ரஜப் மாத பித் அத்களில் கஸ்ஸாலியின் பங்கு
ரஜப் மாத பித் அத்களில் கஸ்ஸாலியின் பங்கு
கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!
ரஜப் மாதத்தின் இறுதியில் அதாவது பிறை 27ல் தான் மிஃராஜ் இரவு – நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விண் பயணம் செய்த இரவு – என்ற பெயரில் கட்டுக்கடங்காத பித்அத்கள் அரங்கேற்றமாகும். நபிகள் நாயகம் (ஸல்) செய்திராத, சொல்லாத, பிறர் செய்யப் பார்த்து ஒப்புதல் அளித்திடாத காரியங்கள் வணக்கங்கள் என்ற பெயரில் நடத்தப்படும்.
இந்த பித்அதுக்களுக்கு மூலமாக அமைந்தது கஸ்ஸாலி அவர்கள் எழுதிய இஹ்யா உலூமித்தீன் என்ற நூலாகும். அந்த நூலை விமர்சித்து இதற்கு முன் நமது ஜமாஅத் சார்பில் வெளியான ஏகத்துவம் மாத இதழில் “இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்?” என்ற தலைப்பில் ஒரு தொடர் விமர்சனக் கட்டுரை இடம்பெற்றது.
அதில் மிஃராஜ் இரவு, பராஅத் இரவு, பெருநாள் இரவு வணக்கங்கள் என்ற பெயரில் நடைபெறும் பித்அத்களை விலாவாரியாக எழுதியிருந்தோம். இது ரஜப் மாதம் என்பதால் அதில் நடக்கும் பித்அத்கள் பற்றிய அந்தப் பகுதியை இங்கு வெளியிடுகின்றோம்.
பரேலவிகளிடம் பரவி விரவிக் கிடக்கின்ற பல பித்அத்துகளுக்கு ஆணிவேராக இருப்பது கஸ்ஸாலி எழுதிய இஹ்யா உலூமித்தீன் எனும் நூலாகும். பித்அத்துக்காரர்களிடம் பல்வேறு பரிமாணங்களில் தலைவிரித்தாடுகின்ற பித்அத்துகளுக்கு அஸ்திவாரமாக இருப்பதும் இந்த இஹ்யா தான். மொத்தத்தில் இஸ்லாமிய உலகில் பேயாட்டம் போடுகின்ற ஒட்டுமொத்த பித்அத்துகளுக்கும் ஊற்றுக்கண் இந்த இஹ்யா தான் என்றால் அது மிகையல்ல!
இஹ்யாஉ உலூமித்தீன் முதல் பாகத்தில், கிதாபுத் தர்த்தீபுல் அவ்ராத், வ தஃப்சீலு இஹ்யாயில் லைல் (வழமையாக ஓதுகின்ற துஆக்களை வரிசைப்படுத்தல், இரவுகளை உயிர்ப்பித்தல் என்ற அத்தியாயத்தில், ‘இரவில் நின்று தொழுவது எளிமையாக்கப்படுவதற்குரிய காரணங்கள்’ என்ற பாடத்தில்) ‘சிறப்புக்குரிய இரவு பகல்களின் விளக்கம்’ என்ற தலைப்பில் கீழ் கஸ்ஸாலி கூறுவதாவது:
சில இரவுகளுக்குத் தனிச் சிறப்புகள் உள்ளன. அந்த இரவுகளில் நின்று வணங்குவது அதிகமான சிறப்பு என்று நபிவழியில் உறுதியாகி உள்ளது. அவை 15 இரவுகளாகும். நன்மையை நாடுகின்ற நல்லடியார் அந்த இரவுகளில் வணக்கம் புரிவதை விட்டும் அலட்சியம் கொள்ளலாகாது. ஏனென்றால் அவை நன்மைகளை விளைவிக்கின்ற வியாபாரம் அதிகமாகவும் அபரிமிதமாகவும் நடக்கின்ற பருவ காலங்களாகும். சீசன் (பருவக்கால) வியாபாரத்தைத் தவற விடுபவர் லாபம் ஈட்டமாட்டார். அதுபோல் சிறப்பான நேரங்களில் கிடைக்கின்ற நன்மையை நாடுகின்ற நல்லடியார் கண்டுகொள்ளாமல் இருந்தால் அவர் லாபம் ஈட்ட மாட்டார்.
