கஅபாவை விட ரவ்ளா சிறந்ததா?

முக்கிய குறிப்புகள்: முக்கிய ஆய்வுகள்

கஅபாவை விட ரவ்ளா சிறந்ததா?

யூதக் கொள்கையைப் போதிக்கும் மனாருல் ஹுதா!

கே.எம். அப்துல் நாஸர், எம்.ஐ.எஸ்.சி.

கப்ருகளின் மீது கட்டடம் கட்டுவதையும், கப்ருகளை பூசுவ தையும், அதன் மீது எழுதுவதையும், அதன் மீது உட்காருவதையும் நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.

மேலும் உயர்த்திக் கட்டப்பட்ட கப்ருகளை இடித்துத் தரை மட்டமாக்குமாறும் இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இவை ஆதாரப்பூர்வமான ஹதீஸ் களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நபிவழியின் அடிப்படையில் நபி (ஸல்) அவர்களுடைய கப்ரின் மீது கட்டப்பட்ட குவிமாடம் (குப்பா) இடிக்கப்பட வேண்டியதே என்று தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சாரம் செய்கிறது.

இந்த சத்தியக் கருத்து அதிகமான இஸ்லாமியர்களிடம் மேலோங்கிய காரணத்தினால் பரேலவிகள் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக எண்ணற்ற விஷமத்தனங்களைச் செய்தார்கள். தவ்ஹீத் ஜமாஅத்தைத் தடை செய்ய வேண்டும் என்றும், அதன் நிர்வாகிகளைக் கைது செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள், சுவரொட்டிகளை ஒட்டினார்கள்.

வழிகேட்டைப் போதிப்பதில் பரேலவிகளுக்கு சற்றும் நாங்கள் சளைத்தவர்களல்ல என்று கூறும் விதத்தில் மத்ஹபுகளைத் தூக்கிப் பிடிக்கும் தேவ்பந்திகளும் களமிறங்கியுள்ளனர்.

ஆம்! தேவ்பந்திகளின் சார்பாக வெளியிடப்படும் மனாருல் ஹுதா என்ற இதழில் கஅபாவை விட நபி (ஸல்) அவர்களின் ரவ்ளா (மண்ணறை) சிறந்ததாகும் என்று எழுதி மிகப்பெரும் வழிகேட்டை மார்க்கமாகக் சித்தரித்துள்ளனர். மேலும் நபி (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதைக் கூட அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. நபியவர்கள் மரணித்து விட்டார்கள் என்று கூறாமல் அவர்கள் நம்முடைய கண்களை விட்டும் மறைந்துள்ளார்கள் என்றே குறிப்பிட்டுள்ளனர்.

நபியவர்கள் மண்ணுக்கு கீழ் புனித (?) ரவ்ளா எனும் மண்ணறையில் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள் என்று எழுதி நிரந்தர நரகத்தில் சேர்க்கும் இணைவைப்புக் கொள்கையை மார்க்கமாகச் சித்தரித்துள்ளனர்.

இவர்கள் இந்த வழிகெட்ட கொள்கைக்கு ஆதாரமாகப் பெரும்பாலும் மனோ இச்சைகளையும், நபியவர்களின் பெயரால் இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்களையும், பலவீனமான செய்திகளையுமே ஆதாரமாகக் காட்டியுள்ளனர்.

நபியவர்கள் மண்ணறையில் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள் என்பதற்கு அவர்கள் முன்வைத்துள்ள தவறான ஆதாரங்களுக்குரிய சரியான விளக்கம் தனிக் கட்டுரையாக தெளிவு படுத்தப்படவுள்ளது.

இந்தக் கட்டுரையில் ரவ்ளா என்றால் என்ன? நபியவர்களின் கப்ரை ரவ்ளா என்று கூறலாமா? நபியவர்களின் மண்ணறை கஅபாவை விடச் சிறந்தது என்பது இஸ்லாத்திற்கு எதிரான யூதர்களின் கொள்கையே என்பதைப் பற்றி நாம் அறியவிருக்கின்றோம்.

ரவ்ளா என்றால் என்ன?

