6) பல்வேறு வாதங்கள்

நூல்கள்: தராவீஹ் தொழுகை

அதிகப்படுத்துவது தவறா?

20 ரக்அத் தொழுகைக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தெளிவாகத் தெரிந்த பின்பும் ஏதாவது காரணம் கூறி அதைச் சிலர் நியாயப்படுத்த முயன்று வருகின்றனர்.

20 ரக்அத்துக்கு ஆதாரம் இல்லாவிட்டாலும் நன்மைகளை அதிகம் செய்வது தவறா? என்பது அந்தக் காரணங்களில் ஒன்றாகும்.

அதிகமாகச் செய்கிறோமா? குறைவாகச் செய்கிறோமா? என்பது பிரச்சனையில்லை. அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித் தந்த படி செய்கிறோமா? என்பது தான் இஸ்லாத்தில் கவனிக்கப்படும்.

இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ளாததால் தான் இத்தகைய வாதத்தை எடுத்து வைக்கின்றனர்.

இதற்கான ஆதாரங்களை அறிந்து கொள்வதற்கு முன் அனைவரும் ஒப்புக் கொண்ட விஷயங்களில் சிலவற்றை முதலில் எடுத்துக் காட்டுகிறோம்.

சுபுஹ் தொழுகைக்கு இரண்டு ரக்அத்கள் என்பதை நாம் அனைவரும் அறிந்து வைத்துள்ளோம்.

இது குறைந்த அளவாக உள்ளது என்று எண்ணிக் கொண்டு ஒருவர் சுபுஹ் தொழுகைக்கு நான்கு ரக்அத் தொழலாமா? என்ற கேள்விக்கு மார்க்க அறிஞர்கள் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம்களும் இவ்வாறு செய்யக் கூடாது என்று தான் பதிலளிப்பார்கள்.

இரண்டு ரக்அத்தை விட நான்கு ரக்அத்கள் அதிகம் தானே! அதனால் சுப்ஹுக்கு நான்கு ரக்அத் தொழலாம் என்று யாரும் வாதிடுவதில்லை.

இதற்கு என்ன காரணம்?

ரக்அத்களின் எண்ணிக்கை இதில் முக்கியம் அல்ல! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு ஒரு வழியைக் காட்டியுள்ளனர்; அவர்கள் காட்டியதை விட அதிகப்படுத்தினால் அதில் பல விபரீதமான முடிவுகள் ஏற்பட்டு விடும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குச் சிறந்த வழியை, முழுமையான வழியைக் காட்டவில்லை; அதை நாங்கள் கண்டு பிடித்து விட்டோம்’ என்று கூறும் விபரீதம் இதனுள் அடங்கியுள்ளது.

நாம் இரண்டை நான்காக ஆக்கினால் அடுத்து வருபவர் அதை ஆறாக ஆக்குவார். அடுத்த ஒரு காலத்தில் அது எட்டாக ஆகும். வணக்கத்தை நாங்கள் குறைக்கவில்லையே? அதிகப்படுத்துவது நல்லது தானே என்று அனைவரும் வாதிடுவார்கள். இதனால் இஸ்லாம் என்ற பெயரால் உலகெங்கும் முரண்பட்ட பல வணக்கங்கள் உருவாகி விடும்.

எனவே தான் இரண்டு ரக்அத்தை நான்காக ஆக்கக் கூடாது என்கிறோம்.

வணக்கம் செய்வதில் நம் அனைவரையும் விஞ்சி நிற்கின்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருபது ரக்அத்களைத் தொழுது வழிகாட்டவில்லை எனும் போது நாம் அதிகப்படுத்துவதை மட்டும் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்று சிந்தித்தாலே இந்த வாதத்தை யாரும் எடுத்து வைக்க மாட்டார்கள்.

இதுபற்றி அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்.

7:3 اِتَّبِعُوْا مَاۤ اُنْزِلَ اِلَيْكُمْ مِّنْ رَّبِّكُمْ وَلَا تَتَّبِعُوْا مِنْ دُوْنِهٖۤ اَوْلِيَآءَ‌ ؕ قَلِيْلًا مَّا تَذَكَّرُوْنَ

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகின்றீர்கள்! 

(அல்குர்ஆன்: 7:3)

2:38 قُلْنَا اهْبِطُوْا مِنْهَا جَمِيْعًا ‌‌ۚ فَاِمَّا يَاْتِيَنَّكُمْ مِّنِّىْ هُدًى فَمَنْ تَبِعَ هُدَاىَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏

‘இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும் போது எனது நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்’ என்று கூறினோம். 

(அல்குர்ஆன்: 2:38)

20:123 قَالَ اهْبِطَا مِنْهَا جَمِيْعًا‌ۢ بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ‌ ۚ فَاِمَّا يَاْتِيَنَّكُمْ مِّنِّىْ هُدًى ۙ فَمَنِ اتَّبَعَ هُدَاىَ فَلَا يَضِلُّ وَلَا يَشْقٰى‏

இருவரும் ஒட்டுமொத்தமாக இங்கிருந்து இறங்குங்கள்! உங்களில் சிலர் மற்றும் சிலருக்குப் பகைவர்களாவீர்கள். என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வருமானால் எனது நேர்வழியைப் பின்பற்றுபவர் வழிதவற மாட்டார்; துர்பாக்கியசாலியாகவும் மாட்டார். 

