38) மற்ற மதங்களை விமர்சிக்கக் கூடாதா?

நூல்கள்: அர்த்தமுள்ள கேள்விகள்! அறிவுப்பூர்வமான பதில்கள்

கேள்வி: ஏனைய மதங்களை விமர்சிக்கக் கூடாது என்று திருக்குர்ஆன் கூறுகிறது. ஆனால், திருக் குர்ஆனே பல இடங்களில் ஏனைய மதங்களையும், ஏனைய மதங்களின் கடவுள் கொள்கையைப் பற்றியும் விமர்சிக்கின்றதே? ஏன் இந்த முரண்பாடு?

– ஹெச்.எம். ஹில்மி, அக்கூரன, இலங்கை.

பதில்: ஏனைய மதங்களை விமர்சிக்கக் கூடாது என்று திருக்குர்ஆனில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை. பிற மதத்தவர்கள் கடவுளர்களாகக் கருதுவோரை ஏசக் கூடாது என்று தான் குர்ஆன் கூறுகிறது.

அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக் கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்! அவர்கள் அறி வில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள்.

(அல்குர்ஆன்: 6:108)

ஏசுவதற்கும், விமர்சிப்பதற்கும் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது.

முஸ்லிமல்லாதவர்களால் கடவுளர்களாக மதிக்கப்படு வோரின் தனிப்பட்ட நடத்தைகள் போன்றவற்றைக் கேலி செய்வதும், தரக்குறைவான வார்த்தைகளைப் பேசுவதும் தான் ஏசுதல் என்பதன் பொருளாகும்.

கொள்கை, கோட்பாடு மற்றும் சட்ட திட்டங்களின் அடிப்படையில் இது தான் சரியானது என்று வாதிடுவதையும் மற்ற கொள்கைகள் தவறானவை என்று கூறுவதையும் இஸ்லாம் அனுமதிக்கின்றது.

குர்ஆனில் அதிகமான இடங்களில் அறிவுப்பூர்வமான இத்தகைய வாதங்களும், விமர்சனங்களும் காணப்படு கின்றன. ஆனால் ஒரு இடத்திலும் பிற மதத்தினரால் கடவுளர்களாக மதிக்கப்படுவோர் ஏசப்படவே இல்லை.

ஈஸா நபியைக் கிறித்தவர்கள் கடவுளின் மகன் எனக் கூறுவதை இஸ்லாம் மறுக்கிறது. அதற்கான காரண காரியங்களையும் தெளிவாகக் கூறுகிறது. ஆனால் ஒரு இடத்தில் கூட ஈஸா நபியைப் பற்றி தரக் குறைவான ஒரு சொல்லையும் குர்ஆன் பயன்படுத்தவில்லை.

வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதீர்கள்! மர்யமின் மகன் ஈஸா எனும் மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனது கட்டளை யா(ல் உருவானவருமா)வார். அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான். அவனது உயிருமாவார். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! (கடவுள்) மூவர் எனக் கூறாதீர்கள்! விலகிக் கொள் ளுங்கள்! (அது) உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ் வே ஒரே வணக்கத்திற்குரியவன். தனக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூயவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன்.

(அல்குர்ஆன்: 4:171)

‘மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ்’ எனக் கூறிய வர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். ‘இஸ்ராயீ லின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப் பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை’ என்றே மஸீஹ் கூறினார்.

(அல்குர்ஆன்: 5:72)

மர்யமின் மகன் மஸீஹ் தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். அவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக! பின்னர் அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக!

(அல்குர்ஆன்: 5:75)

லாத், உஸ்ஸா போன்ற பெண் பாத்திரங்களைக் கடவுளின் புதல்விகள் என்று மக்காவில் வாழ்ந்தவர்கள் நம்பி வந்தனர். உங்களுக்கு மட்டும் ஆண் மக்கள்! அல்லாஹ்வுக்கு மட்டும் பெண் மக்களா! என்று குர்ஆன் கேள்வி எழுப்பியது. இறைவனுக்கு மனைவியும், மக்களும் அறவே இல்லை என்பதையும் கூறியது. லாத், உஸ்ஸா பற்றி அவர்கள் நம்பி வந்த கட்டுக் கதைகளின் அடிப்படையில் கீழ்த்தரமாக விமர்சிக்க முடியும். அப்படி எந்த விமர்சனமும் குர்ஆனில் இல்லை.

இந்துக்கள் கடவுளர்களாக மதிக்கும் இராமன், கிருஷ்ணன், முருகன், விநாயகர், சிவன், விஷ்ணு போன்றவர்கள் குறித்து முஸ்லிம்கள் அவர்களைக் குறை கூறக் கூடாது. அதைத் திருக்குர்ஆன் தடை செய்கிறது.

அதே நேரத்தில் ஒரு கடவுள் தான் இருக்க முடியும். பல கடவுள்கள் இருக்க முடியாது என்று வாதம் செய்யலாம். பல கடவுள் கொள்கையை நம்புவ தால் ஏற்படும் கேடுகளைப் பட்டியலிட்டு கொள்கைப் பிரச்சாரம் செய்யலாம். மற்றவர்கள் கடவுளர்களாக மதிக்கக்கூடியவர்களின் பெயர்களைக் குறிப்பிடாமலேயே இத்தகைய பிரச்சாரத்தைச் செய்ய முடியும்.

அறிவுப்பூர்வமான வாதங்களின் அடிப்படையில் இவ்வாறு பிரச்சாரம் செய்வதை இஸ்லாம் அனுமதிக்கிறது. இத்தகைய பிரச்சாரத்தால் சமூக நல்ணக்கத்திற்கு எந்தக் கேடும் ஏற்படாது. எனவே ஏசுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதும் அறிவுப்பூர்வமாக விமர்சனம் செய்யலாம் என்பதும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல.