இப்ராஹீம் நபியின் ஏற்றுக் கொள்ளப்பட்ட துஆக்கள் – பாகம் 1
இப்ராஹீம் (அலை) அவர்களின் ஏற்றுக் கொள்ளப்பட்ட துஆக்கள்
கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!
ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைத்தூதர்களில் ஒரு தனித்துவமிக்க ஒரு தூதர் ஆவார்கள். ஏகத்துவப் பிரச்சாரத்தின் போது காலம் பூராவும் தஃவா களத்தில் தனித்தே நின்று போராடினார்கள். சொந்த ஊர் மக்கள் தீக்குண்டத்தைப் பரிசாக அளித்தார்கள்.
அதன் பின்னர் தனது மனைவியுடன் நாடு துறந்து செல்கின்றார்கள். அடைக்கலம் தேடிப் போன நாட்டில் அவர்களது மனைவி சாரா அம்மையாருக்கு அந்நாட்டு அரசன் மூலம் ஆபத்து சூழவிருக்கும் சூழ்நிலை ஏற்படுகின்றது. ஆனால் அல்லாஹ் அன்னை சாரா (அலை) அவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றி விட்டான். அந்தச் சந்தர்ப்பத்தில் அவர்கள் அன்னையாரை நோக்கி,
‘சாராவே! இப்பூமியில் உன்னையும் என்னையும் தவிர இறை நம்பிக்கை உடையவர் எவரும் இல்லை’ என்று கூறுகின்றார்கள். (ஹதீஸ் சுருக்கம்)
இவ்விருவர் அல்லாமல் இறைநம்பிக்கையாளர் இன்னொரு உண்டென்றால் அது லூத் (அலை) ஆவார்கள். இம்மூவரை தவிர ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டோர் அன்று யாருமில்லை. பின்னால் தான் ஏகத்துவத்தை நம்பிய கூட்டம் உருவாகின்றது. அதுவரைக்கும் அவர்களைத் தனிமை தான் துரத்தியது. அந்தத் தனிமையிலும் மனம் தளராமல், துவண்டு போகாமல் ஏகத்துவத்தை எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது துணையாக ஆனவன் எல்லாம் வல்ல ரஹ்மான் மட்டுமே! அதனால் தான் திருக்குர்ஆனில்,
‘இப்ராஹீமை, அல்லாஹ் உற்ற நண்பராக எடுத்துக் கொண்டான்’
(அல்குர்ஆன்: 4:125)➚ என்று குறிப்பிடுகின்றான்.
இப்படி தனித்து நின்ற போராடிய அந்தத் திருமகனாருக்கு தனியோன் அல்லாஹ் உற்ற நன்பணாக ஆகி அவர்களை கண்ணியப்படுத்துகின்றான்.
நண்பன் என்றதும் அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களுக்குக் கேட்டதை எல்லாம் கேட்ட நேரத்தில் கொடுத்தானா என்றால் அது தான் இல்லை. இதோ அவர்கள் செய்த ஒரு துஆ,
“நான் என் இறைவனை நோக்கிச் செல்கிறேன். அவன் எனக்கு வழிகாட்டுவான்” என்று அவர் கூறினார்.
தீக்குண்டத்திலிருந்து காக்கப்பட்ட பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் ஹிஜ்ரத் அதாவது நாடு துறந்து செல்வதற்காகக் கூறும் வார்த்தைகளாகும். இந்த கட்டத்தில்தான் அவர்கள் பின்வரும் துஆவைச் செய்கின்றார்கள்.
“என் இறைவனே! எனக்கு (வழித் தோன்றலாக) நல்லவரை அளிப்பாயாக!” (என்று இறைஞ்சினார்.)
நல்லதொரு சந்ததியை தருவாயாக! என்று இறைவனிடம் கேட்டார்கள். ஆனால் அதை ஏற்றுக் கொண்டு அல்லாஹ் கூறும் வார்த்தைகள் இதோ:
“எனவே, பொறுமைமிக்க ஒரு குழந்தையைக் கொண்டு அவருக்கு நற்செய்தி கூறினோம்”.
ஆனால் பொறுமை மிக்க நல்ல குழந்தை உடனே கிடைத்து விட்டதா? என்றால் அதுதான் இல்லை. அதாவது அவர்கள் கேட்ட நேரத்தில் அதை அளிக்கவில்லை. பின்னால் தான் அளிக்கின்றான். இந்த வசனத்தின் முன், பின் வசனங்களைப் பார்க்கும் போது அவர்கள் இந்தப் பிரார்த்தனை செய்யும் காலம் அவர்களது வாலிப வயதுக் காலம் என்று புரிந்து கொள்ளலாம். ஆனால் அவர்களுக்கு அல்லாஹ் நல்ல சந்ததியை வழங்கிய காலமோ வயோதிகக் காலம். அதைக் கூறும் வசனம் இதோ:
“வயோதிகத்தில் எனக்கு இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் வழங்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். எனது இறைவன் பிரார்த்தனையைச் செவியேற்பவன்”.
ஆம்! அவர்களுக்குச் சந்ததி, பிள்ளை பாக்கியம் கிடைத்தது அவர்களது வயதான பருவத்தில் தான் என்பதை இந்த வசனம் தெளிவாகத் தெரிவிக்கின்றது. இது தெரிவிப்பது என்ன? இப்ராஹீம் (அலை) அல்லாஹ்வின் நண்பர் எனினும் அவர்கள் அவனிடத்தில் கேட்ட உடன், அவர்கள் கேட்ட நேரத்தில் அவன் கொடுக்கவில்லை! அவன் விரும்பிய நேரத்தில் கொடுத்தான். ஆனால் தனது நண்பனின் முடிவை அப்படியே மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவர்களாக இறைவனுக்கு இப்ராஹீம் (அலை) நன்றி செலுத்துவதை நாம் பார்க்க முடிகின்றது.
இன்று இஸ்லாமிய சமுதாய மக்களில் வழிகெட்ட கூட்டத்தினர் அவ்லியாக்கள் என்ற ஒரு சாராரை உருவாக்கி, அவர்களிடம் போய் தங்கள் கோரிக்கையைக் கேட்டால் அவர்கள் அல்லாஹ்விடம் தங்கள் செல்வாக்கையும் சொல்வாக்கையும் பயன்படுத்தி உடனே கேட்டு வாங்கித் தந்து விடுவார்கள். அதாவது பைபாஸ் வழியாக போய் பரிந்துரை பெற்று, நேரடியாக அல்லாஹ்விடம் கேட்டுப் பெறுபவர்களை விட முந்திக் கொண்டு பெற்றுத் தந்து விடுவார்கள் என்ற தவறான நம்பிக்கையை தங்கள் மனதில் வைத்திருக்கின்றார்கள்.
அதிலும் குறிப்பாக முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியை சகலகலா வல்லவனாக, நினைத்ததை நினைத்த நேரத்தில் முடிப்பவர்களாக, கேட்டதைக் கேட்ட நேரத்தில் பெற்றுத் தருபவர்களாக மக்கள் கற்பனை செய்து வைத்திருக்கின்றார்கள். பொதுவாக எதையும் குறுக்கு வழியில் எளிதில் அடைய முயல்வது என்பது மக்களின் இயல்பில் அமைந்தது. அந்தப் பலவீனத்தைப் பயன்படுத்தி இந்தச் சாரார் அவர்களை வழிகெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதன் மூலம் அல்லாஹ்விடம் கேட்பவர்கள் இளித்தவாயர்கள், ஏமாளிப் பேர்வழிகள் என்றும், தாங்கள் புத்திசாலிகள் என்பது போன்றும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வைத்திருக்கின்றார்கள்.
இதில் வேடிக்கைக்கூத்து என்னவெனில், உயிருடன் இருக்கும் போதே முஹ்யித்தீன் போன்ற அவ்லியாக்களுக்கு எவ்வித ஆற்றலும் இல்லை. இந்த இலட்சணத்தில், இறந்து போன, எதற்கும் இயலாத, எதையும் பார்க்க முடியாத, எதையும் செவியுற முடியாத அவர்களிடம் போய் பிரார்த்தனை செய்து கேட்பது கொடுமையிலும் கொடுமையாகும்.
