இப்ராஹீம் நபியின் ஏற்றுக் கொள்ளப்பட்ட துஆக்கள் – பாகம் 2
கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!
பாலை மணல்வெளி பரப்பில் பட்டுத் தெறிக்கும் வெப்பக் கதிர்களுக்கிடையே அழுது புரண்ட பச்சிலங்குழந்தை இஸ்மாயீல் (அலை) அவர்களின் கண்ணீருக்குக் காணிக்கையாக அல்லாஹ், ஸம்ஸம் தண்ணீரை அளித்து இப்ராஹீம் நபியவர்களின் கோரிக்கையை நிறைவேற்றினான் என்று பாகம்-1ல் பார்த்தோம்.
இப்ராஹீம் நபி (அலை) அவர்கள் இதை கோரிக்கையாகக் கூட வைக்கவில்லை. ‘விவசாயமற்ற பள்ளத்தாக்கு’ என்று நிலத்தின் தன்மையை மட்டும் தான் இறைவனிடத்தில் சொல்லி ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். ஆனால் ரப்புல் ஆலமீன் அதையே கோரிக்கையாக ஏற்றுக் கொண்டு நீர்வளத்தை ஸம்ஸம் மூலம் திறந்து வைத்தான். உலகில் பல்வேறு பகுதிகளிலிருந்து புறப்பட்டு வரும் அத்தனை பேர்களின் வாய்களையும் நனைக்கும் புனித நீரூற்றாக அது ஆகி விட்டது. இப்போது அதற்கு அவர்கள் ஒரு காரணத்தைக் கூறுகின்றார்கள்.
எங்கள் இறைவனே! விவசாயமற்ற பள்ளத்தாக்கில் புனிதமான உனது ஆலயத்திற்கு அருகில் என் மக்களைக் குடியேறச் செய்துள்ளேன். எங்கள் இறைவனே! அவர்கள் தொழுகையை நிலைநிறுத்துவதற்காக (இவ்வாறு செய்துள்ளேன்.) அவர்களை நோக்கி மனிதர்களின் உள்ளங்களைச் சாய்ந்திடச் செய்வாயாக! அவர்கள் நன்றி செலுத்துவதற்காக கனிகளிலிருந்து அவர்களுக்கு உணவளிப்பாயாக!”
தனது மக்களைக் குடியமர்த்தியதற்குரிய காரணம் அவர்கள் தொழுகையை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக வேண்டி என்று குறிப்பிடுகின்றார்கள். அவர்கள் தொழுகையை நிலைநாட்டுவதற்காகச் செய்யும் துஆவை பின்னால் பார்க்கவிருக்கின்றோம். அது தொடர்பான விளக்கங்களை அப்போது நாம் விரிவாக பார்ப்போம். இப்போது அவர்களின் இரண்டாவது கோரிக்கைக்கு வருவோம்.
“அவர்களை நோக்கி மனிதர்களின் உள்ளங்களைச் சாய்ந்திடச் செய்வாயாக!”
இது அவர்களது இரண்டாவது கோரிக்கையாகும். இந்தக் கோரிக்கையையும் அல்லாஹ் உடன் அங்கீகரித்துக் கொள்கின்றான். இதை புகாரியில் ஹதீஸ் எண் 3364 விவரிக்கின்றது. இதோ அந்த ஹதீஸ்:
பிறகு அன்னை ஹாஜர் அவர்கள் (ஸம்ஸம் தண்ணீரை) தாமும் அருந்தி தம் குழந்தைக்கும் ஊட்டினார்கள். அப்போது அந்த வானவர் அவர்களிடம், “நீங்கள் (கேட்பாரற்று) வீணாக அழிந்து போய்விடுவீர்கள் என்று அஞ்ச வேண்டாம். ஏனெனில் இங்கு இந்தக் குழந்தையும் இவருடைய தந்தையும் சேர்ந்து (புதுப்பித்துக்) கட்டவிருக்கின்ற அல்லாஹ்வின் இல்லம் உள்ளது. அல்லாஹ் தன்னைச் சார்ந்தோரைக் கைவிடமாட்டான்” என்று சொன்னார். இறையில்லமான கஅபா மேட்டைப் போன்று பூமியிலிருந்து உயர்ந்திருந்தது. வெள்ளங்கள் வந்து அதன் வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் (வழிந்து) சென்றுவிடும். இவ்வாறே அன்னை ஹாஜர் (அலை) அவர்கள் (தண்ணீர் குடித்துக்கொண்டும் பாலூட்டிக் கொண்டும்) இருந்தார்கள்.
