32) மார்க்க அறிஞர்களாக மாற்றலாம்
இஸ்லாமிய ஒழங்கு முறைகளை கற்றுக்கொடுத்து பிள்ளைகளை வளர்க்கும் போது காலப்போக்கில் அச்சிறுவர்கள் பெரியவர்களுக்கே ஒழுங்கு முறைகளை கற்றுத்தரும் ஆசானாக மாறிவிடுவார்கள். உமர் (ரலி) அவர்களுக்குத் தெரியாத ஒரு விஷயத்தை சிறுவராக இருந்த அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிந்துவைத்திருந்தார்கள்.
நான் அன்சாரிகளின் அவையொன்றில் அமர்ந்திருந்தேன். அப்போது பதற்றமடைந்தவரைப் போன்று அபூமூசா (ரலி) அவர்கள் வந்து, “நான் உமர் (ரலி) அவர்களிடம் (அவர்களுடைய வீட்டினுள் நுழைய) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால், எனக்கு அனுமதியளிக்கப்படவில்லை. ஆகவே, நான் திரும்பிவிட்டேன். பின்பு உமர் (ரலி) அவர்கள் (உங்களை நான் வரச்சொல்லி இருந்தேனே) ஏன் நீங்கள் வரவில்லை” என்று (என்னிடம்) கேட்டார்கள். அதற்கு நான், “(தங்களிடம்) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால் எனக்கு அனுமதியளிக்கப்படவில்லை. ஆகவே, நான் திரும்பி வந்துவிட்டேன். (ஏனெனில்,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “உங்களில் ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும் அவருக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் அவர் திரும்பிவிடட்டும்’ என்று கூறியுள்ளார்கள்” என்றேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! இ(வ்வாறு நபியவர்கள் கூறினார்கள் என்ப)தற்கு நீங்கள் சாட்சியைக் கொண்டு வரவேண்டும்’ என்று சொன்னார்கள். இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றவர் யாரேனும் உங்களில் உள்ளாரா?” என்று கேட்டார்கள்.
அதற்கு (அங்கிருந்த) உபை பின் கஅப் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! மக்களில் மிகச் சிறியவரே உங்களுடன் (இப்போது சாட்சியம் சொல்ல) வருவார்” என்று சொன்னார்கள். அங்கு நான்தான் மக்களில் சிறியவனாக இருந்தேன். எனவே, நான் அபூமூசா (ரலி) அவர்களுடன் சென்று “நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னார்கள்” என்று உமர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தேன்.
அறி : அபூசயீத் அல்குத்ரீ (ரலி),
நூல் : புகாரி (6245)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வாலிபராக இருந்த போது அவர்களை விட வயதில் மூத்தவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைப் பார்த்து கல்வியில் பொறாமைப்படும் அளவிற்கு இளம் வயதிலே நிறைவான மார்க்க அறிவை இப்னு அப்பாஸ் (ரலி) பெற்றிருந்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்ட புண்ணியவான்களுடன் எனக்கும் (தம் அவையில்) இடமளித்து வந்தார்கள். ஆகவே, அவர்களில் சிலர், “எங்களுக்கும் இவரைப் போன்ற (வயது ஒத்த) பிள்ளைகள் இருக்க, (அவர்களையெல்லாம் விட்டு விட்டு) இந்த இளைஞரை மட்டும் எதற்காக எங்களுடன் அமரச் செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அவர் நீங்கள் அறிந்துவைத்துள்ள (கல்வித் தகுதி படைத்த)வர்களில் ஒருவர்” என்று பதிலளித்தார்கள். பிறகு, ஒரு நாள் அவர்களையெல்லாம் அழைத்தார்கள்; அவர்களுடன் என்னையும் அழைத்தார்கள். அவர்களுக்கு என் (தகுதியி)னைப் பற்றி உணர்த்திக் காட்டுவதற்காகவே என்னை அவர்கள் அழைத்ததாகக் கருதுகிறேன். (அவர்களெல்லாம் வந்தவுடன் அவர்களிடம்) உமர் (ரலி) அவர்கள், “இதா ஜாஅ நஸ்ருல்லாஹி….. (நபியே!) இறைவனின் உதவியும் வெற்றியும் வந்து, மக்கள் கூட்டம் கூட்டமாக இறைமார்க்கத்தில் இணைவதை நீங்கள் பார்க்கும் போது உங்கள் இறைவனைப் புகழ்ந்து அவனது தூய்மையை எடுத்துரையுங்கள்; மேலும், அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்)” என்னும் (திருக்குர்ஆனின் 110-வது “அந் நஸ்ர்’) அத்தியாயத்தை இறுதி வரை ஓதிக்காட்டி, “இதற்கு நீங்கள் என்ன (விளக்கம்) கூறுகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
