18. ஜின்களையும், மனிதர்களையும் இரட்சிக்கக் கூடியவர்!

நூல்கள்: முஹ்யித்தீன் மவ்லித் ஓர் ஆய்வு

17. ஜின்களையும், மனிதர்களையும் இரட்சிக்கக் கூடியவர்!

 

انت غوث الثقلين *انت زين الحرمين

ومنير الملوين *اجعلنا مقبلينا

ஜின்கள், மனிதர்கள் ஆகிய இரு இனத்தவர்களையும் இரட்சிக்கக் கூடியவர் நீங்களே! மக்கா, மதீனா ஆகிய புனித நகரங்களுக்கு அலங்காரமாகத் திகழ்பவர் நீங்களே! வானம், பூமிகளைப் பிரகாசிக்கச் செய்பவர் நீங்களே! எங்களை வெற்றி பெற்றவர்களாக ஆக்கி விடுங்கள்!

முட்டாள்தனமான இந்த வரிகளைக் கண்ட பின்பும் யாரேனும் இதை ஆதரிக்க முடியுமா? மனித இனத்தை மட்டுமின்றி ஜின்களையும் இவர் தாம் இரட்சிப்பாராம்! வானம் பூமியை இவர் தாம் பிரகாசிக்கச் செய்கிறாராம்! இது நாம் மேலே எடுத்துக் காட்டிய குர்ஆன் வசனங்களுடன் நேரடியாக மோதுவதை எவரும் அறிந்து கொள்ளலாம்.

 

انت اتقى الاتقياء *انت اصفى الاصفياء

صرت تاج الاولياء *آتنا فتحا مبينا

இறையச்சமுடையவர்களிலெல்லாம் அதிக இறையச்சமுடையவர் நீங்களே! சிறந்தவர்களிலெல்லாம் மிகச் சிறந்தவர் நீங்களே! இறை நேசர்களின் கிரீடமாக நீங்கள் மாறி விட்டீர்கள். எங்களுக்குத் தெளிவான வெற்றியை வழங்குங்கள்!

இறையச்சம் என்பது உள்ளத்தின் பாற்பட்ட ஒன்று. யாருக்கு இறையச்சம் உள்ளது? எந்த அளவுக்கு இது உள்ளது? என்பதையெல்லாம் இறைவன் மட்டுமே அறிவான் என்ற சாதாரண உண்மைக்கு மாற்றமாக அப்துல் காதிர் ஜீலானியின் இறையச்சத்துக்கு நற்சான்று வழங்குகின்றது இந்தக் கவிதை.

நபிமார்களை விடவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விடவும் அப்துல் காதிர் ஜீலானி அதிக இறையச்சமுடையவர் என்ற கருத்தையும் இந்தக் கதை தருகின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மதிக்கின்ற எந்த முஸ்லிமாவது இதை ஒப்புக் கொள்ள முடியுமா? மவ்லிது அபிமானிகள் சிந்திக்கட்டும். தெளிவான வெற்றியை வழங்குமாறு அப்துல் காதிர் ஜீலானியிடம் பிரார்த்திக்கப்படுகின்றது. வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அதிகாரத்தை இவருக்கு வழங்கியவன் யார்? நபிகள் நாயகம் (ஸல்) கூட பல சந்தர்ப்பங்களில் தோற்றுள்ளனர்.

என்று இறைவன் கூறுவதன் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கூட இந்த அதிகாரத்தை தான் வழங்கவில்லை என்று இறைவன் கூறும் இந்த வசனத்துடனும், மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனங்களுடனும் இந்தக் கவிதை நேரடியாக மோதுகின்றது.

 

انت مبدع النوادر *مظهر ما فى الضمائر

مخبر ما فى السرائر *رحمة دنيا ودينا

அரிதான அற்புதமான நிகழ்ச்சியை நிகழ்த்தக் கூடியவர் நீங்களே. பிறரது உள்ளங்களில் உள்ளவற்றை வெளிப்படையாக அறிவிக்கக் கூடியவர் நீங்களே.

மறைவான செய்திகளை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது என்பதை தக்க சான்றுகளுடன் விளக்கியுள்ளோம். அதற்கு முரணாக இந்தக் கவிதை அமைந்துள்ளது.

