4) ஆதாரமற்ற எண்ணிக்கைகள்
நபிவழி மீறப்படுதல்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை குறித்து மேலே நாம் எடுத்துக் காட்டியவை அனைத்தும் ஆதாரப்பூர்வமானவையாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை குறித்து இவ்வளவு தெளிவான சான்றுகள் இருந்தும் ஒவ்வொரு கால கட்டத்திலும் இதற்கு மாற்றமான எண்ணிக்கையில் பலரும் தம் இஷ்டத்திற்குத் தொழுதுள்ளனர். மதிக்கத்தக்க அறிஞர்கள் கூட நபிவழிக்கு மாற்றமாகத் தொழுதிருப்பதும் கருத்துக் கூறியிருப்பதும் நமக்கு வியப்பாகவே உள்ளது.
இது குறித்து துஹ்பதுல் அஹ்வதி எனும் நூலில் (பாகம்: 3, பக்கம்: 438) பின்வரும் தகவல் திரட்டித் தரப்பட்டுள்ளது.
ஆதாரமற்ற பல்வேறு எண்ணிக்கைகள்
வித்ரையும் சேர்த்து 41 ரக்அத்கள் என்று சில அறிஞர்கள் கருதியுள்ளனர். இது பற்றி ஆதாரப்பூர்வமான, பலவீனமான ஒரு ஹதீஸைக் கூட நான் காணவில்லை. அபூ ஹலீமா என்பவர் மக்களுக்கு ரமளான் மாதத்தில் 41 ரக்அத்கள் தொழ வைத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்வத் பின் யஸீத் என்பார் நாற்பது ரக்அத்களும் வித்ரு ஏழு ரக்அத்களும் தொழ வைப்பார். மதீனாவாசிகள் இதைச் செயல்படுத்தியுள்ளனர்.
‘மக்கள் 38 ரக்அத்கள் தொழ வேண்டும். பின்னர் இமாமும் மக்களும் ஸலாம் கொடுத்து விட்டு ஒரு ரக்அத் வித்ரு தொழ வேண்டும். ஹிஜ்ரி 100 முதல் இன்று வரை மதீனாவாசிகளின் நடைமுறை இவ்வாறே இருந்து வருகிறது. இதையே நான் விரும்புகிறேன்’ என்று மாலிக் இமாம் கூறுகிறார்.
‘மூன்று ரக்அத் வித்ருடன் மக்கள் 39 ரக்அத்கள் தொழுததை நான் பார்த்துள்ளேன்’ என்று நாபிவு கூறுகிறார்.
ஸராரா பின் அவ்ஃபா என்பார் கடைசிப் பத்து நாட்களில் 34 ரக்அத்கள் தொழுவித்தார். முதல் 20 நாட்களில் 28 ரக்அத்கள் தொழுதார்.
24 ரக்அத்கள் என்று யஸீத் பின் ஜுபைர் கூறுகிறார்.
இரவுத் தொழுகை ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு பகுதியிலும் பல்வேறு எண்ணிக்கையில் தொழப்பட்டு வந்தன. மேற்கூறப்பட்ட எதுவுமே நபிவழியை ஆதாரமாகக் கொண்டதல்ல.
20 ரக்அத்கள் பற்றிய ஆய்வு
இரவுத் தொழுகை 20 ரக்அத்கள் என்பதை ஹனபி மத்ஹபைச் சேர்ந்த பெரும்பாலான அறிஞர்கள் ஏற்றுக் கொண்டதால் நமது நாட்டிலும் பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளிலும் 20 ரக்அத்கள் என்பது வழக்கத்துக்கு வந்து விட்டது.
இரவுத் தொழுகை 20 ரக்அத்கள் என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல்லோ, செயலோ, அங்கீகாரமோ ஆதாரமாக உள்ளதா என்பதை முதலில் ஆராய்வோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வித்ரைத் தவிர 20 ரக்அத்களை ரமளானில் தொழுபவர்களாக இருந்தனர் என்ற கருத்தில் கீழ்க்காணும் சில ஹதீஸ்கள் காணப்படுகின்றன.
நூல்: அல்முஃஜமுல் கபீர்-12102 (10/86), பைஹகீ 2/496, தப்ரானியின் அவ்ஸத் 2/309, தப்ரானியின் அவ்ஸத் 12/176, முஸன்னப் இப்னு அபீஷைபா 2/286, முஸ்னத் அப்து பின் ஹமீத் 2/271
மேற்கண்ட ஆறு அறிவிப்புகளையும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாக அறிவிக்கும் அடுத்த அறிவிப்பாளர் மிக்ஸம் என்பார்.
மிக்ஸம் கூறியதாக அறிவிக்கும் அடுத்த அறிவிப்பாளர் ஹகம் என்பார்.
ஹகம் கூறியதாக அறிவிக்கும் அடுத்த அறிவிப்பாளர் உஸ்மானின் மகன் இப்றாஹீம் ஆவார்.