சிறப்பான 15 இரவுகளில் 6 இரவுகள் ரமளான் மாதத்தில் அமைந்திருக்கின்றன. அவற்றில் 5 இரவுகள் பிந்திய 10ல் ஒற்றைப் படை இரவுகளில் உள்ளன. காரணம் இந்த இரவுகளில் தான் லைலத்துல் கத்ர் அடங்கியுள்ளது. அதனால் அவற்றில் அந்த இரவைத் தேடுவது அவசியமாகும். அடுத்து ரமளான் மாதத்தில் அமைந்திருக்கின்ற 17வது இரவாகும். அந்நாள் இரு அணிகள் சந்தித்துக் கொண்ட நாள் மற்றும் சத்தியவாதிகளையும் அசத்திய வாதிகளையும் வேறுபடுத்திக் காட்டிய நாளாகும். அந்த நாளில் தான் பத்ர் போர் நடந்தது. இப்னு சுபைர் (ரஹ்) பத்ர் போர் நடந்த அந்த இரவு லைலத்துல் கத்ர் என்று குறிப்பிடுகின்றார்.
மீதமுள்ள 9 இரவுகள், 1. முஹர்ரம் மாதத்தின் முதல் இரவு, 2. ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாள்) இரவு, 3. ரஜப் மாதத்தின் முதல் இரவு, 4. அம்மாதத்தின் 15 ஆம் இரவு, 5. அதே மாதத்தின் 27 ஆம் இரவு. அது தான் மிஃராஜ் இரவாகும். அந்த இரவில் தொழுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரவில் அமல் செய்யக்கூடியவருக்கு நூறு வருட நன்மைகள் கிடைக்கும்.
இவ்விரவில் பன்னிரண்டு ரக்கஅத்துகள் தொழ வேண்டும். ஒவ்வொரு ரக்கஅத்திலும் குர்ஆனிலிருந்து ஃபாத்திஹா அத்தியாயத்தையும், வேறொரு அத்தியாயத்தையும் ஓதி, ஒவ்வொரு இரண்டு ரக்கஅத்துகளுக்கிடையிலும் ஓர் (அத்தஹிய்யாத்) அமர்வு அமர்ந்து, இறுதி (அத்தஹிய்யாத்) அமர்வில் அமர்ந்து இவ்வாறாக பன்னிரண்டாவது ரக்கஅத்தில் சலாம் கொடுக்க வேண்டும்.
பிறகு சுப்ஹானல்லாஹி வல் ஹம்துலில்ல்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் என்று நூறு தடவை சொல்ல வேண்டும். பிறகு நூறு தடவை இஸ்திக்ஃபார் செய்ய வேண்டும். பிறகு நூறு தடவை நபி (ஸல்) அவர்கள் மீது சலவாத் சொல்ல வேண்டும். பிறகு தனக்காக இம்மை, மறுமை தொடர்பான விஷயங்களில் தான் விரும்பியதைக் கேட்டு துஆச் செய்ய வேண்டும். பிறகு அன்று பகலில் நோன்பு நோற்க வேண்டும். இவ்வாறு யார் செய்கின்றாரோ அவர் செய்த அனைத்துப் பிரார்த்தனையையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். பாவமான விஷயத்தில் அவர் பிரார்த்தனை செய்தாலே தவிர! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஷஃபான் பிறை 15ஆம் இரவில் நூறு ரக்கஅத்துக்கள் தொழ வேண்டும். ஒவ்வொரு ரக்கஅத்திலும் ஃபாத்திஹா அத்தியாயத்திற்குப் பிறகு குல்ஹுவல்லாஹு என்று துவங்குகின்ற இக்லாஸ் அத்தியாயத்தை பத்து தடவைகள் ஓத வேண்டும்.
உபரியான தொழுகை, அரஃபா இரவு, இரு பெரு நாட்கள் இரவுகள் என்ற பாடத்தில் நாம் குறிப்பிட்டது போன்று இந்த தொழுகைகளை அவர்கள் (முன்னோர்கள்) விட்டதே இல்லை.
