15) கடவுளுக்குத் துன்பமில்லை
‘கடவுளுக்கு எந்தத் துன்பமும் ஏற்பட முடியாது. மற்றவர்களின் துன்பங்களை அவர் நீக்கக் கூடியவராக இருக்க வேண்டும்’ எனவும் பைபிள் கடவுளுக்கு இலக்கணம் கூறுகிறது.
நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அனேகமாயிருக்கும். கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார். (சங்கீதம் 34:19)
இயேசு இந்த இலக்கணத்திற்கு மாறாகத் துன்பங்கள் பல அடைந்திருக்கிறார். அது மட்டுமின்றித் தம்மைத் துன்பங்களிலிருந்து காக்கும் படி கடவுளிடம் வேண்டுதலும் செய்திருக்கிறார்.
இப்பொழுது என் ஆத்மா கலங்குகிறது. நான் என்ன சொல்லுவேன். பிதாவே இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனா? ஆகிலும் இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன்.
(யோவான் 12:27)
சற்று அப்புறம் போய், முகங்குப்புற விழுந்து; என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னை விட்டு நீங்கக் கூடுமானால் நீங்கும் படிச் செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின் படியல்ல. உம்முடைய சித்தத்தின் படியே ஆகக் கடவது என்று ஜெபம் பண்ணினார். (மத்தேயு 26:39)
அப்பொழுது, அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள். சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து; (மத்தேயு 26:67)
அவரைக் கட்டி; கொண்டு போய், தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்துவினிடத்தில் ஒப்புக் கொடுத்தார்கள்.
(மத்தேயு 27:2)
அப்பொழுது அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும் படிக்கு ஒப்புக் கொடுத்தான். அப்பொழுது, அவன் பாபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்துச் சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக் கொடுத்தான். அப்பொழுது தேசாதிபதியின் போர்ச்சேவகர் இயேசுவைத் தேசாதிபதியின் அரண்மனையிலே கொண்டு போய், போர்ச்சேவகரின் கூட்டம் முழுவதையும் அவரிடத்தில் கூடிவரச் செய்து…
(மத்தேயு 27:26-27)
முள்ளுகளால் ஒரு முடியைப் பின்னி, அவர் சிரசின் மேல் வைத்து, அவர் வலது கையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு, யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியாசம் பண்ணி, அவர் மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைச் சிரசில் அடித்தார்கள். (மத்தேயு 27:29-30)
அவரைச் சிலுவையில் அறைந்த பின்பு, அவர்கள் சீட்டுப் போட்டு அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டுக் கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின் பேரில் சீட்டுப் போட்டார்கள் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும் படி இப்படி நடந்தது.
(மத்தேயு 27:35)
ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு; ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார். அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
(மத்தேயு 27:46)
இயேசு தமது வாழ்நாள் முழுவதும் பட்ட துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல என்பதை நான்கு சுவிசேஷங்களும் கூறுகின்றன. மேலே நாம் சுட்டிக்காட்டியவை அவரது வாழ்வில் கடைசியாக பட்ட துன்பங்கள் மட்டுமே. மிகவும் கேவலமான முறையில் இயேசு நடத்தப்பட்டிருக்கிறார்.
என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்? என்று புலம்பும் அளவுக்கு அவரால் தாங்கிக் கொள்ள முடியாத பெருந்துன்பத்தை அவர் அடைந்திருப்பதை இதிலிருந்து அறியலாம்.
கடவுள் என்பவர் எந்தத் துன்பத்தையும் அடையக் கூடாது. அடைய மாட்டார் என்று பைபிளே கடவுளுக்கு இலக்கணம் சொல்லும் போது அதை மீறி துன்பத்திற்கு ஆளானவரைக் கடவுள் எனக் கூறுவது தகுமா? கிறித்தவர்கள் இதையும் சிந்திக்க வேண்டும்.
இதிலிருந்து இயேசு கடவுளல்லர் என்பது தெளிவாகவில்லையா? பைபிள் கூறும் கடவுளுக்குரிய இலக்கணத்தைக் கூடக் கிறித்தவர்கள் நம்ப வேண்டாமா?