கூட்டு துஆ மறு ஆய்வு

முக்கிய குறிப்புகள்: முக்கிய ஆய்வுகள்

மறு ஆய்வு கூட்டு துஆ

கூட்டு துஆ தொடர்பாக ஏற்கனவே ஆய்வுத் தொடர்களை வெளியிட்டிருந்தாலும் தற்போது புதிதாக சில வாதங்களை சிலர் முன்வைத்திருப்பதால் அவற்றுக்குப் பதிலளிப்பது நமது கடமை என்ற அடிப்படையில் இந்தக் கட்டுரை இங்கே பதியப்படுகின்றது.

ஆதாரம்: 1

“ஒரு கூட்டத்தினர் ஒன்றிணைந்து அவர்களில் சிலர் பிரார்த்தனை செய்ய மற்றவர்கள் ஆமீன் கூறினால் அவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹபீப் பின் மஸ்லமா (ர-),(ஹாகிம்: 5478)

இதே செய்தி இமாம் தப்ரானியின் அல்முஃஜமுல் கபீர் என்ற நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு ஹாமித் பக்ரீ, கூட்டு துஆ ஓதலாம் என்று வாதிடுகிறார்.

இந்த இரண்டு நூற்களிலும் மூன்றாவது அறிவிப்பாளராக “இப்னு லஹீஆ’ என்பவர் இடம் பெறுகின்றார். இவர் பலவீனமானவர் என்று பெரும்பாலான அறிஞர்கள் கூறியுள்ளனர். இவருடைய புத்தகங்கள் எரிந்து விட்டதால் இவரது மனனத்தன்மை பாதிக்கப்பட்டது என்பதே இவரது பலவீனத்துக்குக் காரணம்.

எனவே இவருடைய நூல் எரிவதற்கு முன்பு இவரிடமிருந்து அறிவித்தவர்களின் அறிவிப்பை ஏற்கலாம். இதற்குப் பிறகு இவரிடமிருந்து அறிவித்தவர்களின் அறிவிப்பை ஏற்கக் கூடாது என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

அரபி 1

இப்னு லஹீஆவிடமிருந்து இப்னு வஹப் அல்முக்ரிஉ மற்றும் முந்தைய காலத்தில் வாழ்ந்தவர்கள் அறிவித்த அறிவிப்புகள் தரமானவை.

இப்னு லஹீஆ ஹதீஸ் கலையில் பலவீனமானவராவார். இவருடைய புத்தகங்கள் எரிவதற்கு முன்பு இவரிடமிருந்து (ஹதீஸை) எழுதியவர்களின் அறிவிப்புகள் மிகச் சரியானவை. உதாரணமாக இப்னுல் முபாரக், அல்முக்ரிஉ ஆகியோரைப் போன்று. இவ்வாறு அபூ ஹஃப்ஸ் ஃபல்லாஸ் என்பார் தெரிவிக்கின்றார்.

நூல்: சியரு அஃலாமின் நுபலாஃ (பாகம் : 8, பக்கம் : 11)

அரபி 2

இப்னு லஹீஆவின் புத்தகங்கள் எரிவதற்கு முன்பு அவரிடமிருந்து கேட்டவர்களின் அறிவிப்புகள் சரியானவை. உதாரணமாக அப்துல்லாஹ் பின் வஹப், அப்துல்லாஹ் பின் முபாரக் மற்றும் அப்துல்லாஹ் பின் யஸீத் அல்முக்ரிஉ ஆகியோரின் அறிவிப்புகள் சரியானவை.

நூல்: மீஸானுல் இஃதிதால் (பாகம் : 4, பக்கம் : 166)

இப்னு வஹம், இப்னுல் முபாராக், முக்ரீ ஆகியோர் இப்னு லஹீஆவின் மாணவர்கள். இம்மூவரும் இப்னு லஹீஆவிடம் ஆரம்ப நேரத்தில் செவியுற்றவர்கள் என்றும் இவர்கள் இப்னு லஹீஆவின் வழியாக அறிவிக்கும் செய்திகள் சரியானவை என்றும் இமாம்கள் கூறியுள்ளார்கள்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் : 5, பக்கம் : 330

அபாதிலாக்கள் என்று கூறப்படும் நபர்கள், அதாவது அப்துல்லாஹ் என்ற பெயரைக் கொண்ட நபர்கள் இப்னு லஹீஆவிடமிருந்து அவருடைய மூளை குழம்புவதற்கு முன்பு அவரிடமிருந்து அறிவித்தவர்கள் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். எனவே அப்துல்லாஹ் பின் முபாரக் அப்துல்லாஹ் பின் வஹப், அப்துல்லாஹ் பின் யஸீத் அல்முக்ரிஉ ஆகியோர் இப்னு லஹீஆவின் மனனத்தன்மை பாதிக்கப்படுவதற்கு முன்பு அறிவித்தவர்கள் என்பதால் இவர்களின் அறிவிப்பை ஏற்கலாம் என்று இந்த அறிஞர்கள் கூறுகின்றனர்.