இங்கே இப்ராஹீம் நபி அவர்களுக்கு அவர்கள் நினைத்த நேரத்தில், நினைத்த மாத்திரத்தில் அல்லாஹ் அளிக்கவில்லை என்பதைப் பார்க்கின்றோம். இத்தனைக்கும் இப்ராஹீம் (அலை) அவர்களை அவன் தனது நண்பனாக ஆக்கியிருக்கின்றான். இருந்தும் அவர்கள் கேட்ட நேரத்தில் பிள்ளை பாக்கியத்தைக் கொடுக்கவில்லை. இதுதான் வல்ல ரஹ்மானின் தன்மை. இப்ராஹீம் நபி (அலை) அவர்களுக்கு அவர்கள் கேட்ட நேரத்தில் கேட்ட மாத்திரத்தில் அல்லாஹ் கொடுக்கவில்லை என்பதன் அர்த்தத்தைப் புரிய வைப்பதற்காகத் தான் இப்படி ஓர் விளக்கம் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றது.
இப்ராஹீம் (அலை) அவர்கள் கேட்ட இந்த துஆவில் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கின்றது. சந்ததி பாக்கியத்தைக் கேட்கும் போது…
ரப்பி ஹப் லீ மினஸ்ஸாலிஹீன்
‘எனக்கு நல்லவர்களில் உள்ள பிள்ளையைக் கொடு’ என்று பிரார்த்திக்கின்றார்கள்.
இது நாம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல முன்மாதிரியாகும். அவர்கள் கேட்ட மாதிரியே இஸ்மாயீல், இஸ்ஹாக் எனும் இரு குழந்தைகளை எல்லாம் வல்ல ரஹ்மான் கொடுத்து, அவ்விருவரையும் ஸாலிஹான குழந்தைகளாகவே ஆக்கிவிட்டான். இதை நாம் திருக்குர்ஆனில் காணமுடிகின்றது.
இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு நற்செய்தி சொல்லும் போதே,
“பொறுமைமிக்க ஒரு குழந்தையைக் கொண்டு அவருக்கு நற்செய்தி கூறினோம்” (அல்குர்ஆன்: 37:101)➚ என்று அல்லாஹ் சொல்கின்றான்.YY
அவருடன் சேர்ந்து இஸ்மாயீல்(அலை) அவர்கள் உழைக்கும் பருவத்தை அவர் அடைந்தபோது,
“என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பதாகக் கனவில் கண்டேன். நீ என்ன நினைக்கிறாய் என்பதை யோசித்துக் கொள்!” என்று கூறினார். “என் தந்தையே! உமக்கு ஏவப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் பொறுமையாளர்களில் உள்ளவனாக என்னைக் காண்பீர்கள்” என்று அவர் கூறினார்.
இப்ராஹீம் நபி (அலை) நீண்ட நாட்கள் கழித்து தேடிப் பெற்ற செல்வத்துடன் பாசத்துடன் நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கையில், அல்லாஹ்வின் அடுத்த சோதனை ‘அவரை அறுத்துப் பலியிடு’ என்று கனவில் காட்சி மூலம் வருகின்றது. அதைச் செயல்படுத்தும் போது தனது மகன் இஸ்மாயீல் அவர்களை நோக்கி அறுத்துப் பலியிடப் போவதாகத் தெரிவித்த மாத்திரத்தில் அவர்கள் தனது தந்தையிடம், “என் தந்தையே! உமக்கு ஏவப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் பொறுமையாளர்களில் உள்ளவனாக என்னைக் காண்பீர்கள்” என்று கூறினார்கள். இதன் மூலம் அவர்கள் ஒரு சாலிஹான நல்ல பொறுமைமிக்க குழந்தையாக நடந்து கொள்வதை நாம் காணலாம். இப்ராஹீம் நபி (அலை) அவர்கள் கேட்ட மாதிரி அல்லாஹ் அவர்களுக்கு சாலிஹான பிள்ளையாக அளித்து விட்டான்.
“இஸ்மாயீல், இத்ரீஸ், துல்கிஃப்ல் ஆகியோரையும் (நினைவு கூர்வீராக!) அவர்கள் அனைவரும் பொறுமையாளர்களில் உள்ளவர்கள்”.
“நம் அருளில் அவர்களை நுழைத்துக் கொண்டோம். அவர்கள் நல்லோரில் உள்ளவர்கள்”.
