பிச்சைக்காரர்களில் 75 ஆயிரம் பேர் பிளஸ் 2 பாஸ்!
2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிடைத்த தகவலின் படி, இந்தியாவில் வேலைவாய்ப்பு திறன்பெற்ற இளநிலை மற்றும் முதுகலை பட்டதாரிகள் 3 ஆயிரம் பேர் பிச்சையெடுத்து கொண்டிருப்பதாக புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மொத்தம் 3.72 லட்சம் பிச்சைக்காரர்கள் உள்ளதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இதில் 21 சதவீதம் பேர் குறைந்த பட்சம் 12-ம் வகுப்பு பாசாகியுள்ளனர். அதாவது கிட்டத்தட்ட 75 ஆயிரம் பேர் 12-ம் வகுப்பு பாஸ் செய்து விட்டு, பிச்சைக்காரர்களாக மாறி பணம் சம்பாதிக்கின்றனராம்.
இது மட்டுமல்ல, இதில் 3 ஆயிரம் பேர் டிப்ளமோ அல்லது ஏதாவது டிகிரி, போஸ்ட் கிராஜுவேட் பட்டம் பெற்றவர்கள் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. பட்டம் பெற்ற பிறகு, நல்ல வேலை கிடைக்காத காரணத்தினால் பல பட்டதாரிகள் பிச்சை எடுப்பதில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழிலை தேர்வு செய்தது குறித்து தினேஷ் என்பவர் கூறுகையில், ” 12-ம் வகுப்பு படித்து விட்டு, ஒரு மருத்துவமனையில் வார்டு பாயாக வேலை பார்த்தேன். தினமும் 100 ரூபாய்தான் சம்பளமாக கிடைத்தது. இதையடுத்தே பிச்சையெடுக்கத் தொடங்கினேன். தற்போது ஒரு நாளைக்கு 200 ரூபாய் சம்பாதிக்கிறேன் ” என்கிறார்.
பி. காம் தவறிய மற்றொரு பிச்சைக்காரரான சுதிர் பாபுலால், தற்போது அகமதாபாத்தில் பிச்சை எடுத்து வருகிறார். ஒருநாளைக்கு 10 மணி நேரத்திற்கு மேல் வேலை பாத்தாலும் மாதம் 3 ஆயிரம் ருபாய்தான் பாபுலாலுக்கு சம்பளமாக கிடைத்துள்ளது. இதனால் அவரது மனைவி கூட பிரிந்து சென்று விட்டாராம். தற்போது ஆற்றாங்கரையில் தங்கிக் கொண்டு பிச்சை எடுக்கும் அவருக்கு, தினமும் 150 ரூபாய் வருவாய் கிடைக்கிறது .
தசரத் பார்மர் என்ற எம். காம் பட்டதாரிக்கு அரசு வேலையில் சேர வேண்டுமென்பதே லட்சியம். ஆனால் கிடைத்த தனியார் பணியையும் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. 3 குழந்தைகளுக்கு தந்தை வேறு. தற்போது குழந்தைகளை வைத்துக் கொண்டு சிரமப்படுகிறார். அறக்கட்டளை ஒன்றுதான் இவர்களுக்கு உணவளித்து காப்பாற்றி வருகிறது.
இந்தியாவில் பணியில் கிடைக்கும் குறைவான சம்பளமும், நிலையில்லாத வேலையும் படித்த பட்டதாரிகளை கூட பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
source: http://www.vikatan.com/news/india/57000-75000-of-countrys-beggars-are-12th-passouts.art