ஹாமீத் பக்ரீ கூட்டு துஆ ஓதுவதற்கு ஆதாரமாகக் காட்டும் மேலுள்ள செய்தியை இப்னு லஹீஆவிடமிருந்து அப்துல்லாஹ் பின் யஸீத் அல்முக்ரிஉ என்பவர் அறிவிக்கின்றார். இவர் இப்னு லஹீஆவின் மனனத்தன்மை பாதிக்கப்படுவதற்கு முன்பு அவரிடமிருந்து அறிவித்தவர் என்பதால் இது சரியான செய்தி என்று பக்ரீ வாதிடுகிறார்.

இந்த ஹதீஸில் இப்னு லஹீஆவின் விமர்சனத்தைத் தவிர்த்து வேறெந்த குறையும் இல்லாவிட்டால் இவரது இந்த வாதத்தை பரிசீலிக்கலாம். ஆனால் இச்செய்தி பலவீனம் என்பதற்கு வேறொரு குறையும் உள்ளது.

இந்த செய்தியை ஹபீப் பின் மஸ்லமா (ரலி) என்ற நபித்தோழரிடமிருந்து அபூ ஹுபைரா என்பவர் அறிவிக்கின்றார். ஹபீப் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ 42 வது வருடத்தில் மரணிக்கிறார்கள். அபூ ஹுபைரா ஹிஜ்ரீ 41 வது வருடத்தில் தான் பிறக்கின்றார்.

அரபி 3

ஹபீப் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ நாற்பத்து இரண்டாவது வருடத்தில் மரணித்தார்கள்.

நூல்: சியரு அஃலாமின் நுபலாஃ (பாகம் : 3, பக்கம் : 189)

அரபி 4

அபூ ஹுபைரா ஜமாஅத் வருடம் என்றழைக்கப்படும் ஹிஜ்ரீ 41வது வருடத்தில் பிறந்தார்.

நூல்: தஹ்தீபுல் கமால்

ஆக ஹபீப் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் மரணிக்கும் போது அபூ ஹுபைராவின் வயது ஒன்றாகும். எனவே அபூஹுபைரா ஹபீப் பின் மஸ்லமா (ரலி) அவர்களைச் சந்திக்கவில்லை. அவர்களிடமிருந்து எதையும் நேரடியாகக் கேட்கவில்லை என்பது உறுதியாகின்றது.

இந்த அடிப்படையில் இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் முறிவு இருப்பதால் இந்தச் செய்தி பலவீனமாகிறது. இதை ஹாமித் பக்ரி விளங்கியிருந்தால் இதை ஆதாரமாகக் கொண்டு கூட்டு துஆ என்ற பித்அத்தைச் செய்திருக்க மாட்டார்.

ஆதாரம்: 2

கைஸ் அல்மதனீ கூறுகிறார்:

ஒருவர் ஸைத் பின் சாபித் (ரலி) அவர்களிடம் வந்து ஒரு விஷயம் குறித்து வினவினார். அதற்கு ஸைத் (ரலி) அவர்கள் அவரிடம் பின்வருமாறு கூறினார்கள்:

நீங்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் செல்லுங்கள். ஏனென்றால் ஒரு நாள் நானும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் இன்னாரும் பள்ளியில் இருந்தோம். எங்கள் இறைவனான அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து அவனை நினைத்துக் கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து அமர்ந்தார்கள். நாங்கள் மௌனமாகி விட்டோம். நீங்கள் முன்பு ஈடுபட்டிருந்த காரியத்தை மீண்டும் தொடருங்கள் என்று கூறினார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு முன்பாக நானும் என்னுடன் இருந்தவரும் பிரார்த்தனை செய்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் பிரார்த்தனைக்கு ஆமீன் சொன்னார்கள்.

பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அவர்கள் (தனது பிரார்த்தனையில்) இறைவா, என்னுடைய இந்த இரு தோழர்கள் கேட்டதை உன்னிடம் கேட்கிறேன். மேலும் மறந்துவிடாத கல்வியையும் உன்னிடம் கேட்கிறேன் என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆமீன் என்று கூறினார்கள்.

உடனே நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே மறந்துவிடாத கல்வியை நாங்களும் அல்லாஹ்விடம் வேண்டுகிறோம்’ என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இதில் தவ்சீ குலத்தைச் சாந்த வாலிபர் (அபூஹுரைரா) உங்களை முந்திவிட்டார்’ என்றார்கள்.

நூல்: அஸ்ஸுனனுல் குப்ரா

கூட்டு துஆ ஓதலாம் என்று கூறக் கூடியவர்கள் இந்தச் செய்தியையும் ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள்.