(ஹதீஸ் தொடர்ச்சி,(புகாரி: 3364) ➚
(தன்னையும் தன் குழந்தை இஸ்மாயீலையும் பள்ளத்தாக்கில் இப்ராஹீம் (அலை) விட்டுச் செல்லும் போது, “அல்லாஹ் தான் உங்களுக்கு இப்படி கட்டளையிட்டானா?” என்று ஹாஜர் கேட்ட போது அவர்கள் ‘ஆம்’ என்று சொன்னார்கள். பதிலுக்கு, ஹாஜர் (அலை) அவர்கள் “அப்படியென்றால் அவன் எங்களைக் கைவிடமாட்டான்” என்று சொல்லிவிட்டு திரும்பிச் சென்று விட்டார்கள். அன்னையாரின் இறை நம்பிக்கை ஒளி ஜொலிக்கின்ற அந்த மணி முத்தான பதில் வார்த்தைகளையும் அல்லாஹ் ஏற்றுக் கொண்டு விட்டான் என்பதை “நீங்கள் (கேட்பாரற்று) வீணாக அழிந்து போய்விடுவீர்கள் என்று அஞ்ச வேண்டாம். ஏனெனில் இங்கு இந்தக் குழந்தையும் இவருடைய தந்தையும் சேர்ந்து (புதுப்பித்துக்) கட்டவிருக்கின்ற அல்லாஹ்வின் இல்லம் உள்ளது. அல்லாஹ் தன்னை சார்ந்தோரைக் கைவிடமாட்டான்” என்று மலக்கு சொன்ன வார்த்தைகளில் பளிச்சிடுகின்றது.)
ஹஜ், உம்ரா செய்ய வரும் மக்கள் அனைவரும் ஸஃபா மர்வாவுக்கு இடையே ஓடுகின்ற ஓட்டம் அன்னை ஹாஜர் (அலை) அவர்கள் ஓடிய ஓட்டமாகும். அன்னையாரும் அவரது அருமை மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களும் வரலாற்றில் காணாமல் போகாமல் அனாதியாகாமல், அநாதையாகவும் ஆகாமல் நீடித்து நிலைத்து நின்று கொண்டிருக்கின்றார்கள்.
இந்நிலையில் (யமன் நாட்டைச் சேர்ந்த) ஜுர்ஹும் குலத்தாரின் ஒரு குழுவினர்…. அல்லது ஜுர்ஹும் குலத்தாரில் ஒரு வீட்டார்… அவர்களைக் கடந்து சென்றார்கள். அவர்கள் கதா எனும் கணவாயின் வழியாக முன்னோக்கி வந்து மக்காவின் கீழ்ப்பகுதியில் தங்கினர் அப்போது தணணீரின் மீதே வட்டமடித்துப் பறக்கும் (வழக்கமுடைய) ஒருவகைப் பறவையைக் கண்டு இந்தப் பறவை தண்ணீரின் மீது வட்டமடித்துக் கொண்டிருக்க வேண்டும் நாம் பள்ளத்தாக்கைப் பற்றி முன்பே அறிந்திருக்கின்றோம். அப்போது இதில் தண்ணீர் இருந்ததில்லையே என்று (வியப்புடன்) பேசிக்கொண்டார்கள். பிறகு அவர்கள் ஒரு தூதுவரை அல்லது இரு தூதுவர்களை செய்தி அறிந்து வர அனுப்பினார்கள். அவர்கள் (சென்று பார்த்தபோது) அங்கே தண்ணீர் இருப்பதைக் கண்டார்கள். உடனே அவர்கள் (தம் குலத்தாரிடம்) திரும்பிச் சென்று அஙகே தண்ணீர் இருப்பதைத் தெரிவித்தார்கள். உடனே அக்குலத்தார் இஸ்மாயீலின் அன்னை தன் அருகே இருக்க முன்னே சென்று “நாங்கள் உங்களிடம் தங்கிக் கொள்ள எங்களுக்கு நீங்கள் அனுமதியளிப்பீர்களா” என்று கேட்க அவர்கள் ஆம் (அனுமதியளிக்கிறேன்) ஆனால் தண்ணீரில் உங்களுக்கு உரிமை ஏதும் இருக்காது என்று சொன்னார்கள். அவர்கள் சரி என்று சம்மதித்தனர்.