ரவ்ளா என்ற வார்த்தைக்கு பூங்கா என்று பொருளாகும். வழிகெட்ட கொள்கைக்குச் சொந்தக்காரர்களான பரேலவிகளும், தேவ்பந்திகளும் நபி (ஸல்) அவர்களின் கப்ரை ரவ்ளா என்று குறிப்பிடுகின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் உயிருடன் வாழும் கால கட்டத்தில் தம்முடைய கப்ரை ரவ்ளா என்று குறிப்பிட வேண்டும் என்று எந்தக் கட்டளையும் பிறப்பிக்கவில்லை. நபி (ஸல்) அவர்களின் கப்ரை ரவ்ளா என்று குறிப்பிடுவதே நபியவர்களின் வழிகாட்டுதலுக்கு எதிரானதாகும்.

நபி (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு நபியவர்கள் ஆயிஷா (ரலி) அவர்கள் தங்கியிருந்த வீட்டில் தான் அடக்கம் செய்யப்பட்டார்கள். இந்த வீடு பள்ளிவாசல் கிடையாது. பிற்காலத்தில்தான் ஆட்சியாளர்கள் இந்த வீடு அமைந்துள்ள பகுதியில் பள்ளியை விரிவுபடுத்திய காரணத்தால் இது பள்ளிக்குள் வந்துவிட்டது.

நபி (ஸல்) அவர்கள் உயிருடன் வாழும் காலகட்டத்தில் தம்முடைய வீட்டிற்கும், மஸ்ஜிதுன் நபவீ பள்ளியில் நபியவர்கள் நின்று உரையாற்றும் மிம்பருக்கும் மத்தியிலுள்ள பகுதியைத் தான் ரவ்ளா என்று குறிப்பிட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது இல்லத்திற்கும் எனது சொற்பொழிவு மேடைக்கும் இடைப்பட்ட பகுதி சொர்க்கப் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும். எனது சொற்பொழிவு மேடை, எனது ஹவ்ளுல் கவ்ஸர் தடாகத்தின் மீது அமைந்துள்ளது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (1196)

நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுன் நபவியின் ஒரு பகுதியைத்தான் ரவ்ளா (பூங்கா) என்று குறிப்பிட்டுள்ளார்கள். இந்த ரவ்ளா என்பதில் நபியவர்களின் வீடு உள்ளடங்காது.

மேலும் இது நபியவர்கள் உயிரோடு வாழும் போது கூறிய வார்த்தையாகும். அப்போது நபியவர்களுக்குக் கப்ரு கிடையாது.

நபியவர்கள் அல்லாஹ்வின் ஆலயத்தை ரவ்ளா என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் மனாருல் ஹுதாவோ நபிவழிக்கு எதிராக மண்ணறையை ரவ்ளா என்று குறிப்பிடுகின்றனர். பள்ளிவாசலைக் குறிக்கும் ரவ்ளா என்ற வார்த்தையை மண்ணறையைக் குறிக்கும் வார்த்தையாக ஆக்கி, மண்ணறையை பள்ளிவாசலாக மாற்றுவது தெளிவான யூதக் கலாச்சாரமாகும்.

மேலும் அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் எதனை புனிதமாக அறிவித்துள்ளனரோ அதைத் தவிர வேறு எதையும் புனிதம் என்று அறிவிக்கும் அதிகாரம் மனிதர்களுக்குக் கிடையாது. ஆனால் மனாருல் ஹுதா இதழில் நபியவர்களின் மண்ணறையை வரிக்கு வரி புனித ரவ்ளா என்று குறிப்பிட்டு அல்லாஹ்வின் அதிகாரத்தைக் கையில் எடுத்துள்ளனர்.

இது யூதர்களின் வழிமுறையாகும். ஏனெனில் யூதர்கள்தான் நபிமார்களின் சமாதிகளைப் பள்ளிவாசல்களாக்கி அதனைப் புனித பூமியாகக் கருதினர். அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று நபியவர்கள் சபித்துள்ளனர்.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்த போது, யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கி விட்டனர் என்று கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லையாயின் நபி (ஸல்) அவர்களின் அடக்கவிடத்தைத் திறந்த வெளியில் நபித்தோழர்கள் வைத்திருந்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கத்தலமாக ஆக்கப் பட்டு விடுமோ என நான் அஞ்சுகிறேன்.

(புகாரி: 1330)

நபியவர்கள் தம்முடைய பள்ளிவாசலைத்தான் ரவ்ளா என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் இந்த வழிகேடர்களோ நபியவர்களின் கப்ரை ரவ்ளா என்று பெயரிட்டு, அதனைப் புனித பூமியாகச் சித்தரித்து நபிவழிக்கு எதிராக யூதர்களின் வழிமுறையைப் பின்பற்றுகின்றனர்.

