131) மரணம் நெருங்கி விட்டால்…
தனக்கு எப்போது மரணம் வரும் என்பதையோ, மற்றவர்களுக்கு எப்போது மரணம் வரும் என்பதையோ எந்த மனிதராலும் முன்னரே அறிந்து கொள்ள முடியாது.
இவருக்கு இப்போது மரணம் வராது என்று கருதும் அளவுக்கு இளமையாகவும், உடல் நலத்துடனும் கவலை ஏதுமின்றி காணப்படும் எத்தனையோ பேர் யாரும் எதிர்பாராத வகையிலும், விபத்துக்களிலும் திடீரென்று மரணித்து விடுகின்றனர். இத்தகையோர் மிகவும் அரிதாகவே உள்ளனர்.
பெரும்பாலானவர்கள் இவ்வுலகில் அனுபவிக்க வேண்டியவைகளை அனுபவித்து படிப்படியாகத் தளர்ச்சி அடைந்து மரணிக்கின்றனர். தமக்கு மரணம் விரைவில் வந்து விடும் என்பதை இவர்கள் அன்றாடம் உணரக் கூடிய வாய்ப்பைப் பெறுகின்றனர்.
திடீரென மரணிப்பவர்களுக்குக் கிடைக்காத நல்ல வாய்ப்பு இவர்களுக்குக் கிடைக்கின்றது. மரணம் நெருங்கி விட்டதை இவர்கள் உணர்வதால் கடந்த காலங்களில் செய்யத் தவறிய காரியங்களைச் செய்து முடிக்கவும், கடந்த காலத் தவறுகளைச் சரி செய்யவும் இவர்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்று இஸ்லாம் அறிவுறுத்துகிறது.