(ஹதீஸ் தொடர்ச்சி,(புகாரி: 3364) ➚
(ஜுர்ஹும் குலத்தார் தஙகிக்கொள்ள அனுமதி கேட்ட) அந்த சந்தர்ப்பம் இஸ்மாயீலின் தாயாருக்கு அவர்கள் (தனிமையால் துன்பமடைந்து) மக்களுடன் கலந்து வாழ்வதை விரும்பிக் கொண்டிருந்த வேளையில் வாய்த்தது என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்… என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ஆகவே அவர்கள் அங்கே தங்கினார்கள். தங்கள் நெருங்கிய உறவினர்களுக்கும் சொல்லியனுப்ப அவர்களும் (வந்து) அவர்களுடன் தங்கினார்கள். அதன் விளைவாக அக்குலத்தைச் சோர்ந்த பல வீடுகள் மக்காவில் தோன்றிவிட்டன.
(ஹதீஸ் தொடர்ச்சி,(புகாரி: 3364) ➚
இங்கே “அவர்களை நோக்கி மனிதர்களின் உள்ளங்களைச் சாய்ந்திடச் செய்வாயாக!” என்ற இப்ராஹீம் (அலை) அவர்களின் இரண்டாவது கோரிக்கை இனிதே நிறைவேறுகின்றது.
அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும். நீரில்லாத மக்கா நிலத்தில் நீர் சுரக்கும் சுனைகளில், நீர் ததும்பி வழிகின்ற அருவிகளில், ஆறு குளங்களில் மட்டும் வட்டமிடும் ஒரு வகை பறவைகளை கண்ட ஜுர்ஹும் கிளையினரின் விழிப்புருவங்கள் வியப்புக்குறிகளுடனும் வினாக்குறிகளுடன் விரிகின்றன.
விடையைத் தெரிந்து வர தனது தூதுவர்களையும் அனுப்புகின்றனர். அவர்கள் ஊகம் தவறாகவில்லை. தாகம் தீர்க்கும் தண்ணீர் யோகம் மக்கா நிலத்தில் அடித்திருக்கின்றது. இறுதியில். அன்னையாருக்கு அருகில் குடியமரும் பாக்கியமும் அவர்களுக்குக் கிடைக்கின்றது. எந்த மனித சஞ்சாரத்திற்காக அன்னையார் காத்திருந்தார்களோ அந்த மனித சஞ்சாரம் அவர்கள் நெஞ்சம் நிறைய வாய்க்கின்றது.
இதன் மூலம் இப்ராஹீம் (அலை) அவர்களின் இரண்டாவது துஆவும் இனிதாய் நிறைவேறுகின்றது. அன்று இஸ்மாயீல் குடியமர வந்தது இந்த புனித ஆலையத்திற்காக! அதை முன்னிட்டு தான் ஜுர்ஹும் கூட்டத்தினர் குடியமர வந்தார்கள். ஆனால் உலகில் இன்று பல்வேறு பாகங்களிலிருந்து கோடி கோடியாய் காசு பணம் செலவழித்து கோடி, கோடியான மக்கள் இந்த ஆலயத்தை நோக்கி கூடிக் கொண்டிருக்கின்றனர் என்றால் அதற்குக் காரணம் அம்மாமனிதர் செய்த பிரார்த்தனையின் பாக்கியம். அதற்கு அல்லாஹ் அளித்த அங்கீகாரம்.