கஅபாவை விட நபியின் மண்ணறை சிறந்ததா?

மனாருல் ஹுதா இதழில் நபியவர்களின் கப்ருக்கு ரவ்ளா என்று பெயர் சூட்டி அது கஅபாவை விட மிகச் சிறந்தது என்று மிகப்பெரும் வழிகேட்டைத் திணித்துள்ளனர்.

இதற்குத் தம்முடைய மனோ இச்சையையும், ஒரு நூலில் எழுதப் பட்டுள்ள வழிகெட்ட கருத்தையும் ஆதாரமாகக் காட்டியுள்ளனர்.

ஆப்ங்கே மஸாயில் அவ்ர் உன்கா ஹல் என்ற நூலில் கூறப்பட்ட ஒரு வழிகெட்ட கருத்தை இதற்கு ஆதாரமாக மனாருல் ஹுதா முன்வைத்துள்ளது.

மக்கா, மதீனா மற்றும் உலகின் அனைத்தையும் விட கஃபா தான் உயர்ந்தது. நபி (ஸல்) அவர்களின் உடலைத் தாங்கியிருக்கும் அந்த ரவ்ளா மட்டும்தான் கஃபாவை விட உயர்ந்தது (நூல்: ஆப்ங்கே மஸாயில் அவ்ர் உன்கா ஹல், 1 : 85)

ஆப்ங்கே மஸாயில் அவ்ர் உன்கா ஹல் என்ற நூல் என்ன அல்லாஹ்வின் வேதமா? அல்லது இறைத்தூதரின் பொன் மொழி வார்த்தைகளா? மனாருல் ஹுதாவிற்கு எதை ஆதாரமாகக் காட்ட வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் போனது ஏனோ? அல்லாஹ் தான் இவர்களுக்கு நேர்வழி காட்ட வேண்டும்.

இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே என்ற அடிப்படையை விட்டும் தவறிய காரணத்தினால் இது போன்ற யூதக் கருத்துக்களைக் கூட மார்க்க ஆதாரமாக முன்வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நபிமார்களின் சமாதிகளை அல்லாஹ்வின் மிகப்பெரும் ஆலயத்தை விட மிகச் சிறந்ததாகச் சித்தரிப்பது யூதர்களின் வழிமுறை யாகும். அத்தகைய வேலையைத்தான் மனாருல்ஹுதா செய்துள்ளது.

உலகில் உள்ள இடங்களிலேயே கஅபாவை விட சிறந்த பூமி வேறெதுவும் கிடையாது என்று நபியவர்கள் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் “ஹஸ்வா’ என்ற ஒட்டகத்தின் மீது நின்றவர்களாக மக்காவை நோக்கி, “நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்! என்னுடைய சமுதாயம் (உன்னை விட்டும்) என்னை வெளியேற்றி இருக்காவிட்டால் நான் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.)” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின்அதீ

(திர்மிதீ: 3860)

அல்லாஹ்விற்கும், அல்லாஹ்வின் தூதருக்கும் மிக விருப்பத்திற்குரிய பகுதி கஅபா தான் என்று அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் கூறிய பிறகு இவர்களுக்கு மாற்றமாக மண்ணறையை கஅபாவிடச் சிறந்து என்று கூறுபவார்கள் உண்மையான முஃமின்களாக இருக்க முடியுமா?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இப்ராஹீம் (அலை) மக்காவைப் புனித நகராக்கினார்கள். அதற்காக பிரார்த்தித்தார்கள். இப்ராஹீம் (அலை) மக்காவைப் புனித நகராக்கியது போன்று நான் மதீனாவைப் புனித நகராக்கினேன். இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவிற்காக பிராத்தித்தது போன்று நான் மதீனாவிற்காக அதன் ஸாஉ, முத்து ஆகியவற்றில் (வளம்ஏற்பட) பிரார்தித்தேன்.

