05. அல்லாஹ்வைக் கண்ட முளப்பர்
4. அல்லாஹ்வைக் கண்ட முளப்பர்
முளப்பர் எனும் பெரியாருக்கும் மேற்கண்ட அபூபக்ர் என்பாருக்கும் இடையே நட்பு இருந்தது. ஜத்பு (தன்னை மறந்த நிலை) ஏற்பட்ட போது முளஃப்பர் அவர்கள் அல்லாஹ்வைக் கண்டார்கள். அப்போது அவரிடம் முளஃப்பரே நீ விரும்பியதைக் கேள் என்று அல்லாஹ் கூறினான். குற்றம் செய்த அபூபக்ரை அவருடைய பழைய நிலைக்கு நீ மாற்ற வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் என்று முளஃப்பர் கூறினார். அதற்கு இறைவன் அந்த அதிகாரம் இரு உலகிலும் எனது நேசரான அப்துல் காதிரிடம் தான் அந்த அதிகாரம் உள்ளது என்று கூறினான்
பக்தி முற்றிப் போய் தன்னிலை மறப்பதை ஜத்பு என்று கூறுகிறார்கள். இத்தகைய நிலை இஸ்லாத்தில் உண்டா? நிச்சயமாக இல்லை.
அல்லாஹ்வின் நினைவில் அதிகமாக ஊறிய நபிமார்கள் ஜத்பு நிலையை அடைந்ததில்லை. நபித்தோழர்களும் ஜத்பு நிலையை அடைந்ததில்லை.
அல்லாஹ்வின் நினைவு பைத்தியத்தைத் தெளிவிக்குமே தவிர பைத்தியம் பிடிக்குமளவுக்கு யாரையும் கொண்டு செல்லாது.
இவருக்கோ ஜத்பு எனும் பைத்தியம் ஏற்பட்டதாம். அந்த ஜத்பு நிலையில் அவர் அல்லாஹ்வைப் பார்த்தாராம். எந்த மனிதனும் இவ்வுலகில் அல்லாஹ்வைக் காண முடியாது என்று திருக்குர்ஆனும் நபிமொழிகளும் திட்டவட்டமாகக் குறிப்பிடுகின்றன.
எந்தப் பார்வைகளும் அவனை அடைய முடியாது. (அல்குர்ஆன் 6.103) என்று அல்லாஹ் கூறுகிறான்.
மூஸா நபியால் அல்லாஹ்வைப் பார்க்க இயலவில்லை என்பதை அல்குர்ஆன் 7.143 வசனம் கூறுகிறது.
அவனோ ஒளிமயமானவன், அவனை எப்படி நான் காண முடியும்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (முஸ்லிம்: 261)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் பார்த்ததாக எவன் சொல்கிறானோ அவன் பொய் கூறி விட்டான் என ஆயிஷா (ரலி) கூறியுள்ளனர். (புகாரி: 4855)
யாரும் இறைவனை இவ்வுலகில் காண முடியாது என்பதற்கு இவை சான்றுகள். இந்தச் சான்றுகளுக்கு மாற்றமாக இந்தப் பெயார் அல்லாஹ்வைப் பார்த்ததாக மவ்லிது எழுதியவர் கதை விடுகிறார்.
மனிதர்களுடன் எவற்றைப் பேச அல்லாஹ் விரும்பினானோ அவற்றையெல்லாம் குர்ஆனாக வழங்கி விட்டான். எவரிடமும் இறைவன் பேச வேண்டிய எந்தத் தேவையும் கிடையாது என்ற சாதாரண அறிவு கூட மவ்லிதை எழுதியவருக்கு இல்லை.
நபியவர்களோ அல்லாஹ்வை நேரடியாகக் காணவில்லை. முளப்பர் என்பாரிடம் அல்லாஹ்வே நேரடியாகப் பேசினான் என்றால் நபியவர்களை விடவும் இவர் சிறந்தவராகி விடுகிறார். நபியவர்களை விடவும் இறைத் தொடர்பு அதிகமுடையவராக இருக்கிறார் என்று ஆகின்றது. நபிகள் நாயகத்தை விட ஒருவனுடைய ஆன்மீகச் சிறப்பை உயர்த்திச் சொல்கின்ற, குர்ஆனுடனும் நபிமொழிகளுடனும் நேரடியாக மோதுகின்ற இந்த மவ்லிதை வாசிப்பதால் பாவம் தான் ஏற்படும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை
அல்லாஹ்விடம் முளப்பர் ஒரு கோரிக்கையை எடுத்து வைக்கிறார். அந்த அதிகாரம் எனக்கு இல்லை. அப்துல் காதிருக்கே உரியது என்று அல்லாஹ் கூறிவிட்டான் என்று இந்தக் கட்டுக்கதை கூறுகிறது என்றால் இவர்களின் சூழ்ச்சி நமக்குத் தெளிவாகத் தெரிந்து விடுகின்றது.