“அவர்கள் நன்றி செலுத்துவதற்காக கனிகளிலிருந்து அவர்களுக்கு உணவளிப்பாயாக!”
இது அவர்களது மூன்றாவது கோரிக்கையாகும்.
இப்ராஹீம் (அலை) (பின் ஒரு சந்தர்ப்பத்தில்) அவர்கள் மகன் இஸ்மாயீல் (அலை) அவர்கள் வீட்டிற்கு வந்த போது) உங்கள் உணவு எது என்று கேட்க அவர் இறைச்சி என்று பதிலளித்தார்.
அவர்கள், “உங்கள் பானம் எது?” என்று கேட்க தண்ணீர் என்று பதிலளித்தார். இப்ராஹீம் (அலை) அவர்கள் “இறைவா! இவர்களுக்கு இறைச்சியிலும் தண்ணீரிலும் பரக்கத்தை அருள் வளத்தை அளிப்பாயாக!” என்று பிரார்த்தனை புரிந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்த நேரத்தில் அவர்களிடம் உணவு தானியம் எதுவும் இருக்கவில்லை. அப்படி எதுவும் இருந்திருந்தால் அதிலும் அருள் வளம் தரும்படி இப்ராஹீம் (அலை) அவர்கள் பிரார்த்திருப்பார்கள். ஆகவே தான் மக்காவைத் தவிர பிற இடங்களில் அவ்விரண்டையும் (இறைச்சியையும் தண்ணீரையும்) வழக்கமாகப் பயன்படுத்தி வருபவர்களுக்கு அவை ஒத்துக் கொள்வதே இல்லை என்று சொன்னார்கள்”
(ஹதீஸ் தொடர்ச்சி,(புகாரி: 3364) ➚
மேற்கண்ட இந்த ஹதீஸ், மணமுடித்த இஸ்மாயீல் (அலை) அவர்கள் மற்றும் அவர்களது மனைவியின் முக்கிய உணவு இறைச்சி என்பதை தெளிவுபடுத்துகின்றது. இறைச்சி என்றால் முக்கியமாகக் கால்நடைகள் மற்றும் மார்க்கம் அனுமதித்திருக்கின்ற வேட்டைப் பிராணிகள் மூலமே தவிர வேறு விதத்தில் கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை. கால்நடைகள் என்றால் அவை மேய்கின்ற புல் பூண்டுகள், பச்சைப் பயிர்கள் போன்ற தாவரம் இல்லாமல் கால்நடைகள் வாழ்வது சாத்தியமற்றதாகும். இந்த அடிப்படையில்
“அவர்கள் நன்றி செலுத்துவதற்காக கனிகளிலிருந்து அவர்களுக்கு உணவளிப்பாயாக!” என்ற இந்த வசனத்தில்
“அஸ்ஸமராத்தி” என்ற வார்த்தைக்கு இந்த இடத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும் விளைச்சல்கள் என்ற பொருளும் அதற்குண்டு.
“உங்களை ஓரளவு பயம் மற்றும் பசியைக் கொண்டும், செல்வங்கள், உயிர்கள் மற்றும் விளைச்சல்கள் ஆகியவற்றைக் குறைத்தும் நாம் சோதிப்போம். பொறுமையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!”