எல்லாம் வல்ல அல்லாஹ் 21வது அத்தியாயத்தில், மேற்கண்ட வசனத்தில் அடுக்கியிருக்கும் நபிமார்களில் பட்டியலில், இஸ்மாயீல் (அலை) அவர்களை சேர்த்து குறிப்பிட்டு விட்டு அவர்களை நல்லோர்களில் சாலிஹீன்களில் ஆக்கி விட்டோம் என்று குறிப்பிடுகின்றான். இப்ராஹீம் (அலை) கேட்டதற்கேற்ப இஸ்மாயீல் (அலை) அவர்களை நல்லோர்களில் பட்டியலில் சேர்த்ததற்கு இது மற்றொரு சான்றாகும்.
இரு நல்ல பிள்ளைகளான இஸ்மாயீல், இஸ்ஹாக் (அலை)
இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அன்னை ஹாஜர் மூலம் பிறந்தவர்கள் தான் இஸ்மாயீல் (அலை) அவர்கள் என்பதை நாமறிவோம். அது போன்று அண்ணல் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு சாரா என்ற மூத்த மனைவி உண்டு. அவர்களுக்குப் பிறந்தவர்கள் தான் இஸ்ஹாக் நபி (அலை) ஆவார்கள். அவர்களைப் பற்றி திருக்குர்ஆனில் குறிப்பிடுகையில்,
அவருக்கு, (இப்ராஹீமுக்கு) நல்லோரிலுள்ள நபி இஸ்ஹாக் (எனும் மகன்) குறித்து நற்செய்தி கூறினோம்.
இரண்டாவதாக,
இஸ்ஹாக் (அலை) அவர்களை நல்லோரிலுள்ளவராக அதாவது சாலிஹீன்களில் உள்ளவராக அளித்திருக்கின்றோம் என்று சொல்கின்றான்.
அதுபோல் அல்குர்ஆன் 21வது அத்தியாயத்தில்,
அவருக்கு (இப்ராஹீமுக்கு) இஸ்ஹாக்கையும், அதிகப்படியாக யஃகூபையும் பரிசளித்தோம். அனைவரையும் நல்லவர்களாக ஆக்கினோம்.
இஸ்ஹாக்கை (அலை) மகனாகவும், யஃகூபை (அலை) பேரப்பிள்ளையாகவும் அளித்து இருவரையும் சாலிஹீன்களாக, நல்லவர்களாக ஆக்கி வைத்ததாகக் குறிப்பிடுகின்றான். ‘எனக்கு நல்லோர்களில் உள்ள பிள்ளைகளைத் தருவாயாக’ இப்ராஹீம் நபி (அலை) என்று கேட்ட மாதிரி நல்லோர்களாக அளித்திருக்கின்றான். அவர்களது துஆவை அப்படியே அங்கீகரித்திருக்கின்றான் என்பதை மேற்கண்ட வசனங்கள் உறுதிப் படுத்துகின்றன. ஒரே ஒரு வித்தியாசம் அது யாதென அவர்கள் கேட்ட நேரத்தில், அந்தப் பாக்கியத்தை அளிக்கவில்லை. அல்லாஹ், தான் நினைத்த நேரத்தில் அந்தப் பாக்கியத்தை அளிக்கின்றான் என்பது தான் அந்த வித்தியாசமாகும்.
இப்ராஹீம் (அலை) அவர்களைப் பின்பற்றி, அவர்களுக்குப் பின்னால் வந்த இறைத்தூதர் ஜகரிய்யா (அலை) அவர்கள் தனக்காக சந்ததியைக் கேட்கும் போது தூய குழந்தையை, தூய சந்ததியைத் தா என்று இறைவனிடம் துஆ செய்கின்றார்கள்.
இதோ அந்த துஆ:
அவ்விடத்திலேயே ஸகரிய்யா தமது இறைவனைப் பிரார்த்தித்தார். “என் இறைவனே! உன்னிடமிருந்து தூய குழந்தையை எனக்குத் தருவாயாக! நீயே பிரார்த்தனையைச் செவியேற்பவன்” என்று கூறினார்.
அல்லாஹ்விடத்தில் சந்ததி பாக்கியத்தைக் கேட்கும் போது நல்ல குழந்தையை, தூய குழந்தையைத் தா என்று பிரார்த்திக்க வேண்டும் இந்த வசனம் நமக்கு வழி காட்டுகின்றது. சுவனத்திற்குச் சொந்தக்காரர்களான ரஹ்மானின் அடியார்கள் துஆ செய்கின்ற போது,
“எங்கள் இறைவனே! எங்கள் மனைவியரிலும், எங்கள் வழித்தோன்றல்களிலும் எங்கள் கண்களுக்குக் குளிர்ச்சியை அளிப்பாயாக! எங்களை இறையச்சமுடையோருக்கு வழிகாட்டியாக ஆக்குவாயாக!” என்று பிரார்த்திப்பார்கள்.