நூல்: புகாரி (2129)

மதீனா நகரம் புனித பூமி என்றாலும் மக்கா அதைவிட அந்தஸ்தில் உயர்ந்ததாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என்னுடைய பள்ளி (மஸ்ஜிதுந் நபவி)யில் தொழுவது மற்ற பள்ளிகளில் தொழுகின்ற ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். அல் மஸ்ஜிதுல் ஹராம் (கஅபா)வைத் தவிர! (ஏனென்றால் அதற்கு அதை விட அதிகமான நன்மைகள் உள்ளது.)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 1190)

“மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு தொழுகை தொழுவது மற்ற பள்ளிகளில் ஒரு இலட்சம் தொழுகை தொழுவதை விடச் சிறந்ததாகும்” என நபி (ஸல்) கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்கள்: இப்னுமாஜா 1396,

(அஹ்மத்: 14167)

மேற்கண்ட ஆதாரங்களிலிருந்து உலகில் மிகச் சிறந்த பூமி கஅபா தான் என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

அல்லாஹ்வின் ஆலயத்தை விடவும் நபியவர்களின் மண்ணறை மிகச் சிறந்தது என்பது யூதர்களின் இணைவைப்புக் கொள்கையே என்பது தெளிவாகிறது.

படைப்பினங்களில் சிறந்தவர் யார்?

நபியவர்கள் உலகிலுள்ள் அனைத்து முஸ்லிம்களை விடச் சிறந்தவர்கள் என்று நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். இதன் பொருள் என்ன? மற்ற அனைவரை விடவும் நபியவர்கள் இறையச்சமிக்கவர்கள் என்பதும் அல்லாஹ்விடத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு மிகச் சிறந்த அந்தஸ்தும், பதவியும் உள்ளது என்பதுமாகும்.

ஒருவர் படைப்பினங்களில் சிறந்தவர் என்றால் அல்லாஹ் விடத்தில் அவருக்குக் கிடைக்கும் அந்தஸ்து மிக உயர்ந்ததாகும் என்பதே அதன் கருத்தாகும்.

கஅபா உலகின் ஆலயங்களில் சிறந்தது என்றால் அந்த ஆலயத்தில் செய்யும் வழிபாடுகளுக்கு ஏராளமான நற்கூலிகளை அல்லாஹ் தருகிறான் என்றே புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு மாற்றாக கஅபாவின் செங்கற்களும், மண்ணும் புனிதம் வாய்ந்தவை என்று ஒருவன் கருதினால் அது வழிகேடாகும்.

ஆனால் இந்த அடிப்படை அறிவு கூட மனாருல் ஹுதாவிற்கு இல்லை.

மனாருல் ஹுதா இதழில் பின்வருமாறு எழுதியுள்ளனர்.

அல்லாஹ்வின் அனைத்து படைப்புக்களை விட நபி (ஸல்) அவர்கள் சிறந்தவர்களாக உயர்ந்தவர்களாக இருக்கும் போது அவர்கள் எந்த மண்ணிலிருந்து படைக்கப்பட்டார்களோ அந்த மண்ணும் அல்லாஹ்வின் அனைத்து படைப்புக்களை விட மிக உயர்ந்த்தாகவும் சிறந்ததாகவும் ஆகிவிட்டது. நபி (ஸல்) அவர்கள் கஅபாவை விடவும் உயர்ந்தவர்கள். எனவே கஅபாவை விடவும் அவர்களின் புனித உடலைச் சுற்றியிருக்கும் இடம் மிக உயர்ந்ததாகிவிடும். (மனாருல் ஹுதா மே 2015)

நபியவர்கள் சிறந்தவர்கள் என்றால் அந்தஸ்தில் சிறந்தவர்கள் என்று தானே அதன் பொருள். ஒரு மனிதன் சிறந்தவன் என்று கூறினால் அவன் இறையச்சத்தை வைத்துத் தான் அது தீர்மானிக்கப்படும்.

அல்லாஹ் குலம் கோத்திரத்தை வைத்தோ, எதிலிருந்து படைக்கப் பட்டோம் என்பதை வைத்தோ சிறப்பைத் தீர்மானிக்க மாட்டான். இப்லீஸ் நெருப்பால் படைக்கப் பட்டவன், ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவர்.

இப்லீஸ், தான் எதிலிருந்து படைக்கப்பட்டோம் என்பதை வைத்து தனக்கு சிறப்புத் தன்மை இருப்பதாக வாதிட்டான். ஆனால் அல்லாஹ்வோ தனக்குக் கட்டுப்படுவதை வைத்துத் தான் சிறந்தவரைத் தேர்ந்தெடுப்பான்.