அவர்களில் சிலர், “நமக்கு உதவியும் வெற்றியும் அளிக்கப்படும் போது அல்லாஹ்வைப் புகழும்படியும் அவனிடம் பாவமன்னிப்புக் கோரும்படியும் நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம்” என்று (விளக்கம்) கூறினர். சிலர், “எங்களுக்குத் தெரியாது” என்றனர். அல்லது அவர்களில் சிலர் எந்தக் கருத்தும் கூறவில்லை. பிறகு உமர் (ரலி) அவர்கள் என்னிடம், “இப்னு அப்பாஸே! நீங்களும் இப்படித் தான் கூறுகிறீர்களா?” என்று கேட்டார்கள். நான், “இல்லை” என்றேன். அவர்கள், “அப்படியென்றால் நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். நான், “அது, அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர்களின் ஆயுட்காலம் முடிந்து (இறப்பு நெருங்கி) விட்டதை அறிவிப்பதாகும். ஆகவே, “அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து’ என்பதில் உள்ள “வெற்றி’ என்பது மக்கா வெற்றியைக் குறிக்கும். மக்கா வெற்றி தான், (நபியே!) உங்கள் ஆயுட்காலம் முடியவிருப்பதற்கான அடையாளம். ஆகவே, நீங்கள் உங்கள் அதிபதியைப் புகழ்ந்து அவனது தூய்மையை எடுத்துரைத்து, அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். அவன் (நீங்கள் மன்னிப்புக் கோருவதை ஏற்று) உங்களுக்கு மன்னிப்பளிப்பவன் ஆவான்’ என்பதே இதன் கருத்தாகும்” என்று சொன்னேன். உமர் (ரலி) அவர்கள், “நீங்கள் இந்த அத்தியாயத்திலிருந்து என்ன (கருத்தை) அறிகின்றீர்களோ அதையே நானும் அறிகின்றேன்” என்று சொன்னார்கள்.
அறி : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : புகாரி (4294)
திருக்குர்ஆனை மனனம் செய்ய வைத்தல்
அல்லாஹ்வுடைய வசனத்தை மனனம் செய்யாத உள்ளம் பாலடைந்த வீட்டைப் போன்றது. பாலடைந்த வீட்டிலே விஷ ஜந்துக்கள் தான் குடியிருக்கும். அது போன்று நமது குழந்தைகளின் உள்ளம் ஆகிவிடக்கூடாது.
சிறுவயதிலேயே குர்ஆன் ஓதக்கற்றுக்கொடுக்க வேண்டும். பள்ளிப் பாடங்களுக்கு முக்கியத்துவம் தந்து மனப்பாடம் செய்ய வைப்பதைப் போல் குர்ஆனில் உள்ள சூராக்களையும் இயன்ற அளவு மனனம் செய்வதற்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சிறுவர்கள் குர்ஆனில் அதிகமானதை மனனம் செய்து வைத்திருந்தார்கள்.
“நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வாழ்ந்த) காலத்திலேயே “அல் முஹ்கம்’ அத்தியாயங்களை மனனம் செய்திருந்தேன்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். நான் அவர்களிடம், ” “அல்முஹ்கம்’ என்றால் என்ன?” என்று கேட்டேன். அவர்கள் ” “அல்முஃபஸ்ஸல்’தான் (“அல்முஹ்கம்’)” என்று (பதில்) சொன்னார்கள்.
அறி : சயீத் பின் ஜுபைர் (ரஹ்),
நூல் : புகாரி (5036)
மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்த போது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும் (எங்களிடையே) இருக்கவில்லை. ஆகவே, (தொழுவிப்பதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய(சிறு)வனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தேன். நான் சஜ்தா செய்யும் போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின் புறத்தைக்) காட்டிவந்தது. ஆகவே, அந்தப் பகுதிப் பெண்மணியொருவர், “உங்கள் ஓதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா?” என்று கேட்டார். ஆகவே, அவர்கள் (துணியொன்றை) வாங்கி வந்து எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போல வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை.
அறி : அமர் பின் சலிமா (ரலி),
நூல் : புகாரி (4302)
துஆக்களைக் கற்றுத் தர வேண்டும்
இறைவனிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும். எந்த எந்த நேரங்களில் பிரார்த்திக்க வேண்டும். எதை கேட்க வேண்டும் என்பதையெல்லாம் நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். இவற்றை நம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
சிறுவராக இருந்த ஹசன் (ரலி) அவர்களுக்கு குனூத்தில் ஓத வேண்டிய துஆவை நபி (ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்தார்கள். அதை அவர்கள் மறந்துவிடாமல் மற்றவர்களுக்கு கூறியதால் இன்றைக்கு அந்த துஆவை ஓதும் பாக்கியம் நமக்குக் கிடைத்திருக்கிறது.
வித்ரில் நான் ஓத வேண்டிய வார்த்தைகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்குக் கற்றுக்கொடுத்தார்கள். அல்லாஹும்மஹ்தினீ ஃபீ மன் ஹதய்த. வஆஃபினீ ஃபீ மன் ஆஃபய்த. வதவல்லனீ ஃபீமன் தவல்லைத. வபாரிக் லீ ஃபீமா அஃதய்த. வகினீ ஷர்ர மா களைத. ஃப இன்னக தக்ளீ வலா யுக்ளா அலைக்க. வ இன்னஹு லா யதுல்லு மவ் வாலைத்த. தபாரக்த ரப்பனா வதஆலைத்த (என்பதே அந்த வார்த்தைகளாகும்).
