04) அல்லாஹ்வின் தோற்றம்

நூல்கள்: இஸ்லாத்தின் அடிப்படைகள்

பாடம் 3

அல்லாஹ்வின் தோற்றம்

அல்லாஹ் உருவமற்றவனா?

இறைவன் உருவமற்றவன் என்று கூறுவது இஸ்லாத்திற்கு மாற்றமான கொள்கையாகும்.

அல்லாஹ்விற்கு உருவம் இருக்கின்றது, அவனுடைய தோற்றத்தை மறுமையில் நல்லடியார்கள் காண்பார்கள்.

 

وُجُوهٌ يَوْمَئِذٍ نَاضِرَةٌ(22)إِلَى رَبِّهَا نَاظِرَةٌ(23) سورة القيامة

அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும்.தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்.

(அல்குர்ஆன்: 75:22),23)

மறுமையில் அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்கள் அவனைப் பற்றி எண்ணி வைத்திருந்த தோற்றம் அல்லாது வேறொரு தோற்றத்தில் அவர்களிடம் முதல் தடவையாக வந்து நானே உங்கள் இறைவன் என்று கூறுவான்.

அறிவிப்பவர் :  அபூஸயீத் அல்குத்ரீ(ர­)

நூல் : புகாரீ (7439)

இறைவனுக்கு நாம் உருவத்தைக் கற்பிக்கலாமா?

அல்லாஹ் கூறுகிறான் :

 

لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ البَصِيرُ(11) سورة الشورى

அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன். (அல்குர்ஆன்: 42:11)

இவ்வுலகில் அல்லாஹ்வைப் பார்க்கமுடியுமா?

இவ்வுலகில் யாரும் அல்லாஹ்வைப் காண முடியாது . அல்லாஹ் கூறுகிறான் :

 

لَا تُدْرِكُهُ الْأَبْصَارُ وَهُوَ يُدْرِكُ الْأَبْصَارَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ(103) سورة الأنعام

அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். (அல்குர்ஆன்: 6:103)

நபி(ஸல்) அவர்களிடம் நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா? என்று கேட்கப்பட்டபோது அவனோ ஒளியானவன் நான் அவனை எப்படிப் பார்க்கமுடியும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூதர் (ர­)    நூல் : முஸ்­ம் (261)

மிஃராஜ் பயணத்தில் நபியவர்கள் அல்லாஹ்வைப் பார்த்தார்களா?

நபியவர்கள் மிஃராஜ் பயணத்தில் அல்லாஹ்வைப் பார்க்கவில்லை. அதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்.

அபூதர் (ர­) அவர்கள் அறிவிக்கிறார்கள் :நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ”நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்தீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ”(அவனைச் சுற்றிலும் இருப்பது) ஒளியாயிற்றே! நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்?” என்று (திருப்பிக்) கேட்டார்கள்.

நூல்  முஸ்­ம் (291)

மூஸா (அலை) அவர்கள் இவ்வுலகில் இறைவனைப் பார்த்தார்களா?

மூஸா (அலை) அவர்கள் இவ்வுலகில் அல்லாஹ்வைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால் அவர்களால் இவ்வுலகில் அல்லாஹ்வைக் காணமுடியாது என்பதை அல்லாஹ் அவர்களுக்கு உணர்த்தினான். இதனை பின்வரும் வசனத்தி­ருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸா வந்து, அவரிடம் அவரது இறைவன் பேசிய போது ”என் இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்” எனக் கூறினார். அதற்கு (இறை வன்) ”என்னை நீர் பார்க்கவே முடியாது. எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக! அது அதற்குரிய இடத்தில் நிலையாக இருந்தால் நீர் என்னைப் பார்க்கலாம்” என்று கூறினான். அவரது இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போது அதைத் தூளாக்கினான். மூஸா மூர்ச்சித்து விழுந்தார். அவர் தெளிவடைந்த போது ”நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்” எனக் கூறினார் (அல்குர்ஆன்: 7:143)

மறுமையில் அல்லாஹ்வைக் காணமுடியுமா?

மறுமையில் நல்லடியார்கள் இறைவனைக் காண்பார்கள்.

وُجُوهٌ يَوْمَئِذٍ نَاضِرَةٌ(22)إِلَى رَبِّهَا نَاظِرَةٌ(23) سورة القيامة

அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும். தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்.

 (அல்குர்ஆன்: 75:22),23)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் உங்கள் இறைவனை (மறுமையில்) கண்கூடாகக் காண்பீர்கள்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ர­),(புகாரி: 7435)

காஃபிர்கள் மறுமையில் அல்லாஹ்வைக் காணமுடியுமா?

