09) பரிசுத்த ஆவி நிறைந்திருப்பதால் கடவுளாக முடியுமா?
இயேசு பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார் என்பதால் இயேசு கடவுளாகவும் கடவுளின் குமாரராகவும் கடவுளின் அம்சம் பெற்றவராகவும் ஆகி விட்டார் என்பதும் கிறித்தவர்களின் வாதம்.
இயேசுவிடம் பரிசுத்த ஆவி நிறைந்திருந்ததால் அவரைக் கடவுள் நிலைக்கு உயர்த்தும் கிறித்தவர்கள் இன்னும் எத்தனையோ பேரிடம் பரிசுத்த ஆவி நிரம்பியிருந்ததாக பைபிள் கூறுவதை ஏன் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை?
இதோ பைபிள் கூறுவதைக் கேளுங்கள்!
இயேசுவுக்கு ஞானஸ்நானம் தந்து அவருக்கு குருவாகத் திகழ்ந்தவர் யோவான். அவரைக் குறித்து பைபிள் பின் வருமாறு கூறுகிறது.
அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான். திராட்சை ரசமும், மதுவும் குடியான். தன் தாயின் வயிற்றிலிருக்கும் போதே பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருப்பான்.
(லூக்கா 1:15)
அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்ட தீர்க்கதரிசனமாக… (லூக்கா 1:67)
இவ்விரு வசனங்களும் சகரியா அவரது மகன் யோவான் ஆகியோர் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்ததாகக் கூறுகின்றன. கிறித்தவர்கள் இவர்களைக் கடவுளர்களாக அல்லது கடவுளின் குமாரர்களாக நம்புவதில்லையே அது ஏன்?
எலிசபெத்து, மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்ட பொழுது அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று. எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு… (லூக்கா 1:41)
யோவானும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்
அவரது தந்தை சகரியாவும் ஆவியினால் நிரப்பப்பட்டவர்
அவரது தாய் எலிசபெத்தும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்
என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.
இப்படிப் பாரம்பர்யமாகப் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்களை மறப்பதும் அவர்களிடம் ஓரவஞ்சனையாக நடப்பதும் நியாயம் தானா?
இயேசுவுக்குக் குருவாகவும் அவரை விட ஆறு மாதம் மூத்தவராகவும் இருந்த யோவானைக் கடவுளின் குமாரர் என்று கிறித்தவர்கள் கூறுவதில்லையே அது ஏன்?
இயேசுவுக்குள் இருந்த பரிசுத்த ஆவி, பல சந்தர்ப்பங்களில் அவரை விட்டு விலகியிருக்கிறது. பிசாசினால் அவர் சோதிக்கப்பட்டார்
( மத்தேயு 4:1-10) இந்தச் சந்தர்ப்பத்தில் பரிசுத்த ஆவி அவரை விட்டு விலகி விட்டது என்று தெரிகின்றது.
யோவானிடம் இயேசு வந்து ஞானஸ்நானம் பெற்ற பிறகு தேவ ஆவி அவர் மேல் இறங்கியதாகவும் மத்தேயு (3:16) கூறுகிறார். அப்படியானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன் அவரிடம் பரிசுத்த ஆவி இருக்கவில்லை என்பது தெரிகின்றது. ஆனால் யோவான் தாயின் வயிற்றிலிருக்கும் போதே பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார்.
இப்போது யாரைக் கடவுளின் குமாரர் என்று சொல்லப் போகிறார்கள்?
இன்னும் யாரிடமெல்லாம் பரிசுத்த ஆவி குடி கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்!
பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல. உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.
(மத்தேயு 10:20)
பரிசுத்த ஆவியால் பேசுகின்ற இயசுவின் சீடர்களும் கடவுளர்களா?
இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதா, மூன்று தடவை இயேசுவை மறுத்த பேதுரு ஆகியோரும் கூட பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார்களா?
அப்பொழுது சிமியோன் என்னும் பேர் கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான். அவன் நீதியும் தேவ பக்தியும் உள்ளவனாயும் இஸ்ரவேலின் ஆறுதல் வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான். அவன் மேல் பரிசுத்த ஆவி இருந்தார்.