(அல்குர்ஆன்: 20:123)

24:51 اِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِيْنَ اِذَا دُعُوْۤا اِلَى اللّٰهِ وَرَسُوْلِهٖ لِيَحْكُمَ بَيْنَهُمْ اَنْ يَّقُوْلُوْا سَمِعْنَا وَاَطَعْنَا‌ؕ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ

அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது ‘செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்’ என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். 

(அல்குர்ஆன்: 24:51)

24:54 قُلْ اَطِيْعُوا اللّٰهَ وَاَطِيْعُوا الرَّسُوْلَ‌ۚ فَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا عَلَيْهِ مَا حُمِّلَ وَعَلَيْكُمْ مَّا حُمِّلْتُمْ‌ؕ وَاِنْ تُطِيْعُوْهُ تَهْتَدُوْا‌ؕ وَمَا عَلَى الرَّسُوْلِ اِلَّا الْبَلٰغُ الْمُبِيْنُ‏

‘அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்!’ என கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப்பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர் வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை. 

(அல்குர்ஆன்: 24:54)

3:31 قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْؕ‌ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ

‘நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்’ என்று கூறுவீராக! 

(அல்குர்ஆன்: 3:31)

6:153 وَاَنَّ هٰذَا صِرَاطِىْ مُسْتَقِيْمًا فَاتَّبِعُوْهُ‌ ۚ وَلَا تَتَّبِعُوْا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيْلِهٖ‌ ؕ ذٰ لِكُمْ وَصّٰٮكُمْ بِهٖ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ‏

இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (ஒரு) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான். 

(அல்குர்ஆன்: 6:153)

6:159 اِنَّ الَّذِيْنَ فَرَّقُوْا دِيْنَهُمْ وَكَانُوْا شِيَـعًا لَّسْتَ مِنْهُمْ فِىْ شَىْءٍ‌ ؕ اِنَّمَاۤ اَمْرُهُمْ اِلَى اللّٰهِ ثُمَّ يُنَـبِّـئُـهُمْ بِمَا كَانُوْا يَفْعَلُوْنَ‏

தமது மார்க்கத்தைப் பிரித்து, பல பிரிவுகளானோரின் எந்தக் காரியத்திலும் (முஹம்மதே!) உமக்குச் சம்மந்தம் இல்லை. அவர்களின் விஷயம் அல்லாஹ்விடமே உள்ளது. பின்னர் அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான். 

திருக்குர்ஆன். 6:159

4:59 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَطِيْـعُوا اللّٰهَ وَاَطِيْـعُوا الرَّسُوْلَ وَاُولِى الْاَمْرِ مِنْكُمْ‌ۚ فَاِنْ تَنَازَعْتُمْ فِىْ شَىْءٍ فَرُدُّوْهُ اِلَى اللّٰهِ وَالرَّسُوْلِ اِنْ كُنْـتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَـوْمِ الْاٰخِرِ‌ ؕ ذٰ لِكَ خَيْرٌ وَّاَحْسَنُ تَاْوِيْلًا‏

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும். 

(அல்குர்ஆன்: 4:59)

33:36 وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَّلَا مُؤْمِنَةٍ اِذَا قَضَى اللّٰهُ وَرَسُوْلُهٗۤ اَمْرًا اَنْ يَّكُوْنَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ اَمْرِهِمْ ؕ وَمَنْ يَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ ضَلَّ ضَلٰلًا مُّبِيْنًا‏

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.

(அல்குர்ஆன்: 33:36)

اَ لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ دِيْنًا‌ ؕ فَمَنِ اضْطُرَّ فِىْ مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِّاِثْمٍ‌ۙ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏‏

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். 

(அல்குர்ஆன்: 5:3)

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது பற்றிப் பல விதங்களில் எச்சரிக்கை செய்துள்ளனர்.

எனது கட்டளையில்லாமல் யாரேனும் ஒரு வணக்கத்தைச் செய்தால் அது நிராகரிக்கப்படும். 

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி). நூல்: (முஸ்லிம்: 3540) (3442)

‘இந்த மார்க்கத்தில் இல்லாததை யாரேனும் உண்டாக்கினால் அது ரத்துச் செய்யப்படும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி). நூல்: (புகாரி: 2697) 

‘(மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப்படுபவை பற்றி உங்களை நான் எச்சரிக்கிறேன். புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்தும் (பித்அத்எனும்) அனாச்சாரமாகும். அனாச்சாரங்கள் அனைத்தும் வழிகேடாகும். வழிகேடுகள் யாவும் நரகத்தில் சேர்க்கும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி). நூல்: (நஸாயீ: 1578) (1560)

மார்க்கத்தின் பெயரால் வணக்கத்தை உண்டாக்குவதும் அதிகப்படுத்துவதும் குற்றம் என்பதையும், அதனால் சொர்க்கம் கிடைப்பதற்குப் பதிலாக நரகம் தான் கிடைக்கும் என்பதையும் மேற்கண்ட ஹதீஸ்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

உபரியான வணக்கம் என்பது என்ன?

இந்த இடத்தில் நியாயமான ஒரு சந்தேகம் ஏற்படலாம்.

மார்க்கத்தில் நாமாக விரும்பிச் செய்கின்ற நபில்கள் எனும் உபரியான வணக்கம் இல்லையா? எட்டு ரக்அத் போக எஞ்சியதை உபரி வணக்கம் என்று ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது? என்பது தான் அந்தச் சந்தேகம்.

கடமையான நோன்புகள், சுன்னத்தான நோன்புகள் போக ஒருவர் தனக்கு விருப்பம் ஏற்படும் போது உபரியான நோன்பை நோற்கலாம்.

