1) முன்னுரை
பீ.ஜைனுல் ஆபிதீன்
தராவீஹ் தொழுகை என்று ஓர் தொழுகை இல்லை; நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமலானில் இருபது ரக் அத் தொழுததில்லை என்பதை தெளிவான சான்றுகளுடனும், இருபது ரக்அத்தை நியாயப்படுத்த எடுத்து வைக்கும் அனைத்து வாதங்களுக்கும் விரிவான மறுப்புடனும் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
கீழ்க்காணும் தலைப்புகளில் தராவீஹ் பற்றி முழுமையாக அலசும் நூல்.
தராவீஹ் என்ற சொல்லே இல்லை
தஹஜ்ஜத் வேறு, தராவீஹ் வேறு என்ற வாதம்
இரவுத் தொழுகையின் நேரம்
ரக்அத்களின் எண்ணிக்கை
4+5=9 ரக்அத்கள்
ஏழு அல்லது ஒன்பது ரக்அத்கள்
8+3 ரக்அத்கள்
வித்ரையும் சேர்த்து 11 ரக்அத்கள்
10 ரக்அத்கள் மட்டும் தொழுதல்
12 ரக்அத்துடன் வித்ரும் தொழுதல்
வித்ரையும் சேர்த்து 13 ரக்அத்கள்
5 ரக்அத் வித்ருடன் 13 ரக்அத்கள்
ஒரு ரக்அத் வித்ருடன் 11 ரக்அத்
வித்ரு தொழுகையின் ரக்அத்கள்
1, 3, 5 ரக்அத்கள்
7 ரக்அத்கள்
வித்ரு தொழும் முறை
நபிவழி மீறப்படுதல்
20 ரக்அத்கள் பற்றிய ஆய்வு
நபியவர்கள் இருபது தொழுதுள்ளார்களா?
20 ரக்அத்தும் நபித்தோழர்களும்
உமர் (ரலி) 20 ரக்அத் தொழுதார்களா?
அலீ (ரலி) அவர்கள் பெயரால்…
அதிகப்படுத்துவது தவறா?
உபரியான வணக்கம் என்பது என்ன?
மக்கா, மதீனாவில் நடக்கிறதே?
தொழுகையில் நிதானம்
முழுக் குர்ஆனையும் ஓதுதல்
நான்கு ரக்அத் முடிவில் தஸ்பீஹ்?
ஜமாஅத்தாகத் தொழுதல்
வீடுகளில் தொழுவதே சிறந்தது
இரண்டிரண்டா? நான்கு நான்கா?
இரவுத் தொழுகையைப் பிரித்துத் தொழுதல்
நிற்க இயலாத போது உட்கார்ந்து தொழலாம்
இரவுத் தொழுகை விடுபட்டால்..
இஸ்லாத்தின் பெயரால் நாம் எந்தக் காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் அக்காரியம் திருக்குர்ஆனிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் உள்ளபடி அமைந்திருக்க வேண்டும். திருக்குர்ஆனிலும் நபிவழியிலும் இல்லாத காரியங்கள் இஸ்லாத்தின் காரியங்களாக இருக்க முடியாது.
தொழுகை உள்ளிட்ட அனைத்து வணக்க முறைகளையும் நமக்குக் கற்றுத் தருவதற்காகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் அனுப்பினான். அவர்களும் தமது பணியில் எந்தக் குறைவும் வைக்காமல் முழுமையாக நமக்குச் சொல்த் தந்தார்கள். அவர்கள் உயிருடன் வாழும் போதே இம்மார்க்கத்தை இறைவன் முழுமைப்படுத்தி விட்டான்.
இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன்.
‘நமது கட்டளையில்லாமல் எந்தச் செயலையேனும் யாரேனும் செய்தால் அது நிராகரிக்கப்படும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு எச்சரிக்கை செய்துள்ளனர்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: (முஸ்லிம்: 3541) (3243)
எனவே நமது தொழுகை முறையும் நபிகள் நாயகம் (ஸல்) காட்டித் தந்த வழியில் மட்டுமே அமைய வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படித் தான் செய்தார்கள் என்பது தெளிவாகத் தெரியும் போது அதற்கு மாற்றமாக எவ்வளவு பெரிய மேதைகள், இமாம்கள் கூறினாலும் அவற்றை நாம் நிராகரித்து விட வேண்டும்.
மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி) தலைமையில் வெளியூர் இளைஞர்கள் இஸ்லாத்தை ஏற்க வந்தனர். அவர்களை 20 நாட்கள் தம்முடன் தங்க வைத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவ்விளைஞர்கள் திரும்பிச் செல்லும் போது,
‘என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்’ எனக் கூறி அனுப்பினார்கள்.
நூல்: (புகாரி: 631) , 6008, 7246
நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய வழியில் மட்டும் தான் நமது தொழுகை அமைந்திருக்க வேண்டும் என்பதை இதிருந்து அறியலாம்.