என்ற வசனத்தின் மூலத்தில் இதே அஸ்ஸமராத் என்ற வார்த்தை தான் இடம்பெறுகின்றது. இது ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் குறிக்கின்ற ஒரு சொல்லாகும். அந்த அடிப்படையில் இலை, தழை, குலைகள் போன்ற தாவரங்களை சாப்பிட்டு உயிர் வாழ்கின்ற கால்நடைகளையும் இந்த வார்த்தை எடுத்துக் கொள்ளும். ஒட்டு மொத்தமாக இந்த வார்த்தை வாழ்வாதாரத்தைக் குறிக்கின்றது என்று நாம் விளங்கலாம். அத்துடன், இதே ஹதீஸின் பிற்பகுதியில்,
(பிந்தி ஒரு கட்டத்தில்) அதன் பிறகு ஒரு நாள் இஸ்மாயீல் (அலை) அவர்கள் ஸம்ஸம் கிணற்றின் அருகேயிருக்கும் பெரிய மரத்திற்கு கீழே தனது அம்பு ஒன்றைச் செதுக்கிக் கொண்டிருந்தபோது அவரிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள் வந்தார்கள்.
(ஹதீஸ் தொடர்ச்சி,(புகாரி: 3364) ➚
(பனூ அஸ்லம் குலத்தார் சிலர் அம்பெய்யும் போட்டியில் ஈடுபட்டிருந்த போது நபி (ஸல்) அவர்கள் அவர்களைக் கடந்து சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இஸ்மாயீலின் சந்ததிகளே! அம்பெய்யுங்கள். ஏனெனில், உங்கள் தந்தை (இஸ்மாயீல் (அலை) அவர்கள்) அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார்கள். நீங்கள் அம்பெய்யுங்கள். (போட்டியில்) நான் இன்ன குலத்தாருடன் இருக்கிறேன்’’ என்று கூறினார்கள். உடனே, இரு பிரிவினரில் ஒரு சாரார் அம்பெய்வதை நிறுத்திக் கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களுக்கென்ன ஆயிற்று? ஏன் அம்பெய்யாமலிருக்கிறீர்கள்?’’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “தாங்கள் அவர்களுடன் (எதிர் தரப்பினருடன்) இருக்க, நாங்கள் எப்படி அம்பெய்வோம்?’’ என்று சொன்னார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், “அப்படியானால் நான் உங்கள் அனைவருடனும் இருக்கின்றேன். நீங்கள் அம்பெய்யுங்கள்’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: சலமா பின் அக்வஃ
இந்த ஹதீஸ் இஸ்மாயீல் (அலை) அம்பெய்யும் வீரராக வேட்டைக்காரராகத் திகழ்ந்திருக்கின்றார் என்று தெரிவிக்கின்றது. வேட்டையாடச் செல்ல வேண்டும் எனில் வேட்டைப்பிராணிகள் வாழ்ந்திருக்க வேண்டும். முக்கிய உணவு இறைச்சி என்பதால் அவர்களின் வாழ்வாதாரத்திற்கான தொழிலாக அது அமைந்திருக்கின்றது என்பதை நாம் உணரலாம். அதனால் தான் இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைச்சியில் வளம் வேண்டி துஆச் செய்திருக்கின்றார்கள். தண்ணீரிலும் வளம் வேண்டி துஆச் செய்திருக்கின்றார்கள். அப்போதைய தண்ணீர் ஸம்ஸம் தண்ணீர் என்பதால் அது ஸம்ஸம் நீரை மையமாகக் கொண்டதாகத் தான் இருக்க முடியும்.
தமிழகத்தில் மழை நீர் சேகரிப்பு என்ற திட்டத்தை முன்னாள் முதல்வர் தனது ஆட்சி காலத்தில் அறிமுகப்படுத்தினார். அது நிலத்தடி நீர்மட்டத்தை வெகுவாக அதிகரித்தது. நிலத்திலிருந்து கிணறு, போர் மூலம் நீர் கிடைக்க வேண்டுமானால் நிலத்தடி நீர்மட்டம் இருந்தாக வேண்டும், இது தான் அறிவியல்.
நாமே வானிலிருந்து அளவுடன் மழையைப் பொழிவித்து, அதைப் பூமியில் தங்க வைக்கிறோம். நாம் அதைப் போக்குவதற்கும் வலிமையுடையோம்.
என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அல்லாஹ்வே வானிலிருந்து மழையை இறக்கி, அதைப் பூமியில் நீரூற்றுகளாக ஓடச் செய்கிறான் என்பதை நீர் சிந்திக்கவில்லையா?
இந்த வசனங்கள் இன்றைய அறிவியலை நிரூபிக்கும் விதத்தில் அமைந்திருக்கின்றன.
ஆனால் மக்கா நிலம் ஒரு பாலைவன நிலம். பாலைவனத்தில் மிக மிக அரிதாகவே மழை பெய்யும். அந்த இடத்தில் இப்படிப்பட்ட ஓர் ஊற்று இன்னும் பெருக்கெடுத்து இலட்சக் கணக்கில் வரும் மக்களுக்கு அவர்கள் தத்தமது ஊர்களுக்குக் கொண்டு செல்கின்றனர் என்றால் இது அல்லாஹ்வின் அருள் வளத்தைத் தவிர வேறு எதுவும் காரணமாக இருக்க முடியாது.
மொத்தத்தில், அந்தப் பெருமகனாரின் துஆவின் காரணமாக அன்றைக்கு இஸ்மாயீல் நபியின் குடும்பம் மட்டும் அருள்வளம் காணவில்லை. ஆண்டு தோறும் வருகின்ற பல இலட்சக்கணக்கான மக்கள் அறுக்கின்ற பலிப் பிராணிகளின் இறைச்சியிலும் நின்று நீடித்துத் தொடர்கின்றது.
இது ஒருபுறமிருக்க மக்கா விவசாயம் இல்லாத பாலைவனம் தான். ஆனால் உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அனைத்துவிதமான பருவகாலப் பழங்களும் அங்கு வந்து கொட்டுகின்றன. அம்பாரமாய் குவிகின்றன. இதற்கும் இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது மக்களைப் புனித ஆலயத்திற்கு அருகில் விட்டு விட்டுச் செய்த பிரார்த்தனை தான் அடிப்படைக் காரணமாகும். அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்.
இதைப் பின்வரும் வசனம் உறுதி செய்கின்றது.
“உம்முடன் நாங்களும் இந்த நேர்வழியைப் பின்பற்றினால் எங்கள் நாட்டிலிருந்து சூறையாடப்பட்டு விடுவோம்” என்று அவர்கள் கூறுகின்றனர். நாம் அவர்களுக்குப் பாதுகாப்புமிக்கப் புனிதத் தலத்தைத் தங்குமிடமாக ஆக்கவில்லையா? அதனை நோக்கி எல்லா வகையான பழங்களும் நம்மிடமிருந்து உணவாகக் கொண்டு வரப்படுகின்றன. எனினும் அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.
உலகில் வேறு மற்ற நாடுகளில் சிலவகை பழங்கள் சில குறிப்பிட்ட பருவகாலங்களில் மட்டுமே கிடைக்கும். குளிர்காலங்களில் கிடைக்கும் பழங்கள், கோடையில் கிடைக்காது. கோடையில் கிடைக்கும் பழங்கள் குளிர் காலங்களில் கிடைக்காது.
ஆனால் மக்காவில் எல்லாக் காலங்களிலும் எல்லாப் பழங்களும் கிடைக்கின்றன. இது ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை) அவர்கள் செய்த பலனே அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?
ஆகவே நாமும் மனம் தளராமல் பொறுமைனயுடனும் இறை நம்பிக்கையுடனும் பிராா்த்தனை செய்வோம்.. இப்ராஹீம் (அலை) அவா்களின் பிராா்த்தனையை இறைவன் ஏற்றுக்கொண்டதைப் போன்று நம் பிராா்த்தனையையும் நிச்சயமாக அல்லாஹுத்தாலா ஏற்றுக்கொள்வான்.. இன்ஷா அல்லாஹ்..