எனவே ஒருவர் சிறந்தவர் என்றால் இறையச்சத்திலும், ஈமானிலும் மற்றவர்களை விட உயர்ந்தவர் என்பது தான் இஸ்லாத்தின் அடிப்படையாகும். ஒருவர் சிறந்தவர் என்பதை வைத்துக் கொண்டு அவர் உருவாக்கப்பட்ட மண்ணும் சிறந்தது என்று வாதிப்பது இப்லீஸின் வழிமுறையாகும்.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரை யொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

(அல்குர்ஆன்: 49:13)

ஆதம் (அலை) எந்த மண்ணில் இருந்து படைக்கப்பட்டார்களோ அதே மண்ணிலிருந்துதான் உலகிலுள்ள அனைத்து மனிதர்களும், நபி (ஸல்) அவர்களும் படைக்கப்பட்டுள்ளார்கள். ஒரு மனிதனின் சிறப்பு அவனுடைய இறையச்சத்தினால்தான் ஏற்படும் என்பதை மேற்கண்ட வசனத்திலிருந்து நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

ஒரு மனிதன் கெட்டவன் என்றால் அவன் இறையச்சம் இல்லாததினால் கெட்டவன் என்பதுதான் அதன் பொருள். இதனால் அவன் படைக்கப்பட்ட மண்ணும் கெட்டது என்று வாதிப்பது அறியாமையாகும். அல்லாஹ் தூய்மையான மண்ணிலிருந்து தான் மனித சமுதாயம் அனைத்தையும் படைத்தான். எனவே கெட்ட மண்ணிலிருந்து கெட்டவர்களைப் படைத்தான் என்று வாதிப்பது எப்படி அறியாமையோ அது போன்றது தான் ஒருவன் நல்லவன் என்பதினால் அவன் படைக்கப்பட்ட மண் சிறந்தது என்று வாதிப்பது.

அல்லாஹ் ஒரு போதும் நம்முடைய உடல்களையோ, அதனுடைய மூலத்தையோ பார்க்கவே மாட்டான். மாறாக நம்முடைய உள்ளங்களைத் தான் பார்க்கிறான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ், உங்கள் தோற்றங் களையோ உங்கள் செல்வங் களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே பார்க்கிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (5012)

எனவே நபியவர்கள் சிறந்தவர்கள் என்பதால் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம் சிறந்ததாகி விடும் என்பது வழிகெட்ட கொள்கையாகும்.

மேலும் படைப்பினங்களில் சிறந்தவர்கள் இப்றாஹீம் (அலை) அவர்கள்தான். இதனை நபியவர்களே கூறியுள்ளார்கள்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “படைப்பினங்களிலேயே மிகவும் சிறந்தவரே!” என்று அழைத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அது இப்ராஹீம் (அலை) அவர்கள்தான்” என்று சொன்னார்கள்.

நூல்: முஸ்லிம் (4367)

நபி (ஸல்) அவர்களை விட படைப்பினங்களில் மிகச் சிறந்தவர் இப்றாஹீம் (அலை) அவர்கள் தான். எனவே இப்றாஹீம் (அலை) அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடம்தான் கஅபாவை விடச் சிறந்தது என்று இவர்கள் வாதிப்பார்களா?

ஈமான் கொண்டு நல்லறங்கள் செய்யும் அனைவருமே படைப்பினங் களில் சிறந்தவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரே படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள்.

(அல்குர்ஆன்: 98:7)

எனவே சொர்க்கவாசிகள் என்று நன்மாரயம் கூறப்பட்ட அனைத்து ஸஹாபாக்களின் கப்ருகளும் கஅபாவை விடச் சிறந்தது என்று இவர்கள் வாதிப்பார்களா?

இதிலிருந்தே இவர்கள் தங்கள் வழிகேட்டை நியாயப்படுத்துவதற்காக எத்தகைய அபத்தமான கருத்தையும் முன்வைக்கத் தயங்க மாட்டார்கள் என்பது தெளிவாகிறது.

ஒருவர் எந்த மண்ணிலிருந்து படைக்கப்பட்டாரோ அந்த மண்ணிற்கு கொண்டு வரப்படுவார் என்ற கருத்தில் ஹாகிமில் ஒரு செய்தி இடம் பெற்றுள்ளது.

இதிலிருந்து நபியவர்களின கப்ர் கஅபாவை விடச் சிறந்தது என்ற கருத்து விளங்கப்படுவதாக உளறியுள்ளனர்.

