இரண்டாம் ஜமாஅத் ஓர் ஆய்வு

முக்கிய குறிப்புகள்: முக்கிய ஆய்வுகள்

இரண்டாம் ஜமாஅத் ஓரு விளக்கம்

ஹதீஸ்களில் இல்லாத கருத்தை ஹதீஸ்களில் உள்ளது போல் காட்டுவதில் கைதேர்ந்தவரான, இலங்கையைச் சேர்ந்த நவ்பர் என்பார், ஒரு ஜமாஅத் முடிந்து மற்றொரு ஜமாஅத் நடத்துவது கூடாது என்று வாதிட்டு வருகிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட ஆராய்ச்சிக்குப் பதில் சொல்ல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கு ஞானம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளதால் முன்னுரிமை கொடுத்து இதை ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறோம்.

இது குறித்து மவ்வலி கே.எம். அப்துந்நாஸிர் ஆய்வு செய்து வைத்திருந்தார். அதை தேவையான மாற்றங்களுடன் இங்கே வெளியிடுகிறோம்.

மார்க்கத்தில் எந்த ஒரு விஷயம் குறித்து ஆய்வு செய்வதாக இருந்தாலும் குர்ஆன் ஹதீஸில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதில் இருந்து சட்டங்களை எடுக்க வேண்டும். நாம் என்ன நினைக்கிறோமோ அதற்கேற்ப சட்டங்களை வளைக்கக் கூடாது. இலங்கை நவ்பர் என்பவரிடம் இந்தத் தன்மையைக் காண முடியவில்லை. இவர் எடுத்து வைக்கும் வாதத்தின் துவக்கமே மிகவும் ஆபத்தான வாதமாக அமைந்துள்ளது.

உதாரணமாக, இஷா தொழுகையை ஒருவர் ஐம்பத்தியேழாவது ஜமாஅத்தாகத் தொழ முடியுமா? எனக் கேட்டால் இரண்டாவது ஜமாஅத்தை அனுமதிப்பவர் ஆம் எனக் கண்டிப்பாகக் கூறியே ஆக வேண்டும். இல்லை எனக் கூறினால் ஐம்பத்தியேழாவது ஜமாஅத் கூடாது என்பதற்கு என்ன ஆதாரமோ அவைகள் தான் ஐம்பத்தியாறாவது ஜமாஅத் கூடாது என்பதற்கான ஆதாரங்களாகும்; ஐம்பத்தியாறாவது ஜமாஅத் கூடாது என்பதற்கு எவைகள் ஆதாரங்களோ அவைகள் தான் ஐம்பத்தி ஐந்தாவது ஜமாஅத் கூடாது என்பதற்கான ஆதாரங்களாகும். இவ்வாறே குறைந்து கொண்டே வந்து ஒரு ஜமாஅத்தா அல்லது அதற்கு மேற்பட்டதா என்ற சரியான கேள்வி பிறக்கும்.

எனவே இரண்டாம் ஜமாஅத்தை அனுமதிப்பவர் உண்மையில் மறைமுகமாக எத்தனை ஜமாஅத் வேண்டுமென்றாலும் தொழுது கொள்ளலாம் என்ற, இஸ்லாம் வலியுறுத்தும் ஒரே ஜமாஅத் தொழுகை எனும் கோட்பாட்டைத் தகர்த்தெறியும் அனுமதியையே வழங்குகிறார் என்பது தான் யதார்த்தமாகும்.

ஹதீஸ்களின் அடிப்படையில் வாதத்தை எடுத்து வைப்பதற்கு முன், இரண்டாம் ஜமாஅத் என்பது எவ்வளவு பாரதூரமானது என்ற கருத்தை மேற்கண்டவாறு விதைக்கிறார்.

ஐம்பத்தி ஏழு தடவை ஜமாஅத் நடத்தலாமா என்ற கேள்வியை முதலில் எழுப்பிவிட்டால் ஆய்வு செய்யும் திறன் இல்லாத பொது மக்கள் அது தவறு என்று நினைத்து விடுவார்கள். அதாவது ஹதீஸின் துணையுடன் கருத்தை நிறுவுவதை விட மனோ இச்சையின் அடிப்படையில் கருத்தை நிறுவ அடித்தளம் போடுகிறார்.

ஒரு ஜமாஅத் முடிந்த பின் இன்னொரு ஜமாஅத் நடத்த அனுமதி இருந்தால் ஐம்பத்தி ஏழு என்ன? ஐயாயிரம் ஜமாஅத் நடத்துவதும் சரியானது என்று தான் அறிவுடையோர் முடிவு செய்ய வேண்டும். ஐம்பத்தி ஏழு தடவை ஜமாஅத் நடத்தும் நிலைக்கு ஹதீஸில் அனுமதி இருந்தாலும் என் மன இச்சை அதை ஏற்றுக் கொள்ளாது என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்.