அது போல் கடமையான, சுன்னத்தான தொழுகை போக நாம் விரும்பும் போது உபரியாகத் தொழலாம் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் உபரியான தொழுகைக்கும், சுன்னத்தான தொழுகைக்கும் வேறுபாடுகள் உள்ளன.

கடமையான தொழுகை அல்லது நோன்பு, சுன்னத்தான தொழுகை அல்லது நோன்பு அனைத்து முஸ்லிம்களுக்கும் ஒரே அளவு கொண்டதாக அமையும்.

உபரியான தொழுகை அல்லது நோன்பு என்பது தனிப்பட்ட மனிதன் விரும்பித் தேர்வு செய்வதால் அது அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒருவருக்கு நேரம் கிடைத்தால் ஒரு புதன் கிழமை நோன்பு வைப்பார். அந்த நேரத்தில் கோடானு கோடி முஸ்லிம்கள் நோன்பு வைக்க மாட்டார்கள். இன்னொருவர் ஒரு செவ்வாய்க் கிழமை நோன்பு நோற்பார். அந்த நாளில் கோடான கோடி முஸ்லிம்கள் நோன்பு வைக்க மாட்டார்கள்.

முஹர்ரம் 9, 10ல் நோன்பு நோற்பது சுன்னத் என்றால் உலக முஸ்லிம்கள் அனைவரும் அந்த நாட்களில் நோன்பு நோற்பது சுன்னத்.

ஒருவர் விரும்பிய தினத்தில் நோன்பு நோற்க அனுமதி உள்ளது என்பதை ஒப்புக் கொள்ளும் அறிஞர்கள் மிஃராஜ் நோன்பு என்பதை மறுக்கின்றனர். இதற்குக் காரணம் இந்தப் பெயரில் முஸ்லிம்கள் அனைவரும் நோன்பு நோற்க வேண்டும் என்ற அடிப்படையில் இது கூறப்படுகிறது. எனவே தான் இதை பித்அத் என்கிறோம்.

சுன்னத் என்றால் இஷ்டம் போல் கூட்டவோ, குறைக்கவோ முடியாது. நபில் என்றால் ஒரு நாள் இரண்டு ரக்அத்கள் தொழுதவர் மறு நாள் நான்கு தொழலாம். அதற்கு மறு நாள் அதை விட்டு விடலாம். நபில் என்பது முழுக்க முழுக்க தனித் தனி நபர்களின் விருப்பத்தின் பாற்பட்டதாகும்.

இப்போது தராவீஹ் என்ற பெயரில் தொழும் தொழுகையை எடுத்துக் கொள்வோம். குர்ஆன், நபிவழி ஆதாரமின்றி 20 ரக்அத் என்று தீர்மானித்துக் கொண்டு அதை அனைவர் மீதும் திணிக்கின்றனர். இதுதான் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய, மார்க்கத்தின் கட்டளை எனவும் தவறாக நம்புகின்றனர்.

இவர்கள் தொழும் தராவீஹ் என்பதற்கு உபரியான வணக்கம் என்ற வாதம் பொருந்தாது.

உபரியான வணக்கத்துக்கு இன்னும் சில நிபந்தனைகள் உள்ளன.

நபிகள் நாயகம் காட்டித் தந்த வணக்கத்தைத் தான் மேலதிகமாக ஒருவர் செய்ய அனுமதி உண்டு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தராத ஒன்றைச் செயல்படுத்துவது நபில் எனும் உபரியான வணக்கத்தில் சேராது.

உதாரணமாக தராவீஹ் தொழுகையின் நான்கு ரக்அத்களுக்கிடையில் சில திக்ருகளை ஓதுகின்றனர். இந்த திக்ருகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குத் கற்றுத் தரவில்லை. அவர்கள் கற்றுத் தராத ஒன்றை கற்பனையாக உருவாக்கிக் கொண்டு நாங்களாக விருப்பப்பட்டு ஓதுகிறோம் என்று வாதிட்டால் அது ஏற்கப்படாது.

மார்க்கம் வரையறுத்துள்ள எல்லையைக் கடந்து விடாத அளவுக்கு உபரி வணக்கங்கள் இருக்க வேண்டும் என்பது மற்றொரு நிபந்தனை.

தினமும் முழுக் குர்ஆனை ஓதி முடிப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தனர். உபரி என்ற பெயரில் இந்த எல்லையை மீறக் கூடாது. ((புகாரி: 1978))

உடலுக்கும், மனைவிக்கும், குடும்பத்தாருக்கும் செய்ய வேண்டிய கடமைகளைப் பாதிக்கும் வகையில் உபரியான வணக்கம் இருக்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எல்லை வகுத்தனர். இந்த எல்லையை மீறி உபரி வணக்கம் கூடாது.

((புகாரி: 1968) , 1975, 5199, 6134, 6139)

எனவே உபரியான வணக்கத்தின் இலக்கணத்தை அறியாமல் இது போன்ற வாதங்களை எடுத்து வைத்து 20 ரக்அத்தை நியாயப்படுத்த எந்த முகாந்திரமும் இல்லை.

மக்கா, மதீனாவில் நடக்கிறதே?

இருபது ரக்அத்தை நியாயப்படுத்தக் கூடியவர்கள் எடுத்துக் காட்டும் மற்றொரு ஆதாரம் இது தான்.