காஃபிர்கள் மறுமையில் இறைவனைப் பார்ப்பதை விட்டும் திரையிடப்படுவார்கள்.

 

كَلَّا إِنَّهُمْ عَنْ رَبِّهِمْ يَوْمَئِذٍ لَمَحْجُوبُونَ(15) سورة المطففين

அந்நாளில் அவர்கள் தமது இறைவனை விட்டும் தடுக்கப்படுவார்கள். (அல்குர்ஆன்: 83:15)

அல்லாஹ்விற்கு முகம் உள்ளது என்பதற்கு ஆதாரம் என்ன?

அல்லாஹ்விற்கு யாருக்கும், எதற்கும் ஒப்பாகாத விதத்தில் முகம் இருக்கிறது என்று நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்.

”உங்களில் ஒருவர் சண்டையிடும் போது முகத்தைத் (தாக்குவதை விட்டும்) தவிர்ந்து கொள்ளட்டும். ஏனெனில் அல்லாஹுத் தஆலா ஆதமைத் தன்னுடைய முகத்தோற்றத்திலேயே படைத்திருக்கின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­)

நூல்: முஸ்­ம் 4731, அஸ்ஸுன்னத் ­அபீ ஆஸிம் 228, தப்ரானி 478

அல்லாஹ்விற்கு கண்கள் உள்ளன என்பதற்கு ஆதாரம் என்ன?

அல்லாஹ்விற்கு யாருக்கும், எதற்கும் ஒப்பாகாத விதத்தில் கண்கள்  இருக்கிறது என்று நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்  தஜ்ஜால் ஒற்றைக் கண்ணன் என்பதையும் அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ர­),(புகாரி: 3057)

”அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படையுங்கள் என அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்” என்ற அல்லாஹ்வின் சொல்­­ருந்து ”செவியுறுபவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கிறான்” என்ற வசனத்தை அபூஹுரைரா (ர­) ஓதிக் கொண்டே, ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கட்டை விரலை தமது காதின் மீது, அடுத்த விரலை தமது கண் மீது வைத்துக் காட்டியதைக் கண்டேன்” என்று தெரிவிக்கின்றார்கள்.

அறிவிப்பவர்:  அபூ யூனுஸ்

(அபூதாவூத்: 4103)

நபி (ஸல்) அவர்கள் தமது காதையும், கண்ணையும் கை விரல்களால் காட்டி விளக்கம் கொடுப்பதன் மூலம் அல்லாஹ்வுக்குக் கண்கள், காதுகள் உண்டு என்பதை உணர்த்துகிறார்கள்.

அல்லாஹ்விற்கு கைகள் உள்ளன என்பதற்கு ஆதாரம் என்ன?

அல்லாஹ்விற்கு யாருக்கும், எதற்கும் ஒப்பாகாத விதத்தில் வலது இடது என இரு கைகள் உள்ளன  என்று நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் வானங்களைச் சுருட்டுவான். பிறகு அவற்றைத் தனது வலக் கரத்தில் எடுத்துக் கொள்வான். பிறகு ”நானே அரசன். அடக்குமுறையாளர்கள் எங்கே? ஆணவம் கொண்டவர்கள் எங்கே?” என்று கேட்பான். பிறகு பூமிகளைத் தனது இடக் கரத்தில் சுருட்டிக் கொள்வான். பிறகு ”நானே அரசன். அடக்குமுறையாளர்கள் எங்கே? ஆணவம் கொண்டவர்கள் எங்கே?” என்று கேட்பான்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ர­)

நூல்: முஸ்­ம் 4995

அல்லாஹ்விற்கு கால்கள் உள்ளன என்பதற்கு ஆதாரம் என்ன?

அல்லாஹ்விற்கு யாருக்கும், எதற்கும் ஒப்பாகாத விதத்தில் கால்கள் உள்ளன  என்று நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். இதற்கு பின்வரும் வசனம் ஆதாரமாகும்.

 கெண்டைக் கால் திறக்கப்பட்டு ஸஜ்தாச் செய்ய அழைக்கப்படும் நாளில் அவர்களுக்கு அது இயலாது.  

(அல்குர்ஆன்: 68:42)

இது மறுமையில் நடக்கும் நிகழ்வாகும். இறைவனின் கால்கள் மறுமையில் வெளிப்பட்டு அதில் நல்லோர் ஸஜ்தா செய்வார்கள் என்பதை இந்த வசனம் விளக்குகின்றது.