12) பெயர் சூட்டுதல்
பெயர் சூட்டுதல்
குழந்தை பிறந்தவுடன் அடுத்ததாக அக்குழந்தைக்கு ஒரு நல்லப் பெயர் சூட்ட வேண்டும் என்று நாம் ஆசைப்படுகின்றோம். அந்தப் பெயருக்கு ஏற்றார் போல் அக்குழந்தைத் திகழ வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்குப் பெயர் சூட்டுகிறோம். பலர் தங்களுடைய குழந்தைகளுக்கு அழகிய பெயர்களை வைத்தாலும் சிலர் மோசமானப் பெயர்ளை சூட்டிவிடுகிறார்கள்.
இதனால் எந்த பாதிப்பும் பிற்காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படாது என்று நினைக்கின்றார்கள். உதாரணமாக மைதீன் பிச்சை, சீனி, பக்கீர், நாகூரா, ஆத்தங்கரையா, காட்டுபாவா போன்ற விகாரமானப் பெயர்களை வைக்கின்றார்கள். இன்னும் பொருள் தெரியாத பல பெயர்களையும் சூட்டுகிறார்கள்.
இது போன்றப் பெயர்களை சூட்டப்பட்டவர்கள் பள்ளிக் கல்வியை கற்கும் போது சக நண்பர்களால் கேலி செய்யப்படுகிறார்கள். பிறரிடத்தில் தன்னை அறிமுகம் செய்யும் நேரத்தில் தன் பெயரைக் கூற வெட்கப்படுகிறார்கள். தன் பெயரைக் கூறி யாராவது அழைத்தால் அவர்களுக்குள்ளே ஒரு கூச்சம் தோன்றுகிறது.
அப்பெயரை மாற்றுவதற்கான முழு முயற்சியில் ஈடுபடுகின்றார்கள். இதற்காக அதிகமாக பொருட் செலவும் உடல் உழைப்பும் செய்ய நேரிட்டாலும் சகித்துக் கொண்டு பெயரை மாற்றிக் கொள்கிறார்கள்.
இன்னும் பலர் தங்கள் பகுதியில் அல்லது தான் அறிந்த வகையில் யாரும் வைக்காத பெயரை குழந்தைக்கு வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு பெயரின் ஓசைக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். ஆனால் அதன் பொருளை கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். இது விரும்பத்தக்கது அல்ல.
சிறந்த பெயர்களை வைப்போம்
பொதுவாக எல்லா விஷயங்களையும் அழகுற செய்ய வேண்டும். இந்த விதியை அவசியம் பெயர் சூட்டும் போது கவனிக்க வேண்டும். ஏனென்றால் அழகானதையே அல்லாஹ் விரும்புகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நிச்சயமாக அல்லாஹ் அழகானவன். அவன் அழகையே விரும்புகிறான்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),
நூல்: முஸ்லிம் (147)
அல்லாஹ்வின் பெயருடன் அப்து (அடிமை) என்ற வார்த்தையை சேர்த்து பெயர் வைப்பது அல்லாஹ்விற்கு மிக விருப்பமானதாகும்.
உங்கள் பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) மற்றும் அப்துர் ரஹ்மான் (அருளாளனின் அடிமை) ஆகியவையாகும்.
அறி: இப்னு உமர் (ரலி),
நூல்: முஸ்லிம் (4320)
மறுமை நாளில் உங்களுடைய தந்தையின் பெயருடன் உங்ளது பெயரால் நீங்கள் அழைக்கப்படுவீர்கள். ஆகையால் உங்களது பெயர்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி: அபூதர்தா (ரலி),
நூல்: அஹ்மத் (20704)
நபி (ஸல்) அவர்கள் எதற்கும் சகுணம் பார்த்ததில்லை. (வரிவாங்குவதற்கு) அதிகாரியை அவர்கள் அனுப்பும் போது அவருடையப் பெயரைப் பற்றிக் கேட்பார்கள். அவருடையப் பெயர் அவர்களுக்குப் பிடித்திருந்தால் சந்தோஷம் அடைவார்கள். அவர்களுடைய முகத்தில் அதனால் மகிழ்ச்சி தென்படும்.