சவூதி அரேபியாவில் உள்ள அனைத்துப் பள்ளிவாசல்களிலும் எட்டு அல்லது பத்து ரக்அத்கள் தான் தொழுவிக்கப்படுகின்றன. ஆயினும் மக்காவின் மஸ்ஜிதுல் ஹராமிலும், மதீனாவின் மஸ்ஜிதுன் நபவியிலும் மட்டும் இருபது ரக்அத்கள் தொழுவிக்கப்படுகின்றது. அதையே நாம் ஏன் முன்னுதாரணமாக ஆக்கக் கூடாது என்ற கேள்வி தவறாகும்.

மக்காவையும் மதீனாவையும் வணக்க வழிபாடுகளுக்கு முன்னுதாரணமாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளை பிறப்பிக்கவில்லை.

மாறாக, நான் எவ்வாறு தொழுதேனோ அவ்வாறு தொழுங்கள்’ என்பது தான் அவர்களின் கட்டளை.

((புகாரி: 631) , 6008, 7246)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டாத வணக்கத்தை உருவாக்கவோ, அல்லது அதிகப்படுத்தவோ மக்கா, மதீனா வாசிகளுக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை.
இதற்கான ஆதாரங்களை முன்னரே நாம் எடுத்துக் காட்டியுள்ளோம்.

இந்த வாதத்தை எழுப்புவோரிடம் காணப்படும் முரண்பாட்டையும் நாம் இங்கே சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

இருபது ரக்அத் தொழுகைக்கு மட்டும் சவூதி அரேபியாவை ஆதாரமாகக் காட்டும் மார்க்க அறிஞர்கள், ஏராளமான விஷயங்களில் சவூதி அரேபியாவை ஆதாரமாகக் கொள்வதில்லை.

சவூதி அரேபியாவில் நான்கு மத்ஹபுகள் இல்லை. அதை இவர்கள் முன்மாதிரியாகக் கொள்ள மாட்டார்கள்.

சவூதி அரேபியாவில் கத்தம் பாத்திஹா, மவ்லூது, தாயத்து, தகடு, புரோகிதம் கிடையாது. அதை முன்னுதாரணமாகக் கொண்டு இவர்கள் இந்தச் செயல்களை விட்டொழிப்பதில்லை.

சவூதி அரேபியாவில் தரீக்கா, ராத்திபு, முரீது, பால்கிதாபு, நல்ல நாள் பார்த்தல் உள்ளிட்ட மூட நம்பிக்கைகள் இல்லை. இதை ஏன் இவர்கள் முன்மாதிரியாகக் கொள்வதில்லை?

சவூதியில் நடப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் இவர்கள் உண்மையாளர்களாக இல்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

மக்கா, மதீனாவில் செய்யப்படும் காரியங்கள் குர்ஆன் ஹதீசுக்கு எதிராக இருந்தால் அதை ஏற்க வேண்டும் என்பதற்கு எந்த நியாயமும் இல்லை.

தொழுகையில் நிதானம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தராத இருபது ரக்அத் என்ற வழிமுறையை நாமாக உருவாக்கியதால் தொழுகையில் கடைப் பிடிக்க வேண்டிய பல ஒழுங்குகளை நாம் அலட்சியம் செய்து வருகிறோம்.

குறிப்பிட்ட நேரத்துக்குள் இருபது ரக்அத்களைத் தொழ வேண்டும் என்று வரையறுத்துக் கொண்டு தொழுவதால் அனைத்துக் காரியங்களும் மிக விரைவாகச் செய்யப்படுகின்றன.

ருகூவு, ஸஜ்தாக்களில் ஓத வேண்டியதை ஓதி நிதானமாகக் குனிந்து நிமிர வேண்டும். இந்த ஒழுங்குகளைப் பேணாமல் தொழுத ஒரு மனிதரைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவர் தொழவே இல்லை என்று கடுமையாக எச்சரித்தனர். 

(பார்க்க: (புகாரி: 389) , 757, 793, 6251, 6667)

இந்த எச்சரிக்கையும் இருபது ரக்அத் என்ற பெயரில் மீறப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதியதைப் போன்றும், ருகூவு, சுஜுது செய்ததைப் போன்றும் ஒருவர் தொழுவதாக இருந்தால் இவர்கள் இருபது ரக்அத் தொழும் நேரத்தில் எட்டு ரக்அத்கள் தொழுவது கூடச் சாத்தியமாகாது. இன்றைக்கும் நடைமுறையில் இருபது ரக்அத் தொழுகைக்கு மற்றவர்கள் எடுத்துக் கொள்ளும் நேரத்தை விட எட்டு ரக்அத்துக்கு நாம் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறோம்.

நாம் ஒரு பொருளை வாங்குவது என்றால் தரமானதைத் தான் வாங்குவோம். கிழிந்த துணி பத்து ரூபாய்க்குக் கிடைத்தாலும் கிழியாத துணியை நூறு ரூபாய்க்கு வாங்குவோம்.

குறைந்த விலையில் பூச்சிக் கத்தரிக்காய் கிடைத்தாலும் அதிக விலை கொடுத்து நல்ல கத்தரிக்காய் வாங்குகிறோம்.

அல்லாஹ்வுக்குச் செய்யும் வணக்கத்தை மட்டும் கிழிந்த துணிக்கு நிகரான தரத்தில் அதிகமாகச் செய்கிறோம். அல்லாஹ் எண்ணிக்கையை விட தரத்தைத் தான் பார்ப்பான் என்பதை அறிந்தால் கோழி கொத்துவது போன்ற இருபது ரக்அத்திலிருந்து விலகி அதை விட அதிக நேரம் செலவிட்டு நபிவழியில் தொழ முன் வந்திடுவோம்.