(லூக்கா 2:25)
இந்தச் சங்கதிகளைக் குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம். தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்த ஆவியும் சாட்சி என்றார்கள்.
(அப்போஸ்தலர் 5:32)
அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான். அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய் சேர்க்கப்பட்டார்கள்.
(அப்போஸ்தலர் 11:24)
இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூத மார்க்கத்தமைந்தவனான அந்தியோகிய பட்டணத்தானாகிய நிக்கோலாவையும் தெரிந்து கொண்டு… (அப்போஸ்தலர் 6:5)
உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம் பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக் கொள்
(இரண்டாம் தீமோத்தேயு 1:14)
தீர்க்கதரிசனமானது ஒரு காலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை. தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு பேசினார்கள். (இரண்டாம் பேதுரு 1:21)
இவ்வாறு பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவர்கள் கணக்கு வழக்கில்லாமல் இருந்துள்ளதாக பைபிள் கூறும் போது இயேசுவை மட்டும் கடவுள் என்று கூறுவது என்ன நியாயம்?
பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுதல் என்பதன் பொருள் என்ன? கடவுள் தன்மை வந்து விட்டது என்பது தான் அதன் பொருளா? நிச்சயமாக இல்லை.
தேவனுக்குக் கட்டுப்பட்டு, அவனது அடிமைகளாகத் தங்களைக் கருதுவோர் தாம் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டவர்கள்.
மேலே எடுத்துக்காட்டப்பட்ட அப்போஸ்தலர் 5:32 வசனத்திலிருந்து இதை விளங்கலாம்.
இயேசுவைத் தவிர மற்றவர்களிடம் பரிசுத்த ஆவி இருப்பதாகக் கூறப்படும் போது அவர்கள் நல்ல மனிதர்களாக இருந்தார்கள் என்று விளங்கிக் கொள்ளும் கிறித்தவர்கள் இயேசுவுக்கு அந்த வார்த்தை பயன்படுத்தப்படும் போது மட்டும் அவர் கடவுள் தன்மை பெற்றவர் என்று பொருள் கொள்ள என்ன ஆதாரம் வைத்திருக்கிறார்கள்? விளக்குவார்களா?
இன்னும் சொல்வதென்றால் பரிசுத்த ஆவியினால் நிரம்பிய மற்றவர்களைக் கடவுள் என்று கூறினால் கூட இயேசுவைக் கடவுள் என்று கூற முடியாது. அதற்கு பைபிளிலேயே ஆதாரம் கிடைக்கின்றது.
சோதிக்கப்படுகிற எவனும் நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக.
(யாக்கோபு 1:13)
கடவுள் என்பவர் தீமைகளால் சோதிக்கப்பட முடியாது என்பதை இவ்வசனம் அழுத்தமாகக் கூறுகின்றது.
ஆனால் இயேசுவோ பலமுறை பிசாசினால் – தீமைகளால் சோதிக்கப்பட்டதாகவும் பைபிள் கூறுகிறது. (மத்தேயு 4:1-10)
இயேசுவிடம் பரிசுத்த ஆவி நிரம்பி வழிந்தாலும் அவர் பிசாசினால் சோதிக்கப்பட்டிருக்கிறார். இவ்வாறு சோதிக்கப்பட்டவர் கடவுளாக இருக்க முடியாது எனும் போது இயேசுவைக் கடவுளாக ஏற்பதில் கடுகளவாவது நியாயம் இருக்கிறதா என்று சிந்தித்துப் பாருங்கள்!
தங்களுக்குச் சிறு வயது முதலே ஊட்டப்பட்டதை மறந்து விட்டு வேதமாக நம்புகின்ற பைபிளை நடுநிலையோடு ஆராய்ந்தால், ‘இயேசு நிச்சயமாகக் கடவுள் அல்லர்; கடவுளின் மகனுமல்லர்; அவர் ஒரு நல்ல மனிதர்’ என்ற முடிவைத் தவிர வேறு முடிவுக்கு எந்தக் கிறித்தவரும் வர முடியாது.