ஒரு ஜமாஅத் தொழுகையில் கலந்து கொண்டவர், மற்றொரு ஜமாஅத் தொழுகை நடக்கும் பள்ளிக்குச் சென்றால் அதிலும் பங்கெடுக்கலாம் என்பதற்கு ஹதீஸ்களில் அனுமதி உள்ளது. இந்த அனுமதியிலும் மேற்கண்ட கேள்வியைக் கேட்க முடியும். ஐம்பத்தி ஏழாவது பள்ளிக்குச் சென்று தொழலாமா என்று கேட்டு ஹதீஸில் உள்ளதை மறுப்பார்களா? இந்த ஐம்பத்தி ஏழு என்ற முட்டாள்தனமான வாதத்தை நூற்றுக்கணக்கான சட்டங்களில் கேட்க முடியும்.

ஹதீஸில் அந்த அனுமதி பெறப்பட்டால் அதில் எந்தப் பாரதூரமும் இல்லை. மனோ இச்சையை மார்க்கமாக்குவதற்கே இவர்கள் புறப்பட்டுள்ளனர் என்பது இந்த வாதத்தில் இருந்து தெரிகிறது.

இனி இது குறித்த ஆதாரங்களைப் பார்ப்போம்.

நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், (இவருடன் சேர்ந்து தொழுவதன் மூலம்) இவருக்கு லாபம் அளிக்கக்கூடியவர் யார்? என்று கேட்டார்கள். ஒரு மனிதர் முன்வந்தார். அவருடன் வந்த மனிதர் சேர்ந்து தொழுதார்.

அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி)

நூல்: திர்மிதி 204,(அபூதாவூத்: 487)

மேற்கண்ட ஹதீஸில் ஒரு பள்ளியில் முதலில் ஜமாஅத்தாகத் தொழுகை நடத்தி முடிந்த பிறகு, மீண்டும் அதே பள்ளியில் ஜமாஅத் நடத்தலாம் என்பதற்கு மிகத் தெளிவான ஆதாரமாகும்.

இந்தத் தெளிவான ஆதாரத்துக்குக் கட்டுப்படுவதற்குப் பதிலாக பயங்கரமான தத்துவங்களைக் கூறி ஹதீஸை அர்த்தமற்றதாக்குகிறார்.

தத்துவம்: 1

1. நாம் முன்னர் குறிப்பிட்ட காரணங்களுக்காக (தூக்கம், மறதி, வாடை வீசும் உணவு) ஜமாஅத் தவறுவது அடிக்கடி நடக்கும் நிகழ்வாக இருந்தும் இரண்டாம் ஜமாஅத்தோ அல்லது மூன்றாம் ஜமாஅத்தோ நபியவர்கள் காலத்தில் நடந்ததாக எந்த ஹதீஸும் இடம் பெறவில்லை.

என்னே தத்துவம் பாருங்கள்! ஒரு ஹதீஸ் இடம் பெற்றுள்ளதைப் பார்த்துக் கொண்டே எந்த ஹதீஸும் இடம் பெறவில்லை என்று கூறுகிறார். அப்படியானால் இது ஹதீஸ் இல்லையா? அடிக்கடி இரண்டாம் ஜமாஅத்தோ மூன்றாம் ஜமாஅத்தோ நடந்ததாக வந்தால் தான் ஏற்றுக் கொள்வாராம். இவருக்கு ஹதீஸ் கலையும் தெரியவில்லை. ஒரு விஷயத்தை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை அறிவும் இல்லை.

அடிக்கடி நிகழும் வணக்க முறைகள் பற்றி ஒரே ஒரு ஹதீஸ் மட்டுமே, ஒரே ஒருவரால் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளதைப் பரவலாகக் காண்கிறோம். அடிக்கடி நடந்ததாக ஹதீஸில் இல்லை என்று கூறி அவற்றை எல்லாம் மறுப்பாரா?

தத்துவம்: 2

2. குறித்த இந்த ஹதீஸிலும் தாமதமாக வந்தவர் இன்று நடைமுறை உள்ளது போல் மற்றவர்களுக்காகக் காத்திருந்து இரண்டாம் ஜமாஅத் ஆரம்பிக்காமல் தனியாகவே தொழ ஆரம்பிக்கிறார்.

அதைத் தூக்கி அடிக்கும் தத்துவமாக இது உள்ளது. அவர் தனியாகத் தொழ ஆரம்பிக்கிறார் என்ற நபித்தோழரின் செயல் மட்டும் தான் இவரது கண்களுக்குத் தெரிகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைத் தடுத்து, ஜமாஅத்தாகத் தொழச் சொன்னது இவரது கண்களுக்குத் தெரியவில்லை. இவரும் இவரைச் சேர்ந்தவர்களும் ஸலபி வகையறாக்களை விட மார்க்கத்துக்கு ஆபத்தானவர்கள் என்றே நாம் கருதுகிறோம்.

தத்துவம்: 3

3. நபியவர்களின் அனுமதி, ஏற்கனவே முதல் ஜமாஅத்தில் கலந்து கொண்ட ஒருவர் அதைத் தவற விட்ட ஒருவருடன் சேர்ந்து தொழுவதற்கான அனுமதியே தவிர ஜமாஅத்தைத் தவற விட்ட இருவர் அல்லது பலர் சேர்ந்து நடத்தும் ஜமாஅத்தை அல்ல.

குர்ஆனையும் ஹதீஸையும் புரிந்து கொள்ளும் வழிமுறை கூட நவ்பர் என்பாருக்குத் தெரியவில்லை என்பதற்கு இதுவும் ஆதாரமாக உள்ளது.

ஜமாஅத் தொழுகை முடிந்த பின் ஒருவர் தாமதமாக வந்தால் ஏற்கனவே தொழுதவர் மட்டும் அவருடன் சேர்ந்து தொழலாம். ஏற்கனவே தொழாதவர் தொழக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினால் தான் இவர் கூறுகின்ற கருத்து கிடைக்கும்.

அப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. பள்ளிவாசலில் தொழுகை முடிந்த பின், தொழுதவர்கள் மட்டுமே இருந்தது தற்செயலானது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்திய வாசகம் தான். யார் இவருக்கு தர்மம் செய்வது? என்பது தான் அந்த வாசகம்.

அதாவது, தனியாக ஒருவர் தொழுதால் அவருக்கு ஒரு நன்மை தான் கிடைக்கும். ஜமாஅத்தாகத் தொழுதால் அவருக்கு 27 நன்மைகள் கிடைக்கும். தாமதமாக வந்த இவர் அந்த நன்மையை இழந்து விட்டார். அவருக்கும் அந்த நன்மை கிடைக்க வேண்டும் என்ற கவலை தான் இதில் தென்படுகிறது.

தாமதமாக வந்த ஒரு முஸ்லிமுக்கு இழப்பு ஏற்படக் கூடாது என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அக்கறை இவர்களின் கண்களுக்குத் தென்படவில்லை.

இந்த இடத்தில் இவர்களின் பாஷையில் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டியுள்ளது.

தாமதமாக ஒருவர் வரும் போது, ஏற்கனவே தொழுத ஒருவர் அவருடன் சேர்ந்து தொழ அனுமதி உண்டு என்பதை இவர் ஒப்புக் கொள்கிறார். ஏற்கனவே ஜமாஅத் தொழுதவர்கள் பள்ளிவாசலில் இருக்கும் போது ஒருவர் பின் ஒருவராக 57 பேர் வருகிறார்கள். இப்போது 57 ஜமாஅத் பிரச்சனை வருமே இது பரவாயில்லையா? எதைப் பாரதூரமான காரணம் என்று சித்தரித்தார்களோ அதையே அவர்களும் சொல்லும் நிலைக்கு அவர்களை அல்லாஹ் தள்ளிவிட்டான்.

தத்துவம்: 4

4. குறித்த ஹதீஸில் முதல் ஜமாஅத்தில் கலந்து கொண்டு நன்மை பெற்றவர் அதில் கலந்து கொள்ளாதவருக்குத் தர்மம் செய்கிறார் என விளங்க முடிகிறது. அனால் இண்றைய முதல் ஜமாஅத்திற்குப் பின் நடத்தப்படும் ஏனைய ஜமாஅத்களில் யார், யாருக்கு தர்மம் செய்கிறார் என்பதைக் கூற முடியுமா? முடியவே முடியாது.

மேற்கண்ட ஹதீஸை மறுப்பதற்குக் கண்டு பிடித்த நான்காவது தத்துவம் இது.

தாமதமாக வந்தவர் கூடுதல் நன்மை பெற வேண்டும் என்பது நபிகள் நாயகத்தின் நோக்கமா? அல்லது ஏற்கனவே தொழுதவரை தர்மம் செய்ய வைப்பது நோக்கமா என்ற அடிப்படையைக் கூட இவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒருவர் ஏற்கனவே தொழுதவருடன் சேர்ந்து தொழுதாலும், ஏற்கனவே தொழாதவருடன் சேர்ந்து தொழுதாலும் அவருக்கு 27 மடங்கு நன்மை கிடைத்து விடும். இது தான் இங்கே கவனிக்கப்பட வேண்டும்.

இன்னும் சொல்வதாக இருந்தால், ஏற்கனவே தொழுதவர் மீண்டும் தொழும் எந்த அவசியமும் இல்லை. ஆனால் ஏற்கனவே தொழாதவருக்கு தொழும் அவசியம் இருக்கிறது. ஏற்கனவே தொழுதவராக இருந்தாலும் கூட மற்றொரு சகோதரன் 27 மடங்கு நன்மையை அடைய உதவ வேண்டும் என்றால் எப்படியாவது ஜமாஅத்தாகத் தொழ முயல வேண்டும் என்று தான் அறிவுடையோர் புரிந்து கொள்வார்கள்.

அதாவது, ஜமாஅத் தொழுகை நடத்துவதற்கு வழியில்லாமல் ஒருவர் மட்டுமே இருக்கும் நிலையில், ஏற்கனவே ஜமாஅத்தில் தொழுத ஒருவர் இவருடன் சேர்ந்து ஜமாஅத்தாகத் தொழ வேண்டும் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. அப்படியானால், முதல் ஜமாஅத்தில் சேராத இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இருக்கும் போது, கண்டிப்பாக அவர்களுக்குள் ஜமாஅத்தாகத் தான் தொழ வேண்டும் என்பதையே இந்த ஹதீஸ் வலியுறுத்துகின்றது.