யார் இரு பெருநாட்கள் இரவுகளை உயிர்ப்பிக்கின்றாரோ அவரது உள்ளம் உள்ளங்கள் மரணிக்கின்ற நாளில் மரணிப்பதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இன்னும் சில சிறப்புக்குரிய நாட்கள் உள்ளன. அவை 19 நாட்களாகும். அந்நாட்களில் சில திக்ருகளைத் தொடர்வது விரும்பத்தக்கதாகும். அவை:
அரஃபா நாள். 2. ஆஷூரா நாள். 3. ரஜப் 27 ஆம் நாள்.
இதற்கு மாபெரும் சிறப்பு இருக்கின்றது
ரஜப் 27ஆம் அன்று யார் நோன்பு நோற்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் அறுபது மாதங்கள் நோன்பு நோற்ற நன்மைகளைப் பதிவு செய்கிறான்.
அந்த நாளில்தான் அல்லாஹ் ஜிப்ரயீல் (அலை) அவர்களை தூதுச் செய்தியைக் கொண்டு (பூமிக்கு) முஹம்மது (ஸல்) அவர்களிடம் இறக்கி வைத்தான் என்று ரசூல் (ஸல்) சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
ரமளான் 17வது நாள் அந்நாளில் தான் பத்ர் போர் நடந்தது. 5. ஷஃபான் மாதம் 15ஆம் நாள். 6. வெள்ளிக் கிழமை. 7. இரு பெருநாட்கள். 8. துல்ஹஜ் மாதத்தின் 10 நாட்கள். 9. அய்யாமுத் தஷ்ரீக் என்று 11, 12, 13 ஆகிய நாட்கள்.
ஜும்ஆ நாள் பாதுகாப்பாகி விட்டால் மற்ற நாட்களும் பாதுகாப்படைந்து விடும். ரமளான் மாதம் பாதுகாப்பு அடைந்து விட்டால் அந்த வருடம் பாதுகாப்படைந்து விடும் என்று ரசூல் (ஸல்) சொன்னதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
உலகத்தின் ஐந்து நாட்களில் எவர் (வணங்காமல்) இன்பம் அனுபவிக்கின்றாரோ அவர் மறுமையில் இன்ப பானத்தை அனுபவிக்க மாட்டார் என்று ஓர் அறிஞர் கூறினார். இதன் மூலம் அவர் இரண்டு பெருநாட்கள், ஜும்ஆ, அரஃபா, ஆஷூரா ஆகிய நாட்களையே குறிப்பிடுகின்றார். வார நாட்களில் சிறந்த நாட்கள் வியாழக்கிழமையும் திங்கட்கிழமையுமாகும். இவ்விரு நாட்களில் அல்லாஹ்விடம் அமல்கள் உயர்த்தப்படுகின்றன. நாம் நோன்பு பாடத்தில் நோன்பு நோற்பதற்குரிய மாதங்கள், நாட்களுடைய சிறப்புகளை கூறிவிட்டோம். அதை மீண்டும் இங்கு திரும்பக் கூற வேண்டிய அவசியமில்லை. அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன். உலகத்தார் அனைவரை விடவும் தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு அடியார் மீதும் அல்லாஹ் அருள் புரிவானாக!
இவை தான் இஹ்யாவில் கஸ்ஸாலி குறிப்பிடும் செய்திகளாகும்.
இவ்விரவில் பன்னிரண்டு ரக்கஅத்துகள் தொழ வேண்டும். ஒவ்வொரு ரக்கஅத்திலும் குர்ஆனிலிருந்து ஃபாத்திஹா அத்தியாயத்தையும், வேறொரு அத்தியாயத்தையும் ஓதி, ஒவ்வொரு இரண்டு ரக்கஅத்துகளுக்கிடையிலும் ஓர் (அத்தஹிய்யாத்) அமர்வு அமர்ந்து, இறுதி (அத்தஹிய்யாத்) அமர்வில் அமர்ந்து இவ்வாறாக பன்னிரண்டாவது ரக்கஅத்தில் சலாம் கொடுக்க வேண்டும். பிறகு சுப்ஹானல்லாஹி வல் ஹம்துலில்ல்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் என்று நூறு தடவை சொல்ல வேண்டும். பிறகு நூறு தடவை இஸ்திக்ஃபார் செய்ய வேண்டும். பிறகு நூறு தடவை நபி (ஸல்) அவர்கள் மீது சலவாத் சொல்ல வேண்டும். பிறகு தனக்காக இம்மை, மறுமை தொடர்பான விஷயங்களில் தான் விரும்பியதைக் கேட்டு துஆச் செய்ய வேண்டும். பிறகு அன்று பகலில் நோன்பு நோற்க வேண்டும். இவ்வாறு யார் செய்கின்றாரோ அவர் செய்த அனைத்துப் பிரார்த்தனையையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். பாவமான விஷயத்தில் அவர் பிரார்த்தனை செய்தாலே தவிர! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸை இமாம் பைஹகீ தனது ஷுஃபில் ஈமானில் பதிவு செய்து விட்டு அதை பலவீனமான ஹதீஸ் என்று குறிப்பிடுகின்றார். காரணம், இந்த ஹதீஸ் அனஸ் (ரலி) அறிவித்ததாக அபான் வழியாக முஹம்மது பின் அல்ஃப்ள்ல் மூலம் அறிவிக்கப் படுகின்றது. இவ்விருவருமே பலவீனமானவர்கள். ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் தப்யீனுல் ‘அஜப் ஃபீ பயானி இப்தாலி மா வரத ஃபீ ரஜப்’ (ரஜப் மாதம் தொடர்பாக வந்திருக்கின்ற பொய்யான ஹதீஸ்களை முறியடிப்பது குறித்துள்ள ஆச்சரியத்தை விவரித்தல்) என்ற நூலில் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் இருள் நிறைந்தது என்று குறிப்பிடுகின்றார்கள். பைஹகீ கூறிய அதே விமர்சனத்தை ஹாபிழ் இராக்கி அவர்களும் தனது தக்ரீஜ் அஹாதீஸில் இஹ்யா என்ற நூலில் குறிப்பிடுகின்றார்கள்.
ஷஃபான் பிறை 15ஆம் இரவில் நூறு ரக்கஅத்துக்கள் தொழ வேண்டும். ஒவ்வொரு ரக்கஅத்திலும் ஃபாத்திஹா அத்தியாயத்திற்குப் பிறகு குல்ஹுவல்லாஹு என்று துவங்குகின்ற இக்லாஸ் அத்தியாயத்தை பத்து தடவைகள் ஓத வேண்டும்.
பைஹகியின் ஷுஃபில் ஈமானில் அலீ (ரலி) அறிவிப்பதாகப் பதிவாகியுள்ளது. இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) இது இட்டுக்கட்டப் பட்ட ஹதீஸாகத் தான் தெரிகின்றது என்று குறிப்பிடுகின்றார்கள். சந்தேகமில்லாமல் இது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸாகும் என்று இப்னுல் ஜவ்ஸி அவர்கள் கூறுகின்றார்கள்.
யார் இரு பெருநாட்கள் இரவுகளை உயிர்ப்பிக்கின்றாரோ அவரது உள்ளம் உள்ளங்கள் மரணிக்கின்ற நாளில் மரணிப்பதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூ உமாமா – காலித் பின் மிஃதான் – சவ்ர் பின் யஜீத்- பகிய்யா பின் வலீத் – என்ற தொடர் மூலம் இந்த ஹதீஸ் இப்னு மாஜாவில் 1772ல் பதிவாகியுள்ளது.
இந்த தொடர் பலவீனமானது.
காரணம் இதில் பகிய்யா இடம் பெறுகின்றார். இவர் தத்லீஸ் (இருட்டடிப்பு) செய்வர் என்று பூசரி ஜவாயித் என்ற நூலில் குறிப்பிடுகின்றார். ஹாபிழ் இராக்கி அவர்கள் தனது தக்ரீஜ் அஹாதீஸ் இஹ்யாவில் இதே கருத்தை பதிவு செய்துள்ளார்கள்.
ரஜப் 27ஆம் அன்று யார் நோன்பு நோற்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் அறுபது மாதங்கள் நோன்பு நோற்ற நன்மைகளைப் பதிவு செய்கிறான்.