முழுக் குர்ஆனையும் ஓதுதல்

ரமளான் மாதத்தில் முழுக் குர்ஆனையும் தொழுகையில் ஓத வேண்டும் என்ற நம்பிக்கை மக்களிடம் பரவலாகக் காணப்படுகிறது. இதற்காகக் குர்ஆன் மனனம் செய்தவரைத் தொழ வைப்பதற்காக நியமிக்கின்றனர். தினமும் ஒரு ஜுஸ்வு என்ற கணக்கில் ஓதி அவர் தொழ வைத்து ரமளான் மாதத்தில் குர்ஆனை முடிப்பார் என்பதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது.

இதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த ரமளான் மாதத்திலும் முழுக் குர்ஆனையும் ஓதியிருக்கவே முடியாது.

குர்ஆன் ஓரே சமயத்தில் ஒட்டு மொத்தமாக அவர்களுக்கு அருளப்படவில்லை. சிறிது சிறிதாக 23 ஆண்டுகளில் குர்ஆன் அருளி முடிக்கப்பட்டது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

அவர்கள் நபியாக நியமிக்கப்பட்ட முதல் வருடத்தில் குர்ஆனின் மிகச் சிறிய பகுதிகளே அவர்களுக்கு அருளப்பட்டன.

இப்படியே ஒவ்வொரு வருடமும் சிறிது சிறிதாகக் குர்ஆன் இறங்கிக் கொண்டே வந்தது.

அவர்களின் கடைசி ரமளானில் கூட முழுக் குர்ஆனும் அருளப்பட்டிருக்க முடியாது.

அவர்களின் கடைசி ரமளானுக்குப் பின்னர் ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ஸஃபர் ஆகிய ஐந்து மாதங்களும் ரபீயுல் அவ்வல் பன்னிரண்டு நாட்களும் வாழ்ந்தனர். இந்தக் கால கட்டத்தில் அருளப்பட்டதும் சேர்த்தே முழுக் குர்ஆன்.

இந்தக் கால கட்டத்தில் அருளப்பட்டதை ரமளானில் ஓத வேண்டுமானால் மறு ரமளானில் தான் சாத்தியம். ரபீயுல் அவ்வலில் அவர்கள் மரணித்து விட்டதால் நிச்சயமாக முழுக் குர்ஆனையும் எந்த ரமளானிலும் அவர்கள் ஓதியிருக்க முடியாது.

மேலும் ரமளானில் முழுக் குர்ஆனையும் ஓதுங்கள் என்று வாய்மொழி உத்தரவு எதுவும் அவர்கள் பிறப்பிக்கவில்லை.

இரவுத் தொழுகையில் ஓதுவது பற்றிக் குர்ஆன் கூறும் போது பின்வருமாறு தெளிவாக விளக்குகின்றது.

إِنَّ رَبَّكَ يَعْلَمُ أَنَّكَ تَقُومُ أَدْنَى مِنْ ثُلُثَيِ اللَّيْلِ وَنِصْفَهُ وَثُلُثَهُ وَطَائِفَةٌ مِنَ الَّذِينَ مَعَكَ وَاللَّهُ يُقَدِّرُ اللَّيْلَ وَالنَّهَارَ عَلِمَ أَنْ لَنْ تُحْصُوهُ فَتَابَ عَلَيْكُمْ فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْآنِ عَلِمَ أَنْ سَيَكُونُ مِنْكُمْ مَرْضَى وَآخَرُونَ يَضْرِبُونَ فِي الْأَرْضِ يَبْتَغُونَ مِنْ فَضْلِ اللَّهِ وَآخَرُونَ يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنْهُ وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا وَمَا تُقَدِّمُوا لِأَنْفُسِكُمْ مِنْ خَيْرٍ تَجِدُوهُ عِنْدَ اللَّهِ هُوَ خَيْرًا وَأَعْظَمَ أَجْرًا وَاسْتَغْفِرُوا اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ (20)

‘(முஹம்மதே!) நீரும், உம்முடன் உள்ள ஒரு தொகையினரும் இரவில் மூன்றில் இரு பகுதிக்கு நெருக்கமாகவும், இரவில் பாதியும், இரவில் மூன்றில் ஒரு பகுதியும் நின்று வணங்குகின்றீர்கள்’ என்பதை உமது இறைவன் அறிவான். அல்லாஹ்வே இரவையும், பகலையும் அளவுடன் அமைத்துள்ளான். நீங்கள் அதைச் சரியாகக் கணிக்க மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிவான். எனவே அவன் உங்களை மன்னித்தான். ஆகவே குர்ஆனில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள். உங்களில் நோயாளிகளும், அல்லாஹ்வின் அருளைத் தேடி பூமியில் பயணம் செய்வோரும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும் உருவாவார்கள் என்பதை அவன் அறிந்து வைத்துள்ளான். எனவே அதில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுங்கள்! உங்களுக்காக நீங்கள் முற்படுத்தும் நன்மையை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். அதுவே சிறந்தது. மகத்தான கூலி. அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். 

(அல்குர்ஆன்: 73:20)

எனவே சிரமமில்லாமல் எந்த அளவுக்கு ஓத இயலுமோ, திருத்தமாக எந்த அளவுக்கு ஓத இயலுமோ அந்த அளவுக்கு ஓதித் தொழுவது தான் நபிவழியாகும்.

நான்கு ரக்அத் முடிவில் தஸ்பீஹ்?

ஒவ்வொரு நான்கு ரக்அத் முடிந்த பின் நீண்ட திக்ருகளை ஓதுகின்றனர்.