என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் நபி (ஸல்) அவர்களுக்கும் நமக்கும் வழிகாட்டுகின்றான்
அது போன்று சொர்க்கவாசிகளான நன்மக்கள் செய்கின்ற பிரார்த்தனை பற்றிக் கூறுகிறான்.
“என் இறைவனே! எனக்கும், என் பெற்றோருக்கும் நீ வழங்கிய அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ பொருந்திக் கொள்ளும் நற்செயலைச் செய்வதற்கும் எனக்கு வழிகாட்டுவாயாக! எனது பிள்ளைகளை எனக்குச் சீர்படுத்துவாயாக! நான் உன்னை நோக்கித் திரும்பி விட்டேன். நான் முஸ்லிம்களில் உள்ளவன்” எனக் கூறுகிறான்.
பிள்ளைகள் பிறந்த பிறகும் அவர்களாக நல்லவர்களாக வளர்வதற்கும் வாழ்வதற்கும் துஆ செய்ய வழி காட்டுகின்றது. நாம் கண்ட இந்த துஆக்கள் அத்தனைக்கும் முன்மாதிரியாக இப்ராஹீம் (அலை) அவர்கள் தான் முன்மாதிரியாக இருக்கின்றார்கள். இப்ராஹீம் அவர்கள் செய்த துஆவையொட்டி அல்லாஹ் கூறுகின்ற இதர துஆக்களையும் கூறும் போது மக்கள் மனனம் செய்ய வாய்ப்பாக இருக்கும் என்பதற்காக அவற்றையும் இங்கு இணைத்துக் கூறியுள்ளோம்.
“எங்கள் இறைவனே! விவசாயமற்ற பள்ளத்தாக்கில் புனிதமான உனது ஆலயத்திற்கு அருகில் என் மக்களைக் குடியேறச் செய்துள்ளேன். எங்கள் இறைவனே! அவர்கள் தொழுகையை நிலைநிறுத்துவதற்காக (இவ்வாறு செய்துள்ளேன்.) அவர்களை நோக்கி மனிதர்களின் உள்ளங்களைச் சாய்ந்திடச் செய்வாயாக! அவர்கள் நன்றி செலுத்துவதற்காக கனிகளிலிருந்து அவர்களுக்கு உணவளிப்பாயாக!”
இது இப்ராஹீம் நபி (அலை) அவர்கள் இறைவனிடம் கேட்டு அவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இன்னொரு துஆவாகும்.
இந்த துஆவிற்கு ஒரு வரலாற்றுப் பின்னணி இருக்கின்றது. அதை சுருக்கமாக இங்கே பார்த்துக் கொள்வது மிகவும் பொருத்தமாகும்.
இப்ராஹீம் (அலை) அவர்கள் ஹாஜர் (தம் மகன்) இஸ்மாயீலுக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கும் காலக் கட்டத்தில் இருவரையும் கொண்டு வந்து அவர்களை கஅபாவின் மேல்பகுதியில் (இப்போதுள்ள) ஸம்ஸம் கிணற்றிற்கு மேல் பெரிய மரம் ஒன்றின் அருகே வைத்துவிட்டார்கள். அந்த நாளில் மக்காவில் எவரும் இருக்கவில்லை. அஙகு தண்ணீர் கூட கிடையாது. இருந்தும் அவ்விருவரையும் அங்கே இருக்கச் செய்தார்கள். அவர்களுக்கு அருகே பேரீச்சம்பழம் கொண்ட தோல்பை ஒன்றையும் தண்ணீருடன் கூடிய தண்ணீர்ப் பை ஒன்றையும் வைத்தார்கள்.
பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் (அவர்களை அங்கேயே விட்டு விட்டு தமது ஷாம் நாட்டிற்கு) திரும்பிச் சென்றார்கள்.
அப்போது அவர்களை இஸ்மாயீலின் அன்னை ஹாஜர் (அலை) அவர்கள் பின்தொடர்ந்து வந்து, ‘இப்ராஹீமே! மனிதரோ வேறெந்த பொருளுமோ இல்லாத இந்தப் பள்ளத்தாக்கில் எங்களை விட்டு விட்டு நீங்கள் எங்கே போகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். இப்படிப் பல முறை அவர்களிடம் கேட்டார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் அவரை திரும்பிப் பார்க்காமல் நடக்கலானார்கள்.
ஆகவே அவர்களிடம் ஹாஜர் (அலை) அவர்கள், ‘அல்லாஹ் தான் உங்களுக்கு இப்படி கட்டளையிட்டானா?’ என்று கேட்க அவர்கள் “ஆம்” என்று சொன்னார்கள். அதற்கு ஹாஜர் (அலை) அவர்கள், ‘அப்படியென்றால் அவன் எங்களைக் கைவிடமாட்டான்’ என்று சொல்லிவிட்டு திரும்பிச் சென்று விட்டார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் (சிறிது தூரம்) நடந்து சென்று மலைக் குன்றின் அருகே அவர்களை எவரும் பார்க்காத இடத்திற்கு வந்தபோது தம் முகத்தை இறையில்லம் கஅபாவை நோக்கி, பிறகு தம் இரு கரங்களையும் உயர்த்தி (பின்வரும்) இந்த சொற்களால் பிரார்த்தித்தார்கள். “எங்கள் இறைவனே! விவசாயமற்ற பள்ளத்தாக்கில் புனிதமான உனது ஆலயத்திற்கு அருகில் என் மக்களைக் குடியேறச் செய்துள்ளேன். எங்கள் இறைவனே! அவர்கள் தொழுகையை நிலைநிறுத்துவதற்காக (இவ்வாறு செய்துள்ளேன்.) அவர்களை நோக்கி மனிதர்களின் உள்ளங்களைச் சாய்ந்திடச் செய்வாயாக! அவர்கள் நன்றி செலுத்துவதற்காக கனிகளிலிருந்து அவர்களுக்கு உணவளிப்பாயாக!” (அல்குர்ஆன்: 14:37)➚.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி)
இது, இப்ராஹீம் நபி (அலை) செய்த துஆவின் பின்னணியை விளக்கும் ஹதீஸ் ஆகும். இதை இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போம்.
நீண்ட காலத்திற்குப் பிறகு, தான் கண்ட தனது செல்லக்குழந்தை இஸ்மாயீலை கொஞ்சி, குலாவிக் கொண்டிருக்கும் வேளையில் அவரையும் அவரது மனைவி அன்னை ஹாஜரையும் அல்லாஹ்வின் கட்டளைப்படி இன்றைய மக்கா அமைந்திருக்கும் பகுதியில் விட்டு விட்டு இப்ராஹீம் (அலை) திரும்பிப் பார்க்காமலேயே திரும்பி வருகின்றார்கள். அன்றைய மக்காவில், விடுதிகள் இல்லை. வீதிகள் இல்லை. கையில் வைத்திருக்கும் பையில் உள்ள தண்ணீர் மற்றும் பேரீத்தம்பழங்களைத் தவிர்த்து குடிப்பதற்குத் தண்ணீரோ, உணவு பண்டமோ உயிர் வாழ்வதற்கான வேறெந்த சாதனங்களோ, சாமான்களோ இல்லை. நீர்ப்பாசனம் கொண்ட விவசாய நிலமாகவோ பயிர் விளைச்சல் காணுகின்ற வளமிக்க வேளாண்மைத் தலமாகவோ அது இல்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக மனித சஞ்சார மில்லாத ஒரு பாலைவனத்திற்குள் அல்லாஹ்வின் உத்தரவுக்கேற்ப விட்டுச் செல்கின்றார்கள். பால் குடிக்கும் பச்சிளம் குழந்தையையும் தனது மனைவியையும் ஆள் அரவமற்ற இடத்தில் விட்டுச் செல்வதற்கு இப்ராஹீம் நபி (அலை) அவர்கள் ஈவு, இரக்கமில்லாத கல் மனம் கொண்டவர்கள் கிடையாது. இறைவனின் கட்டளைப்படியே அவர்கள் இவ்வாறு நடக்கின்றார்கள். தொட்டு தழுவிய தனது கணவர் விட்டுச் செல்லும்போது அன்னை ஹாஜர் (அலை) அவர்கள், இது இறைக்கட்டளையா? என சட்டென சுதாரித்துக் கேட்கிறார்கள். அவர்கள் “ஆம் என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்ன பிறகு அப்படியானால் அந்த இறைவன் என்னையும் என் செல்லப் பிள்ளையையும் கைவிட மாட்டான் என்று சொல்கின்றார்கள்.
அவர்களின் இந்த வார்த்தையில் இறைநம்பிக்கை தீயாய் தெறித்துப் பிரகாசிப்பதை நாம் பார்க்க முடிகின்றது. என்ன மாதிரியான உறுதிப்பாடு அந்த அன்னையிடத்திலிருந்து வெளிப்படுகின்றது என்பதை இந்தச் சம்பவத்தில் பார்க்கின்றோம். இதன் பின்னர் தான் இப்ராஹீம் நபி (அலை) அவர்கள் பாச மேலீட்டால் அல்லாஹ்விடம் மனமுருகி மேற்கண்ட பிரார்த்தனையைச் செய்கின்றார்கள். அவர்கள் அங்கிருந்து கிளம்பி விட்டார்கள். இப்போது அவர்களின் பிரார்த்தனையின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக வல்ல ரஹ்மான் நிறைவேற்றும் அற்புதம் நடந்தேறுகின்றது.
நீரின்றி அமையாது உலகு என்பார்கள். அது போன்று தாய்க்கும் பிள்ளைக்கும் மக்கா என்ற அந்த உலகம் நீரில்லாத, அந்த நற்பேறில்லாத உலகமாக ஆகி விட்டது. தாய்க்கும் பிள்ளைக்கும் பிறந்த முதல் சோதனையே தாகத்திற்குத் தண்ணீர் கிடைக்காமல் போனது தான். அன்றைய மக்கா ஆற்று நீரோ அல்லது ஊற்று நீரோ இல்லாத ஒரு வறண்ட பூமி. அதை புகாரியின் அதே ஹதீஸ் விவரிக்கின்றது.
இஸ்மாயீலின் அன்னை, இஸ்மாயீலுக்குப் பாலூட்டவும் அந்தத் தண்ணீரிலிருந்து (தாகத்திற்கு நீர்) அருந்தவும் தொடங்கினார்கள். தண்ணீர்பையில் இருந்த தண்ணீர் தீர்ந்துவிட்டபோது அவரும் தாகத்திற்குள்ளானார். அவருடைய மகனும் தாகத்திற்குள்ளானார்.
தம் மகன் (தாகத்தால்) புரண்டு புரண்டு அழுவதை – அல்லது தரையில் காலை அடித்துக்கொண்டு அழுவதை – அவர்கள் பார்க்கலானார்கள். அதைப் பார்க்கப் பிடிக்காமல் (சிறிது தூரம்) நடந்தார்கள். பூமியில் தமக்கு மிக அண்மையிலுள்ள மலையாக ஸஃபாவைக் கண்டார்கள். அதன் மீது (ஏறி) நின்றுகொண்டு (மனிதர்கள்) யாராவது கண்ணுக்குத் தென்படுகிறார்களா என்று நோட்டமிட்டபடி பள்ளத்தாக்கை நோக்கிப் பார்வையைச் செலுத்தினார்கள். எவரையும் அவர்கள் காணவில்லை. ஆகவே, ஸஃபாவிலிருந்து இறங்கிவிட்டார்கள்.
இறுதியில் பள்ளத்தாக்கை அவர்கள் அடைந்தபோது தமது மேலங்கியின் ஓரத்தை உயர்த்திக்கொண்டு சிரமப்பட்டு ஓடும் ஒரு மனிதனைப்போன்று ஓடிச்சென்று பள்ளத்தாக்கைக் கடந்தார்கள். பிறகு மர்வா மலைக் குன்றுக்கு வந்து அதன் மீது (ஏறி) நின்று யாராவது தென்படுகிறார்களா என்று நோட்டமிட் டார்கள். எவரையும் காணவில்லை. இவ்வாறே ஏழு முறைகள் செய்தார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘இதுதான் (இன்று ஹஜ்ஜில்) மக்கள் ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையே செய்கின்ற “சஃயு” (தொங்கோட்டம்) ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
பிறகு அவர்கள் மர்வாவின் மீது ஏறி நின்று கொண்டபோது ஒரு குரலைக் கேட்டார்கள். உடனே, ‘‘சும்மாயிரு” என்று தமக்கே கூறிக்கொண்டார்கள். பிறகு, காதைத் தீட்டிக்கொண்டு கேட்டார்கள். அப்போதும் (அதே போன்ற குரலைச்) செவியுற்றார்கள். உடனே, ‘‘(அல்லாஹ்வின் அடியாரே!) நீங்கள் சொன்னதை நான் செவியுற்றேன். உங்களிடம் உதவியாளர் எவரேனும் இருந்தால் (என்னிடம் அனுப்பி என்னைக் காப்பாற்றுங்கள்)” என்று சொன்னார்கள்.