பொருள் : இறைவா நீ நேர்வழிகாட்டியவர்களுடன் எனக்கும் நேர்வழிகாட்டுவாயாக. நீ யாருக்கு ஆரோக்கியத்தை வழங்கினாயோ அவர்களுடன் எனக்கும் ஆரோக்கியத்தை வழங்குவாயாக. யாருக்கு நீ பொறுப்பேற்றுக்கொண்டாயோ அவர்களுடன் எனக்கும் பொறுப்பேற்றுக்கொள். நீ எனக்குக் கொடுத்தவற்றில் அருள் புரி. நீ தீர்ப்பாக்கிய விஷயங்களில் கெட்டதை விட்டு என்னைக் காப்பாற்று. ஏனென்றால் நீயே முடிவு செய்வாய். உனக்கு எதிராக முடிவு செய்யப்படமாட்டாது. நீ யாருக்கு பொறுப்பேற்றாயயோ அவர்கள் இழிவடைய மாட்டார்கள். எங்களின் இறைவா நீயே பாக்கியசாளி. நீயே உயர்ந்தவன்.
அறி : ஹஸன் (ரலி),
நூல் : திர்மிதி (426)
குழந்தைகளுக்கு கல்வியை போதிக்கின்ற நேரத்தில் பெற்றோர்கள் ஆசிரியர்களைப் போன்று மாறிவிட வேண்டும்.
ஆசிரியர் சிறுவர்களுக்குப் பாடம் போதிப்பதைப் போல, சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் தம் மக்களுக்குப் பின்வரும் (பிரார்த்தனை) வாசகங்களைக் கற்றுக் கொடுத்தார்கள்: அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஜுப்னி, வஅஊது பிக்க அன் உரத்த இலா அர்தலில் உமுரி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தித் துன்யா, வ அஊது பிக்க மின் அதாபில் கப்ரி.
பொருள் : “இறைவா! நான் கோழைத்தனத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்; மூப்பின் மோசமான நிலையை அடைவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்; உலகின் சோதனைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்; புதை குழியின் வேதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்” என்று கூறிவிட்டு, “இந்த விஷயங்களிலிருந்தெல்லாம் நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்குப் பின்பு பாதுகாப்புக் கோரி வந்தார்கள்” என்றும் அவர்கள் கூறினார்கள்.
அறி : அம்ர் பின் மய்மூன் (ரஹ்),
நூல் : புகாரி (2822)
சிந்திக்கத் தூண்ட வேண்டும்
ஏன் எதற்கு எப்படி என்று கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்தால் அறிவு வளரும் என்று சொல்வார்கள். குழந்தைகளிடத்தில் கேள்விகளைக் கேட்டு பதிலை வரவழைக்கும் போது அவர்கள் அறிவாளியாகிறார்கள். இவ்வாறு செய்வதால் மூளைக்கு வேலை கொடுக்கப்பட்டு சிந்திக்க ஆரம்பிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இத்தகைய வழிமுறையை கையாண்டு கற்றுக்கொடுப்பவர்களாக இருந்தார்கள்.
மரங்களில் (இப்படியும்) ஒருவகை மரம் உண்டு; அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்று சொல்லுங்கள்!” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நாட்டு மரங்களை நோக்கி மக்களின் கவனம் போயிற்று. அது பேரீச்ச மரம்தான் என்று எனக்குத் தோன்றியது. (மூத்தவர்கள் மௌனமாய் இருக்கும் அவையில் நான் எப்படிச் சொல்வது என்று) வெட்கப்பட்டுக்கொண்டு (அமைதியாக) இருந்துவிட்டேன். பிறகு மக்கள் “அது என்ன மரம் என்று தாங்களே சொல்லுங்கள், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்க, “அது பேரீச்ச மரம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),
நூல் : புகாரி (131)
குழந்தைகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு அதை நிவர்த்தி செய்வதற்காக பெற்றோர்களிடம் வருவார்கள். அப்போது பெற்றோர்கள் அதை ஊதாசீனப்படுத்திவிடாமல் சந்தோஷத்துடன் அதற்கு முறையான அடிப்படையில் பதில் சொல்ல வேண்டும்.
நான் என் தந்தையிடம் என் தந்தையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அபூபக்ர் (ரலி) உமர் (ரலி) உஸ்மான் (ரலி) ஆகியோருக்கும் பின்னாலும் கூஃபாவாகிய இங்கே அபூதாலிபின் மகன் அலீ (ரலி) அவர்களுக்குப் பின்னாலும் ஏறத்தாழ ஐந்து வருடங்கள் நீங்கள் தொழுதுள்ளீர்கள். இவர்கள் (தொழுகையில்) கூனூத் ஓதினார்களா? என்று கேட்டேன். அதற்கு என் தந்தை எனது அருமை மகனே (இத) புதிதாக உருவாக்கப்பட்டதாகும் என்று கூறினார்.
அறி : அபூ மாலிக் (ரஹ்),
நூல் : திர்மிதி (368)