தாமதமாக வந்த நபித்தோழரோடு சேர்ந்து தொழுவதற்கு யாருமில்லாத காரணத்தினால் தான் தொழுத ஒரு ஸஹாபியை மீண்டும் அவரோடு சேர்ந்து தொழுமாறு நபியவர்கள் கட்டளையிடுகிறார்கள். இவ்வாறு சேர்ந்து தொழுகின்ற காரணத்தினால் தனியாகத் தொழுதால் கிடைக்கும் நன்மையை விட அதிகமான நன்மையைத் தாமதமாக வந்தவர் பெறுகின்றார். இதைத் தான் நபியவர்கள் தர்மம் என்று குறிப்பிடுகிறார்கள். தாமதமாகப் பலர் வரும் போது அவர்களே சேர்ந்து தொழுவதன் மூலம் அந்த நன்மையைப் பெற்றுக் கொள்வார்கள். யாரும், யாருக்கும் தர்மம் செய்ய வேண்டியதில்லை.

தர்மம் என்றாலே அதன் பொருள் என்ன? தேவைப்படும் போது கொடுப்பது தான். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தாமதமாக வந்தால் இப்போது தர்மம் செய்யும் அவசியம் இல்லாமலே அவர்களுக்கு நன்மை கிடைத்து விடுகிறது.

தொழுத ஒருவரே மீண்டும் தொழ வைத்தாலும் அது மற்றொரு ஜமாஅத் தொழுகை தான். எனவே ஜமாஅத்தாகத் தொழுத பள்ளியில் மீண்டும் ஜமாஅத்தாகத் தொழுவதற்கு மேற்கண்ட ஹதீஸே மிகச் சிறந்த சான்றாக இருக்கும் போது ஜமாஅத்தாகத் தொழுத பள்ளியில் மீண்டும் ஜமாஅத்தாகத் தொழுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறுவது தவறானதாகும்.

தத்துவம்: 5

5. எனவே இந்த ஹதீஸ் ஒருவருக்கு (இஸ்லாம் அனுமதித்த காரணங்களுக்காக) ஜமாஅத் தவறும் போது நாம் முன்னர் குறிப்பிட்ட, யார் அழ்கிய முறையில் உளூச் செய்து (பள்ளிக்குச்) சென்று அங்கே மக்கள் தொழுது முடித்துவிட்டிருப்பதைக் காண்கிறாரோ அவருக்கு அல்லாஹ் ஜமாஅத்துடன் தொழுத கூலியை ஏற்கனவே ஜமாஅத்துடன் தொழாதவர்களுக்கும் குறைத்து விடாமல் வழங்குகிறான் என்ற ஹதீஸின் படி தனியாகத் தொழுதாலே அதற்கான கூலியை அடைந்து கொள்வார். அல்லது ஏற்கனவே முதல் ஜமாஅத்தில் கலந்து கொண்ட ஒருவர் விரும்பினால் அவருடன் சேர்ந்து தொழுது தர்மம் செய்யலாம் என்பதற்கான ஆதாரமே தவிர முதல் ஜமாஅத்தைத் தவற விடுபவர்கள் சேர்ந்து இரண்டாம் ஜமாஅத்தும் அதைத் தவற விடுபவர்கள் மூன்றாம் ஜமாஅத்தும் அதைத் தவற விடுபவர்கள் நாலாவது ஜமாஅத்தும் அதைத் தவற.. இதற்கெல்லாம் ஆதாரம் இந்த ஹதீஸில் எங்கே இருக்கிறது!!

மறுபடியும் 57 ஜமாஅத்துக்குத் தாவுகிறார். இவர் கூறுகிற வாதத்தின் படியும் 57 ஜமாஅத் வருமே அதற்கு இது ஆதாரமாகுமா? ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்ளும் எண்ணத்தில் ஒருவர் வந்தால் ஜமாஅத் முடிந்து விட்டாலும் ஜமாஅத் தொழுகையின் நன்மை கிடைத்து விடும் என்ற ஹதீஸை இங்கே எடுத்துக் காட்டுகிறார்.

முதலில் இவர் சுட்டிக் காட்டும் ஹதீஸ் பலவீனமானதாகும். அது சரியானது என்று வைத்துக் கொண்டாலும் குழப்பம் இல்லை. தாமதமாக வருபவருடன் சேர்ந்து தொழ ஒருவர் கிடைக்கவில்லையானால் அப்போது அவருக்கு ஜமாஅத்தின் நன்மை கிடைக்கும். யாராவது கிடைத்து விட்டால் அவருடன் சேர்ந்து தொழுதாலே அந்த நன்மையை அடைய முடியும் என்பது தான் இரண்டுக்கும் பொதுவான கருத்தாகும்.

