலாது.