08) முரண்பாடின்மை

நூல்கள்: மாமனிதர் நபிகள் நாயகம்

முரண்பாடின்மை

எத்தனையோ துறைகளில் தலைமை தாங்குவோரை நாம் காண்கிறோம். அவர்கள் தமக்கே முரண்படுவதையும் காண்கிறோம். அதிலும் ஆன்மீகவாதிகள் மற்றவர்களை விட அதிக அளவில் தமக்குத் தாமே முரண்படுவதைக் காணமுடியும். ஆசையை அறுக்கச் சொல்வார்கள். அவர்கள் தான் அறுசுவையுடனும், அதிகமாகவும் சாப்பிடுவார்கள்.

எளிமை, அடக்கம் பற்றிப் போதிப்பார்கள். தங்கள் கால்களில் மக்கள் விழுந்து எழுவதை விரும்புவார்கள்.

ஆடையில் மாத்திரம் தான் வித்தியாசம் காட்டுவார்களே தவிர மற்ற விஷயங்களில் சராசரி மனிதனின் அளவுக்குக் கூட அவர்கள் பக்குவப்பட்டிருக்க மாட்டார்கள்.

இப்படி ஏராளமான முரண்பாடுகளை ஆன்மீகத் தலைவர்களிடம் நாம் காண்கிறோம். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லுக்கும், செயலுக்கும் முரண்பாடில்லாத ஒரே ஆன்மீகத் தலைவராகத் திகழ்கிறார்கள். இதுவரை நாம் எடுத்துக் காட்டிய அத்தனை நிகழ்ச்சிகளுமே இதற்குரிய ஆதாரங்களாக உள்ளன.

அவர்களின் முரண்பாடில்லாத தூய வாழ்க்கையை நம் கண் முன்னே நிறுத்தும் இன்னும் பல சான்றுகளும் உள்ளன.

அகில உலகுக்கும் ஒரே கடவுள் தான் இருக்கிறான். அந்த ஒரு கடவுளை ஏற்காமல் பல கடவுளை வணங்கினால் அவர்கள் மறுமையில் நரகத்தை அடைவார்கள் என்பது நபிகள் நாயகம் (ஸல்) போதித்த முக்கியக் கொள்கை. இஸ்லாத்தின் உயிர் நாடியான கொள்கையும் இது தான்.

இப்படி ஒரு கொள்கையைச் சொன்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதில் எந்தக் கட்டத்திலும் முரண்பட்டதேயில்லை.

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ‘என் தந்தை எங்கே இருக்கிறார்’ என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நரகத்தில்’ என்றார்கள். அவர் கவலையுடன் திரும்பிச் சென்றார். அவரை மீண்டும் அழைத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘என் தந்தையும், உன் தந்தையும் நரகத்தில் தான் இருப்பார்கள்’ என்று கூறினார்கள்.

(முஸ்லிம்: 302)

கேள்வி கேட்டவரின் தந்தை ஒரு கடவுளை நம்பாமல் சிலைகளைக் கடவுளாக கருதி வணங்கி வந்தார். அந்த நிலையிலேயே மரணித்தும் விட்டார். நபிகள் நாயகம் (ஸல்) கூறிய ஆன்மீக நெறியின் படி அவர் நரகத்தில் தான் இருப்பார் என்று தயக்கமின்றி விடையளிக்கிறார்கள். யாருடைய மனமும் புண்படக் கூடாது என்பதற்காக எந்த விதமான சமரசமும் அவர்கள் செய்யவில்லை.

ஆனால் வந்தவர் நபிகள் நாயகத்தின் தந்தை பற்றி எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. வேறு யாரும் இத்தகைய கேள்விகளைக் கேட்கவில்லை. ஆனாலும் வய வந்து ‘தமது தந்தையும் நரகத்தில் தான் இருப்பார்’ என்று கூறுகிறார்கள்.

இது அவர்களின் மாசு மருவற்ற நேர்மைக்கும், கொள்கைப் பிடிப்புக்கும் எடுத்துக் காட்டாக உள்ளது.

கேள்வி கேட்டவரின் தந்தை எவ்வாறு பல தெய்வ நம்பிக்கையுடையவரோ, அது போல் தான் நபிகள் நாயகத்தின் தந்தையும் இருந்தார். பல தெய்வ நம்பிக்கையுடையோரை இறைவன் நரகத்தில் தள்ளுவான் என்ற விதியில் எனது தந்தை என்பதற்காக எந்த விதி விலக்கும் இல்லை என்று அறிவிக்கிறார்கள்.

தந்தையைப் பற்றி மட்டுமின்றி தமது தாயாரைப் பற்றியும் இவ்வாறே அறிவிப்புச் செய்தார்கள்.

‘என் தாயாரின் பாவங்களை மன்னிக்கும் படி பிரார்த்திக்க இறைவனிடம் நான் அனுமதி கேட்டேன். அவன் மறுத்து விட்டான்’ என்று அவர்கள் கூறினார்கள்.

(முஸ்லிம்: 1621, 1622)

அவர்களின் தந்தையைப் போலவே தாயாரும் பல தெய்வ நம்பிக்கையுடையவராகவே இருந்து மரணித்திருந்தார். நபிகள் நாயகத்தின் தாயார் என்பதற்காக எவ்வித விதி விலக்கும் அளிக்கப்பட மாட்டாது என்று தெளிவுபடுத்துகிறார்கள்.

ஆன்மீகத் தலைவர்கள் மற்றவர்களுக்கு விலக்கு அளிக்கிறார்களோ இல்லையோ தங்களுக்கு விலக்கு அளித்துக் கொள்வார்கள்.

எதைப் போதித்தார்களோ அதற்கு மாற்றமாக நடப்பார்கள். யரேனும் கேள்வி எழுப்பினால் நாங்கள் தனிப் பிறவிகள் என்பார்கள்.

ஆனால் நபிகள் நாயகம் அவர்கள் ‘இந்தக் கொள்கையை நான் மீறினாலும் எனக்குக் கிடைப்பது நரகமே’ என்று தெளிவான வார்த்தைகளால் பிரகடனம் செய்தார்கள்.

என் இறைவனுக்கு நான் மாறு செய்தால் மகத்தான நாளின் தண்டனையை நான் அஞ்சுகிறேன் எனக் கூறுவீராக!

(அல்குர்ஆன்: 6:15, 39:13, 19:15)

இந்த வசனங்கள் தமக்கு இறைவனிடமிருந்து வந்தவை என நபிகள் நாயகம் கூறினார்கள். மற்றவர்கள் எவ்வாறு இறைவனை வணங்கி வழிபடுவது அவசியமோ அது போல் நானும் அவனை வழிபட்டாக வேண்டும். ஆன்மீகத் தலைவர் என்பதால் உங்களுக்குக் கூறுவதை நான் கடைபிடிக்காது வாழ்ந்தால் உங்களைத் தண்டிப்பது போலவே என்னையும் இறைவன் தண்டிப்பான். இப்படித் தான் எனக்கு இறைவனிடமிருந்து செய்தி வருகிறது என்று பிரகடனம் செய்கிறார்கள்.

ஆன்மீகத் தலைமை காரணமாக எந்த விதிவிலக்கும் கிடையாது என்று அறிவித்த ஒரே தலைவராக அவர்கள் திகழ்கின்றார்கள். இதையும் கடந்து மற்றவர்களை விட நான் தான் ஆன்மீக நெறியைக் கூடுதலாகக் கடைபிடிப்பேன் எனவும் கூறி அதன் படி வாழ்ந்தும் காட்டினார்கள். இதைப் பின்வரும் செய்தியிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

தமது கால்கள் வீங்கி விடும் அளவிற்கு நபிகள் நாயகம் (ஸல்) இரவில் நின்று வணங்குவார்கள். இது பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டால் ‘நான் நன்றியுள்ள அடியானாக இருக்கக் கூடாதா?’ என்பார்கள்.

(புகாரி: 1130, 4836, 6471)