தத்துவம்: 6

6. எனவே குறித்த விடயத்தில் சகோதரர் எஸ். எம். அப்பாஸ் அவர்கள் குறிப்பிட்டது போல் நபி (ஸல்) அவர்களது அனுமதி கிடையாது என்பதுடன், நபி (ஸல்) அவர்கள் அனுமதித்த, ஆர்வமூட்டிய காரியத்தைத் தடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதல்ல இங்கு கவனத்திற் கொள்ளப்படவேண்டியது. மாறாக நபியவர்களின் வரையறைகளுடனான சுருங்கிய அனுமதியை வரையறைகள் அற்ற விரிந்த அனுமதியாக்குவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை என்பதையே நாம் கருத்திற் கொள்ள வேண்டும்.

இதுவும் அபத்தமான வாதமே! வரையறைகளுடன் சுருங்கிய அனுமதியாக இது இல்லை. வரையறை இல்லாத அனுமதிக்குள் இவர் தான் வரையரையத் தினித்திருக்கிறார். அது தான் இவரது தடுமாற்றத்துக்குக் காரணம். இவர் வரையறை செய்தது தவறானது என்பதை முன்னர் விளக்கி விட்டோம். தாமதமாக வந்த ஒரு முஸ்லிம், ஜமாஅத்தின் நன்மையை இழக்கக் கூடாது என்ற பரந்த நோக்கத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி இருக்கும் போது குறுகிய நோக்கமாக இவர் சித்தரிக்கிறார்.

தத்துவம்: 7

7. இதற்கு ஒரு நல்ல உதாரணமாக, மறைவான ஜனாஸாத் தொழுகையை குறிப்பிடலாம். எப்படி நபி (ஸல்) அவர்களின் பொது வழக்கத்திற்கு மாறான நஜ்ஜாஷி அவர்களுக்கு தொழுவித்த சம்பவத்தை மறைவான ஜனாஸாத் தொழுகை கூடும் என விளங்கிக் கொள்ளாமல் அது அவருக்கு மட்டும் உரிய தனி நபர் சம்பவம் என்றோ அல்லது குறித்த பிரத்யேக நிலை யாருக்கு ஏற்படுகிற்கிறதோ அவருக்கு மட்டும் என்றோ தழிழ்நாடு தௌஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரகர்கள் புரிந்து கொள்வது போல் குறித்த ஹதீஸையும் குறித்த பிரத்யேக நிலை யாருக்கு ஏற்படுகிறதோ அவருக்கு நபியவர்கள் அனுமதித்த ஏற்கனவே முதல் ஜமாஅத்தில் தொழுத ஒருவர் சேர்ந்து தொழுவது என்ற முறையில் மாத்திரம் என சரியாக விளங்கிக் கொண்டால் இரண்டாம் ஜமாத்திற்கு அனுமதி என்ற கருத்துக்கே இடமில்லை.

நஜ்ஜாஷி மன்னர் விஷயத்தைப் பிரத்தியேகமானது என்று நாங்கள் யாரும் புரிந்து கொள்ளவில்லை. ஒருவருக்கு ஜனாஸா தொழுகை நடக்கவில்லை என்பது நமக்குத் தெரிய வந்தால் நாமும் ஜனாஸா முன்னால் இல்லாமல் தொழலாம் என்று பொதுவாகத் தான் புரிந்து கொள்கிறோம். ஏனெனில் ஒரு அடியார் இறந்து விட்டார். அவருக்கு தொழுகை நடத்தப்படவில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காரணத்தைச் சொல்லி விட்டதால் அது பொதுவானது தான். அது போல், ஏற்கனவே தொழுதவர் மட்டும் தான் இரண்டாவது ஜமாஅத்திற்கு உதவ வேண்டும் என்ற கருத்தை நபிகள் நாயகம் சொன்னதாக எடுத்துக் காட்டினால் தான் இவர் கூறுவது போல் புரிந்து கொள்ள முடியும்.

தத்துவம்: 8

8. குறித்த வரையறைகளை கவனத்திற் கொள்ளத் தேவையில்லை எனக் கருதுவோர் இரண்டாம் ஜும்மாவுக்கோ அல்லது இரண்டாம் பெருநாள் தொழுகைக்கோ இந்த ஹதீஸை வைத்து அனுமதியளிக்க முன்வருவார்களா என சிந்தித்தாலே இரண்டாம் ஜமாத்திற்கு அணுமதி என்ற கருத்து எவ்வளவு தவறானது, பார தூரமானது என்பதை விளங்கிக் கொள்ள போதுமானதாகும்.

ஹதீஸில் கூறப்படுவதை இவர் ஏற்பவராக இல்லை. இவர் மனோ இச்சைப்படி தவறாக விளங்கிக் கொண்டதை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் வாதிடுகிறார்.

நாங்கள் எங்கள் விருப்பத்தின் படி ஹதீஸை வளைக்க மாட்டோம். ஜும்ஆவுக்கும் பெருநாள் தொழுகைக்கும் கூட இந்த அனுமதி உண்டு என்று தான் கூறுவோம்; கூறுகிறோம்.