இமாம் இப்னு ஹஜர் அவர்கள் தனது நூலான அல்இசாபா ஃபீ தம்யீசிஸ் சஹாபா எனும் நூலில் இச்செய்தி சரியான அறிவிப்பாளர் தொடருடன் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கின்றார். இப்னு ஹஜர் அவர்களின் இக்கூற்றையும் மேற்கண்ட செய்தியைச் சரிகாணுபவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

தங்களுடைய பித்அத்திற்கு ஏதேனும் ஆதாரம் கிடைக்காதா என்று தேடித் திரிந்தவர்களின் கண்ணில் இச்செய்தி பட்ட மாத்திரத்தில் முழுமையான ஆய்வு செய்யாமல் அரைகுறை ஞானத்தோடு இதை ஆதாரமாகக் கருதி மக்களுக்கு மத்தியில் இச்செய்தியைப் பரப்பியும் வருகின்றனர்.

உண்மையை உணர வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தச் செய்தியைப் பற்றி ஆய்வு செய்பவர்கள் இச்செய்தி பலவீனமானது என்ற முடிவுக்கே வருவார்கள்.

இமாம் இப்னு ஹஜர் அவர்கள் கைஸ் அல்மதனீ இடம்பெறும் மேற்கண்ட செய்தியின் அறிவிப்பாளர் தொடரை தவறுதலாக சரி என்று கூறி விட்டார்கள். இவருடைய தவறைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு கூட்டு துஆவை நியாயப்படுத்துகிறார்கள்.

ஆனால் இந்தச் செய்தியை அறிவிக்கும் கைஸ் அல்மதனீ என்பவர் பலவீனமானவர் என்று இமாம் இப்னு ஹஜர் அவர்களே தனது நூலான தக்ரீபுத் தஹ்தீப் எனும் நூலில் தெளிவுபடுத்தியுள்ளார்.

அரபி 5

கைஸ் அல்மதனீ என்பவர் யாரென அறியப்படாதவர்.

நூல்: தக்ரீபுத் தஹ்தீப், பாகம் : 1, பக்கம் : 458

கைஸ் அல்மதனீ என்பவர் நம்பகமானவர் என்பது உறுதி செய்யப்படவில்லை. இவர் முகவரியற்றவர் என்பதால் இவர் பலவீனமானவர். இப்படிப்பட்டவர் அறிவித்த செய்தியை கூட்டு துஆ ஓதுவதற்கு எப்படி ஆதாரமாக எடுக்க முடியும்?

இவர் நம்பகமானவர் என்று ஒரு அறிஞர் கூட சான்று அளிக்கவில்லை.

இமாம் ஹைஸமீ அவர்கள் இந்த ஹதீஸைத் தனது நூலில் குறிப்பிட்டு இதில் இடம்பெறும் கைஸ் அல்மதனீ நம்பகமானவர் இல்லை என்று தெரிவித்துள்ளார்கள்.

அரபி 6

இந்தச் செய்தியை தப்ரானீ பதிவு செய்துள்ளார். இதில் கைஸ் என்பவர் இடம்பெறுகிறார். இவரிடமிருந்து இவருடைய மகனைத் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை. இதில் உள்ள மற்ற அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாவர்.

நூல்: மஜ்மஉ ஸவாயித், பாகம் : 9, பக்கம் : 347

இவரைத் தவிர உள்ள மற்ற அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று ஹைஸமீ சான்றளிக்கிறார். எனவே இவர் நம்பகமானவர் இல்லை என்பது இதிலிருந்து புரிகின்றது.

திர்மிதீ நூலுக்கு விரிவுரை வழங்கிய இமாம் முபாரக் ஃபூரி அவர்களும் இப்னு மாஜா நூலுக்கு விரிவுரை வழங்கிய இமாம் நூருத்தீன் சனதீ அவர்களும் இமாம் அல்பானீ அவர்களும் மற்றும் தற்கால சில அறிஞர்களும் கைஸ் அல்மதனீ பலவீனமானவர் என்று உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

எனவே ஹதீஸ் கலை அடிப்படையில் இவர் இடம்பெற்றுள்ள செய்தி சந்தேகத்திற்கு இடமின்றி பலவீனமானது என்பது நிரூபணமாகின்றது.

இந்தப் பலவீனமான ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு செயல்பட்டால் அந்தச் செயல் ஒருக்காலும் இறைவனால் அங்கீகரிக்கப்படாது. அது நரகத்திற்கு இழுத்துச் செல்லும் பித்அத் என்ற அனாச்சாரம் என்பதைக் கொள்கை வாதிகள் மறந்து விடக்கூடாது.

சரியான கொள்கையை விட்டு தடம் புரண்டு அசத்தியக் கொள்கைக்குச் செல்வதை விட்டும் அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக!