பிறையைக் கணிக்கலாமா?

கேள்வி-பதில்: பிறை மற்றும் பெருநாள்

பிறையைக் கணிக்கலாமா?

கூடாது.

நோன்பு என்பது ஒரு வணக்கம் ஆகும். வணக்க வழிபாடுகள் அனைத்தையும் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் எந்த அடிப்படையில் காட்டித் தந்தார்களோ அந்த அடிப்டையிலேயே நாம் செயல்படுத்த வேண்டும். இதில் நம்முடைய மனோ இச்சையைப் பின்பற்றுதல் என்பது மார்க்கத்திற்கு மாற்றமான நடைமுறை ஆகும். இந்த அடிப்படையை முதலில் நீங்கள் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். நபியவர்கள் பிறையைக் கண்களால் பார்த்து நோன்பை முடிவு செய்ய வேண்டும் என்றே கூறியுள்ளார்கள்.

“அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) காணும் போது நீங்கள் நோன்பை விட்டு விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: (முஸ்லிம்: 1959) 

“அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) காணும் போது நீங்கள் நோன்பை விட்டு விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டம் ஏற்பட்டால் ஷஃபான் மாதத்தின் எண்ணிக்கையை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: (புகாரி: 1909) 

“நீங்கள் பிறையைப் பார்த்து நோன்பு பிடியுங்கள் பிறையைக் காணும் போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் முப்பது நாட்கள் நோன்பு பிடியுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: (முஸ்லிம்: 1972) 

மேற்கண்ட ஹதீஸ்கள் பிறையைக் கண்களால் கண்டே நோன்பை முடிவு செய்ய வேண்டும் என்று கட்டளையிடுகிறது. பின்வரும் ஹதீஸ் பிறையைப் பார்க்காமல் முடிவு செய்யக் கூடாது என்று கட்டளையிடுகிறது. எனவே கண்களால் பிறை பார்க்க வேண்டும் என்பது மேலும் உறுதியாகிறது

“பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: (புகாரி: 1906) , 1907 , (முஸ்லிம்: 1961) 

இந்த ஹதீஸ் மிகத் தெளிவாக பிறையைப் பார்க்காமல் நோன்பு நோற்கக் கூடாது என்று கட்டளையிடுகிறது. எனவே தான் நபியின் கட்டளைப்படி (நம் விருப்பப்படி அல்ல) பிறையைப் பார்த்துத் தான் நோன்பு வைக்க வேண்டும்; பெருநாள் கொண்டாட வேண்டும். பிறையைக் கணிக்கக் கூடாது என்று கூறுகிறோம்.