முதல் நான்கு ரக்அத் முடிவில் அபூபக்ர் (ரலி) அவர்களைப் புகழ்ந்து போற்றும் வகையிலும்,

இரண்டாவது நான்கு ரக்அத் முடிந்த பின் உமர் (ரலி) அவர்களைப் போற்றிப் புகழும் வகையிலும்,

மூன்றாவது நான்கு ரக்அத் முடிவில் உஸ்மான் (ரலி) அவர்களைப் போற்றிப் புகழும் வகையிலும்,

நான்காவது நான்கு ரக்அத்துக்குப் பின் அலீ (ரலி) அவர்களைப் போற்றிப் புகழும் வகையிலும்

அமைந்த வாசகங்களை ஓதுகின்றனர்.

இவர்களைப் பற்றியெல்லாம் ஓதுவதிலிருந்தே இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் உள்ள நடைமுறை இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம். தொழுகைக்கு இடையே இவர்களின் பெயர்களைக் கூறும் போது அவர்களுக்காகத் தொழுதது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. தொழுகை முடிந்த பின் எவரையும் புகழ வேண்டும் என்பது நபிகள் நாயகம் காட்டிய வழிமுறை அல்ல என்பதால் இதை விட்டொழிக்க வேண்டும்.

ஜமாஅத்தாகத் தொழுதல்

கடமையான தொழுகை ஜமாஅத்தாகத் தொழுவது ஆண்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதை நாம் அறிவோம். இரவுத் தொழுகை இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளதா என்றால் இல்லை.

சிலர் விரும்பி ஜமாஅத்தாகத் தொழ விரும்பினால் நபிவழியில் அதற்கு அனுமதி உள்ளது என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.

மைமூனா (ரலி) வீட்டில் தங்கிய இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பின் வருமாறு கூறுகிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஷா தொழுது விட்டு வீட்டுக்கு வந்தார்கள். நான்கு ரக்அத்கள் தொழுது விட்டுத் தூங்கினார்கள். பின்னர் எழுந்தார்கள். சிறுவன் தூங்கி விட்டானா?’ என்று கேட்டு விட்டுத் தொழலானார்கள். நான் எழுந்து அவர்களின் வலது புறம் நின்றேன். என்னைத் தமது இடது புறத்தில் ஆக்கினார்கள். அப்போது ஐந்து ரக்அத், பின்னர் இரண்டு ரக்அத் தொழுதார்கள். அவர்களின் குறட்டைச் சத்தத்தை நான் கேட்டும் அளவுக்குத் தூங்கினார்கள். பின்னர் தொழுகைக்குப் புறப்பட்டார்கள். 

நூல்: (புகாரி: 117) , 138, 183, 697, 698, 699, 726, 728, 859, 992, 1198, 4570, 4571, 4572, 5919, 6316

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை தொழுத போது இப்னு அப்பாஸ் தனியாகத் தொழாமல் நபிகள் நாயகத்துடன் ஜமாஅத்தாகச் சேர்ந்து தொழுதார். இது மார்க்கத்தில் இல்லாதது என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைக் கண்டித்திருப்பார்கள். தொழுது முடித்த பிறகு, இப்படி நடக்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. எனவே இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழ அனுமதி உள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது அறையில் இரவுத் தொழுகை தொழுவார்கள். அந்த அறையின் சுவர் குட்டையாக இருந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மக்கள் பார்க்க முடியும். விடிந்ததும் இது பற்றிப் பேசிக் கொண்டனர். இரண்டாம் இரவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுத போது நபிகள் நாயகத்தைப் பின்பற்றி மக்களில் சிலரும் தொழலானார்கள். இப்படி இரண்டு அல்லது மூன்று இரவுகள் நடந்தன. இதன் பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (அறைக்கு வராமல்) அமர்ந்து விட்டனர். சுபுஹ் நேரம் வந்ததும் இது பற்றி நபிகள் நாயகத்திடம் மக்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘இரவுத் தொழுகை உங்கள் மீது கடமையாக்கப்பட்டு விடுமோ என்று அஞ்சினேன்’ என்று விளக்கமளித்தார்கள். 

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி). நூல்: (புகாரி: 729) , 924, 1129

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓர் இரவின் நடுப் பகுதியில் (வீட்டை விட்டு) வெளியேறி பள்ளிவாசலில் தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி சிலர் தொழுதனர். விடிந்ததும் மக்கள் இது பற்றி பேசிக் கொண்டனர். (இதன் காரணமாக மறு நாள்) மக்கள் மேலும் அதிகரித்து நபிகள் நாயகத்தைப் பின்பற்றித் தொழுதனர். விடிந்ததும் மக்கள் (இது பற்றி) பேசிக் கொண்டனர். மூன்றாம் இரவில் இன்னும் அதிகமாக மக்கள் திரண்டனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்து தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள். நான்காம் இரவு ஆன போது பள்ளிவாசல் கொள்ள முடியாத அளவுக்கு மக்கள் திரண்டனர். (இரவுத் தொழுகைக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வராமல்) பஜ்ருத் தொழுகைக்குத் தான் வந்தனர். பஜ்ரு தொழுததும் மக்களை நோக்கித் திரும்பி அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்து விட்டு, ‘நீங்கள் இருந்தது எனக்குத் தெரியாமல் இல்லை. இத்தொழுகை உங்கள் மேல் கடமையாக்கப்பட்டு அதை நிறைவேற்ற இயலாதவர்களாகி விடுவீர்களோ என்று அஞ்சினேன்’ என்று கூறினார்கள். இந்த நிலையிலேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள். 

