வஹி இறங்கிய போது, அன்னை கதீஜாவிடம்…
(அச்சத்தால்) இதயம் படபடக்க அந்த வசனங்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியர்) கதீஜா பின்த் குவைலித் (ரலி) அவர்களிடம் வந்து எனக்குப் போர்த்தி விடுங்கள் எனக்குப் போர்த்தி விடுங்கள் என்றார்கள். அவ்வாறே வீட்டாரும் அவர்களுக்குப் போர்த்திட அச்சம் அவர்களைவிட்டு அகன்றது. பின்னர் கதீஜாவிடம் நடந்தவற்றை தெரிவித்துவிட்டு எனக்கேதும் நேர்ந்துவிடுமோ என நான் அஞ்சுகிறேன் என்று சொன்னார்கள்.
அதற்கு கதீஜா (ரலி) அவர்கள் அப்படியொன்றும் ஆகாது. அல்லாஹ்வின் மீதாணையாக உங்களை அல்லாஹ் ஒருபோதும் இழிவுபடுத்தமாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவுகளைச் சேர்ந்து வாழ்ந்துவருகிறீர்கள் (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள்; வறியவர்களுக்காகப் பாடுபடுகிறீர்கள்;விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்திய சோதனையில் ஆட்பட்டோருக்கு உதவி செய்கிறீர்கள் (அதனால் நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை)” என்று (ஆறுதல்) சொன்னார்கள்.