30) உபதேசம் செய்ய வேண்டும்
பிஞ்சு உள்ளத்தில் முதன் முதலில் விதைக்கின்ற கருத்துக்கள் பெரும் மாற்றத்தை அவர்களிடம் ஏற்படுத்தும். ஒரு முஸ்லிம் அல்லாஹ்வைப் பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டிய விஷயங்களை நம் குழந்தைகளுக்கு அவர்களுக்குரிய பாணியிலே சொல்லிக்கொடுக்க வேண்டும்.
முக்கியமாக இணைவைப்பு என்றால் என்ன? அது எவ்வளவு பெரிய பாவம்? இணைவைப்பவர்களுக்கு கிடைக்கும் தண்டனை என்ன? அல்லாஹ்வின் வல்லமை எவ்வளவு பெரியது? அவனது கருணை எவ்வளவு மகத்தானது? நாம் யாரிடத்தில் கையேந்த வேண்டும்? யாரைப் பின்பற்ற வேண்டும்? நபி (ஸல்) அவர்களை எவ்வளவு உயர்வாக நேசிக்க வேண்டும்? என்பதையெல்லாம் குழந்தைகளுக்கு முதலில் விளக்கிச் சொல்ல வேண்டும்.
மனிதனிடத்தில் இருக்க வேண்டிய நற்குணங்களையும் இருக்கக்கூடாத தீய குணங்களையும் எடுத்துக்கூறி நல்லவர்களாக வாழ வேண்டும் என்று உபதேசம் செய்ய வேண்டும். நபிமார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இவ்வாறு உபதேசம் செய்ததை அல்லாஹ் திருக்குர்ஆனில் விவரிக்கிறான்.
“என் மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது” என்று இப்ராஹீமும், யஃகூபும் தமது பிள்ளைகளுக்கு வலியுறுத்தினர்.
யஃகூபுக்கு மரணம் நெருங்கிய போது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? “எனக்குப் பின் எதை வணங்குவீர்கள்?” என்று தமது பிள்ளைகளிடம் கேட்ட போது “உங்கள் இறைவனும், உங்கள் தந்தையரான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய ஒரே இறைவனையே வணங்குவோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்” என்றே (பிள்ளைகள்) கூறினர்.
லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது “என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்” என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக!
என் அருமை மகனே! கடுகு விதை அளவு (ஒரு பொருள்) இருந்து அது பாறைக்குள்ளேயோ, வானங்களிலோ, பூமியிலோ இருந்தாலும் அதை அல்லாஹ் கொண்டு வருவான். அல்லாஹ் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.
என் அருமை மகனே! தொழுகையை நிலை நாட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதி மிக்க காரியமாகும். மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.
“நீ நடக்கும் போது நடுத்தரத்தைக் கடைப்பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்” (என்றும் அறிவுரை கூறினார்).
முத்தான உபதேசங்கள்
சிறுவராக இருந்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அற்புதமான உபதேசங்களை செய்துள்ளார்கள. இந்த உபதேசத்தின் ஒவ்வொரு வார்த்தைகளும் பொன்னால் பொறிக்கப்பட வேண்டியவை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மனதில் நிலைநிறுத்த வேண்டிய முத்தான அறிவுரைகளாகும்.
சிறுவனே உனக்கு நான் சில உபதேசங்களைக் கற்றுத்தருகிறேன். அதன் மூலம் அல்லாஹ் உனக்கு பலனைத் தருவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
நீ அல்லாஹ்வுடைய விஷயத்தில் பேணுதலாக நடந்துகொள். அல்லாஹ் உன்னை பாதுகாப்பான். அல்லாஹ்வுடைய விஷயத்தில் நீ பேணுதலாக நடந்துகொள். அவனை நீ உன்னுடன் காண்பாய். நீ சந்தோஷமாக இருக்கும் போது அல்லாஹ்வை நினைத்துப்பார். (உனக்கு) சிரமம் வரும் போது அல்லாஹ் உன்னை நினைப்பான். கேட்பதாக இருந்தால் அல்லாஹ்விடமே கேள். நீ உதவிதேடுவதாக இருந்தால் அல்லாஹ்விடமே உதவிதேடு.