ஒருவர் தான் எந்த மண்ணிலிருந்து படைக்கப்பட்டாரோ அந்த மண்ணில் அடக்கம் செய்யப்படுவார் என்பதிலிருந்து கஅபாவை விட நபி (ஸல்) அவர்களின் மண்ணறை உயர்ந்தது என்ற கருத்தை குறைந்த பட்ச அறிவுள்ள யாரும் கூற மாட்டார்கள்.

நபியவர்கள் சிறந்தவர் என்பது ஈமானிலும், இறையச்சத்திலும்தான். அவர்கள் சிறந்தவர்களாக இருப்பதினால் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட மண்ணும் சிறந்தது என்று வாதிப்பது வழிகேடு என்பதை நாம் மேலே தெளிவுபடுத்தி விட்டோம். எனவே மேற்கண்ட செய்தி அந்த கருத்தைத் தரவில்லை.

மேலும் இந்தச் செய்தியின் கருத்தே தவறானதாகும். விண்கலம் வெடித்து விண்வெளியில் மரணித்தவர்கள் எந்த மண்ணிலிருந்து படைக்கப்பட்டார்கள்? தீயில் கருகி சாம்பலாகிவிட்டவர்கள், விலங்குகளால் அடித்து சாப்பிடப்பட்டவர்கள் இன்னும் பல சம்பவங்களில் பலர் பூமிக்குள் அடக்கம் செய்யப்பட மாட்டார்கள். எனவே இவர்கள் மண்ணிலிருந்து படைக்கப்படவே இல்லை என்று வாதிக்கப் போகிறார்களா?

மேலும் இந்தச் செய்தி பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் அப்துல் அஸீஸ் பின் முஹம்மத் அத்தராவர்தீ என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் மனனத் தன்மையில் மோசமானவர். இவர் தன்னுடைய மனனத்திலிருந்து அறிவிக்கும் போது தவறிழைக்கக் கூடியவர் என்று இமாம் அபூசுர்ஆ விமர்சித்துள்ளார்கள். இவர் மற்றவர்களின் புத்தகங்களிலிருந்து அறிவிக்கும் போது தவறிழைக்கக் கூடியவர் என்றும் இமாம்கள் விமர்சித்துள்ளனர். எனவே இது ஆதாரப்பூர்வமான செய்தி கிடையாது.

ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் மரணித்த பிறகு பர்ஸக் உடைய வாழ்க்கை இருக்கிறது என்பதுதான் உண்மை. பர்ஸக் என்பது திரைமறைவு வாழ்க்கையாகும். அதனை உலகில் வாழ்கின்ற மனிதர்களால் உணர முடியாது.

நபிமார்களைத் தவிர எந்த மனிதனை பூமியில் அடக்கம் செய்தாலும் மண் அவனுடைய உடலை அரித்து அவன் சில நாட்களில் மக்கிப் போய்விடுவான். மக்கிவிட்டதால் கப்ரு வாழ்க்கை இல்லை என்பது பொருளல்ல. கப்ரு வாழ்க்கை என்பது பூமிக்கு கீழே என்று கூறுவது அறியாமையாகும்.

ஒருவன் கப்ரில் அடக்கம் செய்யப்பட்ட பிறகு அவன் மனிதர்களால் அறியமுடியாத பர்ஸக் உடைய வாழ்க்கையில் துன்பத்தையோ, அல்லது இன்பகரமான நிம்மதியான உறக்கத்தையோ அனுபவிக்கிறான். அல்லாஹ் அவனை கியாமத் நாளில் உயிர் கொடுக்கும் போது அவன் மண்ணறைகளிலிருந்து வெளிப் படுவான் என்றே நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். பர்ஸக் உடைய வாழ்க்கையில் உள்ளவர்களுக்கும் உலகில் வாழும் மனிதர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

மொத்தத்தில் நபியவர்களின் மண்ணறை அல்லாஹ்வின் ஏகத்துவ ஆலயமான கஅபாவை விடச் சிறந்தது என்று வாதிப்பது வழிகெட்ட யூதர்கள் மற்றும் ஷியாக்களின் கொள்கையாகும். அந்தக் கொள்கையைத்தான் மானருல் ஹுதா வழிகாட்டியுள்ளது.

இத்தகைய வழிகெட்ட கொள்கையிலிருந்து அவர்கள் தவ்பா செய்து சத்தியக் கொள்கையின் பக்கம் திரும்பவில்லையென்றால் இந்த வழிகெட்ட கொள்கை நிரந்தர நரகத்தில் கொண்டுதான் சேர்க்கும் என்பதில் எள்ளவும் சந்தேகம் கிடையாது.