அப்போது அங்கே தம்முன் வானவர் ஒருவரை (இப்போதுள்ள) ஸம்ஸம் (கிணற்றின்) அருகே கண்டார்கள். அந்த வானவர் தம் குதிகாலால் (மண்ணில்) தோண்டினார். – அல்லது ‘‘தமது இறக்கையால் தோண்டினார்கள்” என்று அறிவிப்பாளர் சொல்லியிருக்கலாம் – அதன் விளைவாகத் தண்ணீர் வெளிப்பட்டது. உடனே ஹாஜர் (அலை) அவர்கள் அதை ஒரு தடாகம்போல் (கையில்) அமைக்கலானார்கள்; அதைத் தம் கையால் இப்படி (‘‘ஓடிவிடாதே! நில்” என்று சைகை செய்து) சொன்னார்கள். அந்தத் தண்ணீரை அள்ளித் தமது தண்ணீர்பையில் ஊற்றலானார்கள். அவர்கள் அள்ளியெடுக்க எடுக்க அது பொங்கியபடியே இருந்தது.
‘‘நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ், இஸ்மாயீல் (அலை) அவர்களின் அன்னைக்குக் கருணைபுரிவானாக! ஸம்ஸம் நீரை அவர் அப்படியே விட்டுவிட்டிருந்தால் – அல்லது அந்தத் தண்ணீரிலிருந்து அள்ளியிருக்காவிட்டால் – ஸம்ஸம் நீர் பூமியில் ஓடும் ஓர் ஊற்றாக மாறிவிட்டிருக்கும்’ என்று சொன்னார்கள்” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ், தான் நிகழ்த்தவிருந்த ஓர் அற்புதத்தைப் பாலைவனத்தில் நிகழ்த்தி, தான் நினைத்த வரலாற்றைப் படைத்திருக்கின்றான். குடியிருக்கும் மக்களுக்குக் குடிநீரே முதல் வாழ்வாதாரம். அந்தக் குடிநீருக்கு ஓர் ஊற்று உதயமாகி விட்டது. பின்னாளில் அதுதான் இறைநம்பிக்கை கொண்ட அத்தனை மக்களின் இதயமாகி விட்டது. உலக மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் ஒரு நகரம் உதயமாவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு விட்டது.
விவசாயமில்லாத, அதாவது தண்ணீரில்லாத ஒரு பள்ளத்தாக்கில் என் சந்ததியை விட்டுச் செல்கின்றேன் என்று இப்ராஹீம் (அலை) சொன்னார்கள். தவித்த வாய் பருகுவதற்குத் தண்ணீர் கூட இல்லை என்று தனது மனக்குறையை, மனக்குமுறலை இறைவனிடம் கொட்டித் தீர்த்தார்கள். அல்லாஹ் முதல் கட்டமாக, முதல் கட்டமைப்பாக நீருற்றை ஓட வைத்து அவர்களது மனக்குறையை போக்கி அவர்கள் மறைமுகமாக வேண்டிய நீராதாரத்தை நிறைவாக வழங்கி விட்டான். இந்த துஆவில் இடம்பெற்ற இப்ராஹீம் நபியின் கோரிக்கை நிறைவேறியது. இப்ராஹீம் (அலை) அவா்கள் செய்த பிராா்த்தனை நிறைவேறும் வரை பொறுமையாக இருந்ததைப்போன்று இன்ஷா அல்லாஹ் நாமும் நமது பிராா்த்தனை நிறைவேறும் வரை பொறுமையுடன் இருப்போம்… இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக நமது பிராா்த்தனையை இறைவன் நிறைவேற்றுவான்.