24) விளையாட அனுமதிக்க வேண்டும்

நூல்கள்: இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு

விளையாட்டு என்பது குழந்தைகளுக்கு அவசியமானது. விளையாடுவதால் குழந்தைகள் மகிழ்ச்சியுறுகிறார்கள். சுறுசுறுப்புடனும் ஆரோக்யத்துடனும் திகழ்கிறார்கள். சிறுவர்கள் விளையாடுவதை நபியவர்கள் அனுமதித்துள்ளார்கள்.

நான் (சிறுமியாக இருந்தபோது) பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக்கொண்டிருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்துகொண்டு) திரைக்குள் ஒளிந்துகொள்வார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள்.

அறி : ஆயிஷா (ரலி),

நூல் : புகாரி (6130)

(ஒரு முறை) நான் சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். உடனே நான் (ஓடிச் சென்று) ஒரு கதவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து (செல்லமாக) என் தோள்களுக்கிடையே ஒரு தட்டு தட்டிவிட்டு, “நீ போய் முஆவியா (பின் அபீசுஃப்யான்) அவர்களை என்னிடம் வரச்சொல்” என்று கூறினார்கள்.

அறி : இப்னு அப்பாஸ் (ரலி),

நூல் : முஸ்லிம் (5074)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே மிக அழகிய நற்குணம் கொண்டவராகத் திகழ்ந்தார்கள். அவர்கள் ஒரு நாள் அலுவல் ஒன்றுக்காக என்னை அனுப்பினார்கள். அப்போது நான் “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் போகமாட்டேன்” என்று சொன்னேன். ஆனால், என் மனத்தில் நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்ட அந்த அலுவலுக்குச் செல்ல வேண்டும் என்றே இருந்தது.

நான் புறப்பட்டுச் சென்றபோது, கடைத் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் சிலரைக் கடந்து சென்றேன். (அவர்களுடன் சேர்ந்து நானும் விளையாடலானேன்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்குப் பின்பக்கம் (வந்து) எனது பிடரியைப் பிடித்தார்கள். அவர்களை நான் பார்த்தபோது அவர்கள் சிரித்துக்கொண்டிருந்தார்கள். “அருமை அனஸே! நான் உத்தரவிட்ட இடத்திற்கு நீ சென்றாயா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்; செல்கிறேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னேன்.

அறி : அனஸ் (ரலி),

நூல் : முஸ்லிம் (4626)

இடஞ்சல் தரும் விளையாட்டுகளுக்கு அனுமதிக்கக்கூடாது

விளையாட்டு என்றப் பெயரில் மற்றவர்களுக்கு இடஞ்சல் தருவதை பெற்றோர்கள் சம்மதிக்கக்கூடாது. நமது குழந்தைகளால் யாரேனும் அவதியுற்றால் அப்போது அவர்களை கண்டிக்கத்தவறக்கூடாது. பிறருக்கு சிரமம் தருகின்ற அடிப்படையில் விளையாடுவதை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.

நான் சிறு கற்களை எறிந்து (வேட்டையாடிக்) கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்டேன். அவரிடம், “சிறு கற்களை எறியாதே. ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “சிறு கற்களை எறிய வேண்டாமென்று தடுத்தார்கள்’ அல்லது “சிறுகற்களை எறிவதை வெறுத்துவந்தார்கள்’. மேலும், நபி அவர்கள் “அவ்வாறு சிறு கற்களை எறிவதால் எந்தப் பிராணியும் வேட்டையாடப்படாது ; எந்த எதிரியும் வீழ்த்தப்படமாட்டான். மாறாக, அது பல்லை உடைக்கலாம்; கண்ணைப் பறித்து விடலாம். (அவ்வளவுதான் அதனால் முடியும்)’ என்று சொன்னார்கள்” எனக் கூறினேன். அதன் பிறகு ஒரு முறை அதே மனிதர் சிறு கற்களை எறிந்துகொண்டிருப்பதைக் கண்டேன். அவரிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “சிறு கற்கள் எறிவதைத் தடை செய்தார்கள்’ அல்லது “சிறு கற்கள் எறிவதை வெறுத்தார்கள்’ என்று நான் உனக்குச் சொல்கிறேன். ஆனால், நீயோ (அதை அலட்சியம் செய்துவிட்டு) சிறு கற்களை எறிகிறாயே? நான் உன்னிடம் இவ்வளவு இவ்வளவு காலம் பேசமாட்டேன்” என்று சொன்னேன்.

அறி : அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி),

நூல் : புகாரி (5479)