இஸ்லாத்தை ஏற்ற கிருஸ்தவ சகோதரர்!
அல் சலாமா இஸ்லாமிய நிலையத்தில் இஸ்லாத்தை தழுவிய இலங்கையைச் சார்ந்த சகோதரர் முஹம்மது நசீர் அவர்கள், தான் இஸ்லாத்தில் இணைந்த இனிய செய்தியை நமது சிற்றிதழ் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
இலங்கையின் செல்வச் செழிப்புடன் திகழ்ந்த ஒரு குக்கிராமத்தில் வசித்துவரும் கிருஸ்துவ மதத்தில் நல்ல ஈடுபாடுள்ள ஒரு குடும்பத்தில் பிறந்த நான், விவரமறிந்த நாள் முதல் அம்மதத்தில் அதிக ஈடுபாட்டுடனும், கடவுள் பக்தியுடனும் வாழ்ந்து கொண்டிருந்தேன். அங்கு ஏற்பட்ட கலவரத்தால் இலங்கையின் பொருளாதாரம் மிகப் பெரிய அளவில் வீழ்ச்சியடைந்து, சரிந்து விட்டதால், வேலை தேடி வெளிநாடு செல்லும் நிர்பந்தம் அந்நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட போது, உலகின் பல நாடுகளும் இலங்கை குடி மக்கள் சென்று வந்தார்கள். நானும் வெளிநாடு சென்று வேலை வாய்ப்பினை உருவாக்கிக் கொள்ள முனைந்த போது, சவூதி அரபியாவிற்கு வரும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அங்கு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு வினியோகம் செய்யும் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். தற்போது சவூதி வந்து சுமார் 7 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
இங்கு வருவதற்கு முன்பு என் உள்ளத்தில் இனம் புரியாத அச்சம் நிறைந்திருந்தது. காரணம் நூற்றுக்கு நூறு சதவீதம் முஸ்லிம்கள் வாழும் ஒரு நாட்டிற்கு செல்கிறேன். நான் ஒரு கிருஸ்துவன் என்பதால் இஸ்லாம் பற்றிய பல செய்திகளைக் கேள்விப்பட்டிருந்தேன். அரபு நாட்டில் வாழ்ந்த கிருஸ்தவர்களை மதமாற்றம் செய்து விட்டார்கள், நம்மையும் அது போன்று மதம் மாறும் படி நிர்பந்தம் செய்வார்களோ, அவ்வாறு செய்தால் என்ன செய்வது, எவ்வாறு எனது மதக் கோட்பாட்டில் நிலைத்திருப்பது என்பன போன்ற ஐயங்கள் என்னுள் எழுந்தன. மேலும் நான் ஒரு மாற்றுமதத்தைச் சார்ந்தவன் என்பதால் எனக்கு என்ன வேலை கொடுப்பார்கள், நான் ஒரு பட்டதாரியாக இருப்பதால் அதற்கு தகுந்த வேலையினைத் தருவார்களா? அல்லது கடினமான வேலையைக் கொடுத்து அலட்சியம் செய்து விடுவார்களா? என்னை எவ்வாறு நடத்துவார்கள் போன்ற பயமும் என்னுள் இருந்தது.
ஆனால் இங்கு வந்த சில மாதங்களிலேயே உண்மை புரிய ஆரம்பித்துவிட்டது. நான் கற்பனை செய்து, பயந்து கொண்டிருந்தது போன்று எதுவும் நடை பெறவில்லை. இங்குள்ள சூழ்நிலைகளையும், மொழியினையும் நான் அறிந்து கொள்ளும் வரை, சாதாரண வேலையைக் கொடுத்திருந்தார்கள். இங்குள்ள சூழ்நிலைகளையும், மொழியினையும் ஒரளவு புரிந்து கொண்டப் பிறகு நோயாளிகளுக்கு ஒவ்வொரு நாளும் அவசியப்படும் உணவுத் தேவையை நிர்ணயம் செய்யும் பிரிவுக்கு பொறுப்பாளர்களாக நியமித்தார்கள். எனக்குக் கீழ் பல முஸ்லிம்கள் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள். நான் முஸ்லிம் நோயாளிகளுக்கு தேவைப்படும் உணவினைத்தான் நிர்ணயம் செய்கிறேன். இதற்கு எனது மதம் எந்த விதத்திலும் ஒரு தடையாக இருந்ததில்லை. சுமார் ஏழு வருங்டகளுக்கு மேல் இதே நிலையில் இருந்து விட்டேன். மூன்று முறை விடுமுறையில் ஊர் சென்று வந்துள்ளேன். இந்த காலகட்டத்தில் இஸ்லாத்தில் சேர்ந்துதான் ஆக வேண்டும் என்று என்னை யாரும் நிர்பந்தம் செய்ய வில்லை. நான் மாற்று மதத்தைச் சார்ந்தவன் என்பதால் என்னுடன் யாரும் கடுமையும் காட்ட வில்லை.
எனினும் என்னுடன் இருந்த இஸ்லாமியச் சகோதரர்கள் குறிப்பாக இந்நாட்டு மண்ணின் மைந்தர்கள் எனக்கு இஸ்லாத்தைப்பற்றியும், அதன் சிறப்புகள் பற்றியும் இடையிடையே கூறுவார்கள். நான் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அவர்கள் கூறுதவற்கு எந்தவித முக்கித்துவமும் கொடுக்கவில்லை. அவர்களும் எனது நிலையை புரிந்து கொண்டாலும் அதற்காக வருத்தப்படவும் இல்லை, சடைந்து போகவும் இல்லை. அவர்கள் சில நேரங்களில் இஸ்லாமிய நூட்களையும் தங்களது செலவில் வாங்கிக் கொண்டுவந்து எனக்குக் கொடுப்பார்கள். யாரும் அறியாத விதத்தில் தனிமையில் அமர்ந்து இந்தப் புத்தகங்களில் என்னதான் உள்ளது என்று அறிந்து கொள்வதற்காக படிக்க ஆரம்பித்தேன்.
எனது கிருஸ்துவ மதம்தான் சரியானது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் இது நாள் வரை வாழ்ந்துவிட்ட எனது வாழ்வில் இந்தப் புத்தகங்கள் சிறிய ஊசலாட்டத்தை ஏற்படுத்த ஆரம்பித்து, எனது கிருஸ்துவக் கொள்கையை ஆட்டம் காணச் செய்துவிட்டது. நான் இருக்கும் கிருஸ்துவக் கொள்கையை திரும்பிப்பார்க்க வேண்டும் என்ற சிந்தனையைத் தோற்றுவித்தது.
மேலும் இஸ்லாம் என்ன போதிக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வமும் என்னுள் ஏற்பட்டது. இதனை வெளிப்படையாக யாரிடமும் சொல்வதற்கு தயங்கிக் கொண்டிருந்த போது, என் சவூதி நண்பர்கள் இதனைக் குறிப்பால் உணர்ந்து, மேலும் நான் இஸ்லாத்தைப்பற்றி தெரிந்து கொள்ள பல புத்தகங்களை வாங்கிக் கொடுத்து, மென்மேலும் இஸ்லாம் பற்றி அறிவதற்கு ஊக்கம் அளித்தார்கள்.
இஸ்லாம் குறித்த பல நூட்களைப் படித்த நான், இஸ்லாம் போதிக்கும் அதன் தூய கொள்கையால் அதன் பால் ஈர்க்கப்பட்டேன். அதன் பெயரே ஒரு சிறப்பு வாய்ந்ததாக இருப்பதை அறிந்து கொண்டேன். காரணம் தற்போதுள்ள மதங்கள் அனைத்தும் ஒரு தனிப்பட்ட நபரின், அல்லது இயக்கத்தின், அல்லது நாட்டின் பெயரிலேயே ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது. கிருஸ்துவ மதம் என்பது ஏசு கிருஸ்து மதம் என்றே அழைக்கப்படுகிறது, அது போல், இலங்கையில் அதிக மக்களால் பின்பற்றப்படும் புத்த மதம் புத்தரின் பெயரால் துவக்கப்பட்டுள்ளது. இது போல்தான் அனைத்து மதங்களும். ஆனால், இஸ்லாம் என்பது எந்த தனிமனிதரின் பெயரையும் குறிக்கக் கூடியதல்ல. தனிமனிதரின், தனி இயக்கத்தின், தனிநாட்டின் பெயர்களைக் கடந்து அனைவருக்கும், அனைத்து இயக்கத்தினருக்கும், அனைத்து நாட்டு மக்களுக்கும் சொந்தமானது, பொதுவானது, எங்களுக்கு மட்டும்தான் சொந்தம் என உரிமை கொண்டாட அது ஒரு தனிமனிதச் சொத்துமல்ல என்று இன்றுவரை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. இஸ்லாத்தை போதித்த தூதுவர்களில் இறுதியானவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களாக இருந்தாலும் இந்த மதம் அவருக்கும் சொந்தமானதல்ல, இந்தத் தூதுவர்களை அனுப்பிய அல்லாஹ், உலக மக்கள் அனைவரையும் நேர் வழிப்படுத்த தந்த அருள் மிக்க மதம்தான் இஸ்லாம் என்பதைப்புரிந்து கொண்டேன்.
மற்ற எல்லா மதங்களைப் போல் அல்லாமல் கடவுள் கொள்கையில் சிறந்து விளங்கும் இஸ்லாம் மனித இயற்கையோடு ஒட்டிப்போகும் உயர்ந்த கோட்பாடுகளை கொண்டு விளங்குகிறது. பின்பற்றப் பட முடியாத வரட்டுத் தத்துவங்களை விட்டும் வெகுதூரத்தில் இருக்கிறது. எனவே, இந்த இஸ்லாம், மனிதனைப்படைத்த எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்படுத்தித் தந்த மார்க்கம் என்பதை உணர்வுப் பூர்வமாக புரிந்து, நம்மை செம்மைபடுத்திக் கொள்ள சிறந்த மார்க்கம் இது தான் என்பபைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு, யாருடைய நிர்பந்தமும் இல்லாமல் என் சுய விருப்பத்தின் அடிப்படையிலேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள முன் வந்த போது, நான் பணி செய்யும் நிறுவனத்தில் என்னைப்போன்றே இஸ்லாமியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, இரண்டு மாதங்களுக்கு முன் இஸ்லாத்தைத் தழுவிய இந்தியாவின் தமிழ் நாட்டில் உள்ள கள்ளக்குறிச்சி என்ற ஊரைச் சார்ந்த சகோதரர் அப்துல்லாஹ் அவர்களின் வழிகாட்டலில் அல் சலாமா இஸ்லாமிய நிலையத்தில் வந்து மனப்பூர்வமாக இந்த புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன். அல்ஹம்து லில்லாஹ். (எனக்கு நேர் வழிகாட்டிய அல்லாஹ்விற்கே அனைத்துப் புகழும் உண்டாகட்டும்.) நான் நேர் வழி பெறுவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நற்கூலிகள் நிறைய வழங்க வேண்டும் என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
-முஹம்மது நசீர்