 

كن لنا حرزا كنينا *كن لنا كهفا منيعا

عن بليات شفيعا *فى خطيات وسيعا

من عطيات تفينا

எங்களுக்குப் பாதுகாப்பு அரணாக ஆகி விடுங்கள். எங்களுக்கு துன்பங்களைத் தடுக்கும் குகையாக ஆகி விடுங்கள். தவறுகளுக்காகப் பரிந்துரை செய்யுங்கள். நீங்கள் எங்களுக்கு வழங்கக்கூடிய அருட்கொடைகளில் தாரளமாக நடந்து கொள்ளுங்கள்!

எல்லா அதிகாரங்களும் அப்துல் காதிர் ஜீலானியிடம் குவிந்து கிடப்பதாக முஹ்யித்தீன் மவ்லிதின் பாடல்கள் கூறுகின்றன. அல்லாஹ்விடம் எந்த அதிகாரமும் இல்லை. அல்லாஹ் என்று ஒருவன் தேவையில்லை என்ற அளவுக்கு அப்துல் காதிரே அல்லாஹ்வாக்கப்படுகின்றார்.

இத்தகைய நச்சுக் கருத்துக்களைத் தான் பொருள் தெரியாமல் வணக்கமாகக் கருதி இந்தச் சமுதாயம் பாடிக் கொண்டிருக்கின்றது. இதைப் படிப்பதால், இதை நம்புவதால் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாக நேருமா? அல்லாஹ் அருள் கிடைக்குமா? நடுநிலையுடன் மவ்லிது அபிமானிகள் சிந்திக்கட்டும்.

பொதுவாக மவ்லிதுகளும் குறிப்பாக முஹ்யித்தீன் மவ்லிதும் திருக்குர்ஆனுடனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுடனும் நேரடியாக மோதும் வகையில் அமைந்துள்ளன. அதைத் தெளிவான சான்றுகளுடன் நாம் அறிந்தோம். இது போன்ற நச்சுக் கருத்தைக் கொண்ட முஹ்யித்தீன் மவ்லிதின் மற்றொரு வரியைப் பாருங்கள்.

 

وهوالذي من كان نادى باسمه *فى شدة ينجو بغير تنجم

بل انه لم قط يفعل فعله *الا باذن الهه المتكلم

அவர் (அப்துல் காதிர் ஜீலானி) எத்தகையவர் என்றால் யாரேனும் கஷ்டத்தின் போது அவரை அழைத்தால் அவர் உடனடியாக ஈடேற்றம் பெறுவார்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன் மரணித்து விட்ட ஒருவரை அழைத்தால் அவர் ஈடேற்றம் அளிப்பார் என்பதும், அவரை அழைக்கலாம் என்பதும் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளையே தகர்க்கக் கூடியவையாகும். இறைவன் அல்லாதவர்களை அழைப்பது பற்றி திருக்ககுர்ஆன் கூறுவதைக் கவனியுங்கள்.

எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணை கற்பிக்கின்றனர்? அவர்களே படைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள மாட்டார்கள். (எதையும்) தெவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானது. அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

(அல்குர்ஆன்: 7:191), 194)

அல்லாஹ்வை விடுத்து நல்லடியார்களையும், மகான்களையும் அழைத்துப் பிரார்த்தித்து வந்த மக்களிடம் தான் அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே என்று இறைவன் கூறுகிறான்.

எத்தனைப் பெரிய மனிதர் என்றாலும் அவர்கள் இறைவனுக்கு அடிமைகள் தாம் என்பதையும அடிமைகளிடம் பிரார்த்திக்க முடியாது என்பதையும் இவ்வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.

(அல்குர்ஆன்: 22:73)

அழைத்துப் பிரார்த்தனை செய்யப்படுபவர் படைக்கக் கூடியவராக இருக்க வேண்டும். அப்துல் காதிர் ஜீலானி உட்பட யாராக இருந்தாலும் ஈயைக் கூட அவர்களால் படைக்க முடியாது என்று இவ்வசனத்தில் அல்லாஹ் சொல்லித் தருகிறான்.

அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது. மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்விடம் தேவையுடையவர்கள். அல்லாஹ்வே தேவையற்றவன்; புகழுக்குரியவன்.