அவருடைய பெயரை அவர்கள் வெறுத்தால் அதன் வெறுப்பு அவர்களது முகத்தில் தென்படும். அவர்கள் ஒரு ஊருக்குச் சென்றால் அதன் பெயரைப் பற்றி விசாரிப்பார்கள். அதன் பெயர் அவர்களுக்குப் பிடித்திருந்தால் அதனால் சந்தோஷம் அடைவார்கள். அதனால் அவர்களுடைய முகத்தில் மகிழ்ச்சி தென்படும். அதன் பெயரை அவர்கள் வெறுத்தால் அதன் வெறுப்பு அவர்களின் முகத்தில் தென்படும்.
அறி: புரைதா (ரலி),
நூல்: அபூதாவூத் (3419)
மேற்கண்ட ஹதீஸ்கள் அனைத்தும் நல்லப் பெயர்களை வைக்க வேண்டும் என்று கூறுகின்றது.
நபிமார்களின் பெயர்களை வைக்கலாம்
எனக்கு ஆண் குழந்தையொன்று பிறந்தது. அக்குழந்தையை நான் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றேன். நபி (ஸல்) அவர்கள் அக்குழந்தைக்கு “இப்ராஹீம்’எனப் பெயர் சூட்டிப் பேரீச்சம் பழத்தை மென்று குழந்தையின் வாயில் அதைத் தடவினார்கள்.
அறி: அபூமூஸா (ரலி),
நூல்: முஸ்லிம் (4342)
நபி (ஸல்) அவர்கள் எனக்கு யூசுஃப் என்று பெயர் வைத்துவிட்டு எனது தலையை தடவிக்கொடுத்தார்கள்.
அறி: யூசுஃப் (ரலி),
நூல்: அஹ்மத் (15809)
பெயரில் இணைவைப்பு இருக்கக்கூடாது
அல்லாஹ்வுடைய தன்மையைக் குறிக்கும் பெயர்களை சூட்டுவது கூடாது. இன்று வழக்கில் ஷா ஆலம் (பிரபஞ்சத்தின் அரசன்) ஜஹாங்கீர் (உலகை வெற்றி கொண்டவன்) ஷாஜஹான் (உலகின் அரசன்) ஷாகுல் ஹமீது புகழுக்குரியவனின் அரசன் ஆகிய பெயர்கள் சூட்டப்டுகின்றன. இவற்றில் இணைவைப்பு கலந்திருப்பதால் இப்பெயர்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
பெயர் சூட்டும் போது அதன் பொருளில் இணைவைப்பு ஏதேனும் தென்படுகிறதா என்று கவனித்து சூட்ட வேண்டும். இதை பின்வரும் ஹதீஸ்களிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்.
மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் மிக வெறுப்பிற்குரிய பெயரைக் கொண்டவன் மலிகுல் அம்லாக் (அரசர்களுக்கெல்லாம் அரசன்) என்ற பெயருடையவனாவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி (6205)
மக்கள் ஹானிஃ (என்ற நபித்தோழரை) அபுல் ஹகம் (ஞானத்தின் தந்தை) என்று குறிப்புப் பெயரால் அழைத்தார்கள். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வருகை தந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை அழைத்து அல்லாஹ்வே ஞானமிக்கவன். அவனிடமே சட்டமியற்றும் அதிகாரம் உள்ளது. அவ்வாறிருக்க நீர் ஏன் ஞானமிக்கவன் எனக் குறிப்புப் பெயர்வைக்கப்பட்டுள்ளீர் என்று அவரிடம் கேட்டார்கள். அதற்கு அவர் என்னுடைய சமுதாயம் ஏதேனும் ஒரு விஷயத்தில் பிணங்கிக் கொண்டால் என்னிடம் (தீர்ப்பு கேட்டு) வருவார்கள். அவர்களுக்கு (நல்ல) தீர்ப்பை வழங்குவேன். இரு கூட்டத்தாரும் (அதில்) திருப்தி அடைந்துகொள்வார்கள். (ஆகையால் இப்பெயரை எனது சமுதாயம் எனக்கு வைத்தது) என்று அவர் கூறினார்.
நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தீர்ப்புவழங்குவது எவ்வளவு சிறந்தது என்று கூறிவிட்டு உமக்கு எத்தனை குழந்தைகள் உள்ளனர் என்று கேட்டார்கள். அவர் ஷுரைஹ், அப்துல்லாஹ், முஸ்லிம் ஆகியோர் உள்ளனர் என்று கூறினார். இவர்களில் மூத்தவர் யார் என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டதற்கு ஷுரைஹ் என்று கூறினார். அப்படியானால் நீர் அபூஷரைஹ் (ஷுரைஹின் தந்தை) ஆகும் எனக் கூறிவிட்டு அவருக்காகவும், அவரது குழந்தைக்காகவும் பிரார்த்தனை புரிந்தார்கள்.
அறி: ஹானிஃ (ரலி),
நூல்: நஸயீ (5292)
அறியாமைக் காலத்தில் என்னுடையத் தந்தையின் பெயர் அஸீஸ் (மிகைத்தவர்) என்று இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு அப்துர் ரஹ்மான (அளவற்ற அருளாளனின் அடிமை) என்று (மாற்றி) பெயர்வைத்தார்கள்.
அறி : அப்துர் ரஹ்மான் (ரலி),
நூல் : அஹ்மத் (16944)
கெட்டவர்களின் பெயரை சூட்டக்கூடாது
நபி (ஸல்) அவர்களின் மனைவியான உம்முசலமாவின் சகோதரனுக்கு ஒரு ஆண்குழந்தைப் பிறந்தது. அவர்கள் (உம்முசலமாவின் குடும்பத்தார்கள்) அக்குழந்தைக்கு வலீத் என்று பெயர் வைத்தார்கள். (இதை அறிந்தவுடன்) நபி (ஸல்) அவர்கள் எகிப்து நாட்டு மன்னர்களின் பெயர்களையா அதற்கு வைத்தீர்கள்? இந்த சமுதாயத்தில் ஒரு மனிதன் தோன்றுவான். அவனுக்கு வலீத் என்று சொல்லப்படும். ஃபிர்அவன் அவனது சமுதாயத்திற்கு தீங்கிழைத்ததை விட அவன் இந்த சமுதாயத்திற்கு அதிகம் தீங்கிழைப்பான் என்று கூறினார்கள்.
அறி : உமர் பின் ஹத்தாப் (ரலி),
நூல் : அஹ்மத் (104)
தீயவர்களின் பெயர்களை சூட்டுவதை நபி (ஸல்) அவர்கள் வெறுத்துள்ளார்கள் என்பதை மேலுள்ள ஹதீஸின் மூலம் விளங்கிக்கொள்ள முடிகிறது.
குறிப்பிட்ட சில பெயர்களை சூட்டக்கூடாது
சில பெயர்களை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக் கூறி அவற்றை சூட்டக்கூடாது என்று கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் அடிமைகளுக்கு அஃப்லஹ் (வெற்றியாளன்), ரபாஹ் (இலாபம்), யசார் (சுலபம்), மற்றும் நாஃபிஉ (பயனளிப்பவன்) ஆகிய நான்கு பெயர்களைச் சூட்ட வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள்.
அறி : சமுரா பின் ஜ‚ன்தப் (ரலி),
நூல் : முஸ்லிம் (4328)
எங்களில் ஓருவருக்கு ஆண்குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அவர் காசிம் என்று பெயர் சூட்டினார். நாங்கள் (அவரிடம்) உம்மை நாங்கள் அபுல்காசிம் (காசிமின் தந்தை) என குறிப்புப் பெயரால் அழைத்து மேன்மைப்படுத்திடமாட்டோம். (நபியவர்களுக்கு அபுல்காசிம் என பெயர் இருப்பதே இதற்குக் காரணம்) என்று சொன்னோம். ஆகவே அவர் நபி (ஸல்) அவர்களிடம் (சென்று இதைத்) தெரிவித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் உமது மகனுக்கு அப்துர் ரஹ்மான் என பெயர் சூட்டுக என்று கூறினார்கள்.
அறி : ஜாபிர் (ரலி),
நூல் : புகாரி (6186)
அன்சாரிகளில் ஒருவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு “முஹம்மத்’என்று பெயர் சூட்ட அவர் விரும்பினார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அதைப் பற்றிக் கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அன்சாரிகள் செய்தது நன்றே. என் பெயரைச் சூட்டிக்கொள்ளுங்கள். என் குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள்” என்று கூறினார்கள்.
அறி : அனஸ் (ரலி),
நூல் : முஸ்லிம் (4324)
மேலுள்ள இரண்டு ஹதீஸ்களும் நபி (ஸல்) அவர்களின் குறிப்புப் பெயரான அபுல்காசிம் என்றப் பெயரை யாரும் சூட்டக் கூடாது என்று அறிவிக்கின்றது.
பெயர் மாற்றம் செய்யலாம்
மோசமான அர்த்தங்களைக் கொண்டப் பெயர்களை சூட்டக்கூடாது. பெற்றோர்கள் அறியாமையினால் சூட்டிவிட்டால் அப்பெயர்களை மாற்றிவிட்டு நல்ல அர்த்தங்களைக் கொண்ட பெயர்களை வைத்துக்கொள்ளலாம்.
முஸய்யப் (ரலி) அவர்களின் தந்தை நபி (ஸல்) அவர்களிடத்தில் வந்த போது நபி (ஸல்) அவர்கள் உங்களது பெயர் என்ன என்று வினவினார்கள். அதற்கு அவர் ஹஸ்ன் (முரடு) என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் (இனிமேல் உமது பெயர்) சஹ்ல் (இலகு) ஆகும் என்று கூறினார்கள். அதற்கு அவர் எனது தந்தை எனக்கு இட்டப் பெயரை நான் மாற்றமாட்டேன் என்று கூறிவிட்டார். (இந்த ஹதீஸை அறிவிக்கும் முஸைய்யப் அவர்கள் கூறுகிறார்கள்.) இதன் பின்னர் எங்களிடம் (குணநலன்களில்) முரட்டுத்தன்மை தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது.
அறி : முஸைய்யப் (ரலி),
நூல் : புகாரி (6190)
ஸைனப் (ரலி) அவர்களுக்கு (முதலில்) பர்ரா (நல்லவள்) என்ற பெயர் இருந்தது. அப்போது “அவர் தம்மைத் தாமே பரிசுத்தப் படுத்திக்கொள்கிறார்” என்று (மக்களால்) சொல்லப்பட்டது. ஆகவே, அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஸைனப்’என்று பெயர் சூட்டினார்கள்.
அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி (6192)
நபி (ஸல்) அவர்கள் ஆசியாவின் (மாறுசெய்பவள்) பெயரை மாற்றி (அவரிடம்) நீ ஜமீலாவாகும் (அழகானவள்) என்று கூறினார்கள்.
அறி : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),
நூல் : அபூதாவூத் (4301)
ஆஸியா (عَاصِيَة) என்பதின் பொருள் மாறுசெய்பவள் என்பதாகும். இதில் முதலாவது எழுத்தாக அய்னும் இரண்டாவது எழுத்தாக ஸாதும் இடம்பெற்றுள்ளது. இந்தப் பெயரை வைப்பது கூடாது.
ஆசியா (آسٍيَة) என்பதின் பொருள் பின்பற்றுபவள் என்பதாகும். இதில் முதலாவதாக அலிஃபும் இரண்டாவதாக சீனும் இடம்பெற்றுள்ளது. இப்பெயரை வைப்பதற்கு தடையில்லை.
அஸ்ரம் என்று சொல்லப்பட்ட ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வருகை தந்த நபர்களில் ஒருவராக இருந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் உம் பெயர் என்ன என்று வினவினார்கள். (அதற்கு) அவர் என் பெயர் அஸ்ரமாகும் (காய்ந்த செடிக் கொத்து) என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் மாறாக உன் பெயர் சுர்ஆவாகும் (மணிகள் கொண்ட பசுமையான செடிக்கொத்து) என்று (பெயர்மாற்றிக்) கூறினார்கள்.
அறி : உஸாமா பின் அஹ்தரீ (ரலி),
நூல் : அபூதாவூத் (4303)
பெயர் வைக்கும் காலம்
மர்யமே அல்லாஹ் தன் வார்த்தை பற்றி உமக்கு நற்செய்தி கூறுகின்றான். மர்யமின் மகனான ஈஸா என்னும் மஸீஹ் என்பது அவரது பெயர். இவ்வுலகிலும் மறுமையிலும் தகுதிமிக்கவராகவும் (இறைவனுக்கு) நெருக்கமானவராகவும் இருப்பார் என்று வானவர்கள் கூறியதை நினைவூட்டுவீராக.
ஸகரிய்யாவே ஓரு புதல்வன் பற்றி உமக்கு நாம் நற்செய்தி கூறுகிறோம். அவரது பெயர் யஹ்யா இப்பெயரிடப்பட்டவரை இவருக்கு முன் நாம் ஏற்படுத்தியதில்லை. (என இறைவன் கூறினான்.)
முதல் வசனத்தில் ஈஸா (அலை) அவர்கள் பிறக்கப் போவதை மர்யம் (அலை) அவர்களிடம் மலக்குமார்கள் கூறுகிறார்கள். அப்படி கூறும் போது ஈஸா என்றப் பெயரையும் சேர்த்து கூறுகிறார்கள். இரண்டாம் வசனத்தில் ஸகரிய்யா (அலை) அவர்களிடம் குழந்தை பிறக்கப் போவதாக அல்லாஹ் சுபச்செய்தி கூறுகின்றான். பிறக்கப் போகும் குழந்தைக்கு அல்லாஹ் யஹ்யா என்று பெயரும் சூட்டுகின்றான். குழந்தை பிறக்கும் முன்பே பெயர் சூட்டலாம் என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.
அவர் ஈன்றெடுத்த போது “என் இறைவா பெண் குழந்தையாக ஈன்றெடுத்துவிட்டேன் எனக் கூறினார். அவர் எதை ஈன்றெடுத்தார் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான்.“ஆண் பெண்ணைப் போன்றவன் அல்ல. நான் இவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன். விரட்டப்பட்ட ஷைய்தானை விட்டும் இவளுக்கும் இவளுடைய வழி தோன்றல்களுக்கும் உன் பாதுகாப்பை வேண்டுகிறேன் எனவும் அவர் கூறினார்.
குழந்தை பிறந்தப் பிறகும் பெயர் சூட்டலாம் என்பதை மேலுள்ள வசனத்திலிருந்து புரிந்துகொள்ளலாம்.
ஓவ்வொரு குழந்தையும் அகீகாவுடன் பிணைக்கப்பட்டுள்ளது. அது பிறந்த ஏழாம் நாளில் அதற்காக (ஆடு) அறுக்கப்படும். அதை விட்டு நோவினை (தலை முடி) அகற்றப்படும். அதற்கு பெயரும் வைக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி : சமுரா (ரலி),
நூல் : அஹ்மத் (19327)
இந்த ஹதீஸில் ஏழாவது நாள் குழந்தைக்குப் பெயர் வைக்கப்படும் என்று வந்துள்ளது. இதனடிப்படையில் குழந்தை பிறந்து ஏழாவது நாளும் பெயர் சூட்டலாம்.
ஆலிம்கள் தான் பெயர் வைக்க வேண்டுமா?
ஆலீம்கள்தான் குழந்தைக்குப் பெயர் வைக்க வேண்டும் என்று பலர் கருதுகிறார்கள். பெற்றோர்களே குழந்தைக்கு பெயர்வைக்க அதிக தகுதியானவர்கள்.
மர்யம் (அலை) அவர்களுக்கு அவர்களின் தாயார் தான் பெயர் வைத்தார்கள். ஆலிம்கள் தான் பெயர்சூட்ட வேண்டும் என்றிருந்தால் மர்யம் (அலை) அவர்களின் தாயார் அன்று பெரும் ஆலிமாகவும் நபியாகவும் விளங்கிய ஸகரிய்யா (அலை) அவர்களிடம் சென்று பெயர்வைக்கச் சொல்லியிருப்பார்கள். ஆனால் அவர்கள் சுயமாகவே தன் விருப்பப்படியே பெயர் த்தார்கள்.
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பிறந்த அனைத்துக் குழந்தைக்கும் பெருமானார் (ஸல்) அவர்கள் பெயரிடவில்லை. சஹாபாக்கள் தாங்களாகவே பெயர் சூட்டினார்கள். நபியவர்கள் இதைத் தடுக்கவில்லை.