ஜமாஅத் தொழுகை கிடைக்காதவர் எப்படியும் ஜமாஅத் தொழுகையின் நன்மையை அடைவதற்காக ஏற்கனவே தொழுதவரைச் சேர்த்தாவது அந்த நன்மை கிடைக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முயற்சி செய்தார்களோ அது போன்ற அக்கறையுடனும், அவர்களின் அந்த உணர்வுடனும் தான் பெருநாள் தொழுகையயும் நாம் அணுகுவோம். பெருநாள் தொழுகை கிடைக்காதவர்கள் அந்த நன்மையை இழந்து விடக் கூடாது என்பதற்காக அவர்களும் பெருநாள் தொழுகையை இதே அடிப்படையில் தொழலாம். ஜும்ஆவும் அப்படியே!

இன்னும் சொல்வதாக இருந்தால் தமிழகத்தின் சில ஊர்களில் எமது மர்கஸ்களில் இடமின்மை காரணமாக பாதிப் பேர் தான் தொழ முடியும். மீதிப் பேர் வெளியே தான் நிற்க வேண்டும். தொழுது முடித்தவுடன் அதே பள்ளியில் இடம் கிடைக்காமல் நின்றவர்கள் மற்றொரு ஜும்ஆ நடத்துகிறோம். இடம் கிடைக்காவிட்டால் உங்களுக்கு ஜும்ஆ இல்லை என்று ஃபத்வா கொடுக்கும் உங்களுக்குத் தான் இந்தத் தத்துவம் பொருந்தும். எங்களுக்கு உளறலாகத் தான் தென்படும்.

இரண்டாம் ஜமாஅத்:

மத்ஹபுவாதிகளின் அறியாமை

இலங்கையைச் சேர்ந்த நவ்பர் என்பார், ஒரு ஜமாஅத் முடிந்து மற்றொரு ஜமாஅத் நடத்துவது கூடாது” என்று வாதிட்டு வருகிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ஆராய்ச்சிக்குக் கடந்த இதழில் மறுப்பு வெளியிட்டோம். இதே போன்று இரண்டாம் ஜமாஅத் விஷயத்தில் மத்ஹபுவாதிகளின் நிலையைப் பற்றி இங்கு விளக்கியுள்ளோம்.

இரண்டாம் ஜமாஅத் தொழுகையை மத்ஹபுவாதிகளும் தடுத்து வருகின்றனர். அவர்களுக்காகவும் சில விஷயங்களைத் தெளிவு படுத்துகிறோம்.

(சுபுஹ், இஷா ஆகிய) இந்த இரண்டு தொழுகைகளும் முனாஃபிகீன்களுக்கு மிகவும் பாரமான தொழுகைகளாகும். இந்த இரண்டில் உள்ள (நன்மைகளை) அவர்கள் அறிந்தால் முட்டுக்கால்களில் தவழ்ந்தாவது அதற்கு வந்து விடுவார்கள். (இறை நெருக்கத்தைப் பெறுவதில்) முதல் வரிசையாகிறது மலக்குமார்களின் வரிசை போன்றதாகும். நீங்கள் அதன் சிறப்புகளை அறிந்தால் அதற்காக ஒருவருக்கொருவர் போட்டி போடுவீர்கள். ஒருவர் மற்றொருவரோடு சேர்ந்து தொழுவது அவர் தனியாகத் தொழுவதை விட மிக பரிசுத்தமானதாகும். ஒருவர் இருவரோடு சேர்ந்து தொழுவது ஒருவரோடு சேர்ந்து தொழுவதை விட மிகப் பரிசுத்தமானதாகும். எண்ணிக்கை அதிகரிப்பது தான் உயர்ந்தோனாகிய அல்லாஹ்விடம் மிக விருப்பத்திற்குரியதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உபை பின் கஅப் (ரலி),

(அபூதாவூத்: 467)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது உங்களில் ஒருவர் தனியாகத் தொழுவதை விட இருபத்தைந்து மடங்கு அதிகச் சிறப்புடையதாகும்.

அறிவிப்பவர்: அபூஹரைரா (ரலி),

(முஸ்லிம்: 1147)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது தனியாகத் தொழுவதை விட இருபத்தேழு மடங்கு அதிகச் சிறப்புடையதாகும் அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),(முஸ்லிம்: 1151)

மேற்கண்ட ஹதீஸ்கள் பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழுவதன் சிறப்புகளை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன. மேலும் பள்ளியில் தொழும் போது ஜமாஅத்தாகத் தான் தொழ வேண்டும் எனபதை வலியுறுத்துகின்றன. பள்ளியில் முதலில் தொழுகின்ற ஜமாஅத்தை மட்டும் தான் இவை குறிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. கொஞ்சம் அறிவுப்பூர்வமாகச் சிந்தித்துப் பார்த்தால் ஒருவன் பள்ளிக்கு வருவதே அங்கு வருபவர்களுடன் சேர்ந்து ஜமாஅத்தாகத் தொழ வேண்டும் என்பதற்காகத் தான். தனியாகத் தொழுவதென்றால் வீடுகளிலோ, கடைகளிலோ தொழுது கொள்ளலாம். ஏனென்றால் பூமி முழுவதும் தொழுமிடமாகும். பள்ளிவாசல் கட்டப்படுவதன் நோக்கமே அங்கு தொழப்படும் தொழுகைகள் ஜமாஅத்தாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காகத் தான். இதன் காரணமாகத் தான் ஜமாஅத்தாகத் தொழுவது தனியாகத் தொழுவதை விட இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும் என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறும் கூறியுள்ளார்கள்.