(அல்குர்ஆன்: 35:13),14,15)

அப்துல் காதிர் ஜீலானி உட்பட எந்த மனிதராக அல்லாஹ்விடம் தேவையாகக் கூடியவர்கள் தாம். தேவையாகக் கூடியவர்களிடம் பிரார்த்திக்க முடியாது என்பதற்காகவே இங்கே இதை இறைவன் கூறுகிறான். மேலும் இறந்தவர்கள் எந்தப் பிரார்த்தனையையும் செவியேற்கும் நிலையில் இல்லை எனவும் கூறுகிறான்.

கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழி கெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர்.

(அல்குர்ஆன்: 46:5)

அல்லாஹ்வை விடுத்து எவரையும் அழைக்க முடியாது. அழைப்பதை அவர்கள் செவியுற முடியாது. அழைப்பதை அறியவும் முடியாது. அணுவளவு அதிகாரமும் அவர்களுக்குக் கிடையாது என்றெல்லாம் தெளிவாகப் பிரகடனம் செய்யும் இவ்வசனங்களுடன் இந்த மவ்லிது வரி நேரடியாக மோதுவதை மவ்லிது அபிமானிகள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த காபிர்கள் சாதாரண நேரத்தில் அல்லாஹ் அல்லாதவர்களிடம் பிரார்த்தித்து வந்தனர். ஆனால் அவர்களுக்குத் தாங்க முடியாத பெருந்துன்பம் ஏற்பட்டால் அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்தனை செய்து வந்தனர். கஷ்டமான நேரத்தில் அவரை அழைத்தால் ஈடேற்றம் பெறுவார் என்ற வரிகள் மக்கத்துக் காபிர்களின் கொள்கையை விட மோசமான கொள்கைக்கு அழைப்பதை மவ்லிது அபிமானிகள் சிந்திக்க வேண்டும்.

இதோ மக்கத்துக்குக் காபிர்கள் குறித்து அல்லாஹ் கூறுகிறான்.

முகடுகளைப் போல் அலைகள் அவர்களை மூடும் போது உளத்தூய்மையுடன் வணக்கத்தை உரித்தாக்கி அவனைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றித் தரையில் சேர்த்ததும் அவர்களில் நேர்மையாக நடப்பவரும் உள்ளனர். நன்றி கெட்ட சதிகாரர்களைத் தவிர வேறு எவரும் நமது சான்றுகளை நிராகரிப்பதில்லை.

(அல்குர்ஆன்: 31:32)

‘உங்களிடம் அல்லாஹ்வின் வேதனை வந்தால் அல்லது அந்த நேரம் வந்து விட்டால் அல்லாஹ் அல்லாதவர்களையா அழைக்கிறீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் பதில் சொல்லுங்கள்!’ என்று கேட்பீராக! மாறாக அவனையே அழைக்கிறீர்கள். நீங்கள் இணை கற்பித்தவர்களை மறந்து விடுகிறீர்கள். அவன் நாடினால் அவனை எதற்காக அழைத்தீர்களோ அதை நீக்கி விடுகிறான்.

(அல்குர்ஆன்: 6:40),41)

கடுமையான துன்பங்கள் ஏற்படும் போது மட்டுமாவது மக்கத்துக் காபிர்கள் ஏக இறைவனை மட்டும் நம்பி வந்துள்ளனர் என்பதற்கு இவ்வசனங்கள் தெளிவான சான்றுகளாகும். இதே கருத்தை 39.8, 10.12, 39.49, 27.62, 7.189, ஆகிய வசனங்களும் கூறுகின்றன.

மக்கத்துக் காபிர்களின் கொள்கையை விட மோசமான கொள்கையை முஸ்லிம்களிடம் திணிக்கக் கூடிய இந்த மவ்லிதை முஸ்லிம்கள் ஆதரிக்க முடியுமா? இதைப் படிப்பதால் அல்லாஹ்விடம் நன்மை கிடைக்குமா? இஸ்லாத்தைப் பற்றி சிறிதளவு கூட அறியாத மூடர்களால் எழுதப்பட்ட இந்த மவ்லிதுக்காக நமது ஈமானை இழந்து விடலாமா?

இந்த மவ்லிதில் உள்ள இன்னும் பல அபத்தமான பாடல்களைப் பாருங்கள்.