15) குழந்தைகளுக்கு மத்தியில் நீதமாக நடக்க வேண்டும்
குழந்தைகளுக்கிடையில் நீதமாக நடப்பது பெற்றோரின் மீது கடமை. பல குழந்தைகள் இருக்கும் போது ஒருவருரை மட்டும் நன்கு கவனிப்பதும் கேட்பதையெல்லாம் ஒருவருக்கு மட்டும் வாங்கித் தருவதும் ஒருவரிடத்தில் மட்டும் பாசத்தை வெளிப்படுத்துவதும் குற்றமாகும். இதனால் பிஞ்சு மனம் கடுமையான நோவினைக்குள்ளாகும்.
நீ தான் எனக்குப் பிடித்தவன். நீ தான் அறிவாளி. அவன் முட்டாள் என்பதைப் போன்ற ஏற்றத்தாழ்வுகளை காட்டும் வார்த்தைகளை குழந்தைகளிடத்தில் விதைப்பது அநியாயம். இதை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.
நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டு, “என் தந்தை அன்பளிப்பு ஒன்றை எனக்குக் கொடுத்தார். என் தாயார் அம்ரா பின்த்து ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம், “நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதரை சாட்சியாக ஆக்காதவரை நான் இதை ஒப்புக் கொள்ள மாட்டேன்” என்று கூறினார்கள். என் தந்தை அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! நான் அம்ரா பின்த்து ரவாஹாவின் வாயிலாக, எனக்குப் பிறந்த என் மகனுக்கு அன்பளிப்பு ஒன்றைக் கொடுத்தேன்; அவள் (என் மனைவி) தங்களை சாட்சியாக ஆக்கும் படி எனக்குக் கட்டளையிட்டாள்” என்று கூறினார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்கள் மற்ற பிள்ளைகளுக்கும் இதே போன்று கொடுத்துள்ளீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு என் தந்தை, “இல்லை” என்று பதிலளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறெனில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் பிள்ளைகளிடையே நீதி செலுத்துங்கள்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட என் தந்தை உடனே திரும்பி வந்து, தனது அன்பளிப்பை ரத்து செய்தார்.
அறி : ஆமிர் பின் ஷர்ஹபீல் (ரஹ்),
நூல் : புகாரி (2587)
நபி (ஸல்) அவர்கள், “என்னை அக்கிரமத்துக்கு சாட்சியாக்காதீர்கள்” என்று கூறினார்கள் என்று புகாரி (2650) வது செய்தியில் உள்ளது.