மன்னிக்கும் அதிகாரம் தனக்கேயுரியது என்று இறைவன் உரிமை கொண்டாடுவதைத் திருக்குர்ஆனில் காண்கிறோம்.
அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள்.
அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
இந்த அதிகாரத்தை அவன் எவருக்கும் பங்கிட்டு கொடுக்கவில்லை. நபியவர்கள் கூட அல்லாஹ்விடம் தான் பாவமன்னிப்புத் தேடியுள்ளனர்.
இந்தக் கதையோ மன்னிக்கும் அதிகாரம் அப்துல் காதிர் ஜீலானிக்கு உரியது எனக் கூறுகிறது. அல்லாஹ்வுக்கும் மேல் அப்துல் காதிரை சூப்பர் பவர் உடையவராக இக்கதை காட்டுகிறது. ஆம் இந்த மவ்லிதை எழுதியவர்களின் திட்டம் அது தான்.
அல்லாஹ்வை ஒன்றுமற்றவனாக்கி அவனது நபிமார்களையும் தாழ்த்தி, அவர்களை விட அப்துல் காதிர் ஜீலானி உயர்ந்தவர், ஆற்றலுள்ளவர் என்று காட்டுவது தான் அவர்களின் திட்டம். அதற்குத் தான் அல்லாஹ்வின் பெயரைப் பயன்படுத்தி அவன் மீது இட்டுக்கட்டியுள்ளனர்.
அல்லாஹ்வின் பெயரால் இட்டுக்கட்டப்படுபவனை விட அநியாயக்காரன் யாருக்க முடியும்?
(அல்குர்ஆன் 6.21)
இந்த வசனத்தின் படி மிகப்பெரிய அக்கிரமக்காரன் ஒருவனே இந்த மவ்லிதை எழுதியிருக்க வேண்டும் என்று கூறலாம்.
இதன் பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் முளஃஃபரிடம் வந்து பின் வருமாறு கூறியதாகவும் கதை விட்டுள்ளனர்.
இதன் பின்னர் முளப்பரிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முளப்பரே எனது பிரதிநிதி அப்துல் காதிரிடம் செல்வீராக. எனது துய மார்க்கத்திற்காகவே அபூபக்கரை வெறுக்கிறீர். இப்போது அவரை நான் மன்னித்து விட்டேன். எனவே அவரிடமிருந்து பிடுங்கிக் கொண்ட நல்ல நிலையைத் திரும்பக் கொடுத்து விடுவீராக என்று உமது பாட்டனார் கூறினார் என்று தெரிவிப்பீராக என்றனர்
என்று இந்த மவ்லிதை எழுதியவர் கதை விடுகிறார்.
அபூபக்கர் என்பாரின் நல்ல நிலையைப் பிடுங்கியதே அப்துல் காதிர் தானாம். அல்லாஹ்வின் ராஜ்ஜியத்திற்குள் இவர் தனியொரு ராஜ்ஜியமே நடத்தியிருக்கிறார் என்றும் இந்தக் கதை கூறுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை யார் நேரடியாகப் பார்த்தார்களோ அவர்கள் மட்டுமே கனவிலும் பார்க்க முடியும். யார் என்னைக் கனவில் காண்கிறாரோ விழிப்பிலும் என்னைக் காண்பார் என்ற நபிமொழியிலிருந்து இதை அறியலாம்.
நபியவர்கள் காலத்தில் வாழாத ஒருவர், அவர்களை நேரில் பார்த்திராத ஒருவர், அவர்களுக்கு ஐநூறு வருடங்களுக்குப் பின்னர் வாழ்ந்த ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்த்ததாகக் கூறினால் அது வடிகட்டிய பொய் என்பதில் ஐயமில்லை. மேலும் அல்லாஹ் மன்னிக்காத ஒருவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மன்னித்ததாகக் கூறி, குர்ஆனையும் ஹதீஸையும் அவமதிக்கிறார்கள்.
அப்துல் காதிர் ஜீலானியைக் கடவுளாகவும், கடவுளின் அவதாரமாகவும் சித்தரித்திருப்பது இதிலிருந்து தெளிவாக விளங்குகிறது. நபியவர்களை விடவும் அவரை உயர்த்த எவ்வளவு கீழ்த்தரமான கற்பனையில் இறங்கியுள்ளனர்? எத்தனை குர்ஆன் வசனங்களை நிராகரித்துள்ளனர்? எத்தனை நபிமொழிகளை அலட்சியப்படுத்தியுள்ளனர்?
இவ்வளவு அபத்தங்கள் நிறைந்த மவ்லிதைப் படிப்பதால் நன்மை கிட்டுமா? பாவம் சேருமா சிந்தியுங்கள்.
முஹ்யித்தின் மவ்லிதில் கூறப்படும் மற்றொரு அதியற்புதக் கதையைக் கேளுங்கள்.