ஒருவர் தம்முடைய வீட்டில் அல்லது கடைவீதியில் தொழுவதைவிட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு சிறந்ததாக இருக்கிறது.

அறிவிப்பவர்: அபூஹரைரா (ரலி),(புகாரி: 647)

பள்ளிவாசலில் தொழுவது என்றாலே ஜமாஅத்தாகத் தொழுவது தான் என்ற காரணத்தினால் தான் நபியவர்கள், வீட்டிலோ கடையிலோ தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறந்ததாகும் என்று கூறியுள்ளார்கள்.

எனவே நபியவர்கள் என்ன நோக்கத்திற்காகப் பள்ளிவாசலில் தொழுவதை வலியுறுத்திக் கூறியுள்ளார்களோ அந்நோக்கத்தைப் பாழ்படுத்தும் வண்ணம் தான் இன்றைய சுன்னத் ஜமாஅத்தினர் பள்ளியில் தாமதமாக வருபவர்கள் ஜமாஅத்தாகத் தொழுவதைத் தடை செய்து தங்கள் முதுகுகளில் பாவச் சுமைகளைச் சுமந்து கொள்கிறார்கள்.

நபியவர்கள் கூறிய வார்த்தைகளை நன்றாகக் கவனிக்கக் கடமைப்பட்டுள்ளோம். கடை, அல்லது வீட்டை விட ஜமாஅத்தாகத் தொழுவது சிறந்தது என்கிறார்கள். எந்த இடத்தில் ஜமாஅத்தாகத் தொழ வேண்டும் எனக் கூறவில்லை. ஏனென்றால் ஜமாஅத்தாகத் தொழுவது என்றாலே அது பள்ளிவாசல் தான் என்பதை அனைவரும் அறிந்திருந்த காரணத்தினாலேயே நபியவர்கள் பள்ளிவாசல் என்று கூறவில்லை. பள்ளிவாசல் என்றாலே அங்கு வரக் கூடியவர்கள் கடமையான தொழுகையை ஜமாஅத்தாகத் தொழ வேண்டும் என்பதற்காகத் தான். சுன்னத்தான தொழுகையை ஜமாஅத்தாகத் தொழ வேண்டியதில்லை. எனவே தான் நபியவர்கள் சுன்னத்தான தொழுகையை வீட்டில் தொழுவது சிறந்தது எனக் கூறியுள்ளார்கள்.

சஹாபாக்களின் நடவடிக்கைகளும் ஆதாரமாகும் என்று மத்ஹபுவாதிகள் கூறுவதால் அவர்களுக்காகப் பின் வரும் தகவல்களையும் மேலதிகமாக முன் வைக்கிறோம்.

அனஸ் (ரலி) ஒரு பள்ளிவாசலுக்கு வந்த போது அங்கே தொழுகை முடிந்து விட்டது. உடனே பாங்கும் இகாமத்தும் சொல்லி ஜமாஅத்தாகத் தொழுகையை நிறைவேற்றினார்கள்.

நூல்: புகாரி, பாகம் 1, பக்கம் 505

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் ஒரு பள்ளியில் நுழைந்தார்கள். அவர்கள் தொழுது முடித்திருந்தார்கள். எனவே அல்கமா, அஸ்வத், மஸ்ரூக் ஆகியோருடன் ஜமாஅத் தொழுகை நடத்தினார்கள் அறிவிப்பவர்: ஸலமா இப்னு குகைல்

நூல்: அல்அவ்ஸத் லிஇப்னி முன்திர், பாகம் : 6, பக்கம்: 318)

நபித்தோழர்கள் மற்றும் அதற்கடுத்த தலைமுறையினரில் அநேக அறிஞர்களின் கூற்றும் இதுவே. ஜமாஅத் தொழுகை நடந்து முடிந்து பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழுவதில் தவறில்லை என்று கூறுகின்றனர். இமாம் அஹ்மத், இஸ்ஹாக் ஆகியோரும் இவ்வாறே கூறுகின்றனர்.