இவர் அபூஷைபா என்றும் கூறப்படுவார்.
மேற்கண்ட அனைத்து நூல்களிலும் ஹகம் என்பார் கூறியதாக இவர் (அபூஷைபா) தான் அறிவிக்கிறார்.
ஹதீஸ் கலை அறிஞர்கள் இவரைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
ஹாபிழ் ஸைலயீ அவர்கள் தமது நஸ்புர் ராயா என்ற நூலில் ‘உஸ்மானின் மகன் இப்றாஹீம் என்பார் பலவீனமானவர் என்று அறிஞர்கள் ஏகமனதாக முடிவு செய்துள்ளனர்; இப்னு அதி அவர்கள் தமது அல்காமில் என்ற நூலில் இவரைப் பலவீனமானவர் என்று அறிவித்துள்ளார்’ என்று குறிப்பிடுகிறார்.
இந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ள இமாம் பைஹகீ அவர்கள் இந்த ஹதீஸைத் தொடர்ந்து, ‘அபூஷைபா எனப்படும் இப்றாஹீம் பின் உஸ்மான் என்பவர் மட்டுமே இதைத் தனித்து அறிவிக்கிறார்; இவர் பலவீனமானவர்’ என்று குறிப்பிடுகிறார்.
இவரைப் பற்றி அறிஞர்கள் செய்த விமர்சனத்தை ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் பின்வருமாறு தொகுத்துக் கூறுகிறார்.
இமாம் அஹ்மத் பின் ஹம்பல், யஹ்யா பின் மயீன், அபூதாவூத் ஆகியோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். இவர் நம்பகமானவர் அல்ல என்றும் யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார். இவரைப் பற்றி யாரும் பேசுவதே இல்லை என்று புகாரி கூறுகிறார். இவர் நிராகரிக்கப்படும் ஹதீஸ்களை அறிவிப்பவர் என்று திர்மிதி கூறுகிறார். பொய் சொல்பவர் என்று சந்தேகிக்கப்படுவதால் இவரை விட்டு விட வேண்டும் என்று நஸாயீ, தவ்லாபி கூறுகின்றனர். இவர் பலவீனமானவர். இவரைப் பற்றி யாரும் பேசுவதில்லை. இவருடைய ஹதீஸை விட்டு விட்டனர் என்று அபூஹாத்தம் கூறுகிறார். இவர் மதிக்கப்பட வேண்டியவர் அல்ல என்று ஜவ்ஸஜானி கூறுகிறார். இவரது ஹதீஸ்களைப் பதிவு செய்யக் கூடாது என்று ஸாலிஹ் ஜஸ்ரா கூறுகிறார். இவர் ஹகம் என்பவர் வழியாக நிராகரிக்கத்தக்க பல ஹதீஸ்களை அறிவித்துள்ளார் எனவும் ஸாலிஹ் ஜஸ்ரா கூறுகிறார். இவர் பலமானவர் அல்ல என்று அபூ அலீ நைஸாபூரி கூறுகிறார். ஷுஃபா அவர்களின் பலவீனமான ஆசிரியர்களில் இவரும் ஒருவர் என்று அல்அஹ்வஸ் கூறுகிறார்.
நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 1, பக்கம்: 125
இவரைப் பற்றி ஒரு அறிஞர் கூட நல்ல அபிப்பிராயம் கொள்ளவில்லை. பொய்யர் என்றும் பலவீனர் என்றும் சந்தேகிக்கப்பட்ட இவர் வழியாக மட்டுமே இச்செய்தி அறிவிக்கப்படுவதால் 20 ரக்அத் தொழ வேண்டும் என்ற கருத்துடையவர்கள் கூட இந்த ஹதீஸ் பலவீனமானது என்பதை ஒப்புக் கொள்கின்றனர்.
தராவீஹ் 20 ரக்அத்களா? என்ற நூலில் ஜமாஅத்துல் உலமாவின் மூத்த தலைவரான நிஜாமுத்தீன் மன்பயீ பின்வருமாறு எழுதுகிறார்.
நபியவர்கள் இருபது தொழுதுள்ளார்களா?
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலான் மாதத்தில் இருபது ரக்அத்களும் வித்ரும் தொழுபவர்களாக இருந்துள்ளார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அப்துப்னு ஹுமைத் (ரஹ்) அவர்கள் தங்களுடைய முஸ்னதிலும், பஃகவீ (ரஹ்) அவர்கள் தங்களுடைய முஃஜமிலும், தப்ரானீ (ரஹ்) அவர்கள் கபீரிலும், பைஹகீ (ரஹ்) அவர்கள் தங்களுடைய சுனனிலும் அறிவித்துள்ளார்கள். அனைவரும் இப்னு அபீஷைபா (ரஹ்) அவர்களின் வழியாகவே இதனை அறிவித்துள்ளனர். ஆனால் இதனுடைய அறிவிப்பாளர்களில் இப்றாஹீம் என்பவர் பலவீனமான அறிவிப்பாளர் என்று கூறப்பட்டுள்ளது.