நிச்சயமாக (இந்த) சமுதாயம் உனக்கு நன்மை செய்வதற்காக ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு எதை விதியாக்கிவிட்டானோ அதைத் தவிர வேறெதனாலும் அவர்கள் உனக்கு நன்மை செய்துவிட முடியாது. அவர்கள் உனக்கு தீங்கு செய்வதற்காக ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு எந்தத் தீங்கை விதியாக்கிவிட்டானோ அதைத் தவிர வேறெதனாலும் அவர்கள் உனக்கு தீங்கு செய்துவிட முடியாது. எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டுவிட்டது. ஏடுகள் காய்ந்துவிட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : திர்மிதி (2440)
இமாம் பைஹகீ அவர்கள் எழுதிய அல்களாஉ வல்கத்ரு என்ற நூலில் இந்த ஹதீஸ் சரியான அறிவிப்பாளர் தொடரில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அல்லாஹ்வின் விஷயத்தில் பேணுதலாக நடக்க வேண்டும் என்பதன் பொருள் அவனது கட்டளைகளை செயல்படுத்த வேண்டும் அவன் தடுத்தவைகளை தவிர்ந்துகொள்ள வேண்டும் என்பதாகும்.
சிறுவர்கள் இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகளை எளிதில் விளங்கிக்கொள்வதற்காக சுருக்கமாக கேள்வி பதில் கோணத்தில் புத்தகங்கள் உள்ளது. பெற்றோர்கள் அவற்றை வாங்கி குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கலாம்.
பெற்றோர்களை மதிக்க வேண்டும் என்று உபதேசம் செய்ய வேண்டும்
பெற்றோர்களை மதித்து நடக்குமாறு கூறும் குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் குழந்தைகளிடம் எடுத்துக்கூற வேண்டும்.
அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்.
“என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!” என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி “சீ’ எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு!
அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! “சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!” என்று கேட்பீராக!
நபி (ஸல்) அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பதுமாகும் என்று கூறினார்கள்.
அறி : அனஸ் (ரலி),
நூல் : புகாரி (2653)
“ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),
நூல் : புகாரி (5973)
அன்னையரைப் புண்படுத்துவதை அல்லாஹ் தடைசெய்துள்ளான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி : முஃகீரா பின்ஷ‚அபா (ரலி),
நூல் : புகாரி (5975)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “உன் தாய்” என்றார்கள். அவர், “பிறகு யார்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “உன் தாய்” என்றார்கள். அவர், “பிறகு யார்?” என்றார். “உன் தாய்” என்றார்கள். அவர், “பிறகு யார்?” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “பிறகு, உன் தந்தை” என்றார்கள்.
அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி (5971)
நான் நபி (ஸல்) அவர்களிடம் “கண்ணியமும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?” என்று கேட்டேன். அவர்கள், தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறை வேற்றுவது” என்றார்கள். “பிறகு எது?” என்று கேட்டேன். “தாய் தந்தையருக்கு நன்மை செய்வது” என்றார்கள்.
அறி : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),
நூல் : புகாரி (5970)
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “நான் (இந்த) அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “உனக்குத் தாய் தந்தை இருக்கின்றனரா?” என்று கேட்டார்கள். அவர், “ஆம் (இருக்கிறார்கள்)” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “(அவ்வாறாயின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு” என்றார்கள்.
அறி : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),
நூல் : புகாரி (5972)
குகையில் மாட்டிக்கொண்ட மூவரில் ஒருவர் பெற்றோர்களிடத்தில் நல்லவிதமாக நடந்துகொண்டதால் அல்லாஹ் அவரது பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டான் என்று புகாரியில் 5974 வது ஹதீஸ் கூறுகிறது. இது போன்ற சம்பவங்களைக் கூறி உபதேசம் செய்யலாம்.
நபித்தோழர்களின் வாழ்க்கையில் நடந்த படிப்பினை தரும் சம்பவங்களை கதைகள் சொல்வது போல் கூற வேண்டும். நபிமார்களின் வரலாறுகளை குழந்தைகள் விரும்புகின்ற விதத்தில் சிறிது சிறிதாக எடுத்துரைக்க வேண்டும்.