அந்த நாளில்தான் அல்லாஹ் ஜிப்ரயீல் (அலை) அவர்களை தூதுச் செய்தியைக் கொண்டு (பூமிக்கு) முஹம்மது (ஸல்) அவர்களிடம் இறக்கி வைத்தான் என்று ரசூல் (ஸல்) சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
இதை கதீப் தாரீக் என்ற நூலிலும் ஜவ்ஸஜானீ, அபாதீல் (அபத்தங்கள்) என்ற நூலிலும் இப்னு அஸாகீர் தாரீக் திமிஷ்கிலும் இப்னுல் ஜவ்ஸிய்யி, இலல் என்ற நூலிலும் பதிவு செய்துள்ளனர். அனைவருமே அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து தான் பதிவு செய்துள்ளனர். இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொள்ளலாகாது என்று இப்னுல் ஜவ்ஸியும் இது ஒரு பொய்யான ஹதீஸ் என்று ஜவ்ஸகானிய்யும் கூறுகின்றார்கள்.
ஜும்ஆ நாள் பாதுகாப்பாகி விட்டால் மற்ற நாட்களும் பாதுகாப்படைந்து விடும். ரமளான் மாதம் பாதுகாப்பு அடைந்து விட்டால் அந்த வருடம் பாதுகாப்படைந்து விடும் என்று ரசூல் (ஸல்) சொன்னதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இது வெறுக்கப்படக் கூடிய ஹதீஸாகும். இது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் போன்றது தான் என்று அபூ அஹ்மத் அல் ஹாகிம் தெரிவிக்கின்றார்கள். இந்த விமர்சனங்கள் இஹ்யாவின் அடிக்குறிப்பில் இடம் பெற்றிருக்கின்றன. இவை இந்த ஹதீஸ்களின் தரங்களைப் புரிந்துக் கொள்வதற்கு போதும் என்பதால் அதிகமான விமர்சனங்களை விட்டு விட்டோம்.
ரஜப் பிறை 27, ஷஃபான் பிறை 15 இரவுகள் இந்தியாவெங்கும் படு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கின்ற ஊர்களில் பெருநாள் இரவுகளிலும் சிறப்புத் தொழுகைகள் நடக்கின்றன.
இந்த பித்அத்கள் எல்லாம் தலைவிரித்து, தாண்டவம் ஆடுவதற்குக் காரணம் கஸ்ஸாலியின் இஹ்யா தான் என்பதை இதைப் படிப்பவர்கள் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.கஸ்ஸாலியின் நேசர்கள் அவரைக் கல்விக் கடல் என்று வானளாவிய அளவுக்குப் புகழ்ந்து தள்ளுகின்றார்கள். அந்தக் கல்விக் கடலோ, கடுகளவுக்குக் கூட பித்அத்தின் தீய விளைவுகளைப் பற்றித் தெரியாமல் இருக்கின்றார். அதனால் தான் மக்களில் ஒரு தொகையினர் இந்த பித்அத்துகளில் மூழ்கிக் கிடப்பதற்கு மூல காரணமாகி விட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு சொற்பொழிவைத் துவக்கும் போதும் ஓர் எச்சரிக்கையைச் செய்வார்கள்.
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيَقُولُ أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ رواه مسلم
(அல்லாஹ்வின் தூதர் அவர்கள் உரையாற்றும் போது) “செய்தியில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். நேர்வழியில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களின் நேர்வழியாகும். காரியங்களில் மிகக் கெட்டது புதிய காரியங்களாகும். ஒவ்வொரு புதிய காரியமும் வழிகேடாகும்” என்று கூறுபவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
“ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் தான் (போய்ச் சேர்க்கும்)” என்று நஸாயீயில் 1560வது ஹதீஸாக இடம் பெறுகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பித்அத் பேராபத்து நிறைந்தது என்பதால் தனது சொற்பொழிவின் துவக்கத்திலேயே அதைப் பற்றிய எச்சரிக்கையை முன் வைக்கின்றார்கள்.
மக்களுக்கு மத்தியில் உரையாற்றுபவர்கள் தங்கள் உரையின் போதுதான் பெரும்பாலும் பித்அத்துகளை அவிழ்த்து விடுவார்கள். அதனால் உரையாற்றுபவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி அந்த வார்த்தைகளைத் தங்களது உரையைத் துவக்குமுன் சொல்கின்றபோது பித்அத்துகளைப் பற்றி எச்சரிக்கையாக இருப்பார்கள். பித்அத்தின் வாசல்களைத் திறந்து விடுவதை விட்டும் தங்களை தற்காத்துக் கொள்வார்கள் என்ற ரீதியில் கூட நபி (ஸல்) அவர்கள் இதை அறிவித்திருக்கலாம்.
மறுமையில் ஏற்படும் பித்அத்தின் பின் விளைவுகளைப் பற்றித் தெரிந்திருந்தால் நபி (ஸல்) அவர்களது எச்சரிக்கையின் ஆழத்தை மக்கள் நன்கு புரிந்து கொள்வார்கள்.
நாளை மறுமையில் அடிக்கின்ற வெயிலைப் பற்றியும் எடுக்கின்ற தாகத்தைப் பற்றியும் சொல்ல வேண்டியதில்லை. அந்தச் சமயத்தில் தாகத்தைத் தணிப்பது நபி (ஸல்) அவர்களின் கவ்ஸர் எனும் தடாகம்தான். இதைப் பின் வரும் ஹதீஸ் விளக்குகின்றது.
“(அல்கவ்ஸர்’ எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் கொண்டதாகும். அதன் நீர் பாலைவிட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியைவிட நறுமணம் வாய்ந்தது. அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகின்றார்களோ அவர்கள் ஒரு போதும் தாகமடைய மாட்டார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
பித்அத் செய்பவர் இந்தப் பாக்கியம் கிடைக்காமல் தடுக்கப்படுவார் என்பதை அடுத்து வரும் ஹதீஸ் எடுத்துரைக்கின்றது.
மறுமை நாளில் என் தோழர்களில் ஒரு குழுவினர் என்னிடம் வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தை விட்டு ஒதுக்கப்படுவார்கள். உடனே நான், “இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்’’ என்பேன். அதற்கு இறைவன், “உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்று விட்டார்கள்’ என்று சொல்வான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
இந்த ஹதீஸ், பித்அத் செய்பவர் தண்ணீர் தடாகத்தை விட்டும் தடுக்கப்படுவது மட்டுமல்லாமல் நரகத்திற்கும் இழுத்துச் செல்லப்படுகின்றார் என்பதைத் தெளிவுபடுத்தி விடுகின்றது. அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.
ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடு; வழிகேடு அனைத்தும் நரகத்தில் தான் என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை எவ்வளவு பொருத்தமாக அமைந்துள்ளது என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
நமது நாட்டில் மத்திய ரிஸர்வ் வங்கி ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கின்றது. அந்த நோட்டைக் கொடுத்தால் பணத்திற்கு நிகரான பொருள் கிடைக்கின்றது. அதே நோட்டை ரிஸர்வ் வங்கி அல்லாத மற்றவர் அடித்து அதை ஒருவர் கடையில் கொடுத்தால் அது செல்லாதது மட்டுமல்ல! அதற்காக அவருக்குத் தண்டனையும் கிடைக்கின்றது.
இதைத் தான் நபி (ஸல்) அவர்கள்,
“யார் நமது மார்க்கத்தில் இல்லாத வணக்கத்தை உருவாக்குகின்றாரோ அவரது அந்த வணக்கம் நிராகரிக்கப்படும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
இதுபோன்றுதான், வணக்கம் என்றால் அது அல்லாஹ்வும் அவனது தூதரும் உத்தரவிட்ட அல்லது ஒப்புதல் தந்த வணக்கமாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அந்த வணக்கம் செல்லாதது மட்டுமல்ல! அதைச் செய்தவர் தண்டனையை அனுபவிக்க வேண்டும். மார்க்கத்தின் இந்த அடிப்படை தெரியாததால்தான் கஸ்ஸாலி பல்வேறு பித்அத்துகள் உருவாவதற்கும் அது தொடர்வதற்கும் காரணமாகி விட்டார்.