எனவே இந்த ஹதீஸ் பலவீனமான அறிவிப்புத் தொடருள்ளதாக இருப்பதால், முஹத்திஸீன்களுடைய அளவுகோள்படியுள்ள ஆதாரப்பூர்வமான முறையில் தராவீஹ் தொழுகை இருபது ரக்அத்கள் என்பது உறுதிப்படுத்தப்படவில்லையானாலும் உமர் (ரலி) அவர்களின் நடைமுறையைக் கொண்டு அது தரிபடுத்தப்பட்டு ஏனைய ஸஹாபாக்கள் அனைவரும் மறுப்பேதும் தெரிவிக்காமல் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
(நன்றி : நிஜாமுத்தீன் மன்பஈ எழுதிய ‘தராவீஹ் 20 ரக்அத்களா?’ என்ற நூல், பக்கம் 69, 70)
ரமளான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருபது ரக்அத்துகள் தொழுதார்கள் என்ற கருத்தில் இடம் பெறும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்பதை இதன் மூலம் சந்தேகத்துக்கிடமின்றி அறிந்து கொள்ளலாம். ஆனால் நபியவர்கள் எட்டு ரக்அத் தொழுகை நடத்தியதாக வலுவான அறிவிப்புகள் உள்ளன.
ரமளான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எட்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். பின்னர் வித்ரு தொழுதார்கள். மறு நாள் இரவு நாங்கள் பள்ளி வாசலில் கூடினோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்து எங்களுக்குத் தொழுகை நடத்துவார்கள் என்று எதிர்பார்த்து சுப்ஹு வரை காத்திருந்தோம். (சுப்ஹுக்கு வந்த) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் வந்து தொழ வைப்பீர்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்’ என்று கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘உங்கள் மீது வித்ரு கடமையாக்கப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சி விட்டேன்’ என்று விளக்கமளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்கள்: முஸ்னத் அபீயஃலா-1802 (4/370) ,(இப்னு ஹிப்பான்: 10)/301, தப்ரானியின் ஸகீர் 2/127,
ஜாபிர் (ரலி) கூறியதாக இதை அறிவிக்கும் ஈஸா பின் ஜாரியா என்பவர் பற்றி சிலர் குறை கூறியுள்ளனர். சிலர் உயர்வாகக் கூறியுள்ளனர். தஹபீ அவர்கள் இது நடுத்தரமான தரத்தில் அமைந்தது என்கிறார். ஆய்வு செய்வதில் வல்லவரான தஹபீ கூறுவது தான் சரியானது என்று இப்னு ஹஜர் வழிமொழிகிறார்.
நம்மைப் பொறுத்த வரை இது போன்ற தரத்தில் உள்ளதை ஆதாரமாகக் கொள்வதில்லை. ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 20 ரக்அத்கள் தொழ வைத்தார்கள் என்ற ஹதீஸை விட இது எத்தனையோ மடங்கு தரத்தில் உயர்ந்தது என்பதற்காகவே இங்கே இதைச் சுட்டிக் காட்டுகிறோம்.
உபை பின் கஅபு அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! ரமளான் மாதத்தின் நேற்றைய இரவில் எனக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டு விட்டது’ என்றார். ‘என்ன பிரச்சனை?’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். அதற்கவர், ‘நாங்கள் குர்ஆன் ஓதத் தெரியாதவர்களாக இருக்கிறோம்; எனவே உங்களைப் பின்பற்றி நாங்கள் தொழுகிறோம்’ என்று என் வீட்டில் உள்ள பெண்கள் கேட்டனர். அவர்களுக்கு எட்டு ரக்அத்கள் தொழுவித்து, பின்னர் வித்ரும் தொழுவித்தேன்’ என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த மறுப்பும் கூறாமல் மறைமுகமாகச் சம்மதம் தெரிவித்தனர்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்னத் அபீயஃலா-1801 (3/336)
இதையும் ஈஸா பின் ஜாரியாவே அறிவிக்கிறார். இதுவும் நடுத்தரமான தரத்தில் உள்ள ஹதீஸ் தான்.
ரமளானில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 20 ரக்அத்கள் தொழுதார்கள் என்ற கருத்திலமைந்த ஹதீஸ் அளவுக்கு இது பலவீனமானதல்ல என்பதற்காக இதை இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை குறித்து இத்தலைப்பின் துவக்கத்தில் நாம் எடுத்துக் காட்டிய ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் நமக்குப் போதுமானதாகும்.
ரமளானிலோ, ரமளான் அல்லாத மாதங்களிலோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 20 ரக்அத்கள் தொழுததாக ஆதாரப்பூர்வமான ஒரு செய்தியும் இல்லை எனும் போது அதை விட்டொழித்து, நபிவழியைப் பேண வேண்டாமா? என்பதை முஸ்லிம்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.