நூல்: திர்மிதி இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஒரே பள்ளியில் மீண்டும் மீண்டும் ஜமாஅத் தொழுகை நடத்துவதில் எந்தத் தவறும் இல்லை. ஏனென்றால் பள்ளியில் உள்ள அனைத்து மக்களுமே சமமானவர்கள் தான். (பள்ளிவாசல் என்பதே) ஜமாஅத்தாகத் தொழுகையை நிறைவேற்றுவதற்காகத் தான். இதுதான் வீதிகளின் ஓரங்களிலுள்ள பள்ளிவாசல்களுக்குரிய சட்டமுமாகும். அங்கு மீண்டும் மீண்டும் ஜமாஅத்தாகத் தொழுவதில் எந்தத் தவறும் இல்லை ஆதாரம்: ஹனஃபி மத்ஹப் நூல் அல்மப்சூத், பாகம்: 1, பக்கம்: 39

இமாம் அபூயூசுப் அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுவதாவது: இமாமிற்கென்று வரையறுக்கப்பட்ட இடமல்லாத ஒரு மூலையில் ஜமாஅத் தவறிய மூன்று பேர்களோ அல்லது நான்கு பேர்களோ நின்று பாங்கு சொல்லித் தொழுதால் எந்தத் தவறுமில்லை. இது அழகானதாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகிறது. ஒரு கிராமவாசி பள்ளியில் நுழைந்து தொழுவதற்கு நின்ற போது நபி (ஸல்) அவர்கள், உங்களில் ஒருவர் இவருக்கு தர்மம் செய்யமாட்டாரா? (அவ்வாறு தர்மம் செய்பவர்) எழுந்து இவரோடு தொழட்டும்’ என்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் எழுந்து அவரோடு தொழுதார்கள்.

ஆதாரம்: ஹனஃபி மத்ஹப் நூல் அல்மப்சூத், பாகம்: 1, பக்கம்: 399

ஹாமிஸல் ஹஸாயின் என்ற நூலில் ஷாரிஹ் அவர்கள் கூறியுள்ளதாவது: மீண்டும் மீண்டும் ஜமாஅத் தொழுகை நடத்துவது தொடர்பாக குர்ராக்களின் ஆசிரியராகிய மௌலானா முல்லா அலீ காரி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இவருடைய கருத்தாகிறது ஒரே பள்ளியில் மீண்டும் மீண்டும் ஜமாஅத் தொழுகை நடத்துவது குற்றமாகாது என்பதின் மீது அமைக்கப்பட்டதாகும் ஆதாரம்: ஹனஃபி மத்ஹப் நூல் ரத்துல் முஹ்தார், பாகம்: 3, பக்கம்: 166

மீண்டும் ஜமாஅத் தொழுகை நடத்துவது என்பதின் கருத்தாகிறது, ஒரு பகுதியின் இமாம் தொழுகை நடத்தி முடித்த பிறகு வேறொரு ஜமாஅத்தினர் அங்கு வந்தால் அவர்கள் ஜமாஅத்தாகத் தொழுவது விரும்பத்தக்கதாகும். இது தான் இப்னு மஸ்வூத் (ரலி) அதாவு, ஹஸன், மற்றும் இப்ராஹிம் நகயீ, இஸ்ஹாக் ஆகியோருடைய கருத்துமாகும் ஆதாரம்: ஹன்பலி மத்ஹப்

நூல்: அஷ்ஷரஹல் கபீர் லிஇப்னி குதாமா, பாகம்: 2, பக்கம்: 7

மேலும் ஹன்பலி மத்ஹப் அறிஞர்கள் இதற்குச் சான்றாக நபியவர்களின் ஹதீஸ்களைத் தான் ஆதாரமாக முன்வைக்கிறார்கள். இதோ அஷ்ஷரஹுல் கபீர் என்ற நூலாசிரியர் கூறுவதைப் பாருங்கள்: ஜமாஅத் தொழுகை நடந்த பள்ளியில் மீண்டும் ஜமாஅத் தொழுகை நடத்துவதற்கு நம்முடைய ஆதாரமாகிறது: தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறந்ததாகும் என்று வரக்கூடிய நபியவர்களின் பொதுவான கட்டளையாகும்.

மேலும் அபூ ஸயீதுல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபியவர்கள் தொழுகை நடத்தி முடித்த பிறகு ஒரு மனிதர் வந்தார். உங்களில் யாராவது ஒருவர் இவரோடு தொழுது இவருக்கு தர்மம் செய்ய மாட்டாரா? என்று நபியவர்கள் கூறினார்கள் என்ற ஹதீஸும் நமக்குரிய ஆதாரமாகும். இதே ஹதீஸிற்குரிய அறிவிப்பாளர் வரிசையில் அபூ உமாமா (ரலி) அவர்கள் வாயிலாக பின்வரும் அதிகப்படியான கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன. அவர்கள் இருவரும் தொழுது முடித்த போது நபியவர்கள், இந்த இருவரும் ஜமாஅத் ஆகும்’ என்று கூறினார்கள். ஆதாரம்: அஷ்ஷரஹுல் கபீர், பாகம்: 2, பக்கம்: 7

பள்ளியில் தாமதமாக வருவதைத் தடை செய்யும் மத்ஹபுவாதிகள் மத்ஹபையே பின்பற்றாதவர்கள். இன்னும் சொல்லப் போனால் இவர்கள் நபிவழிக்கு மட்டுமல்ல! மத்ஹபிற்கும் எதிரானவர்கள் என்பது தெளிவாகிறது.

எனவே மத்ஹபுவாதிகள் மத்ஹபில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், அவர்கள் இரண்டாம் ஜமாஅத் நடத்தத் தடை செய்யக் கூடாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.