13) பிள்ளைகளை கொஞ்ச வேண்டும்
பெற்றொரின் பாசம் கிடைக்காத குழந்தைகள் சந்தோஷமில்லாமல் அமைதியற்ற நிலைக்கு ஆளாகுகிறார்கள். எனவே குழந்தைகளின் மீது பெற்றோர்கள் கட்டாயம் பாசத்தை பொழிய வேண்டும். குழந்தைகளை தூக்கிக் கொஞ்சுதல் கட்டியணைத்தல் முத்தமிடுதல் போன்றவைகள் மூலம் பாசத்தை வெளிப்படுத்தலாம்.
ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகின்றீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லை” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பைக் கழற்றி விட்ட பின்னர் உமக்காக நான் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார்கள்.
அறி : ஆயிஷா (ரலி),
நூல் : புகாரி (5998)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் பேரரான) ஹசன் பின் அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்த அக்ரஉ
பின் ஹாபிஸ் அத்தமீமீ (ரலி) அவர்கள், “எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கின்றார்கள். அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை” என்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்படமாட்டார்” என்று கூறினார்கள்.
அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி (5997)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிறுவனாக இருந்த) என்னைப் பிடித்துத் தமது ஒரு தொடையின் மீதும் (தம் சொந்தப் பேரரான) ஹசன் பின் அலீ (ரலி) அவர்களைப் பிடித்து தமது இன்னொரு தொடையின் மீதும் அமர்த்திக்கொண்டு பிறகு எங்கள் இருவரையும் கட்டியணைத்தவாறு, “இறைவா! இவர்கள் இருவர் மீதும் நான் அன்பு செலுத்துகிறேன். நீயும் இவர்கள் மீது அன்பு செலுத்துவாயாக!” என்றார்கள்.
அறி : உஸாமா பின் ஸைத் (ரலி),
நூல் : புகாரி (6003)