09) முடியின் எடைக்கு நிகராக வெள்ளியை தர்மம் செய்ய வேண்டுமா?

நூல்கள்: இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு

பிறந்த குழந்தையின் முடியை எடுத்து அதன் எடைக்கு நிகரான வெள்ளியை தர்மம் செய்வது நபிவழி என்று சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு சில ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டுகிறார்கள். ஆனால் அவை அனைத்தும் பலவீனமான செய்தியாக உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களுக்கு ஓரு ஆட்டை அகீகாவாக கொடுத்தார்கள். (தனது மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களை நோக்கி) ஃபாத்திமாவே அவருடைய (ஹசன்) தலையை மளித்து அவரது முடியின் எடைக்கு நிகராக வெள்ளியை தர்மம் செய்வீராக என்று கூறினார்கள். எனவே நான் அதை நிறுத்துப்பார்த்தேன். அதனுடைய எடை ஒரு திர்ஹம் அல்லது சில திர்ஹம்களின் எடையாக இருந்தது.

அறிவிப்பவர்: அலீ (ரலி),

நூல்: திர்மிதி (1439)

இந்த ஹதீஸை பதிவுசெய்த இமாம் திர்மிதி அவர்களே இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் அறுந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் இதனுடைய அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் பின் அலீ என்பவர், அலீ (ரலி) அவர்களை சந்திக்கவில்லை. இந்த வகையில் இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதேக் கருத்தில் 25930 வது ஹதீஸாக அஹ்மதில் ஒரு அறிவிப்பு உள்ளது. இதில் இடம்பெறுகின்ற அப்துல்லாஹ் பின் முஹம்மத் பலவீனமானவர் ஆவார்.

மேலும் இக்கருத்தில் ஹாகிம் இமாம் தொகுத்த முஸ்தத்ரக் என்ற நூலில் ஒரு ஹதீஸ் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது நம்பத்தகுந்த நபிமொழி இல்லை என்று இமாம் தஹபி அவர்கள் கூறியுள்ளார்கள்.

அதுமட்டுமின்றி இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களின் ஒருவரான அலீ பின் ஹுஸைன் அவர்கள், அலீ (ரலி) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை அறிவிக்கிறார்.. ஆனால் அலி பின் ஹுஸைன் பிறந்த இரண்டு வருடத்தில் அலீ (ரலி) அவர்கள் மரணித்துவிட்டார்கள். எனவே இது அறிவிப்பாளர்தொடர் இடைமுறிந்த செய்தியாகும்.

இது தொடர்பாக வரும் அனைத்துச் செய்திகளும் ஆதாரமற்றவையாக இருப்பதால் இதை செயல்படுத்த வேண்டியதில்லை.