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி). நூல்: (புகாரி: 2012) 

இந்தக் கருத்தில் இன்னும் பல அறிவிப்புக்கள் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று நாட்கள் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாக நடத்தினார்கள் என்பதும், பின்னர் அதை விட்டு விட்டார்கள் என்பதும் இதிலிருந்து தெரிகிறது.

இந்த ஹதீஸை நாம் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று நாட்கள் மட்டுமே ஜமாஅத்தாகத் தொழுதுள்ளதால் மூன்று நாள் மட்டும் ஜமாஅத்தாகத் தொழுவதே நபிவழி என்று சிலர் புரிந்து கொள்கிறார்கள்.

மூன்று நாட்கள் ஜமாஅத்தாகத் தொழுத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்னர் அதை விட்டு விட்டதால் அதையே நாம் சட்டமாக எடுத்துக் கொள்ள வேண்டும்; அதாவது இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவது கூடாது. தனித் தனியாகத் தான் தொழ வேண்டும் என்று மற்றும் சிலர் புரிந்து கொள்கிறார்கள்.

இந்த இரண்டு கருத்துக்களுமே தவறாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு செயலைச் செய்தால் அல்லது செய்ததை விட்டு விட்டால் நாமும் அவ்வாறே நடக்க வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் செயலைச் செய்வதற்கோ, விடுவதற்கோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காரணம் ஏதாவது கூறியிருந்தால் அதைப் பொதுவானதாகப் புரிந்து கொள்ளக் கூடாது. அந்தக் காரணம் இருக்கும் வரை அதைக் கடைப்பிடிக்க வேண்டும். அந்தக் காரணம் விலகி விட்டால் கடைப்பிடிக்கத் தேவையில்லை என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னொரு ஹதீஸை உதாரணமாகக் கொண்டு இதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

இரவில் தூங்கச் செல்லும் போது விளக்கை அணைத்து விடுங்கள். இல்லாவிட்டால் எலிகள் விளக்கை இழுத்துச் சென்று வீட்டைக் கொளுத்தி விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி). நூல்: (புகாரி: 3316) , 6295

விளக்கை அணைத்து விடுங்கள் என்று மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி, அதற்கான காரணம் எதையும் கூறாமல் இருந்தால் எந்த விளக்கையும் நாம் இரவில் அணைக்க வேண்டும் என்றே புரிந்து கொள்ள வேண்டும். மின் விளக்குகளைக் கூட தூங்கும் போது அணைத்தாக வேண்டும் என்ற முடிவுக்கு நாம் வருவோம்.

ஆனால் எலிகள் இழுத்துச் சென்று வீடுகளைக் கொளுத்தி விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதற்கான காரணத்தையும் கூறுகிறார்கள். அதாவது எலிகள் இழுத்துச் செல்வதால் வீடுகள் தீப்பற்றி விடும் என்பதே இத்தடைக்குக் காரணம்.

எண்ணெய் ஊற்றி எரிக்கும் விளக்குகளால் தான் இது போன்ற நிலைமை ஏற்படும். மின் விளக்குகளால் இது போன்ற நிலை ஏற்படாது. எனவே நைட் லாம்ப் போன்ற வெளிச்சத்தில் உறங்குவது இந்த நபிமொழிக்கு எதிரானதாக ஆகாது.

இது போல் தான் நபிகள் நாயகம் அவர்கள் மூன்று நாட்கள் மட்டும் ஜமாஅத்தாகத் தொழுது விட்டுப் பின்னர் ஜமாஅத்தை விட்டதற்கு ஒரு காரணத்தைக் கூறுகிறார்கள்.

இரவுத் தொழுகையில் மக்கள் காட்டும் பேரார்வம் காரணமாக இறைவன் இத்தொழுகையை முஸ்லிம்கள் மீது கடமையாக்கி விடுவானோ என்ற அச்சத்தின் காரணமாகவே தொழுகை நடத்த வரவில்லை என்பதே அந்தக் காரணம்.

எந்த ஒரு காரியமும் கடமையாவது என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழியாகத் தான் இறைவன் கடமையாக்குவான். நபிகள் நாயகம் (ஸல்) இறுதி நபி என்பதால் அவர்களுக்குப் பின்னர் எதுவும் கடமையாக முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்துக்குப் பின் இரவுத் தொழுகையில் மக்கள் எவ்வளவு தான் ஆர்வம் காட்டினாலும் அத்தொழுகை கடமையாகவே போவதில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதற்காக அஞ்சி ஜமாஅத் தொழுகை நடத்த வரவில்லையோ அந்த அச்சம் அவர்களின் மரணத்திற்குப் பின் இல்லாததால் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவதற்குத் தடையேதும் இல்லை என்பதே சரியான கருத்தாகும்.

வீடுகளில் தொழுவதே சிறந்தது

பள்ளிவாசல்களில் ஜமாஅத்தாகத் தொழ அனுமதி இருந்தாலும் வீடுகளில் தொழுவதே சிறந்தது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவுரை கூறியுள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் பாய்களால் ஒரு அறையைத் தயார் செய்தார்கள். அதில் சில இரவுகள் தொழுதார்கள். அவர்களின் தோழர்களில் சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழுதார்கள். இதை அறிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டிலேயே அமர்ந்து கொண்டார்கள். பின்னர் மக்களிடம் வந்து, ‘உங்கள் செய்கையை நான் அறிந்திருக்கிறேன். மக்களே! உங்கள் வீடுகளிலேயே தொழுங்கள். ஏனெனில் கடமையான தொழுகை தவிர மற்ற தொழுகைகளை ஒருவர் தனது வீட்டில் தொழுவதே சிறந்தது’ என்று கூறினார்கள். 

அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி) நூல்: (புகாரி: 731) , 6113, 7290

இரண்டிரண்டா? நான்கு நான்கா?

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலில் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இதை அடிப்படையாகக் கொண்டு நான்கு நான்கு ரக்அத்களாகத் தொழலாமா? என்று சந்தேகம் ஏற்படலாம்.

அந்த அறிவிப்பு மட்டும் வந்திருந்தால் நான்கு ரக்அத்களாகத் தொழ வேண்டும் என்ற முடிவுக்கு வரலாம்.

அந்த ஹதீஸை அறிவிக்கும் ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு அறிவித்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு இரண்டு ரக்அத்திலும் ஸலாம் கூறுவார்கள். ஒரு ரக்அத் வித்ரு தொழுவார்கள். 

நூல்: (இப்னு மாஜா: 1177) (1167)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு இரண்டு ரக்அத்களில் ஸலாம் கொடுப்பார்கள். ஆயினும் நான்கு ரக்அத் முடிந்ததும் சற்று இடைவெளி கொடுப்பார்கள் என்று புரிந்து கொண்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான இரண்டு ஹதீஸ்களும் முரண்பாடு இல்லாமல் பொருந்திவிடும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர், ‘இரவுத் தொழுகை பற்றி என்ன கூறுகிறீர்கள்?’ என்று கேட்டார். மிம்பரில் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘இரவுத் தொழுகை இரண்டிரண்டாகத் தொழ வேண்டும்’என்று விடையளித்தார்கள். 

நூல்: (புகாரி: 472) , 473, 991, 993, 1137

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சில வேளை நான்கு, நான்கு ரக்அத்கள் தொழுதார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீசுக்கு விளக்கம் கொடுத்தாலும் இந்த ஹதீஸ் நமக்குத் தெளிவைத் தருகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தது ஒரு விதமாகவும் நமக்குச் சொன்னது அதற்கு மாற்றமாகவும் இருந்தால் நாம் அவர்களின் சொல்லைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இரவுத் தொழுகை இரண்டிரண்டு என்று தெளிவாக அவர்கள் கூறி விட்டதால் இதையே நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

இரவுத் தொழுகையைப் பிரித்துத் தொழுதல்

நாம் எத்தனை ரக்அத்களைத் தொழுகிறோமோ அதை ஒரே மூச்சில் இடைவெளியில்லாமல் தொழ வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. ஒரு பகுதியைத் தொழுது விட்டு வேறு வேலைகளில் ஈடுபட்டு விட்டு அல்லது உறங்கிவிட்டு எஞ்சியதைப் பின்னர் தொழலாம்.

நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் இஷாத் தொழுது விட்டு வீட்டுக்கு வந்து நான்கு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் தூங்கி எழுந்து ஐந்து ரக்அத் தொழுதார்கள். 

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி). நூல்: (புகாரி: 117) , 697

நிற்க இயலாத போது உட்கார்ந்து தொழலாம்

நின்று தொழ முடியாவிட்டால் அல்லது அது சிரமமாக இருந்தால் உட்கார்ந்தும் தொழலாம். அவ்வாறு தொழும் போது நபிகள் நாயகம் கடைப்பிடித்த வழிமுறையைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு இஷா தொழுவித்து விட்டு என் வீட்டுக்கு வருவார்கள். உடனே இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். இரவில் வித்ரையும் சேர்த்து ஒன்பது ரக்அத்கள் தொழுவார்கள். நீண்ட நேரம் நின்றும் தொழுவார்கள். நீண்ட நேரம் உட்கார்ந்தும் தொழுவார்கள். அவர்கள் நின்ற நிலையில் தொழுதால் நின்ற நிலையிலிருந்து ருகூவு சஜ்தாவுக்குச் செல்வார்கள். உட்கார்ந்த நிலையில் தொழுதால் உட்கார்ந்த நிலையிலிருந்து ருகூவு சஜ்தா செய்வார்கள். 

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: (முஸ்லிம்: 1323) (1201)

இரவுத் தொழுகை விடுபட்டால்…

இரவுத் தொழுகையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடாமல் தொழுது வந்தனர் என்றாலும் சில நேரங்களில் அவர்கள் இரவுத் தொழுகையை விட்டதற்கும் ஆதாரம் உள்ளது.

நபி (ஸல்) அவர்களுக்கு உடல் நலம் குன்றிய போது ஒரு இரவு அல்லது இரண்டு இரவுகள் அவர்கள் தொழவில்லை. 

அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி), நூல்: (புகாரி: 1124) , 4983

ஏதேனும் ஒரு காரணத்தால் இரவுத் தொழுகை விடுபட்டு விட்டால் பகலில் பன்னிரண்டு ரக்அத்கள் தொழலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வலி மற்றும் ஏதோ ஒரு காரணத்தால் இரவுத் தொழுகை தவறி விட்டால் பகலில் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். 

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: (முஸ்லிம்: 1358) (1234)

நபிகள் நாயகம் (ஸல்) காட்டித் தந்த வழியில் இரவுத் தொழுகை உள்ளிட்ட அனைத்து வணக்கங்களையும் நிறைவேற்றி, மறுமையில் வெற்றி பெற இறைவனை இறைஞ்சுகிறாம்.